படைத்தளபதிகள்…

Reference and Thanks to: http://www.tamilislam.com

Downloadede and pagemaked: Mafaz Mohideen

உள்ளடக்கம்…
1) காலித் பின் வலீத் (ரழி)
2) சஅத் பின் அபீ வக்காஸ் (ரழி)
3) உஸாமா பின் ஜைத் (ரழி)
4) மத்னா பின் ஹாரிதாஹ் ஷீபானி(ரழி)
5) அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் (ரலி)
6) அபுல் ஆஸ் இப்னு அர் ராபிஆ (ரலி)
7) இக்ரிமா பின் அபீ ஹிஷாம் (ரலி)

1. காலித் பின் வலீத் (ரழி)

இஸ்லாமிய வரலாற்றில் காலித் பின் வலீத் (ரழி) ஒரு தனிச்சிறப்பிடம் உண்டு. உயரமான மலை போன்ற உறுதியான தோற்றம், மற்றும் பரந்த மார்புகள், குறிப்பிட்டுச் சொல்லும் தகுதிகளான கழுகு போன்ற கூர்ந்த பார்வை, தொலை நோக்குச் சிந்தனைத் திறன், சிறந்த அறிவாற்றல், நல்ல நினைவாற்றல் மற்றும் உயர்ந்த சிந்தனைகள், உறுதியான கொள்கைப் பிடிப்பு ஆகிய குணநலன்களை ஒருங்கே பெற்றவர் தான் காலித் பின் வலீத் (ரழி). இஸ்லாமிய போர் வரலாற்றில் இவருக்கென தனிஇடம் உண்டு. இவருக்கு நிகரான குதிரை ஏற்ற வீரரும், வாள் வீச்சு மற்றும் பல்வேறு ஆயுதங்களைப் பிரயோகிக்கும் திறமை படைத்தவர்கள் கிடையாது என்று சொல்லும் அளவுக்கு வீரத்தின் விளைநிலமாகத் திகழ்ந்தார்.

உஹதுப் போர்க்களத்தில் எதிரிகளின் தரப்பில் இருந்து கொண்டு,  முஸ்லிம்களை கதிகலங்கச் செய்த காலித் பின் வலீத் அவர்கள், அல் முஃதா போரிலே முஸ்லிம்கள் தரப்பில் கலந்து கொண்டு, இஸ்லாமிய எதிரிகளைக் கதிகலங்க வைத்த பெருமைக்குரியவர். தன்னுடைய தனித் திறமை மற்றும் போர்த்திட்டத்தின் காரணமாக ரோமர்களைப் புறமுதுகிட்டோடச் செய்து, முஸ்லிம்களுக்கு மிகப் பெரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்த மாவீரர். ரோமும், பாரசீகமும் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் படை நடத்தி வருகின்றார் என்ற செய்தி கேட்டவுடன், அவர்களின் கைகளில் இருந்த வாள் ஆட்டம் காணும் அளவுக்கு எதிரிகளின் இதயத்தில் அச்சத்தை ஊட்டிய வீரத்தின் விளைநிலம் காலித் பின் வலீத் (ரழி) ஆவார்கள்.

இறைநிராகரிப்பாளர்களின் முன்பு காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் பெயர் உச்சரிக்கப்படுமானால், அவர்கள் கதிகலங்கினார்கள், அவரது வலிமை மிக்க தாக்குதல்கள் அவர்களை நிலைகுலையச் செய்தன. அதன் மூலம் மிகப் பெரிய வெற்றியை இஸ்லாமியப் போர் வரலாற்றில் ஈட்டிக் கொடுத்த பெருமை காலித் பின் வலீத் (ரழி) அவர்களைச் சாரும்.

இதன் காரணமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வின் வாள்” என்றழைக்கக் கூடிய சைபுல்லாஹ் என்ற பட்டப் பெயரைச் சூட்டி காலித் பின் வலீத் (ரழி) அவர்களைப் பெருமைப்படுத்தினார்கள். இஸ்லாமிய வரலாற்றிலும் சரி.., இன்னும் வரக் கூடிய நாட்களின் போர் வரலாற்றிலும் சரி.., காலித் பின் வலீத் (ரழி), என்ற மாபெரும் வீரருக்கு தனிச் சிறப்பிடம் என்றென்றும் உண்டு.

வெற்றிகள் அவரது காலை வந்து முத்தமிட்டன, அவரது எதிரிகள் கூட அவரது வீரத்தை மெச்சும் அளவுக்கு அவர் தன்னிகரற்ற வீரராகத் திகழ்ந்தார்.

பிறப்பும் வளர்ப்பும்

மக்காவின் பனூ மக்சூம் என்ற குலத்தில் வலீத் பின் முகீரா என்பவருக்கு மகனாகப் பிறந்த காரணத்தால், அவரது பெருமைமிக்க குலப் பெருமையின் காரணமாக, இளமையிலேயே எல்லோராலும் அறியப்படக் கூடிய மனிதராகக் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் திகழ்ந்தார்கள். அவரது இளமைக் காலத்திலேயே தூர நோக்கு, திட்டமிட்டு செயலாற்றுதல், எடுத்த காரியத்தை கனகச்சிதமாக நிறைவேற்றுதல் ஆகியவற்றின் காரணமாக பனூ மக்சூம் கோத்திரத்து வாலிபர்களில் மிகச் சிறந்த இடத்தைப் பெற்றிருந்தார்கள்.

உஹதுப் போர் முதல் ஹ{தைபிய்யா வரைக்கும் இஸ்லாமிய எதிரிகளின் தரப்பில் இருந்த காலித் பின் வலீத் அவர்கள், இஸ்லாமிய எதிரிகளின் இராணுவத்தின் துணைப் பிரிவுக்குத் தலைவராகவும், குதிரைப் படைக்குத் தலைவராகவும் இருந்து பணியாற்றிய அனுபவமிக்க இவர், அதற்குப் பின் இஸ்லாத்தின் வெளிச்சப் புள்ளிகள் அவரது வாழ்வை வெளிச்சமேற்றியதன் காரணமாக, பின்னாளில் இஸ்லாமியப் போர்ப்படைத்தளபதியாகப் பரிணமித்தார். இஸ்லாத்தின் எதிரிகளை நிலைகுலையச் செய்து, இஸ்லாமிய சாம்ராஜ்யம் அரபுப் பிரதேசத்தை விட்டும் பரவத் துணை புரிந்தார்.

இஸ்லாத்தைத் தழுவு முன்

இஸ்லாத்தினை தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்வதற்கு முன்பாக கலந்து கொண்ட அத்தனை போர்களிலும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு எதிராக மார்தட்டி நின்ற காலித் பின் வலீத் அவர்கள், ஒவ்வொரு முறையும் இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்திக்கும் பொழுதெல்லாம் அவர்களது குணநலன்களால் கவரப்பட்டு, தன்னுடைய நோக்கத்தை சிறிது சிறிதாக மாற்றிக் கொண்டார். இறுதியாக இஸ்லாம் என்னும் வெளிச்சப் புள்ளி, அவரது இதயத்தைக் கவ்வி இருந்த இருளைத் துடைத்தெறிந்தது. அவரது தலைமை இஸ்லாமிய போர் வரலாற்றில் சூரியனாகப் பிரகாசித்தது.

ஒருமுறை போரின் பொழுது, நபித்தோழர்கள் பின்னிற்க இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதிய லுஹர் தொழுகையை முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார்கள். இது தான் தக்க சமயம் என்று எண்ணிக் கொண்ட காலித் பின் வலீத் அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களையும், அவர்களைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்த தோழர்களையும் தாக்கி, அந்தப் போரைத் தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்வதற்குத் தாயரானார். ஆனால் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு படை ஒன்று, அவரைப் பின்னுக்கு இழுப்பதைப் போல உணர்ந்த காலித் பின் வலீத் அவர்கள், தன்னுடைய முயற்சியைக் கைவிட்டார். முஸ்லிம்களை எதிர்க்கும் துணிவையும் இழந்து விட்டார்.

மீண்டும் அஸர்  தொழுகை நடந்து கொண்டிருந்தது. இந்தமுறை கண்டிப்பாக சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாது என்று சூளுரைத்து, இறைத்தூதர் (ஸல்) அவர்களையும் அவர்களைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்த தோழர்களையும் நெருங்கிய பொழுது, கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு சக்தி அவரைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டதோடு, அவரால் நகரக் கூட இயலாமல் போனது. அப்பொழுது தான் ஒரு முடிவுக்கு வந்தார், இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் மோதுவது வெட்டி வேலை, அவரை ஏதோ ஒரு சக்தி பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது, இந்த நிலையில் அரேபியாவை மட்டுமல்ல, அரபுப் பிரதேசத்தையும் கடந்து இந்த முழு உலகத்தையும் அவர் ஒரு நாள் வென்று விடுவார் என்று தனக்குத் தானே கூறிக் கொண்டு, தனது முயற்சிகளைக் கை விட்டு விட்டார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் இறைநிராகரிப்பாளர்களுக்கும் ஹ{தைபிய்யாவில் வைத்து உடன்படிக்கை நடந்து முடிந்ததுடன், இனி நமது நிலை என்ன? நாம் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது என்ற மனநிலைத் தடுமாற்றத்துக்கு உள்ளானார். அடுத்து எந்த முடிவை எடுப்பது என்ற குழப்பத்தில் தடுமாறிய காலித் பின் வலீத் அவர்கள், எத்தியோப்பியாவிற்குச் சென்று விடலாமா? என்று கூட நினைத்தார். பின் எத்தியோப்பியாவிற்கு நாம் எப்படிச் செல்வது? ஏற்கனவே, எத்தியோப்பியாவின் மன்னர் நஜ்ஜாஸி முஸ்லிம்களின் ஆதரவாளராக மாறி, முஸ்லிம்கள் அங்கு பாதுகாப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நினைவு அவருக்கு வந்ததும் தன்னுடைய அந்த முடிவையும் மாற்றிக் கொண்டார். பின் நாம் ஹர்கல் தேசத்துக்குச் சென்று தன்னுடைய மதத்தை விட்டு விட்டு, ஒரு கிறிஸ்தவனாகவோ அல்லது யூதனாகவோ மதம் மாறி விடலாமா? என்று பல்வேறு சிந்தனைகள் அவரது மனதை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. ஆனால் எந்த முடிவுக்கும் அவரால் வர இயலவில்லை. இன்னும் எதுவாக இருப்பினும் இந்த அரேபியா மண்ணிற்குள் இருந்து தான் அந்த மாற்றம் நிகழ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். போர், சண்டை என்று அனைத்தையும் விட்டு விட்டு அமைதியாக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமா? என்று பலவித நினைவுகள் அவரது நினைவை அலைக்கழித்துக் கொண்டிருந்தன, ஆனால் எதிலும் ஒரு முடிவுக்கு வர இயலாதவராக இருந்தார். அப்பொழுது ஏற்கனவே இஸ்லாத்தைத் தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டிருந்த அவரது சகோதரர், காலித் பின் வலீத் அவர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதினார். அந்தக் கடிதத்தில் தன்னுடைய சகோதரரைப் பற்றி விசாரித்தும், இன்னும் அதற்கும் மேலாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்களைப் பற்றி விசாரித்தார்கள் என்ற செய்தியையும் அதில் குறிப்பிட்டிருந்ததைக் கண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு இனம் புரியாததொரு உளக் கிளர்ச்சி ஏற்பட்டது. இன்னும் காலித் பின் வலீத் அவர்கள் ஒரு நாள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள். அவரது அறிவு, ஆற்றல், சிந்தனைத் திறன், தொலை நோக்குப் பார்வை ஆகிய இறைவனின் அருட்கொடைகள் அனைத்தும், காலித் பின் வலீத் அவர்களை இதே நிலையில் விட்டு வைத்திருக்கப் போவதில்லை என்பதனையும் அதில், அந்த சகோதரர் குறிப்பிட்டுக் கூறியிருந்தார்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுதல்

மேலே உள்ள செய்திகள் யாவும் காலித் பின் வலீத் அவர்களை பல்வேறு சிந்தனைகளைத் தோற்றுவித்ததோடு, என்னை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தார்களா? நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வேன் என்று சொன்னார்களா? எனக்கென பிரகாசமான எதிர்காலம் ஒன்று இருக்கின்றது போல் தெரிகின்றது என்று தனக்குத் தானே கூறிக் கொண்ட காலித் பின் வலீத் அவர்கள், தான் கண்ட கனவை இப்பொழுது அசை போட்டுப் பார்க்க ஆரம்பித்தார். அடர்ந்த, காற்றோட்டம் இல்லாத குகை போன்ற இடத்தை விட்டு பச்சைப் பசேலென்ற மிகப் பரந்த பசுஞ்சோலைகளின் பக்கம் தான் மீண்டு வருவதாகக் கண்ட கனவையும், இப்பொழுது தனக்குள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் உணர்வலைகளையும் ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தார். இனி நாம் இங்கு தங்கியிருப்பதில் பயனில்லை என்பதை உணர்ந்தவராக, இனி மதீனாவை நோக்கிச் செல்வது என்ற இறுதி முடிவை எடுத்த அவர், நாம் தனியாகப் போவதை விட, நம்முடன் யாரையாவது துணைக்கழைத்துச் செல்வது நல்லது என்று நினைத்து, யாருடன் செல்வது என்ற சிந்தனைக் குழப்பத்தில் ஆழ்ந்த பொழுது, உதுமான் பின் தல்ஹா (ரழி) அவர்களின் நினைவு வர, தனது நோக்கத்தை அவரிடம் தெரிவித்தார்.

உதுமான் பின் தல்ஹா (ரழி) அவர்களும் தனக்கும் அப்படியொரு நோக்கம் இருப்பதாகக் கூறிய அவர், சரி இருவரும் சேர்ந்து இணைந்தே மதீனாவிற்குச் சென்று இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்திப்பதென்று முடிவாகியது. இருவரும் மதீனா நோக்கிப் புறப்பட்ட பொழுது, இடையில் அம்ர் பின் ஆஸ் (ரழி) அவர்களைச் சந்தித்தனர். அவர், நீங்கள் இருவரும் எங்கே புறப்பட்டு விட்டீர்கள் என்று கேட்ட பொழுது, அவர்கள் தங்களது நோக்கத்தைத் தெரிவித்தார்கள். தாங்கள் மதீனா சென்று இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களது கரங்களில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளச் சென்று கொண்டிருப்பதாகக் கூறினார்கள். மதீனா செல்லும் குழுவின் எண்ணிக்கை, இரண்டு இப்பொழுது மூன்றாக மாறியது.

மூவரும் மதீனாவை ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு, ஸஃபர் மாதம் முதல் தேதியன்று சென்றடைந்தார்கள். முதலில் இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்த காலித் பின் வலீத் அவர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் புன்னகை தவழ வரவேற்றார்கள். பின் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருக்கரங்களைப் பற்றிக் கொண்டு, திருக்கலிமாவை முன்மொழிந்து இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். மிகவும் பாசத்துடன் காலித் பின் வலீத் (ரழி) அவர்களை நோக்கிய அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

காலித் பின் வலீத் (ரழி) அவர்களே….!

உங்களது புத்திசாலித்தனம், கல்வி ஞானம், தொலை நோக்குப் பார்வை ஆகிய நற்பண்புகளை வைத்துக் கணித்து, என்றாவது ஒருநாள் நீங்கள் இஸ்லாத்திற்குள் நுழைவீர்கள் என்று நான் நினைத்தேன் என்றார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! எனக்கு மன்னிப்பு உண்டா? என்ற கேட்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள்..!

நான் என்னுடைய வாள் பலத்தினால் பல்வேறு இன்னல்களையும், தீமைகளையும் புரிந்துள்ளேன். இதற்கு முன் இஸ்லாத்திற்கு நான் இழைத்த கொடுமைகளுக்காக மன்னிப்புக் கோரி இறைவனிடம் பிரார்த்தனை புரியுமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்களை வேண்டிக் கொண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு, இறைநிராகரிப்பில் இருந்து கொண்டு நீங்கள் செய்த அத்தனை பாவங்களும் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டதன் காரணமாக, தானாகவே அழிந்து போய் விடுகின்றன என்று பதில் கூறினார்கள்.

இல்லை..! யா ராசூலுல்லாஹ்..! இருப்பினும், நீங்கள் எனக்காக பிரார்த்தனை செய்தாக வேண்டும் என்று மீண்டும் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் வலியுறுத்தவே, இறைவா! காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் பாவங்களை மன்னித்தருள்வாயாக! அவர் மீது கருணை காட்டுவாயாக! என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.

அதன் பின்பு அம்ர் பின் ஆஸ் (ரழி) அவர்களும், பின்பு உதுமான் பின் தல்ஹா (ரழி) அவர்களும் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டார்கள்.

கண்ட கனவு நனவாகுதல்..!

பின்பு தான் கண்ட கனவைப் பற்றி காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், அபுபக்கர் சித்தீக் (ரழி) அவர்களிடம் கூறினார்கள்.

காரிருள் கொண்ட அறை என்பது நீங்கள் அறியாமைக்காலத்தில் இருந்து கொண்டிருந்த இறைநிராகரிப்பு என்பதாகும். பின் அதனை விட்டு வெளியேறி பரந்த புல்வெளியை நோக்கி வருவது என்பது, இறைநிராகரிப்பில் இருந்து வெளியேறி, இஸ்லாத்தினுள் நுழைவதனைக் குறிக்கும். அந்தக் கனவு நீங்கள் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டதன் காரணமாக இப்பொழுது நனவாகி இருக்கின்றது என்றும், அவர்களது கனவிற்கு அபுபக்கர் சித்தீக் (ரழி) அவர்கள் விளக்கமளித்தார்கள்.

காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் பயம் காரணமாகவோ அல்லது பெருமைக்காகவோ இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளவில்லை, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்வியல் முன்மாதிரிகள் தான் அவரை இஸ்லாத்தின் பால் ஈர்க்கக் காரணமாக அமைந்தன. மனித குல வரலாற்றில் சத்தியத்தை நிலைநிறுத்துவதற்காக பாடுபடுகின்ற மனிதர்கள் தொலை நோக்குச் சிந்தனையுடனும், வெளிப்படையான போக்குகளுடனும் தங்களது வாழ்வை அமைத்துக் கொள்வது என்பது, அவர்களது அடிப்படை மற்றும் சிறப்புத் தன்மைகளாக இருந்து வந்துள்ளன. எனவே தான் எதனை சத்தியம் என்று ஏற்றுக் கொண்டார்களோ அதனை வெளிப்படையாக மக்களுக்குத் துணிவுடன் அறிவிக்க அல்லது எடுத்து வைக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். இந்த இரண்டு அடிப்படை அம்சங்களாகிய துணிவு மற்றும் வெளிப்படையான தன்மை ஆகிய இரண்டும் காலித் பின் வலீத் (ரழி) அவர்களிடம் காணப்பட்டதே, அவர்களை இஸ்லாமிய வரலாறு போற்றும் மாவீரராக உயர்த்திக் காட்டிக் கொண்டிருக்கின்றது.

அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் வரைக்கும், இஸ்லாத்தின் பரம விரோதியாகவே இருந்தார். உஹத் போரிலே முஸ்லிம்கள் எளிதாக வெற்றி பெற்றிருக்கக் கூடிய அந்த வாய்ப்பை தவிடு பொடியாக்கி, தான் எந்த நோக்கத்திற்காக வந்தாரோ அந்த நோக்கத்தை அடைவதில் அவர் காட்டிய உறுதி மற்றும் தீவிரப் போக்கு ஆகியவைகள் தான் முஸ்லிம்களின் வெற்றியை நிலைகுலையச் செய்தது எனலாம். இருப்பினும், அந்தப் போரில் இறைநிராகரிப்பாளர்கள் வெற்றி பெற இயலாமல் போனதுடன், இனி நாம் முஹம்மது (ஸல்) அவர்களை வெற்றி பெற இயலாது என்ற நிலைக்கு, மன ரீதியாகத் தள்ளப்பட்டனர்.   முஸ்லிம்கள் நம்மை விஞ்சி விட்டார்கள், இனி அவர்களை நாம் எதுவும் செய்துவிட இயலாது என்று அனைத்து குறைஷித் தலைவர்களும் முடிவுக்கு வந்த பின்னரும், காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. மற்றவர்களது முடிவை மண்ணில் போட்டுப் புதைத்து விட்டு, ஒரு குதிரைப் படையை ஒருங்கிணைத்துக் கொண்டு மலைப் பகுதியில் புகுந்து முஸ்லிம்களை எதிர்த்துப் போரிட்டு, முஸ்லிம்களுக்கு கடுமையான சேதத்தோடு, உயிர் சேதத்தையும் அதிகம் ஏற்படுத்தி விட்டார் காலித் பின் வலீத் அவர்கள்.

இத்தகைய மனிதர் தான், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின்பும் அதே வீரத்தோடும், விவேகத்தோடும் தான் எந்த நோக்கத்தை அடைய போர் முகத்துக்கு வந்தோமோ அந்த நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக, வேகம் குன்றாது போரிட்டார் இந்த வீரமகன்.  அவர் தனது உயிரையும், பொருளையும், ஆவியையும் இறைமார்க்கத்திற்காக அற்பணித்து விட்டிருந்தார். அவர் என்றைக்கு இஸ்லாத்தை தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டாரோ அன்றிலிருந்து, சத்தியத்தை மேலோங்கச் செய்யவும், அசத்தியத்தை வேரோடு சாய்க்கவும் போரிட்டுக் கொண்டே இருந்தார். இன்னும் மிகவும் கடுமையாக கால கட்டங்களில் கூட அவர், கொஞ்சம் கூட தடுமாற்றத்தை தன்னுடைய உள்ளத்தில் உலா விட்டதில்லை, நம்பிக்கையை இழந்து விடவில்லை.

காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் காட்டிய வீர தீர சாகசங்களை இன்றளவும் உலகம் வியந்து போற்றிக் கொண்டிருக்கின்றது. அவரது வீரம் செறிந்த அந்த தருணங்களை இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, இஸ்லாத்தின் எதிரிகள் கூட போற்றும் அளவுக்கு, அவரது வீரத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். முந்தைய ஜெர்மன் படைத்தளபதியாக இருந்த ஜெனரல் அரோன் ரோம்மல் என்பவரிடம், அவருடைய  வெற்றியைக் குறித்துக் கேட்ட பொழுது, நான் காலித் பின் வலீத் அவர்களது தந்திரத்தைக் கையாண்டு கொண்டிருப்பதன் மூலம் தான் இத்தகைய வெற்றிகளைப் பெற்றுக் கொண்டிருக்கின்றேன் என்று பதில் கூறியிருக்கின்றார்.

ரோமப் பேரரசன் சீஸரை மண்ணுக்கு இரையாக்கி வைத்தது, காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் திட்டமிட்ட தாக்குதல்களும், அவர் தன்னுடைய படைவீரர்களை ஒருங்கிணைத்து செயலாற்றச் செய்ததது தான், அதன் காரணமாகும்.

ரோமும், பாரசீகமும் அன்றைக்கு இருந்த செல்வச் செழிப்பில் மற்றும் இராணுவ அமைப்பில் முஸ்லிம் படை அவர்களை வெற்றி கொள்வது என்பது இயலாத காரியம் என்றே, உலகத்தின் கணிப்பு இருந்திருக்கும். ஆனால், அத்தகைய படையை மண்ணோடு மண்ணாக ஆக்கி, அவர்களது பேரரசை புழுதி படியச் செய்த வரலாற்று நிகழ்ச்சியை ஏற்படுத்திக் காட்டியவர் காலித் பின் வலீத் (ரழி). சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையே நடந்த அந்த இடையறாத போரில், இறைவனது துணை கொண்டு காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் வெற்றியைத் தவிர வேறெதனையும் கண்டதில்லை. தோல்வி என்பதே அவரது வரலாற்றில் இல்லை, என்ற சரித்திரத்தைப் படைத்தவர் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள்.

அல் முஃதா போர்

இன்றைய சிரியாவின் எல்லைக்கு உட்பட்ட பகுதி அல் முஃதா. இந்த இடத்தில் நடந்த போர் தான் இஸ்லாமிய வரலாற்றில் முஃதா போர் என்றழைக்கப்படுகின்றது. இஸ்லாத்தைத் தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட பின் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் முதன்முதலாக இந்த முஃதா போரில் சாதாரண படை வீரராகக் கலந்து கொண்டார்கள். இந்தப் போரில் கலந்து கொண்ட தளபதிகள் மூவர் ஒருவர் பின் ஒருவராக வீர மரணம் அடைந்து விட, நான்காவதாக தலைமைப் பொறுப்பை ஏற்கும் பாக்கியம், காலித் பின் வலீத் (ரழி) அவர்களிடம் வந்தடைந்தது. அப்பொழுது, முஸ்லிம்களின் படையில் வெறும் 3000 படைவீரர்கள் தான் இருந்தனர், இன்னும் அவர்கள்  மிக நீண்ட காலம் போர் செய்து சற்று களைப்படைந்தும் இருந்தனர். ஆனால் எதிரிகளின் பக்கமோ 2 லட்சம் படைவீரர்களும், இன்னும் அவர்கள் முழு ஆயுத பலத்தோடும் போருக்கு வந்திருந்தனர். அவர்களின் கண்களில் போர் கனல் தெறித்துக் கொண்டிருந்தது. பின்வரும் சம்பவத்திற்குப் பின் போர் மும்மூரமாக ஆரம்பித்தது.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நம்பிக்கையைப் பெற்றதொரு தோழர், ஹாரிஸ் பின் அம்ர் அஸ்தி (ரழி). இந்தத் தோழர் மூலமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு கடிதத்தை, பஸ்ராவின் மன்னர் ஹாரிஸ் பின் அமி ஷம்மார் கஸ்ஸானி என்பவருக்கு அனுப்பி வைத்தார்கள். அவர் செல்லும் வழியில் முஃதா என்ற இடத்தில் அமைந்துள்ள சிறு நகரமான பல்கா என்ற இடத்தை இந்தத் தோழர் அடைந்தவுடன், அந்தப் பகுதியின் கவர்னராக இருந்த சர்ஜீல் பின் அம்ர் கஸ்ஸானி என்பவர், இவரின் வருகையை அறிந்து, அந்த நபித்தோழரை கைது செய்து, கொலையும் செய்து விட்;டார். இந்தத் துயரச் செய்தி இறைத்தூதர் (ஸல்) அவர்களை அடைந்தவுடன், மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். இதே காலகட்டத்தின் இன்னுமொரு நிகழ்ச்சியும் நடந்தது. அதாவது, ஒரு பதினைந்து நபர் கொண்ட முஸ்லிம்களின் குழு ஒன்று, சாத் அல் அத்லா என்ற பகுதியில் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த பொழுது, இந்தப் பதினைந்து பேர் கொண்ட குழுவும் படுகொலை செய்யப்பட்டார்கள். இதே கால கட்டத்தில் ரோமப் பேரரசன் மதீனாவைத் தாக்கப் போவதாகவும் அறிவித்திருந்தான்.

எனவே, மேற்கூறிய சம்பவங்கள் தான் இந்த முஃதா போர் நடைபெறுவதற்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன. எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மிகப் பெரிய படையைத் தயார் செய்து, அந்தப் படைக்கு முதல் தளபதியாக ஜைத் பின் ஹாரிதா (ரழி) அவர்களையும், அவர் இறந்து விட்டால் பின் ஜாஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்களையும், இன்னும் அவரும் வீரமரணம் எய்து விட்டால், அப்துல்லா பின் ரவாஹா (ரழி) அவர்களையும் தளபதிகளாக முறையே நியமித்துக் கொள்ளும்படி, முஸ்லிம்களுக்கு அறிவுரை வழங்கி முஃதா போருக்கு முஸ்லிம் வீரர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

இந்த மூன்று தளபதிகளும் மரணமடைந்து விட்டால், பின் படைவீரர்கள் தங்களுக்குள் கலந்தாலோசனை செய்து கொண்டு, தங்களுக்குள் ஒரு தளபதியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அறிவுரையும் வழங்கி அனுப்பி வைத்தார்கள்.

ஜைத் பின் ஹாரிதா (ரழி) அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, வெள்ளைக் கொடியைத் தனது கையில் ஏந்திய வண்ணம் போர் முகத்துக்கு தனது படையை அழைத்துச் சென்று, எந்த இடத்தில் ஹாரித் பின் அம்ர் அஸ்தி (ரழி) அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்களோ, அந்த இடத்திலேயே தனது படையை இறக்கி, கூடாரம் அடித்து நிலைப்படுத்தினார்கள். இன்னும் நிலைகுலையாத தன்மையையும், எதிரிகளை எதிர்க்கும் போது தங்களது பாதங்கள் உறுதியாக இருப்பதற்கும் அவர்கள் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டார்கள்.

இன்னும் வயதானவர்களையும், இன்னும் குழந்தைகளையும் பெண்களையும் கொலை செய்வதைத் தடை செய்தார்கள். இன்னும் இந்த உலக வாழ்வை ஒதுக்கி விட்டு, இறைதியானத்தில் ஈடுபடக் கூடிய துறவிகள் மற்றும் சந்நியாசிகள் ஆகியோரையும் கொலை செய்வதைத் தடுத்தார்கள். இன்னும் நீங்கள் ஏற்றுக் கொண்ட உடன்படிக்கையை மீறாதீர்கள், நீங்கள் ஏற்றுக் கொண்ட அமானிதங்களையும் முறித்து விடாதீர்கள் என்று அறிவுரை வழங்கினார்கள். எந்தக் கட்டடம் தரை மட்டமாக்கப்படுவதையோ இன்னும் மரங்களை வெட்டி நிலத்தில் சாய்க்ப்படுவதையோ படைவீரர்கள் செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டார்கள். தங்களது தளபதியான இறைத்தூதர் (ஸல்) அவர்களது மேற்கண்ட அறிவுரையைச் செவி மடுத்த பின், உண்மையில் மிகவும் சிரமமாக கடிமானதொரு பணியை நிறைவேற்றுமுகமாக முஸ்லிம் படைவீரர்கள் போர்க்களம் நோக்கித் தங்களது பயணத்தைத் துவங்கினார்கள். கடுமையாக நிலப்பரப்புகளின் ஊடாகப் பயணித்த பின் இறுதியாக பால்கா என்ற அந்த குறிப்பிட்ட இடத்தை முஸ்லிம்கள் அடைந்தார்கள். அந்த இடத்தை அடைந்த பின்பு, அங்கு ஏற்கனவே இவர்களை எதிர்பார்த்து, ஹிர்கல் நாட்டு மன்னன் ஒரு படையை அனுப்பி வைத்திருப்பதை அறிந்து கொண்டார்கள். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பின் கனத்தை எடை போட்டுப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்களது தோழர்கள், தாங்கள் ஏற்றுக் கொண்ட சத்தியத்தை நிலைநாட்டுவதற்கு, தங்களது உயிர், பொருள், ஆவி அத்தனையையும் அற்பணிக்குமுகமாக களத்தில் இறங்கினாhகள்.

தளபதிப் பொறுப்பை ஏற்றிருந்த ஜைத் பின் ஹாரிதா (ரழி) அவர்கள், தனக்குக் கீழ் உள்ள தோழர்களின் வீரத்தை ஊக்குவிக்குமுகமாக தான் வெகு விரைவாக எதிரிப்படைகளுக்குள் ஊடுறுவிச் சென்று முன்னேறிக் காட்டினார். ஒருவர் நான்கு நபரைச் சமாளித்து, அவர்களை உற்சாகப்படுத்திக் காட்டினார். எங்கும் அழிவும், மரண ஒலமும் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன. எதிரிகளை ஊடறுத்துச் சென்ற ஜைத் பின் ஹாரிதா (ரழி) அவர்கள் இப்பொழுது வீர மரணம் எய்தினார்கள். பின் ஜஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். எதிரிகளை ஊடறுத்துச் செல்ல விரும்பிய ஜஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்களுக்கு, எதிரிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்த காரணத்தால், அந்த வாய்ப்பு எளிதாக இருக்கவில்லை. எனவே, தான் ஏறி வந்த குதிரையில் இருந்து இறங்கி, எதிரிகளின் தலைகளைக் கொய்ய ஆரம்பித்தார். ஆனால், எதிhகளில் ஒருவன் அவரது வலது புஜத்தில் கடுமையானதொரு தாக்குதலைத் தொடுத்ததன் காரணமாக, அவரது வலது கரம் துண்டிக்கப்பட்டுக் கீழே விழுந்தது. வலது கரத்தில் ஏந்தியிருந்த கொடியை இடது கரத்திற்கு ஜஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்கள் மாற்றிக் கொண்டார்கள். பின் அந்த எதிரி இடது கரத்தையும் வெட்டிச் சாய்த்தான். இருப்பினும் தான் ஏந்திய அந்தக் கொடியை தரையில் விழ அனுமதிக்காத ஜஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்கள், தனது கால்களைக் கொண்டு அந்தக் கொடியை ஏந்திக் கொண்டார். இறுதியாக எதிரிப்படை வீரன் கொடுத்த அடியை தாங்கவியலாத ஜஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்கள் வீர மரணமடைந்தார்கள். இப்பொழுது, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் அறிவுரைப்படி, மூன்றாவது தளபதிப் பொறுப்பை அப்துல்லா பின் ரவாஹா (ரழி) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். கீழே விழ இருந்த கொடியை கையில் ஏந்திப் பிடித்த அப்துல்லா பின் ரவாஹா (ரழி) அவர்கள், தளபதிப் பொறுப்பின் கீழ் மிகச் சிறந்த வீரத்தை காட்டி எதிரிகளைக் கலங்கடித்தபின் அவரும் வீரமரணம் எய்தினார்.

எண்ணிக்கையில் வந்த பலவீனம்

தங்களது படைத்தளபதிகளில் மூவரை ஒருவர் பின் ஒருவராக இழந்து விட்டிருந்த முஸ்லிம் படைவீரர்கள், இப்பொழுது மனதளவில் சற்று நிலைகுலைந்து போயிருந்தார்கள். இன்னும் எதிரிப் படைக்கும் முஸ்லிம் படைக்கும் இடையே இருந்த எண்ணிக்கை வித்தியாசமும் அவர்களது மனோ பலத்தை சற்று அசைத்துத் தான் பார்த்துக் கொண்டிருந்தது.  வெற்றி கிடைக்குமா? என்ற அச்சமும் நிலவியது. ரோமப் படையின் எண்ணிக்கையே அவர்களை இந்த எண்ணத்திற்கு இட்டுச் சென்று கொண்டிருந்தது.

இன்னும் முஸ்லிம்களின் கொடி கீழே விழக் கூடிய நிலையில், எதிரிகளின் கரங்களுக்குள் சிக்கக் கூடிய நிலையில் இருந்து தப்பித்துமிருந்தது. கீழே விழ இருந்த கொடியை தாவிப் பிடித்து கைகளில் ஏந்திக் கொண்ட தாபித் பின் அர்க்கம் (ரழி) அவர்கள், தான் ஏந்திய அந்தக் கொடியை, சற்றும் எதிர்பாராத நிலையில் காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் கரங்களில் சேர்த்தார். அந்தக் கொடியை காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் கைகளில் சேர்க்கும் பொழுது, காலித் பின் வலீத் (ரழி) அவர்களே! தயவுசெய்து இந்தக் கொடியைப் பிடித்துக் கொள்ளுங்கள். இந்த மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உங்களால் தான் தலைமைப் பொறுப்பை ஏற்று, அதனை செவ்வனே நிறைவேற்ற முடியும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.

கைகளில் கொடியைப் பிடித்துக் கொண்டு, என்னருமைத் தோழரே! இது இக்கட்டான சூழ்நிலை என்பதை நானறிவேன், ஆனால் என்னை விட நீங்கள் தான் இறைநம்பிக்கையில் முந்திக் கொண்டவரும், இன்னும் பத்ருப் போரில் கலந்து கொண்ட அனுபவமிக்கவரும் கூட. எனவே நீங்கள் தான் தலைமைப் பொறுப்பிற்கு தகுதி வாய்ந்த நபர் என்று கனிந்த குரலில் கூறினார். இறைவன் மீது சத்தியாக..! உங்களது மன வலிமையும், உங்களது தியாகமும் அற்பணமும் ஏற்கனவே நிரூபணமானதொன்று. கீழே விழுந்த அந்தக் கொடியை தங்களது கைகளில் சேர்ப்பித்து விட வேண்டும் என்ற நோக்கமல்லாது வேறு நோக்கத்திற்காக நான் அதனை எடுத்துக் கொள்ளவில்லை. தயவு செய்து இந்தக் கொடியைப் பெற்றுக் கொண்டு, தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதன் மூலம் இந்த இக்கட்டான சூழ்நிலையை, தங்களது அனுபவம் மற்றும் செயல்திறன், திட்டமிடும் ஆற்றல் மூலம் சமாளித்துக் காட்டுங்கள் என்று வேண்டிக் கொண்டார்.

தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுதல்

இராணுவத் தந்திரங்கள் மூலமாக எதிரிகளை அச்சுறுத்தக் கூடிய தலைவர் ஒருவர் தான் இப்பொழுது நமது வீரர்களுக்கு தேவைப்படுகின்றார். எதிரிகளைத் துவம்சம் செய்யும் திட்டங்களுடன் நமது வீரர்களை வழிநடத்திச் சென்று, எதிரிகளை நிலைகுலையச் செய்வதன் மூலம் நமது வீரர்கள் சற்று மனவலிமை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டார். பின் படையினரின் பக்கம் திரும்பிய அவர், என்னருமைத் தோழர்களே! காலித் பின் வலீத் (ரழி) அவர்களை நமது தலைவராக நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? என்று கேட்டார். அவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில், காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் எங்களுக்கு தளபதியாகப் பொறுப்பேற்பதில் சந்தோஷமே என்று கூறினார்கள். இப்பொழுது, கொடியைக் கைகளில் ஏந்திக் கொண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், முஸ்லிம் படைக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மிகவும் உக்கிரமாக நடந்த அந்தப் போரில் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் ஒரு வாள் உடைந்து போக இன்னொரு வாளை மாற்றி மாற்றி.., இவ்வாறாக அந்தப் போரில் ஒன்பது வாள்களைப் பயன்படுத்;தி எதிரிகளைத் துவம்சம் செய்தார்.

எதிரிகளுடன் ஒப்பிடும் பொழுது, முஸ்லிம் படைவீரர்கள் மிகக் குறைந்த அளவே இருந்தனர். காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் தந்திரமும், போர் திட்டங்களும் எதிரிகளின் திட்டங்களை தவிடுபொடியாக்கின. ஒரு சில முஸ்லிம் வீரர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை மறைந்திருக்கச் செய்து, திடீரென போர்க்களத்திற்குள் நுழையுமாறு பணித்தார்கள். திடீரென ஏற்பட்ட  இந்த போர்க்களச் சூழலில், ஏற்பட்ட புழுதிப் படலம் மற்றும் ஆரவாரம் எதிரிகளை நிலைகுலையச் செய்தது. திடீர் திடீர் என வந்து போர்க்களத்திற்குள் குதித்த முஸ்லிம்களைப் பார்த்த ரோமப் படைகள், புதிய படைப் பிரிவு வந்து கலந்து கொண்டிருக்கின்றது என்று நினைத்து, அச்சத்திற்குள்ளாயினர்.

ரோமப் படைவீரர்களின் இந்த மனநிலைத் தடுமாற்றத்தைத் தங்களுக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், எதிரிகளின் வளையத்திலிருந்து தனது படைவீரர்களை பாதுகாப்பான பகுதிக்கு அனைவரையும் அப்படியே, ஒதுக்கி அழைத்துச் சென்று விட்டார்கள். இதற்கு முன்பு ரோமர்கள் வெற்றி பெற்று விடுவோம் என்ற மமதையில் இருந்தார்கள். ஆனால், முஸ்லிம்களோ அவர்களின் ஒருவரையும் உயிருடன் போர்க்களத்திலிருந்து திருப்பி அனுப்பவில்லை. அவர்களது நம்பிக்கைக்கும் காரணமிருந்தது. அதுவென்னவெனில், சற்று சில காலங்களுக்கு முன்பு தான் பாரசீகத்தை அவர்கள் வெற்றி கொண்டிருந்தார்கள். அந்த வெற்றிப் போதையானது, எண்ணி விடக் கூடிய அளவிற்கு இருந்த முஸ்லிம்களையும், வெகு எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்ற போதையை ஏற்றி இருந்தது.

இறைவன் காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு வழங்கியிருந்த அந்த ஆற்றல்களும், திட்டமிடல்கள், வீரம், நிலைகுலையாத தன்மை ஆகியவற்றின் காரணமாக, எதிரிகளை வென்றெடுக்கக் கூடிய ஆற்றலைத் தந்திருந்தான்.

முதல் நாள் போரிலேயே காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் ஒரு வாள் உடைந்து போக மறுவாள் என்று, ஒன்பது வாள்களை அவர் மாற்றி மாற்றி போர் செய்தததைப் பார்த்து விட்ட, ரோமர்கள் இனி நாம் ஒருக்காலும் வெற்றி பெற முடியாது என்ற நிலைக்கு வந்து விட்;டனர். இரண்டாவது நாள் போரில், எதிரிகளுக்கு அச்சத்தை ஊட்டி, அந்த அச்சத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதோடல்லாது, தனது படைவீரர்களை மீண்டும் ஒருங்கிணைத்து, எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்திச் சென்றதையும் அவர்கள் கண்டு விட்டு, இனி வெற்றி என்பது இல்லை என்ற முடிவுக்கே வந்து விட்டனர். மோசமான, மிகவும் ஆபத்தான இந்தச் சூழ்நிலையில் தனது படைவீரர்களை ஒருங்கிணைத்து அவர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்திச் சென்றதோடல்லாமல், எதிரிகளையும் நிலைகுலையச் செய்த காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் திட்டம், இன்றைக்கும் உலகப் போர் வரலாற்றில் மறக்க முடியாத சம்பவங்களாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

மக்கா வெற்றி

காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின்பு நடந்த முக்கியமான நிகழ்;ச்சி மக்கா வெற்றியாகும். இந்தப் போரில் காலித் பின் வலீத் (ரழி) அவர்களை பனூ சலீம், பனூ கஸீமா, பனூ ஃகஃப்பார் மற்றும் பனூ ஜஹீனா ஆகிய குலங்களை ஒருங்கிணைத்த படைப்பிரிவுக்கு தளபதியாக நியமித்து, மக்காவின் கதா என்ற பகுதியின் வழியாக நுழையும்படிப் பணித்தார்கள். இன்னும், மக்காவிற்குள் நுழையும் சமயத்தில்  மக்கா வாசிகளில் எந்தக் குலமாவது உங்களை எதிர்த்தால் என்னுடைய அனுமதியைப் பெற்றுக் கொண்ட பின்பு, அவர்களுடன் போர் புரியுங்கள், எந்த எதிர்ப்பும் இல்லை என்று சொன்னால், எந்த நிலையிலும் போரை நீங்களாகத் துவங்க வேண்டாம் என்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்கள். இன்னும் உங்களது ஒவ்வொரு முயற்சியிலும், இந்தப்புனித நகரத்தில் எந்தவித இரத்தமும் சிந்தப்படக் கூடாது, இந்த நகரத்தின் புனிதத் தன்மை கெட்டு விடாது பாதுகாப்பதில் குறியாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள். மக்கா வெற்றியின் பொழுது, 10 ஆயிரம் முஸ்லிம் வீரர்கள் கலந்து கொண்டார்கள், இந்த எண்ணிக்கையானது மக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களின் எண்ணிக்கையை விட அதிகமானதாகும். எனவே மக்காவின் சூழ்நிலை இப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கும் நிலையில் இல்லை. மக்காவை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிக எளிதாகவே எந்தவித இரத்த சிந்தப்படாது வெற்றி கொண்டார்கள்.

இருப்பினும், இக்ரிமா பின் அபீ ஜஹ்ல், சஃப்வான் பின் உமைய்யா, சஹ்ல் பின் அம்ர் ஆகியோரின் தலைமையில் திரண்ட மக்கத்து குறைஷி வாலிபர்கள், காலித் பின் தலைமையில் மக்காவிற்கு நுழைந்து கொண்டிருந்த படைப்பிரிவை தடுத்து நிறுத்தும் நோக்குடன், கந்தமா என்ற இடத்தில் திரண்டார்கள். முஸ்லிம்களின் படைப்பிரிவுக்கு காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தலைமை தாங்கி வருவதைக் கண்ட அவர்கள் தாங்கள் வெற்றி பெறுவோம் நம்பிக்கையை இழந்த அவர்களது, வாள்களும், ஆயுதங்களும் ஏன் பாதங்களும் கூட ஆட்டம் கண்டன. இந்தப் போரில் பனூ பக்ர் மற்றும் பனூ கதீலைச் சேர்ந்த 12 ஆண்கள் கொல்லப்பட்டார்கள். இரண்டு முஸ்லிம்கள் தங்களது பாதையைத் தவற விட்டதன் காரணமாக வேறு இடங்களுக்குப் போய் விட்டார்கள். இந்த இருவர் தான் முஸ்லிம்களின் தரப்பில் உயிரிழந்தவர்கள். இது தவிர 10 ஆயிரம் படைவீரர்களைக் கொண்ட முஸ்லிம் படை மக்காவிற்குள் எந்த எதிர்ப்பும் இன்றி, இரத்தம் சிந்தாமல் உள்ளே வெற்றியுடன் நுழைந்தது. இந்த வெற்றி ஹிஜ்ரி 8 ல் ரமளான் மாதம் 12 ம் நாள் வெள்ளிக் கிழமை நிகழ்ந்தது.

மக்காவை வெற்றி கொண்டபின், முழு மக்காவையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், பின்னர் கஃபாவிற்குள் நுழைந்தார்கள். கஃபாவிற்கு உள்ளும் புறமும் இருந்த இணைவைப்பின் அழுக்குகளை அகற்றினார்கள். அங்கிருந்த சிலைகளை அப்புறப்படுத்தினார்கள். அதன் பின் பொது மன்னிப்பை அறிவித்தார்கள்.

• யார் ஹரம் என்று சொல்லக் கூடிய கஃபா பகுதியில் நுழைந்தாரோ அவர் பாதுகாக்கப்பட்டவராவார்.

• யார் தங்களது ஆயுதங்களை ஒப்படைத்து விடுகின்றாரோ, அவரும் பாதுகாப்புப் பெற்றவராவார்.

• தங்களது வீட்டுக் கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு, வீட்டுக்குள் இருப்பவரும் பாதுகாப்புப் பெற்றவராவார்.

• இன்னும் அபூசுஃப்யானின் வீட்டிற்குள் நுழைந்து கொண்டவர்களும் பாதுகாப்புப் பெற்றவர்களாவார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களது இந்த பரந்த மனம் படைத்த அறிவிப்பின் காரணமாக, அப்பாஸ் (ரழி) அவர்களின் உதவியுடன், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கவனத்தைக் கவர்ந்த அபூசுஃப்யான் அவர்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்களின் திருக்கரங்களைப் பற்றிக் கொண்டு, முழு மனதுடன் இறைமார்க்கத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

முஸ்லிம்கள் புடை சூழ இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ஸீ தவா என்ற பெருவெளியில் நின்று கொண்டிருந்த பொழுது, அவர்களது கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் ஆறாய் ஓடியது. அப்பொழுது, இதே மக்காவில் தன்னை மிக அநியாயமாக ஊரை விட்டே விரட்டி விட்ட அந்த சோக நாட்களையும் நினைத்துப் பார்த்தார்கள். ஆனால் அதே நகரம் இன்றைக்கு தனது இறக்கையைத் தாழ விரித்துக் கொண்டு, தன்னை வரவேற்கத் திரண்டு நிற்பதை இட்டு, ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. இதே நகரத்தில் தானே லாத்தையும், உஸ்ஸா வையும் தங்களது இணைத் தெய்வங்களாகப் பிரகடனப்படுத்திக் கொண்டும், இதனை ஏற்க மறுத்து ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களை சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாக்கியதோடு, அதில் சிலரது இரத்தத்தையும் இந்தப் புனித பூமியில் ஓட்டிய இவர்கள் தான் இன்றைக்கு, தங்களுக்கு முஹம்மது அவர்கள் மன்னிப்பு வழங்க மாட்டாரா? என்று ஏங்கி நிற்கின்றார்கள். இப்பொழுது உயிர்ப் பிச்சை கேட்டு நிற்கின்றார்கள்.

இன்னும் ஷாப் அபீதாலிப் என்ற கணவாயில் வைத்து, பசிக் கொடுமையில் முஸ்லிம்களை வறுத்தெடுத்தவர்களும் இவர்கள் தானே. இன்றைக்கு அதே மக்கள் தங்கள் மீது கருணை காட்டும்படி வேண்டி நிற்கின்றார்கள்.

இந்த மாற்றத்தை ஏற்படுத்தித் தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துமுகமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள், சிரம் பணிந்து வெற்றியை அளித்த இறைவனுக்கு நன்றி கூறினார்கள்.

இணைவைப்பின் கோட்டை தகர்க்கப்படல்

மக்காவிற்குப் பின் ஐந்து நாட்கள் கழித்து, காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் தலைமையில் 30 முஸ்லிம் படைவீரர்களை நக்லா என்ற இடத்திற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். இந்த இடத்தில் தான் மக்கத்துக் குறைஷிகளும், இணைவைப்பாளர்களும் அபயம் தேடி இருந்து கொண்டு, அங்கு உஸ்ஸா என்ற தெய்வத்திற்கு சிலை எடுத்து கோயில் ஒன்றையும் நிர்மாணித்து வைத்திருந்தனர். இணைவைப்பாளர்களின் இந்த கோயிலையும், அவர்கள் அபயம் புகுந்திருந்த அந்த கோட்டையையும் தகர்த்தெறியுமாறு காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் தலைமையின் கீழ் சென்ற படைக்கு உத்தரவு பிறக்கப்பட்டது. மேற்கண்ட இந்த நடவடிக்கை இறைநிராகரிப்பாளர்களுக்கு மத்தியில் கடுமையான எதிர்விளைவை ஏற்படுத்தியிருந்தது. அதிலும் போர்க்குணம் படைத்த, பயமறியாது போரிடக் கூடிய கன்னானா மற்றும் மஸார் குலத்தவர்களிடையே இந்த போர் நடவடிக்கை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்த உஸ்ஸா தெய்வத்திற்காக கட்டப்பட்ட கோயில், பனூ ஹிஸாம் குலத்தின் துணைக் கோத்திரமான பனூ ஷைபான் குலத்தின் பாதுகாப்பின் கீழ் இருந்து வந்தது. இந்தப் படையெடுப்பு ஒன்றும் மிகவும் எளிதானதொரு செயலல்ல. மாறாக அது இணைவைப்பின் கோட்டையாகத் திகழ்ந்து கொண்டிருந்ததால், இறைநிராகரிப்பாளர்கள் வெகு எளிதாக அதனைக் கைப்பற்ற முஸ்லிம்களை விட்டு விட மாட்டார்கள். ஆனால் காலித் பின் வலீத் (ரழி) அவர்களும், அவர்களது படையினரும் கொண்ட இறைநம்பிக்கையின் தாக்கத்தால், அந்தக் கடுமையான பணியை மிக இலகுவாக முடித்துக் காட்டினார்கள். உஸ்ஸா துண்டு துண்டாக நொருக்கித் தள்ளப்பட்டது.

ஓ உஸ்ஸாவே, நீ ஒரு பொய்க் கடவுள், உனக்கு எந்தப் புகழும் கிடையாது, எந்த இறைத்தன்மையும் கிடையாது. புகழுக்குரிய நாயனான அல்லாஹ் உனது தரத்தைத் தாழ்த்தி விட்டான், எனது கைகளினால் உன்னைச் சிறுமைப்படுத்தி விட்டான் என்று முழங்கிக் கொண்டே அதனைத் துண்டு துண்டாக ஆக்கிய காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், பின் அந்தத் துண்டுகளை ஒன்றிணைத்து தீ வைத்துக் கொளுத்தி விட்டார்.

மக்கா வெற்றிக்குப் பின், மக்காவைச் சுற்றிலும் உள்ள பகுதிகளுக்கு இஸ்லாத்தின் தூதைப் பற்றி எடுத்துச் சொல்வதற்காக பல்வேறு குழுக்கள் அனுப்பப்பட்டன. அப்படி அனுப்பப்பட்ட குழு ஒன்றுக்கு காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அவ்வாறு இவரின் தலைமையின் கீழ் அனுப்பப்பட்ட குழுவில், பைஅத்துர் ரிழ்வான் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்தின் பொழுது கலந்து கொண்ட, மதிப்புமிக்க நபித்தோழர்களான அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி), அப்துல்லா பின் உமர் (ரழி) போன்றவர்கள் இருந்தார்கள்.

பனூ கஸீமா என்றொரு நகரம் மக்காவில் இருந்து ஒரு நாள் பயண தூரத்தில் இருந்தது.   காலித் பின் வலீத் (ரழி) தலைமையில் ஒரு குழு அவர்களது நகரத்தை நெருங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த அந்த நகரத்து மக்கள், நகரை விட்டு வெளியே ஆயுதங்களுடன் வந்து நின்றனர். அவ்வாறு நின்ற அந்த மக்களைப் பார்த்து காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள விரும்புகின்றீர்களா? என்று கேடடார். அதற்கு அந்த மக்கள் நாங்கள் சாபியீன்கள் – அதாவது எந்த மதத்தையும் ஏற்றுக் கொள்ளாத நாத்திகர்கள் என்று கூறினார்கள். இதனைக் கேட்ட காலித் பின் வலீத் (ரழி) உடனே அந்த மக்கள் மீது போர் தொடுத்தார்கள். சிலர் கொல்லப்பட்டனர். பலர் பயந்து தங்கள் வீடுகளுக்குள் ஒளிந்து கொண்டார்கள். வெகு சீக்கிரமே அவர்களது இல்லங்களிலிருந்து வெளிக் கொணரப்பட்டு, கைது செய்யப்பட்டனர். இன்னும் மறுநாள் அவர்கள் கொலை செய்யப்பட இருக்கின்றார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால் இந்த உத்தரவுக்கு அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) மற்றும் அப்துல்லா பின் உமர் (ரழி) போன்ற நபித்தோழர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. அவர்களைக் கொலை செய்வதற்கு மறுப்பு தெரிவித்தார்கள். இன்னும் அந்த மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லிம்களாகி விட்டவர்கள் என்று நாங்கள் கேள்விப்படுகின்றோம் என்றும் இருவரும் காலித் பின் வலீத் (ரழி) அவர்களிடம் கூறினார்கள்.

அவர்கள் முஸ்லிம்கள் என்று சொன்னால் ஏன் என்னிடம் சாபியீன்கள் என்று கூற வேண்டும். தயக்கமில்லாது நாங்கள் முஸ்லிம்கள் என்று அவர்கள் கூறியிருக்கலாமே என்று காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தனது தோழர்களிடம் கருத்துத் தெரிவித்தார்கள். அவர்கள் பயன்படுத்தி சாபியீன்கள் என்ற வார்த்தை மூலம் அவர்கள் இஸ்லாத்தை விரும்பவில்லை என்றல்லவா தெரிகின்றது என்றும் கேட்டார்கள். இன்னும் இதனால் இவர்கள் கொலை செய்யப்பட வேண்டியவர்கள் என்று காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தனது கருத்தைக் கூறினார்கள்.

இமாம் இப்னு தமீமா, அல்லாமா ஐனி மற்றும் ஹாபிஸ் இப்னு ஹஜர் போன்ற அறிஞர் பெருமக்கள் கூறுவதாவது, அந்த பனூ குஸமா கோத்திரத்து மக்கள், நாங்கள் முஸ்லிம்கள் தான் என்ற பதிலைத் தெளிவாகத் தெரிவித்திருக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

இது தான் ஒரு படைத்தளபதியின் அடிப்படைக் குணாதிசயங்களும், பண்புகளுமாகும், அவர்கள் தங்களது நேரங்கள் விரையமாகுவதை விரும்ப மாட்டார்கள். இக்கட்டான சூழ்நிலையில் மிக விரைந்து முடிவெடுத்து, பிரச்னையை கட்டுக்குள் கொண்டு வருவதையே விரும்புவார்கள். எனவே தான் அவர்கள் தங்களது உதடுகளில் சாபியீன்கள் என்ற வார்த்தையை மொழிந்ததுடன், இவர்கள் இஸ்லாத்தை விரும்பவில்லை என்பதை முடிவெடுத்து விட்டார், இன்னும் எந்த முஸ்லிமும் நான் இறைநம்பிக்கை கொண்டவனல்லன் என்ற பொருள் கொண்ட வார்த்தையை என்றைக்கும் மொழிய மாட்டான். எனவே தான் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், உடனே தனது நடவடிக்கையைத் தொடுத்து விட்டார்கள். பனூ குஸாமா குலத்தவர்களின் இந்த தவறான நடவடிக்கையின் காரணமாக அவர்கள் கடுமையான உயிர்ச் சேதங்களையும், பொருட் சேதங்களையும் அடைந்து விட்டார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டு மிகவும் வருத்தமடைந்த போதிலும், காலித் பின் வலீத் (ரழி) அவர்களை எந்த விதத்திலும் குற்றப்படுத்திப் பார்க்கவில்லை. ஏனெனில் இது முற்றிலும் தவறான புரிந்துணர்வின் காரணமாக எழுந்த நடவடிக்கை தான் என்பதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் புரிந்து கொண்டது தான் காரணமாகும். பனூ குஸாமா குலத்தவர்களுக்கு ஏற்பட்ட உயிர்ச்சேதங்களுக்கும், இன்னும் பொருட்சேதங்களையும் ஈடு செய்யும் பொருட்டு, பொருட்களையும், செல்வங்களையும் கொடுத்து அதற்கு ஈடுசெய்து விட்டு வருமாறு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அலி (ரழி) அவர்களை அனுப்பி வைத்தார்கள். இந்த சம்பவத்திற்குப் பின்பும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பல போர்களுக்கு தளபதியாக நியமித்து, காலித் பின் வலீத் (ரழி) அவர்களை அனுப்பி வைத்திருக்கின்றார்கள் என்பதன் மூலம், காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் சிறப்புக்களை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

ஹ{னைன் யுத்தம்

ஹ{னைன் என்பது ஒரு பெருவெளி, இது தாயிஃப் நகரத்திற்கு வடமேற்காக 40 மைல் தூரத்தில் உதாஸ் மலைக்கருகில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஹவாஸான் என்ற போர்க்குணம் படைத்த குலத்தவர்கள் வாழ்ந்து வந்தார்கள். இந்தப் பகுதியில் இவர்களின் கிளைக் குலத்தவர்கள் பரவி வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் மிகச் சிறந்த வில் வித்தையில் கெட்டிக்காரர்களும் கூட. இவர்கள் ஆரம்பம் முதலே, முஸ்லிம்களை நோக்கி எதிர்த் தாக்குதல் தொடுப்பதற்கு முயற்சி செய்து வந்தவர்கள். மக்கா வெற்றிக்குப் பின்னர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், இந்தக் குலத்தவர்களது நடவடிக்கைகளுக்குப் பதில் நடவடிக்கை எடுக்க விரும்பினார்கள்.

எனவே, இந்தக் குலத்தவர்களுக்கு எதிரான இந்தப் போரில் கலந்து கொள்வதற்காக பத்தாயிரம் பேர் கொண்ட படை ஒன்று மதீனாவில் இருந்து வந்திறங்கியது. இன்னும் மக்காவில் இருந்து இரண்டாயிரம் படைவீரர்கள் சேர்ந்து கொள்ள, ஆக மொத்தம் 12 ஆயிரம் படைவீரர்களுடன் ஹ{னைனை நோக்கி இஸ்லாமியப் படை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தலைமையில் நகர்ந்தது.

இந்தப் படையின் பல பிரிவுகளுக்கு பல தலைவர்கள் நியமிக்கப்பட்டார்கள். இதில் முஹாஜிர்களுக்குத் தலைவராக உமர் (ரழி) அவர்களும், அவ்ஸ் குலத்தைச் சேர்ந்த அஸீத் பின் ஹீஸைர் (ரழி) அவர்கள் கொடியை ஏந்திக் கொள்பவராகவும், சஅத் பின் இபாதா (ரழி) அவர்கள் கஸ்ரஜ் குலத்தவர்களுக்கும், இன்னும் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் பனூ சலீம் குலத்தவர்களுக்கும் தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தலைமையில், ஹ{னைன் பெருவெளியை, ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம் 10 ஆம் நாள் அன்று அடைந்தார்கள்.

காலித் பின் வலீத் (ரழி) அவர்களது தலைமையில் அனுப்பப்பட்ட படை முன்னணிப் படையாக அனுப்பப்பட்டது. எதிரிகளின் படையோ வெறும் நான்காயிரம் மட்டுமே இருந்தது. இதனைப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள், நிச்சயம் நாம் வெற்றி பெற்று விடுவோம் என்ற உறுதியான நம்பிக்கைக்கு வந்து விட்டார்கள். ஆனால், இதற்கு முன் நடைபெற்ற பல போர்களில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த போதிலும், இறைவனின் உதவியினால் தான் நாம் அந்த வெற்றியைப் பெற்றுக் கொள்ள முடிந்தது என்ற நம்பிக்கைக்கு அவர்கள் வராமல், நாம் எண்ணிக்கையில் அதிமாக உள்ளதால் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீருவோம் என்ற தவறான முடிவுக்கு வந்ததன் காரணமாக, இறைவன் அங்கு சோதனையை அவர்களுக்கு ஏற்படுத்தினான். எளிதாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய வெற்றியை மிகவும் கடினமாக மாற்றிக் காட்டினான். இதனைத் தான் இறைமறைக்குர்ஆன் இவ்வாறு விளக்குகின்றது.

நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குப் பல போர்க்களங்களில் உதவி செய்திருக்கின்றான். (நினைவு கூறுங்கள்). ஆனால் ஹ{னைன் (போர் நடந்த) அன்று. உங்களைப் பெருமகிழ்ச்சி கொள்ளச் செய்த உங்களுடைய அதிகமான (மக்கள்) தொகை உங்களுக்கு எவ்விதப் பலனும் அளிக்கவில்லை, (மிகவும்) பரந்த பூமி உங்களுக்கு (அப்போது) சுருக்கமாகி விட்டது. அன்றியும் நீங்கள் புறங்காட்டிப் பின்வாங்கலானீர்கள். பின்னர் அல்லாஹ் தன்னுடைய தூதர் மீதும், முஃமின்கள் மீதும் தன்னுடைய சாந்தியை இறக்கியருளினான். நீங்கள் பார்க்க முடியாப் படைகளையும் இறக்கி வைத்தான். (அதன் மூலம்) நிராகரிப்போரை வேதனைக்குள்ளாக்கினான் – இன்னும் இதுவே நிராகரிப்போரின் கூலியாகும். (9:25-26)

பனூ தக்கீஃப் மற்றும் ஹவாஸான் ஆகிய குலத்தவர்கள் பதுங்கி இருந்து கொண்டு தாக்குதலுக்குத் தயாராக இருந்த அவர்கள், காலித் பின் வலீத் (ரழி) அவர்களது தலைமையில் வரும் படைவீரர்கள் இவர்களது எல்லைக்குள் நுழைந்ததும், அம்பு மழையைப் பொழிய ஆரம்பித்தார்கள். நாம் வேரறுக்கப்பட்டு விட்டோம் என்று எண்ணுமளவுக்கு இறைநிராகரிப்பாளர்களின் தாக்குதல்கள் இருந்தன, இன்னும், இந்தத் தாக்குதல்களைச் சமாளிக்க  இயலாத முஸ்லிம்கள், எதிர்த்தாக்குதலைத் தொடுப்பதை விட்டு விட்டு விரண்டோட ஆரம்பித்தார்கள். குதிரைகளும், ஒட்டகங்களும் எந்தப் பக்கம் திரும்பினவோ, அந்தப் பக்கமாக கிடைத்த வழிகளை பயன்படுத்தி ஓட்டமெடுக்க ஆரம்பித்தன. எங்கும் மரணக் கூச்சல் ஆர்ப்பரித்தது. இன்னும் ஒரு சில முஸ்லிம் வீரர்கள் தான் தங்களது தலைமைக்குக் கட்டுப்பட்டு, நிலைகுலையாமல் தங்களுடைய தலைமைகளுடன் களத்தில் நின்று கொண்டிருந்தார்கள். ஒட்டு மொத்த தளபதியாகச் சென்றிந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இப்பொழுது முஸ்லிம்களைப் பார்த்த அறைகூவல் விடுக்கலானார்கள் :

நிச்சயமாக சந்தேகமின்றி, நான் இறைத்தூதராவேன். நான் அப்துல் முத்தலிப் அவர்களின் மகனுமாவேன் என்று கூறி விட்டு,

உங்களது கண்களால் என்னைப் பாருங்கள், உங்களுக்கு முன்பாக நான் நின்று கொண்டிருக்கின்றேன், இன்னும் உறுதியாகவும், நிலைகுலையாமலும், இன்னும் (எதிரிகளைக் கண்டு) பயந்து ஓடாமலும்..!

அப்பாஸ் (ரழி) அவர்கள் பின்பு கூவி அழைக்கலானார்கள்..!

இறைநம்பிக்கையாளர்களே! எங்கே ஓடுகின்றீர்கள்? உங்களது தூதரின் பக்கம் திரும்பி வாருங்கள். வல்லமை மிக்க அல்லாஹ்வின் தூதர் உங்களை அழைக்கின்றார்! திரும்பி வாருங்கள்..! இன்னும் உங்களது தூதர் (ஸல்) பக்கம் வாருங்கள் என்று உரக்கக் கூவி அழைக்கலானார்கள்.

அப்பாஸ் (ரழி) அவர்களின் ஓங்கிய குரலோசையைச் செவிமடுத்த நபித்தோழர்கள் அனைவரும், ஆகா..! நாம் தவறு செய்து விட்டோமே..! என்று வருந்தியவர்களாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது கொண்ட அன்பின் காரணமாக மீண்டும் திரும்பி வந்தார்கள். இன்னும் அவர்கள் குரல் கொடுத்தவர்களாக..!

ஓ! அல்லாஹ்வின் தூதரவர்களே! உங்களது அழைப்பைக் கேட்டு நாங்கள் திரும்பி வந்து விட்டோம் என்று மறுமொழி கூறினார்கள்.

சிதறி ஓடிய நபித்தோழர்கள் இப்பொழுது, தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டு, இழந்த சக்தியை மீண்டும் பெற்றவர்களாக எதிரிகளை நோக்கிப் பாய ஆரம்பித்தார்கள். இப்பொழுது எதிரிகள் நபித்தோழர்களின் தாக்குதல்களைச் சமாளிக்க இயலாமல், பின் வாங்கினார்கள். சிறிது நேரத்திற்குள்ளாக..! போர்க்களக் காட்சிகள் முற்றிலும் மாறி விட்டன.

காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் கூர்மையான வாள், எதிரிகளின் படைகளை குத்திக் கீறிக் கொண்டு சென்றதோடல்லாமல், எதிர் கொண்ட அத்தனை எதிரிகளையும் துவம்சம் செய்ய ஆரம்பித்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்களது உரை மற்றும் இறைநம்பிக்கையின் மீது கொண்ட ஆவலில் பிறந்த உயிர்த் துடிப்பான சக்தியானது, இப்பொழுது இறைஉவப்புப் பெற்றுத் தரக் கூடிய, மரணத்தைச் சுவைத்துப் பார்ப்பதற்காக கொழுந்து விட்டெறிந்த ஆவலாக மாறியது, சிங்கத்தைப் போல எதிரிகளை எதிர்த்துப் போராடத் தூண்டியது. இந்தப் போரில் காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டன. இறுதியாக முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்தது. காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு ஏற்பட்ட கடுமையான காயங்கள், ரணத்தைத் தராமல் வெற்றியின் களிப்பை அனுபவித்துக் கொண்டிருந்தன. இன்னும், தனது அபிமானமிக்க படைத்தளபதி காயத்தால் துவண்டு கிடப்பதை காண விரைந்தார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காலித் பின் வலீத் (ரழி) அவர்களது காயங்களைப் பார்க்க வந்ததும், அதுவே தனக்குக் கிடைத்த மிகப் பெரும் பாக்கியமாகக் கருதிய காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு, சந்தோஷம் கரையுடைத்துச் சென்றது. இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களது மலரிதழ்களிலிருந்து, எச்சிலை உமிழ்ந்து, காலித் பின் வலீத் (ரழி) அவர்களது காயங்களில் தடவி விட்டு, விரைந்து ஆறுவதற்கு பிரார்த்தித்தார்கள்.

ஹ{னைன் போரில் வெற்றி பெற்ற பின்பு, இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் சிறிது காலம் அங்கே தங்கியிருந்து, காயம்பட்டவர்களுக்கு சிகிச்சையையும், ஓய்வும் எடுத்துக் கொண்டார்கள். இன்னும் தோற்று ஓடிய சில எதிரிகள் தாயிஃப் நகரத்தில் திரண்டு கொண்டிருப்பதாகச் செய்தியைக் கேள்விப்பட்டார்கள். தாயிஃப் நகரம் இரண்டு மலைகளுக்கிடையில் அமைந்த, விவசாய வளமிக்க மற்றும் குளிர்ச்சியான நகரமும் கூட. இங்குள்ள தண்ணீர் ஊற்றுக்களும், கனிவர்க்கமும், காய்கறி வர்க்கமும் பிரசித்தி பெற்றவை.

இந்த நகரம் தான் முந்தைய மக்கா வாழ்க்கையில் ஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள், இஸ்லாத்தின் தூதை எடுத்து வைக்கச் சென்ற பொழுது, இஸ்லாத்தை இதமாக வரவேற்பதற்குப் பதிலாக, இறைத்தூதர் (ஸல்) அவர்களை சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாக்கியதோடு, இரத்தம் சொட்டச் சொட்ட வெளியேற்றியது. இஸ்லாத்தைப் புறக்கணித்தது. படுகாயமடைந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்திற்குள் சென்று தஞ்சமடைந்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு நேர்ந்த இந்தக் கொடுமைகளையும், இரத்தம் சொட்டச் சொட்ட மரநிழலில் அமர்ந்திருப்பதைக் கண்ட வானவர்கள், உங்களைத் துன்புறுத்திய இந்த மக்களை இந்த இரு மலைகளுக்கு இடையே வைத்து நாங்கள் நசுக்கி, அழித்து விடுகின்றோம் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்ட பொழுது, அதற்கு அனுமதி மறுத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், நான் மக்களைத் துன்புறுத்துவதற்காகவோ அல்லது அழித்தொழிப்பதற்காகவோ அனுப்பப்பட்ட தூதனல்ல, இன்றில்லா விட்டாலும் நாளை இவர்களது சந்ததியினராவது இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளக் கூடுமல்லவா? என்று விளக்கமளித்தார்கள். அன்றைக்கு இரத்தம் சொட்டச் சொட்ட வெளியேற்றப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், இன்றைக்கு அதே நகரத்தில் ஒரு மிகப் பெரிய படையின் தலைமைத் தளபதியாக உள்ளே நுழைகின்றார்கள். நுழைந்ததோடு மட்டுமல்லாது அன்றைய மிகப் பெரிய குலங்களாக விளங்கிய பனூ கவஸான் மற்றும் அவர்களது நட்புக் குலங்களுக்கு எதிராகவே படை நடத்தி வந்திருந்தார்கள். பனூ கவஸான்கள் முஸ்லிம்களின் மிகப் பெரிய படையைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது, பனூ தக்கீப் குலத்தவர்கள் தங்களது கோட்டைக்குள் சென்று ஒளிந்து கொண்டார்கள்.

கோட்டையை முற்றுகையிட்ட முஸ்லிம்கள், இப்பொழுது காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் வழியாக.., எதிரிகளே…! எங்களை நேரில் வந்து சந்தியுங்கள்…!! என்று அறைகூவல் விட்டுக் கொண்டிருந்தார்கள். காலித் பின் வலீத் (ரழி) அவர்களோ சளைக்காது எதிரிகளை நோக்கி அறைகூவல் விட்டுக் கொண்டிருந்தார்கள். முஸ்லிம்களின் அறைகூவலை நேரில் வந்து சந்திக்கத் திராணியற்ற எதிரிகள் கோட்டைக்குள் பாதுகாப்பாக இருந்து கொண்டார்கள். இன்னும் கோட்டைக்குள் ஒரு வருடத்திற்குத் தேவையான உணவுப் பொருட்கள், தண்ணீர் போன்றவற்றையும் அவர்கள் முன்பே சேகரித்தும் வைத்திருந்தார்கள். இதே நிலை தொடர்ந்து கொண்டிருந்த பொழுது, முற்றுகையைக் கைவிடுமாறு அபுபக்கர் (ரழி) அவர்கள் ஆலோசனை கூற, இறைத்தூதர் (ஸல்) அவர்களும் சம்மதித்த பின் முற்றுகையானது 18 நாட்களுக்குப் பின் கைவிடப்பட்டது. முற்றுகை கைவிடப்பட்ட சிறிது நாட்களுக்குள் பனூ கவாஸான் மற்றும் பனூ தக்கீப் குலத்தவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். முற்றுகையின் பொழுது, காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் காட்டிய வீரம், மற்றும் கொண்ட கொள்கையில் உறுதி, அற்பணிப்பு ஆகிய அனைத்தும் இணைந்து இஸ்லாத்தினை மேலோங்கச் செய்ய வேண்டும் என்ற அவரது உறுதியை வெளிப்படுத்திக் காட்டியது. சந்தேகமில்லாமல் ஒவ்வொரு தளபதிக்கும் இந்த பேரார்வம் இருக்க வேண்டியது அவசியமும், இன்னும் இது தான் தலைமைக்கே உரிய பண்புமாகும்.

பனூ கவஸா என்பது பனூ முஸ்தலக் என்ற குலத்தின் ஒரு கிளையினராவர். இந்தக் குலத்தவர்கள் ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு வாக்கில் இஸ்லாத்தினை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். ஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது பிரதிநிதி ஒருவரை அனுப்பி, அந்த மக்களிடம் ஜகாத் என்ற ஏழை வரியை வசூலித்து வரும்படி அனுப்பி வைத்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து பிரதிநிதிகளின் குழு ஒன்று வருவதை அறிந்து, அந்தக் குலத்தலைவர்கள் தங்களது இருப்பிடத்தை விட்டு வெளிக்கிளம்பி, புறநகர்ப் பகுதிக்கு வந்து வரக் கூடிய தலைவர்களை வரவேற்கக் காத்திருந்தார்கள். பிரதிநிதிகள் நகரை நெருங்க, அவர்களை எதிர்கொண்டழைப்பதற்க்காக தலைவர்கள் வருவதைத் தவறாகப் புரிந்து கொண்ட பிரதிநிதிகள், அவர்கள் தங்களைத் தாக்கத் தான் வருகின்றார்கள் என நினைத்து, பயந்தவர்களாக மதீனாவிற்கே மீண்டும் திரும்பி வந்து விடுகின்றார்கள். இன்னும் பனூ முஸ்தலக் குலத்தவர்கள் ஜகாத் தர மறுத்து விட்டார்கள் என்ற செய்தியை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரதிநிதிகள் கூறியவுடன், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பேரதிர்ச்சி அடைந்தார்கள். மேலும், இது விஷயமாக அவர்கள் மீது போர் தொடுப்பதற்கு முன்பு, காலித் பின் வலீத் (ரழி) தலைமையில் ஒரு குழுவை அனுப்பி உண்மை நிலவரத்தை முதலில் அறிந்து கொள்ள வேண்டும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விரும்பியதோடல்லாமல், காலித் பில் வலீத் (ரழி) தலைமையில் ஒரு குழுவையும் அனுப்பி வைத்தார்கள். இக்குழுவுக்கு காலித் பின் வலீத் (ரழி) அவர்களைத் தேர்ந்தெடுத்ததன் காரணமென்னவெனில், அவர்களின் தொலைநோக்குப் பார்வை, அறிவு மற்றும் நிரம்பிய பல தகுதிகள் தான் காரணமாகும் என்பதில் சந்தேகமில்லை.

இன்னும் அந்த மக்களைச் சந்திக்குமிடத்து எந்தவித உணர்ச்சிகளுக்கும் இடங்கொடாமல், நிலைமையை நன்கு அவதானித்து நடந்து கொள்ளும்படி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்கள். இன்னும் பொறுமையும், சகிப்புத் தன்மையும் தான் இந்த நேரத்தில் அதிகம் தேவைப்படக் கூடிய நற்பண்புகளாகும் என்றும் அவர்கள் கூறினார்கள்.

காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் பனூ முஸ்தலக் குலத்தவர்களின் இருப்பிடத்தை இரவின் நடுப்பகுதியில் அடைந்தார்கள். நகரின் நிலவரத்தை சரியாகக் கணிப்பிட வேண்டும் என்று நினைத்த காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், தனது தோழர் ஒருவரை மாறுவேடம் அணியச் செய்து நகருக்குள் அனுப்பி வைத்தார்கள். மாறுவேடம் அணிந்து நகருக்குள் சென்ற அந்த மனிதர் திரும்பி வந்து, நிச்சயமாக அந்த மக்கள் முஸ்லிம்கள் தான். அவர்கள் அதிகாலைத் தொழுகையை பள்ளிவாசலில் நிறைவேற்றுவதைக் கண்டேன், இன்னும் அவர்கள் குறைவான மக்கள் தொகையினராகத் தான் இருக்கின்றார்கள் என்றும் கூறினார். இதனைக் கேட்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் சந்தோஷமடைந்தவர்களாக, அவர்களது நல வாழ்வுக்காகவும், மறுமைக்காகவும் பிரார்த்தித்தார்கள்.

அதிகாலை நேரம் சற்று வெளிச்சம் பரவியதும் தானே நகருக்குள் சென்று, நகரின் முக்கியத் தலைவர்களைச் சந்தித்த காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், ஜகாத் கொடுக்க மறுத்ததன் காரணத்தை அவர்களிடம் வினவினார்கள். அப்பொழுது, நடந்த உண்மை விபரத்தை அந்தத் தலைவர்கள் விளக்கினார்கள். தாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து வந்த பிரதிநிதிகளை எதிர்கொண்டு வரவழைக்க நகரின் வெளிப்பகுதிக்கு வந்ததாகவும், நாங்கள் வருவதைப் பார்த்த அவர்கள் தாக்குதல் நடத்தத் தான் வருகின்றோம் என்று தவறாகப் புரிந்து கொண்டு, திரும்பி வந்து விட்டதாகவும் விளக்கமளித்தார்கள்.

பனூ முஸ்தலக் தலைவர்கள் தந்த விளக்கத்தைக் கேட்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இன்னும் அந்த மக்களின் மார்க்க அடிப்படை அறிவு மற்றும் இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களைப் பேணுவதில் அவர்கள் காட்டிய ஆர்வம் ஆகிய அனைத்தைப் பற்றியும் அறிந்து கொண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், திருப்தியும், சந்தோஷமும் அடைந்தார்கள்.

மதீனா திரும்பியதும் நடந்த விபரங்களை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் விளக்கிய காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், அவர்கள் எந்த குற்றச்சாட்டுக்கும் உரித்தானவர்கள் அல்ல என்பதையும், ஜகாத் கொடுப்பதில் அவர்கள் ஆர்வமுள்ளவர்கள் தான் என்பதையும் விளக்கினார்கள். நாம் அனுப்பிய முந்தைய பிரதிநிதிகள் தான், நடந்த சம்பவங்களைப் பற்றி நமக்கு தெளிவான தகவல்களைத் தராமல் மாறுபட்ட தகவல்களைத் தந்திருக்கின்றார்கள் என்றும் கூறினார்கள். அப்பொழுது, இந்த நிகழ்ச்சியின் பொருட்டு அல்லாஹ் கீழ்க்கண்ட வசனத்தை இறக்கி அருளினான் :

முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப்படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (49:6)

இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், பனூ முஸ்தலக் குலத்தவர்கள் ஜகாத் தர மறுக்கின்றார்கள் என்ற தவறான செய்தியைக் கேள்விப்பட்டு அவர்கள் மீது போர் முஸ்தீபுகள் செய்யப்பட்;டன, பின் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தலைமையில் சென்ற படை இதற்கான சரியான தீர்வைக் கொண்டு வந்தது, பிரச்னையை மிகவும் இலகுவாகத் தீர்த்து விட்டும் வந்தது. இன்னும் காலித் பின் வலீத் (ரழி) அவர்களை அனுப்பி வைக்கும் பொழுது, தனது தளபதிக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கொடுத்தனுப்பிய அறிவுரையும் கவனிக்கத்தக்கது. இந்த அறிவுரையானது காலித் பின் வலீத் (ரழி) அவர்களை பொறுமையாகவும், நிதானமாகவும் நடவடிக்கையை எடுக்கத் துணை புரிந்ததோடல்லாமல், அவரது தூர நோக்கு மற்றும் பிரச்னையைத் தீர்த்து வைக்கக் கூடிய பேராற்றல் ஆகியவற்றையும் வெளிப்படுத்திக் காட்டியது, இறைவனுக்கு மாறு செய்து விட்டார்களே என்று எண்ணி அவர்கள் மீது கடும்  போரைத் திணக்காது நிலைமைச் சீர்தூக்கிப் பார்க்க வைத்தது. மிகப் பெரியதொரு போர் தவிர்க்கப்பட்டதோடல்லாமல், விலை மதிக்க முடியாத உயிர்கள் மற்றும் பொருட் சேதங்களும் தவிர்க்கப்பட்டன. இதே போன்றதொரு நிகழ்வு பனூ கஸீமா குலத்தவர்களிடமும் நடந்தது.

காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் சென்ற இடமெல்லாம் வெற்றிக் கொடி நாட்டி விட்டு வந்தார்கள். அவரது அறிவு, துணிவு, பெருமை யாவும் இப்பொழுது முஸ்லிம்களை பெருமை கொள்ளச் செய்தது. அவரது தலைமையின் கீழ் பணியாற்றுவது முஸ்லிம்களுக்கு தன்னம்பிக்கையை அளித்தது, மன உறுதியையும் அளித்தது. அவர் சென்ற இடமெல்லாம் வெற்றியைத் தவிர வேறெதனையும் பெற்றுத் திரும்பியதில்லை. அவர் சென்ற இடமெல்லாம் இஸ்லாமியக் கொடி வானுயரப் பறக்க விடப்பட்டது. இஸ்லாத்தின்  பெருமை நிலைநாட்டப்பட்டது. மிகப் பெரிய சாம்ராஜ்யங்களாக ரோமும், பாரசீகமும் அவரது வீரத்தின் முன் மண்டியிட்டு நின்றன. நிச்சயமாக, காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் வீரமும், தீரமும் மெச்சத்தக்க ஒன்று தான்.

தபூக் யுத்தம்

தபூக் என்ற இடம் மதீனாவிற்கு  வடக்கே சற்று 680 மைல்கள் தொலைவில் உள்ள இடமாகும். ஹிஜ்ரி 9 ஆம் வருடம் கடுமையான கோடையின் பொழுது, மிகச் சிரரமமானதொரு சூழ்நிலையில் வெயிலின் கொடுமை ஒரு புறம், தொடர்ந்தாற் போல பல போர்கள், இன்னும் கரடுமுரடான பாதை ஆகிய அனைத்தையும் கடந்து, தபூக் என்ற இந்த இடத்திற்கு 30 ஆயிரம் முஸ்லிம் படைவீரர்களைக் கொண்ட படையுடன் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வருகின்றார்கள். இந்தப் பகுதியில் குடிப்பதற்குக் கூட அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்காததொரு சூழ்நிலை. ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தண்ணீர் சிறிது கசிந்து கொண்டிருந்தது. ஒளுச் செய்து தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்வதற்காக அதிலிருந்து சிறிது தண்ணீரைத் பிடித்துக் கொண்டு வரும்படி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களை வேண்டிக் கொள்கின்றார்கள். கசிந்து வந்து கொண்டிருந்த அந்தத் தண்ணீரைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள் தோழர்கள். அதிலிருந்து தனது கை, கால்கள், முகத்தையும் கழுவிக் கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீதித் தண்ணீரை, எங்கே தண்ணீர் கசிந்து கொண்டிருந்ததோ அதன் மீதே திருப்பி ஊற்றி விட்டார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள். எங்கே தண்ணீரை ஊற்றினார்களோ, அங்கிருந்தே இடி போன்ற சப்தத்துடன் தண்ணீர்ச் சுனை ஒன்று பொங்கிக் கொண்டு வந்தது.

அந்தக் கோடையின் வெப்பத்தால் எங்கே தங்களது தோல்கள் வெடித்து விடுமோ என்று இறைத்தோழர்கள் நினைக்கும் அளவுக்கு அப்பொழுது வெயிலின் கொடுமை இருந்தது. இந்த நேரத்தில் அங்கே தண்ணீர் ஊற்றுப் பொங்கி வந்தது, அவர்களது வேதனைகளையும் தீர்த்தது, இன்னும் அது அருட்கொடையாகவும் அமைந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் வந்திருந்த அனைத்து முஸ்லிம் படைவீரர்களும் அந்தத் தண்ணீரைப் பருகினார்கள், குளித்தார்கள். இன்னும் தங்களுக்குத் தேவையான தண்ணீரைச் சேமித்தும் வைத்துக் கொண்டார்கள், இன்னும் அதனை விட இழந்த சக்தியை அதன் மூலம் மீட்டுக் கொண்டார்கள். இந்த அருட்கொடைக்காக அனைவரும் இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள், புகழ்ந்தார்கள். இப்பொழுது, முஆத் பின் ஜபல் (ரழி) அவர்களைப் பார்த்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நீண்ட நாட்கள் நீங்கள் வாழ்ந்தீர்கள் என்று சொன்னால், இந்த இடத்தில் பச்சைப் பசேலென்று தோட்டங்களைக் காண்பீர்கள் என்று கூறினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இந்த முன்னறிவிப்பு, வார்த்தைக்கு வார்த்தை உண்மையானது. அற்புதமாக வெளிவந்த அந்த நீரூற்றிலிருந்து வெளிக்கிளம்பிய நீரானது அந்தப் பகுதியையே பச்சைப் பசேலென்ற தோட்டமாக, உயிர்த் துடிப்புள்ள பூமியாக மாற்றியது. இன்றளவும் அந்தப் பூமி பசுமையாகவே காணப்படுகின்றது. காண்போர் கண்களை குளிர்வித்து வருகின்றது. இன்னும் அன்று வெளிக்கிளம்பிய அந்த நீரூற்று இன்றளவும் தொடர்ந்து தனது அற்புதத்தை நிகழ்த்திக் கொண்டு வருவதோடு, அந்தப் பகுதியானது இன்றளவும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தளமாகத் திகழ்ந்து வருகின்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்தப் பகுதியை மக்கள் காண்பதோடு, இஸ்லாத்தின் மகத்துவத்தையும் கண்டு வருகின்றார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தபூக்கை நோக்கி படை நோக்கிப் படை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது, சிரியாவில் இருந்து வந்து கொண்டிருந்த வணிகக் கூட்டம் மூலம், ரோமச் சக்கரவர்த்தி முஸ்லிம்களை அழித்தொழிப்பதற்காக மிகப் பெரும் படை ஒன்றைத் திரட்டிக் கொண்டு மதீனாவிற்குள் நுழைவதற்காக தயார்படுத்தி வருகின்றார் என்ற செய்தியைக் கேள்விப்படுகின்றார்கள். இன்னும் அவர்களோடு பல அரபுக் குலத்தவர்களும் கை கோர்க்கக் காத்திருப்பதாகவும், அவர்கள் அனைவரும் சேர்ந்து முஸ்லிம்களை இந்தப் பூமிப் பந்திலிருந்து துடைத்தெறிவதற்குக் கங்கணம் கட்டி, தங்களது படைகளைத் திரட்டி வருவதாகவும் அறிந்தார்கள். இன்னும் ரோமச் சக்கரவர்த்தியின் படைகள் ஏற்கனவே மதீனாவை நோக்கிப் புறப்பட்டு விட்டதாகவும், அந்தப் படை இப்பொழுது சிரியாவின் எல்லைப் பகுதியாகிய பல்கா என்ற இடத்தை அடைந்திருப்பதாகவும் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ரோமச் சக்கரவர்த்தியை எதிர்த்துப் போர் புரிவதற்கு தங்களது உடல், பொருள், ஆவி அத்தனையையும் தத்தம் செய்தவற்கு தாயராகும்படி தனது தோழர்களுக்குக் கட்டளை இட்டார்கள்.

பயணம் மிக தூரமானதாக இருப்பதின் காரணமாக, மிக நீண்ட தொலைவுக்கு ஏற்றாற் போல உணவு மற்றும் படைத் தளவாடங்களைத் தயாரிக்கும்படி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டதோடு, எதிரிகள் நமது எல்லைக்குள் நுழைவதற்குள், நாம் அவர்களை முந்திக் கொண்டு அவர்களை எதிர்நோக்க வேண்டும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விரும்பினார்கள். எனவே அதற்கேற்றாற் போல உடனடி நடவடிக்கையை மேற்கொண்டார்கள்.

30 ஆயிரம் படை வீரர்களில் 10 ஆயிரம் குதிரைப்படை வீரர்களும் அடங்குவர். ரோமப் படை முஸ்லிம்களின் பிரதேசங்களுக்குள் நுழைவதற்குள் முஸ்லிம்களின் படை அணி, தபூக் போய்ச் சேர்ந்து விட்டது. முன்னணிப் படைக்கு காலித் பின் வலித் (ரழி) அவர்களும், வலது புற அணிக்கு தல்ஹா பின் அபய்துல்லா (ரழி) அவர்களும், இடது புற அணிக்கு அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களும் தலைமை தாங்கி படைகளை நடத்திச் சென்றார்கள்.

20 நாட்கள் ரோமப் படைகளை தபூக்கில் எதிர்பார்த்து முஸ்லிம்களின் படை காத்துக் கொண்டிருந்தது. ஆனால் முஸ்லிம்களை எதிர்கொள்ளத் துணிவற்ற ரோமப் படை களத்திற்கு வரவே இல்லை. முஸ்லிம்களின் படைத்தயாரிப்புகளைப் பற்றி ஒற்றர்கள் மூலம் அறிந்து கொண்ட ரோமப் பேரரசன் சீஸர், இது போர் செய்வதற்குத் தகுந்த தருணமல்ல என்று போரைக் கைவிட்டு விட்டான்.

போர் கைவிடப்பட்ட நிலையில், இறைத்தூதர் (ஸல்) தபூக்கைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குத் தனது தோழர்களை அனுப்பி, அங்குள்ள குலத்தவர்களுக்கு இஸ்லாத்தின் போதனை எடுத்து வைத்தார்கள். இஸ்லாத்தின் அழைப்பில் கவரப்பட்ட பல குலங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டன. இன்னும் பல கிறிஸ்தவத் தலைவர்கள் இஸ்லாத்தின் உன்னதத்தை அறிந்து கொண்டு, முஸ்லிம்களிடம் ஒப்பந்தங்களைச் செய்து கொண்டார்கள்.

இன்னும் முஸ்லிம்களின் வீரம் மற்றும் துணிவு கண்டு சிரியாவின் மன்னர் மிகவும் பிரமித்துப் போனார். முஸ்லிம்களைப் பற்றிய தாக்கம் அவரிடம் அதிகமாகியது.

தாத்து ஜன்தல்

தாத்து ஜன்தல் என்ற குலத்தினர் வசிக்கும் பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்காக 500 பேர் கொண்ட படைப் பிரிவை காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தலைமையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அந்தக் குலத் தலைவர் அகீதர் பின் அப்துல் மாலிக் என்பவரை உயிருடன் பிடித்து இங்கு கொண்டு வாருங்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். காலித் பின் வலீத் (ரழி) தலைமையில் சென்ற படையானது மிக வேகமாகப் பயணித்து, தாத்து ஜன்தலை இரவிலேயே அடைந்து விட்டார்கள். இன்னும் அந்த இடத்தை அடைந்ததும், தனது தோழர்களை மெதுவாகப் பேசிக் கொள்ளும்படியும், இன்னும் குதிரைகளை மெதுவாக நடக்க விட்டு சலசலப்பு இல்லாமல் நகரத்திற்குள் நுழையும்படியும் கட்டளையிட்டார்கள்.

இப்பொழுது, முழுச் சூழ்நிலையும் மிகவும் அமைதியாக இருந்தது. அகீதர் பின் அப்துல் மாலிக் தனது மனைவியுடன் உல்லாசமாக இருந்து கொண்டு, மதுபானத்தையும் அருந்திக் கொண்டிருந்தான். காட்டில் இருந்து ஊருக்குள் வந்ததொரு வெள்ளை நிற மிருகம் ஒன்று, கோட்டையின் கதவை தனது தலையால் முட்டிக் கொண்டிருந்தது. கதவு தட்டப்படும் ஓசையைச் செவி மடுத்த அவனது மனைவி, நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உங்களது வேட்டைப் பிராணி இப்பொழுது உங்களது கதவுக்கருகில் வந்து விட்டது, இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள், அவசரம் என்றாள். மது அருந்திக் கொண்டிருந்த அவன், மதுக்கிண்ணத்தை தரையில் வைத்து விட்டு, அம்பை எடுத்து வில்லில் பூட்டிக் கொண்டு, தனது சகோதரன் ஹஸனையும் இன்னும் தனது பணியாட்களையும் துணைக்கழைத்தான். தனது குதிரையின் மீது ஏறி அமர்ந்து கொண்டு, தனது வேட்டைப் பிராணியைத் தேடிப் புறப்பட்டான். அவன் ஓரடி எடுத்து வைப்பதற்குள், காலித் பின் வலீத் (ரழி) அவர்களும் அவர்களது தோழர்களும் அவனை முற்றுகையிட்டு விட்டார்கள். அவனோ தனது இரையைத் தேடி வெளியே வந்தான், ஆனால் விதியோ இங்கே அவனை இரையாக்கி வைத்து விட்டது. அவனது சகோதரன் ஹஸன் முஸ்லிம்களை எதிர்த்து சற்று எதிர்ப்புக் காண்பித்தான், அவனால் அவனது எதிர்ப்பு பயனளிக்கவில்லை, கொல்லப்பட்டு விட்டான். ஆனால் எந்த எதிர்ப்பும் காட்டாத அகீதர் கைது செய்யப்பட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முன்னிலையில் கொண்டு செல்லப்பட்டான். ஆனால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எந்த பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்காமல், ஜிஸ்யா எனும் பாதுகாப்பு வரியைக் கட்டும்படி உத்தரவிட்டு, அவனை விடுதலை செய்ததோடு அவனது பிரதேசத்தை அவனுக்கே விட்டுக் கொடுத்தார்கள்.

தாத்துஜன்தல் தலைவன் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன்னிலையில் கொண்டு வரப்பட்ட பொழுது, அவன் விலையுயர்ந்த ஆடைகளையும், அதில் விலையுயர்ந்த தங்கத்தால் நெய்யப்பட்ட கயிற்றை தலையில் அணிந்திருந்தான். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் இந்தக் காட்சியைப் பார்த்து விட்டு, இது என்ன பெருமையும், அகங்காரமும் என்று வியந்து போனார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என்ன ஆச்சரியமாய் இருக்கின்றதா?

சுவனத்தில் சஅத் பின் முஆத்  அவர்களின் கைக்குட்டையானது, இதனை விட மிகச் சிறந்தது, விலை உயர்ந்தது என்று கூறினார்கள்.

காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் மிகச் சிறந்த, வெற்றி வீரர் மற்றும் தளபதியாக மட்டும் அவர் பரிணமிக்கவில்லை. இன்னும் அவர் மிகச் சிறந்த இஸ்லாமிய அழைப்பாளரும் கூட. இவரது அழைப்பின் மூலமாக பலர் இஸ்லாத்தைத் தழுவிய நிகழ்ச்சிகளும் நடந்தேறி உள்ளன. ஹிஜ்ரி 10 ஆம் ஆண்டு, 400 படைவீரர்களுடன் காலித் பின் வலீத் (ரழி) அவர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நஜ்ரான் என்ற பிரதேசத்திற்கு அனுப்பி வைத்தார்கள். அந்தப் பகுதியில் வாழக் கூடிய பனூ ஹாரிஸ் குலத்தவர்களை இஸ்லாத்தின் பால் அழைக்குமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டு அனுப்பி வைத்தார்கள். அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால், அங்கிருந்து கொண்டு அவர்களுக்கு இஸ்லாத்தையும், குர்ஆனையும், சுன்னாவையும் கற்றுக் கொடுங்கள். அவர்கள் மறுத்தால் அவர்கள் மீது போர்ப்பிரகடனம் செய்யுங்கள் என்று கூறினார்கள்.

நஜ்ரான் பிரதேசத்தை அடைந்தவுடன், அந்தப் பகுதி மக்களைச் சந்தித்து இஸ்லாத்தின் மேன்மைகளைப் பற்றியும், அதன் கொள்கைகளையும் பற்றியும் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் மிகவும் மென்மையான முறையில் அந்த மக்களுக்கு எடுத்துரைத்தார்கள். இன்னும் உறுதியான குரலில் கூறினார், நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் அது தான் உங்களைப் பாதுகாக்கும், அதுவன்றி இந்த உலகத்திலும் மறுமையிலும் உங்களைப் பாதுகாக்கக் கூடிய சக்தி எதுவுமில்லை. இன்னும் இழிவிலிருந்தும், அவமானத்திலிருந்தும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று கூறி அவர்களை இஸ்லாத்தின் பால் அழைத்தார். நீங்கள் எனது உரையை செவிமடுத்தால் அது உங்களுக்கு சுபிட்சத்தைக் கொண்டு வரும், இப்பொழுது காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் உறுதியான குரலில்.., இல்லையெனில், இந்தப் பகுதியே குப்பைக் கிடங்காக மாற்றப்படும். இதனைக் கேட்ட நஜ்ரான் மக்கள், இனி நம்முடைய எதிர்காலம் என்பது இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதில் தான் இருக்கின்றது என்று முடிவெடுத்தவர்களாக, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும், இடைவிடாது இஸ்லாமியப் பிரச்சாரப் பணிகள் மூலமாக மக்களை இஸ்லாத்தின் பால் அழைத்துக் கொண்டும், இன்னும் இஸ்லாத்திற்கு எதிராக கிளந்தெழுவோர்களுக்கு எதிராகப் போர் புரிந்து கொண்டும், இஸ்லாமியப் பணிக்காகத் தன்னை அற்பணித்த வாழ்வை மேற்கொண்டு வாழ்ந்து வந்தார். அந்த கால கட்டங்களில் எந்த தொய்வோ அல்லது நயவஞ்சக எண்ணங்களோ, பலவீனங்களோ அவரிடம் ஏற்பட்டது கிடையாது. அவர் என்றைக்கு இஸ்லாத்தினைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டாரோ அன்றிலிருந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கட்டளைப்படியும், அவர்களின் தலைமைக்குக் கீழ்ப்படிந்தும் போர்களில் கலந்து கொண்டார். இன்னும் போர்களில் முன்னணிப் படைத்தளபதியாக இவரை நியமித்ததன் மூலம், காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் மீது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எந்தளவு நன்னம்பிக்கை கொண்டிருப்பார்கள் என்பது நமக்குப் புலனாகின்றது. இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணத்தை தழுவிய பொழுது, இவரைப் போன்ற வீரத்தியாகிகளின் கைகளில் இஸ்லாத்தை ஒப்படைத்து விட்டுப் போவது குறித்து, மிகவும் சந்தோஷமடைந்தார்கள். இந்த உலகத்தில் பல நாடுகள் தங்களுக்கு கீழ் பணியாற்றக் கூடிய படைவீரர்களுக்குக் கொடுக்கக் கூடிய பதக்கங்கள், பட்டங்கள், கேடயங்கள் ஆகிய அனைத்தையும் விடவும், இறைவனது திருப்தியும், இறைத்தூதர் (ஸல்) அவர்களது திருப்தியும் எவ்வளவு மேன்மையானது..! அந்தத் திருப்தியைத் தான் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மூலமாகப் பெற்றுக் கொண்டார்கள்.

அகில உலமெல்லாம் அருள் செய்யப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது முழு வாழ்க்கையையும் இஸ்லாமியப் பணிக்காக அற்பணித்தவர்களாக தனது 63 வது வயதில் இறையடி சேர்ந்தார்கள். அவர்களது பிரிவு நபித்தோழர்களை ஒரு உலுக்கு உலுக்கி எடுத்தது, வானமே இடிந்து தலையில் வீழ்ந்து விட்டது போல நபித்தோழர்கள் உணர்ந்தார்கள்.

உமர் (ரழி) அவர்களோ…, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறக்கவில்லை, அதனை நான் ஏற்றுக் கொள்ள முடியாது என பிடிவாதம் பிடித்தார்கள். இன்னும் எவராவது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்;டார்கள் என்று சொன்னீர்கள் என்றால், எனது வாளுக்கு இறையாக நேரிடும் என்று, தனது வாளை உருவிக் கொண்டு எதிர்ப்படுபவர்களை அச்சமூட்டிக் கொண்டிருந்தார். இந்த இக்கட்டான நிலையில், அபுபக்கர் (ரழி) அவர்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு உரையை நிகழ்த்தி, அந்த அமளி துமளிகளை அடக்கிப் போட்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்ற செய்தியைக் கேட்ட சிலர், இஸ்லாத்தை விட்டும் வெளியேறினார்கள். இவர்கள் இஸ்லாம் விதிக்கக் கூடிய வரம்புகளையும் சட்ட திட்டங்களையும் பேண முடியாது, பலவீனமானவர்களாக இருந்த காரணத்தால் இஸ்லாத்தை விட்டும் வெளியேறினார்கள். உண்மையிலேயே இவர்கள் இஸ்லாத்தை விரும்பவில்லை, இறைவனையும், இறைத் தூதர் (ஸல்) அவர்களையும் நேசிக்கவில்லை. அவர்களிடம் இயற்கையிலேயே அசுத்தங்களும், கடப எண்ணங்களும் மிச்சமிருந்தன. அவர்களிடம் இஸ்லாமியப் போதனைகளின் தாக்கம் இருக்கவில்லை மாறாக, இணைவைக்கும் கொடிய பழக்கம் குடிகொண்டிருந்தது. இதுவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணித்த பின்பு அவர்களை இஸ்லாத்தை விட்டும் வெளியேறச் செய்தது. இன்னும் சிலர் ஜகாத் கொடுக்க மாட்டோம் என்று மறுத்தனர்.

இன்னும் அஸ்வத் அன்ஸி, முஸைலமா கத்தாப், பின்பு தலீஹா மற்றும் சஜ்ஜா ஆகிய குலத்தலைவர்கள், குழப்பக்காரர்களாக இவர்கள் தங்களை இறைத்தூதர்கள் எனப் பிரகடனப்படுத்திக் கொண்டார்கள். உண்மை முஸ்லிம்கள் இதனால் கலவரமடைந்தார்கள், கலங்கினார்கள். ஒரு பக்கம் தங்களது வழிகாட்டியும், தலைவருமான இறைத்தூதர் (ஸல்) அவர்களை இழந்து துக்கத்தில், அவர்களை அடுத்து யாரை தங்களது தலைவராகத் தேர்ந்தெடுத்துக் கொள்வது, யாரை கலீஃபாவாக ஆட்சித் தலைவராக நியமிப்பது என்ற கவலையில் இருந்தார்கள். இந்த பிரச்னைகளுக்கிடையில், இஸ்லாத்தினை விட்டு வெளியேறியவர்கள் மற்றும் போலித் தூதர்களது பிரகடனங்கள் ஆகிய அனைத்தும், முஸ்லிம்களைக் கவலையில் ஆழ்த்தியது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் அபுபக்கர் (ரழி) அவர்கள் தலைமைப் பொறுப்பேற்றார்கள், அவர்கள் பொறுப்பேற்றபின்பு, நிலைகுலையாது உறுதியான திடமான பல நடவடிக்கைகள் எடுத்தார்கள், தீமைகள் பலவற்றைக் களைந்ததோடு, குழப்பக்காரர்களையும் ஒழித்தார்கள்.

குழப்பக்காரர்களுக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் செய்த அபுபக்கர் (ரழி) அவர்கள், தலீஹா பின் கவாலித் மற்றும் மாலிக் பின் நவீரா என்ற போலித் இறைத்தூதர்களை எதிர்த்து காலித் பின் வலீத் (ரழி) அவர்களை படையுடன் அனுப்பி வைத்தார்கள். இன்னும் முஸைலமா பின் கத்தாப் – க்கு எதிராக இக்ரிமா (ரழி) அவர்களையும், அஸ்வத் அன்ஸி – க்கு எதிராக முஹாஜிர் பின் அபீ உமைய்யா (ரழி) அவர்களையும் அனுப்பி வைத்தார்கள்.

இன்னும் திஹாமா பகுதியை வெற்றி கொள்வதற்காக சுவைத் பின் மக்ரான் (ரழி) அவர்களையும், இன்னும் கததா வை வெற்றி கொள்வதற்காக அம்ர் இப்னுல் ஆஸ் (ரழி) அவர்களையும் அனுப்பி வைத்தார்கள்.

இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட படைத்தளபதிகளில் தலீஹா பின் கவாலித் என்பவனை, காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் முதன் முதலாக வெற்றி கொண்டார்கள். கவாலித் என்பவன், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருக்கின்றார்கள் என்பதைக் கேள்விப்பட்டவுடனேயே தன்னைத் தானே இறைத்தூதர் என்று அறிவித்துக் கொண்டான். இவனது இடத்தை அடைந்த காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் இவனைக் கொன்றதோடு, இவனது ஆதரவாளர்களையும் வெற்றி கொண்டார். இதனை அடுத்து, மாலிக் பின் நவீரா என்பவனை வெற்றி கொள்வதற்காகப் புறப்பட்டார் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள்.

அஸத், கதஃபான், தாய், ஆபஸ் மற்றும் பனூ தீபான் போன்ற குலத்தவர்கள் ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாகையினால், இவர்கள் அனைவரும் அவர்களது கோத்திரத்தைச் சேர்ந்த மாலிக் பின் நவீராவை இறைத்தூதர் என்று ஏற்றுக் கொண்டதோடு, அவனை ஆதரிக்கவும், பின்பற்றவும் செய்தனர். எனவே, ஒருங்கிணைந்த இந்த கோத்திரத்தவர்களை வெற்றி கொள்வதென்பது சாதாரண விஷயமல்ல, ஆனால் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் அதனைச் செய்து காட்டினார்கள். அவரது இராணுவப் பயிற்சி, அனுபவம், வீரம், தந்திரங்கள் ஆகிய அனைத்தையும் ஒன்று திரட்டிப் போரடி வெற்றி பெற்றார். எதிரியைப் பூண்டோடு அழித்தார். போர் தொடங்குவதற்கு முன்பாக அதீ பனி ஹாதிம் அவர்கள், தாய் குலத்தவர்களுடன் பேசி தாய் குலத்தவர்களை போரிலிருந்து விலகி இருக்கச் செய்ததோடு, முஸ்லிம்களுக்கு ஆதரவாகச் செயல்பட வைத்தார்.

இந்தப் போருக்குப் பின்னர் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் இஸ்லாமிய தலைமையகமான மதீனாவிற்குச் சென்றார். பின்னர் அபுபக்கர் (ரழி) அவர்களது ஆணைப்படி, அன்ஸார்களையும், முஹாஜிர்களையும் கொண்டதொரு படையை, நானும் ஒரு இறைத்தூதர் தான் என வாதாடிக் கொண்டிருந்த முஸைலமா பின் கத்தாப்பை சந்திக்க காலித் பின் வலீத் (ரழி) அவர்களது தலைமையில் அனுப்பி வைத்தார்கள். இதற்கு முன்பாக சர்ஜீல் பின் ஹஸனா (ரழி) மற்றும் இக்ரிமா (ரழி) ஆகியோர்களின் தலைமையில் சென்ற படையை முஸைலமா வெற்றி கொண்டிருந்தான். முஸ்லிம்களை வெற்றி கொண்டபின், காலித் பின் வலீத் (ரழி) அவர்களது தலைமையில் மீண்டும் ஒரு படை வருகின்றது என்ற கேள்விப்பட்ட முஸைலமா மீண்டும் 40 ஆயிரம் பேர் கொண்ட படையைத் திரட்டினான்.  இரண்டு படைகளும் மிகவும் உக்கிரமாக போரிட்டன. இரண்டு படைகளும் கடுமையாகப் போரிட்டதில் முஸைலமாவின் படைகள் முஸ்லிம்களுக்கு ஒரு இன்ஞ் நிலத்தைக் கூட விட்டுத் தராத அளவுக்கு போரிட்டனர்.

நிலமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு அதனை மதிப்பீடு செய்த காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், முஸ்லிம்களின் படைகளை அவரவர் குலத்தின் அடிப்படையில் பிரித்தெடுத்தார்கள். ஒவ்வொரு குலத்திற்கும் ஒரு தலைவரை நியமித்தார்கள். பின் அவர்களிடம் பந்தயம் கட்டி, யார் உங்களில் முன்னேறுகின்றார்கள் என்பதை நான் பார்த்துக் கொண்டிருப்பேன், எங்கே பார்க்கலாம் யார் எதிரிகளை ஊடறுத்து முன்னேறிச் செல்கின்றார்கள் என்பதை.., என்று உசுப்பேற்றி அவர்களது வீரத்தைத் தட்டி விட்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்களது திட்டம்.., நன்கு வேலை செய்ய ஆரம்பித்தது. ஒவ்வொரு குலத்தவர்களும் தங்களது குலப் பெருமையைக் காட்டிட இது தான் சந்தர்ப்பம் என்று தங்களது உடல், பொருள், ஆவி அத்தனையையும் தியாகம் செய்து போரிட்டார்கள்.

முஸ்லிம்களின் வேகத்தை எதிர்க்கத் திராணியற்ற முஸைலமா படைகளின் எதிர்ப்பு வலுவிழக்க ஆரம்பித்தது. அவர்கள் இப்பொழுது பின்வாங்கி ஓட ஆரம்பித்தார்கள். இறுதியில் தங்களது கோட்டைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டார்கள். அந்தக் கோட்டையின் சுவர்கள் மிக உயரமாக இருந்தன. அதன் கதவுகள் மிகவும் உறுதியாக இருந்தன. எனவே, கோட்டை மீது ஏறிக் குதிக்கவோ அல்லது கதவை உடைத்துக் கொண்டு கோட்டைக்குள் செல்லவோ இயலாத நிலையில் முஸ்லிம்கள் கோட்டையை முற்றுகையிட்டு நின்று கொண்டிருந்தனர்.

நிலமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட பரா பின் மாலிக் (ரழி) அவர்கள் தனது தோழர்களை அழைத்து என்னை கோட்டையின் உள்ளே சென்று விழும்படியாகத் தூக்கி எறியும்படி கூறினார். இறைவழியில் உயிரைத் தியாகம் செய்ய வந்த அந்தத் தோழர்கள், தங்களது தோழரின் திட்டத்தைச் செயல்படுத்த முன் வந்தனர். வலுவான நபர்கள் இணைந்து பரா பின் மாலிக் (ரழி) அவர்களைக் கோட்டையின் உள்ளே இருந்த தோட்டத்திற்குள் தூக்கி எறிந்தனர். அச்சமற்ற நிலையில் உயரே வானிலிருந்து விழுந்த மனிதரைக் கண்ட முஸைலமா வின் ஆட்கள், அச்சத்தால் நடுங்கினர். மேலும், தங்களுக்கு எதிரான படைகள் இப்பொழுது நிலத்தை விட்டு விட்டு, வானிலிருந்து இறங்கி வருவதாக நினைத்து கதிகலங்கினர். இந்தச் சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பரா பின் மாலிக் (ரழி) அவர்கள், எதிரிகளைச் சாய்த்த வண்ணமே, கோட்டையின் கதவுப் பகுதிக்கு வந்து, கதவைத் திறந்து விட்டார். கோட்டைக் கதவு திறக்கப்பட்டதும், காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தலைமையில் கோட்டையைச் சுற்றி முற்றுகையிட்டுக் கொண்டிருந்த இஸ்லாமியப் படைகள் இப்பொழுது கோட்டைக்குள் நுழைய ஆரம்பித்தனர். சற்று நேரத்திற்குள் கோட்டை முஸ்லிம்களின் வசமாகியது. முஸைலமாவும் அவனது ஆட்களும் போரில் கொல்லப்பட்டார்கள். அந்தக் கோட்டைக்குள் இருந்த தோட்டம் இப்பொழுது தண்ணீருக்குப் பதிலாக இரத்தத்தால் குளித்துக் கொண்டிருந்தது. இதனால் இந்தப் பூங்காவுக்கு மரணப் பூங்கா என்ற பெயரும்  வந்தது. முஸைலமாவை வெற்றி கொண்டபின், கோட்டையின் வனப்பு மிகுந்த பகுதிகளில் இஸ்லாமியப் படைகள் சற்று ஓய்வெடுத்தனர்.

படைகள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பொழுது, அபுபக்கர் (ரழி) அவர்களிடமிருந்து வந்த ஆணை ஒன்று காலித் பின் வலீத் (ரழி) அவர்களை ஈரான் மற்றும் ஈராக் நோக்கிச் செல்ல வைத்தது. கலீஃபாவின் ஆணையைப் பெற்றுக் கொண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், 12 ஆயிரம் வீரர்களுடன் ஈராக் நோக்கிப் பயணப்பட்டார்கள். ஹிஜ்ரி 11 ஆம் ஆண்டு முஹர்ரம் மாதம் 12 ம் நாளன்று ஈராக்கின் பள்ளத்தாக்குப் பகுதியான அப்லா வைத் தாக்கும்படி உத்தரவு வந்தது. காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் அந்த இடத்தை அடைந்ததும், அந்தப் பகுதியின் ஆட்சியாளராக ஹர்மஸ் க்கு ஒரு அழைப்பு மடல் ஒன்றை அனுப்பி வைத்தார். வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த மடலில் கீழ்க்காணும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

ஓ ஹர்மஸ்! இஸ்லாத்தை ஏற்றுக் கொள்..! அல்லது இஸ்லாமிய ஆட்சியை ஏற்றுக் கொள்..! இன்னும் வரியையும் செலுத்தி விடு. இல்லையென்றால், நீ எவ்வாறு இந்த உலக வாழ்வை நேசிக்கின்றாயோ அதனை விட மரணத்தை நேசிக்கக் கூடிய கூட்டத்தை நீ சந்திப்பது என்பது  தவிர்க்க இயலததாகி விடும் என்று அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

அந்தக் கடிதத்தைப் பார்த்த ஹர்மஸ் செய்த வேலை என்னவென்றால், உடனே ஈரானுடைய பேரரசனுக்கு தகவல் அனுப்பி, மிகப் பெரிய படை ஒன்றை தனக்கு உதவியாக அனுப்பி வைக்கும்படி கோரிக்கை வைத்தான். அவனது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஈரான் மன்னர், ஒரு மிகப் பெரும் படையை அனுப்பி வைத்தார்.

ஆனால் காலித் பின் வலீத் (ரழி) அவர்களது தலைமையில் இப்பொழுது இருக்கக் கூடிய படைவீரர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆயிரமே இருந்தது. இரண்டு படைகளும் மோதவிருக்கும் வேலையில், ஹர்மஸ் பெருமையின் காரணமாக, தன்னை முஸ்லிம்களால் என்ன செய்து விட முடியும் பார்க்கலாம் என்று மார் தட்டிக் கொண்டு நின்றான்.

அவனது பெருமையை அதிக நேரம் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் நீடிக்கவிடவில்லை. எடுத்த எடுப்பிலேயே அவன் மீது தனது வாளைப் பாய்ச்சி, இறுதி மூச்சை விடும்படி செய்தார். போர் இன்னும் ஆரம்பிக்கவில்லை, ஆனால் தனது படைத் தளபதியையே இழந்து நின்ற ஹர்மஸின் படைகள் அச்சத்தால் நடுங்க ஆரம்பித்தன. அவர்களது அச்சம் நியாயமாக்கப்பட்டது. அவர்கள் வேரறுந்த மரம் போலச் சாய்ந்தனர். முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர். இன்னும் கனீமத் – போர்ப் பொருட்களாக ஏராளமானவற்றை முஸ்லிம்கள் பெற்றுக் கொண்டார்கள், இன்னும் ஹர்மஸ் அணிந்திருந்த விலை மதிக்க முடியாத பூ வேலைப் பாடுகளுடன் கூடிய தலைக் கவசத்தையும் முஸ்லிம்கள் போர்ப் பொருளாகப் பெற்றார்கள். ஒரு லட்சம் திர்ஹம் விலைமதிப்புள்ள அந்த தலைக் கவசததை அபுபக்கர் சித்தீக் (ரழி) அவர்கள் காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்குப் பரிசாக வழங்கி கௌரவித்தார்கள். எப்பொழுது இந்தப் படைத்தளபதி ஈராக்கில் நுழைந்தாரோ, அப்பொழுதே வெற்றியும் நிச்சயிக்கப்பட்டு விட்டது.

இன்னும் எல்லாப் போர்களிலும் அதாவது தாத்துஸ் ஸலாசில், வலீஜாப் போர், அலீஸ் போர், அம்கீஸிய்யா, ஹைரா, அன்பர், ஐனுல் தமர், ஹஸீர், ஃகனாஃபஸ், மஸீஃக், ஸமீல் மற்றும் ஃபரஸ் ஆகிய போர்களிலும் காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் தலைமையின் கீழ் போரிட்ட இஸ்லாமியப் படை வெற்றிகளைக் குவித்தது. ஈராக்கில் மட்டும் இரண்டு வருடங்கள் தங்கியிருந்து 15 போர்களில் கலந்து கொண்டு, வெற்றி பெற்றார் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள். எதிரிகளை விட ஆள் பலத்திலும், ஆயுத பலத்திலும் குறைவாக இருந்த போதிலும், எதிரிகளைச் சந்தித்த அத்தனை போர்களிலும் முஸ்லிம்களே வெற்றி பெற்றனர். குறைந்த வளங்களோடு, குறைந்த கால அளவில் இந்தளவு வெற்றிகளை இன்றும் கூட எந்த படைத்தளபதியும் பெற்றதில்லை என்பதே வரலாறு.

தாதுல் சலாஸில் போர்

இஸ்லாமியப் படைகள் ஈராக்கில் நடத்திய போர்களில் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் கலந்து கொண்ட முதல் போர் இந்த சலாஸில் போர் தான். இந்தப் போர் வரலாற்றில் ஹஃபீர் போர் என்றும் மாற்றுப் பெயருடன் அழைக்கப்படுகின்றது. ஹஃபீர் என்ற இந்த இடம் பெர்சிய வளைகுடாவின் அருகே அமைந்துள்ளது. மேலும் மதீனாவுக்கும் பஸராவுக்கும் இடையே உள்ள வழித்தடத்திலும் இந்நகரம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியை ஆண்டு கொண்டிருந்த ஹர்மெஸ் ஈரான் ஆட்சியாளர்களிடமிருந்து அதிக ஒத்துழைப்புகளையும், உதவிகளையும் பெற்றுக் கொண்டிருந்தான். ஹர்மஸ் மிகவும் அகங்காரமும், ஆணவமும் கொண்ட மன்னனும், இன்னும் அவன் தலையில் சூடியிருக்கக் கூடிய மணிமுடியில் தங்க இலைகளால் செய்யப்பட்டதும், இன்னும் வைரம், வைடூரியங்களால் அலங்கரிக்கப்பட்டதுமாக இருந்ததுடன், அதன் மதிப்பு அன்றைய திர்ஹத்தில் ஒரு லட்சம் மதிப்புடையதாகவும் இருந்தது. இந்தப் போரில் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் யானையைப் பயன்படுத்தினார்கள். அல்லாஹ்வின் மிகப் பெரிய படைப்பாகிய அந்த மிருகத்தை அந்தப் பகுதி மக்கள் அதுவரை யாரும் கண்டதில்லை என்பதால், மிகப் பெரிய விலங்கைப் பார்த்தவுடன் அவர்கள் திகிலடைந்தார்கள்.

காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் பத்தாயிரம் முஸ்லிம்களுடன் ஈராக் பகுதிக்குள் நுழைந்த போது, எட்டாயிரம் முஸ்லிம்களுடன் ஜாலு என்ற இடத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த மத்னா பின் ஹாரிதா (ரழி) அவர்கள், இப்பொழுது காலித் பின் வலீத் (ரழி) அவர்களுடன் இணைந்து கொண்டார்கள். இருபடைகளுக்கும் தளபதிப் பொறுப்பேற்ற காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், மொத்த படைகளையும் மூன்று பிரிவுகளாகப் பிரித்தார்கள்.

ஒரு படைப்பிரிவுக்கு மத்னா பின் ஹாரிதா (ரழி) அவர்களையும், இன்னுமொரு பிரிவுக்கு அதீ பின் ஹாதிம் (ரழி) அவர்களையும்  இன்னும் மூன்றாவது பிரிவுக்கு காலித் பின் வலீத் (ரழி) அவர்களே தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். இந்த அனைத்துப் பிரிவுகளும் எதிரிகளை எதிர்ப்பதில் முன்னணியில் இருந்தன.

ஆனால் ஹர்முஸ் தனது படைகளை இருபிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவுக்கும் தளபதிகளாக அரச குடும்பத்தவர்களையே நியமித்தான். அந்த அணிகள் வலது அணி மற்றும் இடது அணி என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. இன்னும் ஆண்கள் அனைவரும் போரிலிருந்து புறமுதுகிட்டு ஓடாதபடி, அனைவரும் சங்கிலியால் பிணைக்கப்பட்டனர். எனவே தான் இந்தப் போர் சலாஸில் போர் என்றழைக்கப்படுகின்றது. அரபியில் சலாஸில் என்றால் சங்கிலி என்ற அர்த்தமாகும்.

இப்பொழுது போர் ஆரம்பமாகியது. அந்தக் கால வழக்கப்படி முதலில் தனி மனிதர்கள் மோதிக் கொண்டதன் பின் தான் உக்கிரமான போர் ஆரம்பமாகும். அந்த அடிப்படையில் முதல் இரண்டு வீரர்கள் மோதிக் கொண்டார்கள். இப்பொழுது அங்கு ஒரு சதித் திட்டம் அரங்கேற்றப்பட்டது. காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் ஹர்முஸ் மன்னனைச் சந்திக்கும் முறை வரும் பொழுது, ஹர்முஸ் ன் படைவீரர்கள் விரைந்து செயல்பட்டு, காலித் பின் வலீத் (ரழி) அவர்களைத் தாக்கிட வேண்டும் என்பது தான் அந்த சதித் திட்டம். அதன்படி இப்பொழுது ஹர்முஸ் மன்னனும், காலித் பின் வலீத் (ரழி) அவர்களும் மோதும் கட்டம் வந்தது. காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் ஹர்முஸ் மன்னனை நோக்கி நகரத் தொடங்கியதும், ஈராக்கிய வீரர்கள் காலித் பின் வலீத் (ரழி) அவர்களைத் தாக்கும் எண்ணத்துடன் முன்னேறினர். காலித் பின் வலீத் (ரழி) அவர்களைத் தாக்கும் நோக்கத்துடன் ஹர்முஸ் ன் ஆட்கள் முன்னேறுவதைக் கண்ட காகா பின் அம்ர் (ரழி) அவர்கள் விரைந்து செயல்பட்டு, அவர்களைத் தடுத்துத் தாக்கியதுடன், அந்த இடத்திலேயே ஹர்முஸ் ன் படைவீரர்கள் பலரைக் கொன்று குவித்தார். இந்த சூழ்நிலை மாற்றத்தில் சற்று நிதானமிழந்த ஹர்முஸ் ஐ க் காலித் பின் வலீத் (ரழி) தன் வாளால் செயலிழக்கச் செய்தார்கள். நிரந்தரமாக இந்த உலகத்தை விட்டே அவனை அனுப்பி வைத்தார்கள்.

போர் கடுமையாக நடந்தது, தலைவனை இழந்த ஹர்முஸ் – ன் வீரர்கள் தலைதெறிக்க பின்வாங்கி ஓடினார்கள். இன்னும் ஆயிரக்காண வீரர்களையும் இழந்தார்கள். எஞ்சியிருந்த படைகளை யூப்ரடிஸ் நதிக்கரை வரையிலும் விரட்டிக் கொண்டு போய் விட்டு வந்தார்கள் முஸ்லிம் வீரர்கள்.

அலீஸ் போர்

அலீஸ், இந்த நகரம் யூப்ரடிஸ் நதிக் கரையின் ஓரத்தில் ஹைரா மற்றம் அப்லாஹ் ஆகிய நகரங்களுக்கு இடையே அமைந்த ஊராகும். அரபுக் குலத்தவர்கள் சிலர் இந்த நதிக்கரையில் குடியமர்ந்து கொண்டு, ஈராக் மன்னனுடன் இணைந்து முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் செய்வதற்குத் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். முஸ்லிம்களிடம் பல முறை தோற்றதின் காரணமாக அவர்களின் மனதில் வெறுப்பு எனும் நெருப்பு கொழுந்து விட்டெறிந்து கொண்டிருந்தது. காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் அந்த இடத்தை அடைந்ததும் சிறிதும் தாமதிக்காமல் தாக்குதலைத் தொடுத்தார்கள். அவர்களில் மிகப் பிரபலமான வீரரெனப் போற்றப்பட்ட மாலிக் பின் கைஸ், காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் தாக்குதலின் முன் தாக்குப் பிடிக்க முடியாமல் மரணத்தைத் தழுவினான். மாலிக் பின் கைஸ் – ன் மரணத்தைக் கண் முன் கண்ட அவனது படைகள், தலைதெறிக்க புறமுதுகு காட்டி ஓட ஆரம்பித்தார்கள். இன்னும் அவர்கள் சாப்பிடுவதற்காக தயாரித்து வைத்திருந்த ரொட்டியைக் கூட சாப்பிடுவதற்கு நேரம் கொடுக்கவில்லை காலித் பின் வலீத் (ரழி) அவர்கள். அவர்கள் கொண்டு வந்திருந்த அனைத்தையும் விட்டு விட்டு ஓட்டமெடுக்க ஆரம்பித்தார்கள். இந்தப் போரில் தான் முதன் முதலாக முஸ்லிம்கள், கோதுமை மாவினால் செய்யப்படும் சப்பாத்தி போன்ற ரொட்டியைப் பார்த்தார்கள். இந்தப் போரில் எதிரிகளின் தரப்பில் 70 ஆயிரம் நபர்கள் கொல்லப்பட்டனர்.

கைரா போர்

கைரா என்பது அப்போதைய ஈராக்கின் தலைநகராக விளங்கியது. இந்த நகரைக் கைப்பற்றுவதன் மூலம் முஸ்லிம்களுக்குத் தொந்திரவு கொடுத்துக் கொண்டிருந்த அரபுக் குலங்களைக் கட்டுப்படுத்த முடியும் என்பது முஸ்லிம்களின் திட்டமாக இருந்தது. எனவே, திட்டம் வகுப்பதில் தீரரான காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் கைராவைக் கைப்பற்ற முடிவு செய்தார்கள். மேலும் இந்த நகரம் யூப்ரடிஸ் கதிக் கரையின் அருகே இருந்த காரணத்தினால், பயணத்திற்கு கடல் மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்தார் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள். முஸ்லிம் போர் வீரர்கள் கைராவை நோக்கி வருவதை அறிந்த கைராவின் கவர்னர் தனது மகனது தலைமையின் கீழ் முஸ்லிம்களை எதிர்ப்பதற்காகப் படையை அனுப்பி வைத்தார். இன்னும் கைராவை நெருங்குவதற்கு முன்பாகவே முஸ்லிம்களைத் தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்றும் கைராவின் கவர்கர் விரும்பினார். ஆனால், நேருக்கு நேர் நடந்த மோதலில் கைராவின் கவர்னரது மகனின் தலையைத் துண்டித்து விட்டார் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள். இந்தப் போரின் போது கைராவின் கவர்னருக்கு மிகவும் கைசேதமான நேரமாக இருந்தது, அதாவது அவரது மகன் போரில் கொல்லப்பட்டான், அவரது கூட்டு நாடாக இருந்த ஈரானின் மன்னரும் அப்போது இறந்திருந்தார். பயத்தினால் சூழப்பட்ட அவன் தானும், தனது மக்களுமாக கோட்டையைப் பூட்டிக் கொண்டு உள்ளே இருந்து கொண்டான். கைராவில் அமைந்துள்ள இந்தக் கோட்டை மிகவும் உறுதியானதும், பாதுகாப்பானதும் கூட. ஆபத்தான சமயங்களில் தற்காப்புக்கு உபயோகப்படுத்துவதற்காக இந்தக் கோட்டை அமைக்கப்பட்டிருந்தது. முஸ்லிம்கள் இந்தக் கோட்டையை ஒரு நாள் இரவு,  ஒரு நாள் பகல் என முற்றுகையிட்டார்கள். சில முஸ்லிம் வீரர்கள் அந்தக் கோட்டைப் பாதுகாப்பையும் சமாளித்து உள்ளே சென்று விட்டார்கள். பின் அந்தக் கைரா மக்கள் முஸ்லிம்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அந்த சமாதான ஒப்பந்தத்தின் சரத்துக்கள் பின்வருமாறு எழுதப்பட்டன :

 • வருடம் ஒன்றிற்கு பாதுகாப்பு வரியாக ஒரு லட்சத்து 90 ஆயிரம் திர்ஹம்களை வரியாகச் செலுத்துவது
 • முஸ்லிம்களுக்காக ஈரானில் இருந்து உளவு பார்ப்பது
 • இதற்குப் பிரதிபலனாக அவர்களது வணக்கத்தளத்தையோ அல்லது அவர்களது உடமைகளுக்கோ எந்த சேதத்தையும் முஸ்லிம்கள் ஏற்படுத்த மாட்டார்கள் என்ற உத்தராவதம்.

தொடர்ந்து போரிட்டு வந்து கொண்டிருக்கக் கூடிய முஸ்லிம்களுக்கு ஓய்வு அளிக்கக் கூடிய இடமாக கைராவைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், அங்கேயே ஒரு வருடம் தங்கியிருந்தார்கள். இன்னும் மிகப் பரந்;த பிரதேசமாகிய ஈராக்கையும், அதன் சுற்றுப் புறங்களில் உள்ள பகுதிகளை ஒருங்கிணைப்பதற்காக, மிகவும் தேர்ச்சி பெற்ற படைத் தளபதிகளான தரார் பின் அஸ்வர் (ரழி), காகா பின் அம்ர் (ரழி) மற்றும் மதனா பின் ஹாரிதா (ரழி) ஆகியவர்களை அனுப்பி வைத்தார்கள். இதன் காரணமாக இஸ்லாத்தின் கொடி மிகப் பரந்த நிலப்பகுதிகளிலும் ஒளி வீச ஆரம்பித்தது.

அபுபக்கர் (ரழி) அவர்கள் மிகப் பிரபலமான தளபதிகளான அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் (ரழி), யஸீத் பின் அபூசுஃப்யான் (ரழி), ஆமிர் முஆவியா பின் அபூசுஃப்யான் (ரழி), அம்ர் பின் அல் ஆஸ் (ரழி) ஆகியோர்களின் தலைமையில் ரோமப் பகுதிகளுக்கு ஒரு படையை அனுப்பி வைத்தார். இந்தப் படையின் சிரியாவின் பல பகுதிகளுக்கும் சென்றதோடல்லாமல், சென்ற பகுதிகளிலெல்லாம் இஸ்லாத்தின் வெற்றிக் கொடியை நாட்டி வைத்தது. இப்பொழுது ரோமப் படைகளுடன் மோதுவது என்ற அபுபக்கர் (ரழி) அவர்களுடைய முடிவுடன் இந்த வெற்றிகளைக் கணக்கிடும் பொழுது, இப்பொழுது சந்திக்கவிருக்கின்ற சூழல் மிகவும் பாரதூரமானதாக இருந்தது. எனவே, முஸ்லிம்களின் அனைத்துப் பிரிவும் இப்பொழுது ஒன்று சேர்ந்து யர்முக் ஆற்றங்கரையில் குழுமினர்.

முஸ்லிம்களின் இந்தப் படை நகர்த்தலைக் கேள்விப்பட்ட ரோமப் பேரரசன் ஸீஸர் தனது மந்திரிப் பிரதானிகளிடம், நிலைமையின் விபரீதத்தை இட்டு கலந்தோசனை செய்த பொழுது, இப்பொழுது நாம் முஸ்லிம்களிடம் மோத வேண்டாம் என்ற கருத்தை மன்னர் மந்திரிப் பிரதானிகளிடம் தெரிவித்தான். ஆனால் மந்திரிகளோ, மன்னரின் கருத்தை ஏற்காமல்..,

முஸ்லிம்களுக்கு நாம் ஒரு பாடத்தைக் கற்பித்துக் கொடுக்க வேண்டும், இன்னும் அந்தப் பாடத்தை அவர்களின் சந்ததிகள் கூட மறக்கக் கூடாது என்று உருமினர். இறுதியாக, மந்திரிகளின் ஆலோசனை தான் வெற்றி பெற்றது. முஸ்லிம்களின் மீது படையெடுத்துச் செல்வது என்று முடிவாகியது.

முஸ்லிம்களைக் களம் காண 4 லட்சம் ரோமப் படைவீரர்கள் தயார் செய்யப்பட்டனர். ஆனால் முஸ்லிம்களின் தரப்பிலோ ஒட்டு மொத்தமாக 46 ஆயிரம் படை வீரர்கள் தான் இருந்தனர். இன்னும் இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயலப்படாமல், பல்வேறு தளபதிகளின் கீழ் யர்முக் ஆற்றின் வௌ;வேறு பகுதிகளில் தனித்தனியாகப் பிரிந்திருந்தனர்.

இந்த நிலையில் யர்முக் ஆற்றின் கரைக்கு தனது படையினருடன் வந்த காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், நிலைமையின் பாதகத்தை உணர்ந்து, அனைத்துத் தளபதிகளையும் அழைத்து ஒரு ஆலோசனைக் கூட்டமொன்றை நடத்தினார். இதனடிப்படையில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தளபதியின் கீழ் போர் செய்வது என்றும், இதன் மூலம் ஒவ்வொரு தளபதிக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்ற ஆலோசனை முன் வைக்கப்பட்டது. அந்த ஆலோசனையை அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர். முதல் நாள் போருக்கு காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தலைமை தாங்குவது என்றும் ஒருமனதாக முடிவாகியது.

எப்பொழுது காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றாற்களோ, அப்பொழுது வீரர்களின் வீரத்தையும், உயிர் தியாக வேட்கையையும் உசிப்பி விடுவதற்கானதொரு வீர உரையை அவர்களுக்கு மத்தியில் ஆற்றினார். இந்த உரையின் தாக்கம் ஒவ்வொரு வீரரின் நாடி நரம்புகளிலும் பரவி, இப்பொழுது அவர்களது தாகமெல்லாம் எதிரிகளைச் சந்திப்பதிலும், அதில் வீர மரணமடைந்து அந்த முடிவறாத சுவர்க்கத்தை அனந்தரங் கொள்வதிலும் நிலைத்திருந்தது. மற்ற உலக பந்தங்களெல்லாம் அவர்களிடம் விடை பெற்று நின்றது.

காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்கள் :

என்னருமை உயிர் தியாகிகளே..!

இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள்..! மிகவும் நினைவு கூறத் தக்க நாள்..! இந்த நாளில் நமது இறைநம்பிக்கை சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது, அதற்கான பயிற்சி நம் முன் காத்திருக்கின்றது. எனவே, இன்றைய இந்த தினத்தில் நமது முரட்டுத்தனம், பாரம்பரியப் பெருமைகள், தனிப்பட்ட நபரின் சுயநலத்திற்காக பாடுபடுதல் அல்லது பிறர் நம்மைப் புகழ வேண்டும் என்பது போன்ற இஸ்லாத்திற்கு விரோதமான அனைத்தையும் தூக்கி எறிந்து விடுங்கள்.

என்னருமை  உயிர் தியாகிகளே..!

அல்லாஹ்வின் திருப்பொருத்தம் ஒன்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டு போரிடுங்கள். இன்றைக்கு நம்முடைய படைக்கு மிகப் பெரும் தளபதிகள் பலர் பொறுப்பேற்றிருக்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் நன்னம்பிக்கையாளர்களும், இன்னும் நம்பத்தகுந்தவர்களாகவும், அதனை விட நீங்களும் நானும் அவர்களது உத்தரவிற்குக் கட்டுப்பட்டு நடக்கும் தகுதிபடைத்தவர்களாகவும் இருக்கின்றார்கள். இன்றைய தினம் நீங்கள் என்னுடைய பொறுப்பின் கீழ், என்னுடைய உத்தரவுக்குக் கீழ்படிந்து நடக்கக் கூடிய படைவீரர்களாக, என்னுடைய தலைமையின் கீழ் திரண்டிருக்கின்றீர்கள். இஸ்லாத்தின் பெருமையை நிலைநாட்டவும், இஸ்லாம் வெற்றி பெற்றிடவும் இப்பொழுது நாம் உயிர்த்தியாகம் ஒன்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டு போர்க்களத்தில் நுழைய இருக்கின்றோம். நமக்கு உதவவும், நம்மைப் பாதுகாக்கவும் அல்லாஹ் ஒருவனே போதுமானவன்..!

என்ற உரையை நிகழ்த்தி முடித்ததும், இரண்டு படைகளும் மோதுவதற்குத் தயாராக யர்முக் ஆற்றின் கரையில் சந்தித்துக் கொண்டன.

காலித் பின் வலீத் (ரழி) அவர்களைப் பார்த்த ரோமப் படைத்தளபதி மஹன் கொக்கரிக்க ஆரம்பித்தான்.

வறுமையும், ஏழ்மையும், உடுத்த உடை கூட இல்லாத நிலைமையும் தான் உங்களை இங்கு வரத் தூண்டி இருக்கும் என்று நினைக்கின்றேன். நீங்கள் விரும்பினால் உங்கள் ஒவ்வொருவருக்கும் பத்து தினார்களையும் இன்னும் விலையுயர்ந்த உடைகளையும், நல்ல உணவுகளையும் தருகின்றேன். பெற்றுக் கொண்டு இடத்தைக் காலி செய்து விட்டுச் செல்லுங்கள். இன்னும் அடுத்த வருடமும் கூட உங்களுக்கு இது போன்றே தரத் தயாராக இருக்கின்றேன். நீங்கள் இங்கு வந்து தான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை, நானே உங்களிடத்திற்கு அனுப்பி வைக்கின்றேன் என்று ஏளனமாகக் கூறினான்.

ரோமப் படைத்தளபதி மஹனின் இந்த ஏளனம் மற்றும் திமிர்ப் பேச்சை செவிமடுத்த காலித் பின் வலீத் (ரழி) அவர்கள்..!

மஹன்….?! கவனமாகக் கேட்டுக் கொள். நாங்கள் வந்த நோக்கத்தை நீ தவறாக எடை போட்டு விட்டாய்..! நாங்கள் எதிரியின் இரத்தத்தைக் குடித்து தாக சாந்தி அடைந்த கொள்ளத் துடிப்பவர்கள். அதிலும் ரோமர்கள் இரத்தங்கள் மிகவும் ருசியாக இருக்கும் என்பதையும் கேள்விப்பட்டோம், அதனைச் சுவைத்துப் பார்க்கவே இங்கு வந்தோம் என்று உரத்துக் கூறினார்.

இதனைக் கூறிக் கொண்டே தனது குதிரையைக் காற்றில் பறக்க விட்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், அல்லாஹ{ அக்பர் என உரத்து முழங்கி இஸ்லாத்தின் கொடியை உயர்த்திப் பிடித்தார், அத்துடன் எதிரியைத் தாக்க ஆரம்பிக்குமாறு முஸ்லிம்களுக்கு உத்தரவும் பறந்தது. ஏற்கனவே, வெற்றி அல்லது வீர மரணம் என்று களம் புகுந்திருந்த முஸ்லிம்கள், உத்தரவு கிடைத்ததும் தான் தாமதம், தங்களது நோக்கத்திற்கு செயல் வடிவம் கொடுக்க ஆரம்பித்தார்கள்..!

காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தனது தோழர்களைப் பார்த்து உரக்க முழங்க ஆரம்பித்தார்.

எனது தோழர்களே..! சுவனத்தின் தென்றல் காற்று இதமாக வீசுவதை நீங்கள் உணரவில்லையா..! அதன் குளிர்ச்சி உங்களை மகிழ்விக்கக் காத்திருப்பதை நீங்கள் அறியவில்லையா..! வெற்றியும், நற்பேறுகளும் காத்திருக்கின்றன..! ம்…! முன்னேறுங்கள்..! என்று தனது தோழர்களுக்கு ஊக்க மருந்து கொடுக்க ஆரம்பித்தார்.

சுவனத்துச் சோலைகளின் அழகையும், வனப்பையும் திருமறைக் குர்ஆன் வசனங்களின் மூலம் ஏற்கனவே மனக் கண்களால் தரிசித்து வைத்திருந்த முஸ்லிம்கள், அதனை நித்தியமாக அடைந்து கொள்வதற்கு இப்பொழுது முழு முயற்சியை மேற்கொண்டார்கள். அதற்கு உத்வேகமளித்தது தளபதி காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் உணர்ச்சி மிக்க உரை.

வீரத்தின் விளை நிலங்கள் இப்பொழுது கூலிக்கு மாறடிக்கும் கூட்டத்தினரை பதம் பார்க்க ஆரம்பித்தார்கள். எங்கும் குழப்பமும், மரண ஓலங்களும் ஒலித்திட என்ன செய்வதென்றே தெரியாது ரோமப் படைகள் விழி பிதுங்க ஆரம்பித்தன. உணர்ச்சி மிக்க உரையை நிகழ்த்தி விட்டு, தானும் அந்த உயரிய அந்தஸ்தை அடைய வேண்டுமே என்ற நோக்கத்தை மனதில் தேக்கி வைத்திருந்த காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், தனது நோக்கத்தை செயலில் அடைந்து காட்ட அவரும் வலது பக்கமாக இருந்து எதிரிகளை ஊடறுத்துக் கொண்டு எதிரிகளின் மையப் பகுதிக்கே சென்று விட்டார். அத்துடன் மின்னலென வீசப்பட்ட அவரது வாள் வீச்சு, எதிரிகளின் தோல்விக்கு முடிவுரை எழுத ஆரம்பித்தது.

முதல் நாள் போரில் ரோமர்கள் தங்களது கூலிப் பட்டாளத்தில் ஒரு லட்சத்து இருபதாயிரம் வீரர்களை  இழந்திருந்தார்கள்.

யர்முக் போர்க்களத்தின் முக்கியக் காட்சிகள் சில..!

வீர மரணம் அடைந்து அந்த சுவனத்துத் தென்றலை முகர்ந்து பார்த்து விட வேண்டும் என்ற துடிப்பு யர்முக் போர்க்களத்தில் கலந்து கொண்ட ஒவ்வொரு முஸ்லிம் வீரரிடத்திலும் காணப்பட்டது. அவர்களது அந்த ஆசையை ஏற்கனவே காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் வீர உரை கிளறி விட்டிருந்தது.

ஒரு வீரர் அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் (ரழி) அவர்களிடத்தில் வருகின்றார்..!

அபூ உபைதா அவர்களே..! இன்று நடக்கக் கூடிய போரில் நான் வீர மரணமடைய வேண்டும் என்ற ஆசை என்னை மேலிடுகின்றது. அவ்வாறு நான் வீர மரணமடைந்து விட்டால், இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நான் என்ன கூற வேண்டும் என்பதைக் கூறுங்களேன் என்று வினவி நின்றார்.

கண்ணியமிக்க, புகழுக்குரியோனாகிய அல்லாஹ்..! இந்தப் போர்ப் புலிகளுக்கு, வீரத்தியாகிகளுக்கு வாக்களித்ததை நிறைவேற்றி விட்டான் என்று கூறுங்கள் என்று பதில் கூறினார் அபூ உபைதா (ரழி) அவர்கள்.

அபூ உபைதா (ரழி) அவர்களின் இந்தப் பதிலைக் கேட்ட, இக்ரிமா என்ற அந்தத் தோழர், அபூ உபைதா (ரழி) அவர்களே..! நான் இஸ்லாத்தினை எனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்ளுமுன் இறைநிராகரிப்பாளர்களின் கூடாரத்தில் இருந்து கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராகக் கலந்து கொண்ட போர்களில் கூட நான் புறமுதுகிட்டு ஓடாதவன். இன்றைக்கு சுவனம் என்னை அழைக்கும் பொழுது நான் திரும்பியா ஓடி விடுவேன்..! இல்லை இல்லை..! என்று கூறியவாறே..! எனது தோழர்களே..! என்னைப் பின்பற்றி வாருங்கள் என்று கூவியவாறே..! தனது தோழர்களை அழைத்துக் கொண்டு எதிரிகளை ஊடறுத்துக் கொண்டு வாளைச் சுழற்றிக் கொண்டே சென்றார். சற்று நேரத்திற்கெல்லாம் எதிரியின் வாள் இக்ரிமா (ரழி) அவர்களைப் பதம் பார்க்க, சுவனத்தின் சுகந்தத்தை.., அவர் அடைய நினைத்த அந்த குளிர்ச்சியான சோலைகளுக்குள் நுழைந்து விட்டார்.

போர் உக்கிரமமான முறையில் நடந்து கொண்டிருந்தது. இரவும் தொடர்ந்து நீடித்தது. காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் எதிரியின் முகாமிற்குள்ளேயே நுழைந்து, ரோமப் படைத்தளபதியின் கூடாரத்திற்குள் நுழைந்து விட்டார். இப்பொழுது எதிரிகள் உயிர் தப்பினால் போதுமென்று ஓட ஆரம்பித்திருந்தனர். இரவு நடந்த போரில் எதிரிகளை விரட்டி விரட்டி, அவர்களது தலைகளை முஸ்லிம்கள் கொய்தனர். முஸ்லிம்களில் பலருக்கும் கடுமையான காயம் ஏற்பட்டிருந்தது.

இன்னுமொரு சம்பவம்..!

இந்த யர்முக் போரில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத்தி வைத்திருந்த சகோதரத்துவமும், இன்னும் தியாகமும் மீண்டும் ஒரு முறை வெளிப்பட்டது. வரலாற்றிலும் இந்த சம்பவம் நிலைத்து விட்டது. இன்றைக்கும் என்றைக்கும் முஸ்லிம்களுக்கு ஒரு பாடமாகவும் அமைந்து விட்டது.

போர் நடந்து கொண்டிருக்கின்றது. மூன்று முஸ்லிம் வீரர்கள் கடுமையான காயம் பட்டு, உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். தாகம் அவர்களை வாட்டிக் கொண்டிருக்கின்றது. இதனைப் பார்த்த ஒருவர், அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பதற்காக அருகில் சென்றால், அவர் தனக்கு  அருகில் தாகத்தோடு போராடிக் கொண்டிருப்பவருக்கு முதலில் தண்ணீர் கொடுக்கும்படி கூறுகிறார். அவரிடம் தண்ணீர் கொடுக்கச் சென்றால், தன்னை அடுத்து தாகத்தால் வாடிக் கொண்டிருக்கக் கூடியவருக்கு முதலில் தண்ணீர் கொடுத்து வரும்படிக் கூறுகிறார். இவ்வாறாக, தனக்குத் தேவையிருந்தும் தன்னுடைய சகோதரனின் தேவைக்கு முக்கியவத்தும் அளித்தார்கள். மீண்டும் மூன்றாமவருக்கு அருகில் சென்று தண்ணீர் கொடுக்கச் சென்ற பொழுது, அவர் முதல் நபருக்குத் தண்ணீர் கொடுத்து வருமாறு கேட்டுக் கொள்ள, இவ்வாறாக தண்ணீரை யாருக்கும் கொடுக்க இயலாமல் சுற்றிச் சுற்றி வந்த பொழுது, இறுதியில் தண்ணீர் குடிக்காமலேயே மூவரும் மரணமடைந்து விட்ட காட்சி அங்கே நடந்தது. இன்றளவும் அந்தக் காட்சி வரலாறாக ஏடுகளில் பதிவாகி, வரக் கூடிய சந்ததியினருக்கு நற்பாடமாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.

இன்னுமொரு சுவாரஸ்யமான சம்பவம்..!

இந்த யர்முக் போரில்  இன்னுமொரு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. ரோமப் படைக்கு தலைமை தாங்கி வந்திருந்த தளபதிகளுள் ஒருவரான ஜர்ஜாஹ் என்பவர் காலித் பின் வலீத் (ரழி) அவர்களைச் சந்தித்து,

காலித் பின் வலீத் அவர்களே..! நான் கேட்கும் கேள்விகளுக்கு ஒளிவு மறைவின்றி, உண்மையான பதிலை நீங்கள் கூற வேண்டும்.

காலித் பின் வலீத் (ரழி) அவர்கள்..,  கேளுங்கள்..! நிச்சயமாகப் பதிலளிக்கின்றேன்.

உங்களது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வானத்திலிருந்து பிரத்யேகமாக வாளொன்றைப் பெற்று உங்களிடம் கொடுத்துள்ளார்களோ..! ஏனெனில், உங்களைச் சந்திக்கும் எதிரிகள் எல்லோரும் தோற்று ஓடுகின்றார்களே..! அதனால் தான் கேட்கின்றேன் என்றார், ஜர்ஜாஹ்.

இல்லை..! இல்லை..! வானத்திலிருந்து பிரத்யேகமாக எந்த வாளும் வரவில்லை.. இது காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் பதிலாக இருந்தது.

பின் ஏன் உங்களை ஸைபுல்லாஹ் (அல்லாஹ்வின் வாள்) என்றழைக்கின்றார்கள்?

அல்லாஹ் எங்களுக்கு வழிகாட்ட இறைத்தூதரை அனுப்பி வைத்தான். சிலர் அவர் கூறிய கருத்துக்களை ஏற்றுக் கொண்டார்கள், அவர் மீது அன்பு கொண்டார்கள். இதயங்களில் ஏற்றுக் கொண்ட அந்த கொள்கையை உயிரை விடவும் நேசித்தார்கள். தூதருக்குக் கட்டுப்பட்டார்கள். பலர் அவரை எதிர்த்தார்கள், அவர் கொண்டு வந்த கொள்கையை ஏற்க மறுத்து உதாசினம் செய்தார்கள்.

முன்பொரு காலத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களையும், அவர்களைப் பின்பற்றியவர்களையும் குறிப்பாக இஸ்லாத்தின் கொடிய விரோதியாக இருந்தவன் தான் நான். அல்லாஹ் எனது இதயத்தில் இஸ்லாத்தின் வெளிச்சத்தை ஏற்றி வைத்தான், நான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முன்னிலையில் சத்தியத்தை ஏற்றுக் கொணடேன், இஸ்லாமிய அணியில் நானும் ஒருவனானேன். ஒரு முறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னை பார்த்துக் கூறினார்கள் :

காலித் பின் வலீத் (ரழி) அவர்களே..! நீங்கள் அல்லாஹ்வின் வாள்..! உங்களது வாள் வலிமையானது எதிரிகளின் வல்லமையை அழித்தொழிக்கும்.

எனவே தான், அன்றிலிருந்து எனது பெயருக்கு முன் ஸைபுல்லாஹ் என்ற பட்டம் இணைந்து கொண்டது. நாங்கள் ஓரிறைக் கொள்கையை மக்கள் முன் வைக்கின்றோம். இறைவன் ஒருவனே..! வணங்கத்தக்க இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று சான்று பகருமாறு மக்களை அழைக்கின்றோம் என்று கூறினார் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள்.

இந்தக் கொள்கையை நான் ஏற்றுக் கொண்டால் நீங்கள் பெற்றிருக்கக் கூடிய இதே நற்பேறுகளை நானும் அடைந்து கொள்ள முடியுமா? இன்னும் காலித் பின் வலீத் (ரழி) அவர்களே..! குறிப்பாக உங்களைப் போன்றே நானும் ஆக முடியுமா? என்று கேட்டார் என்ற அந்த ரோமப் படைத்தளபதி.

ஏன் முடியாது. நிச்சயமாக முடியும். இன்னும் என்னை விட நீங்கள் உயர் தகுதிகளைப் பெற்றுக் கொள்ளவும் முடியும் என்றார்கள் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள்.

காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் விளக்கத்தினால் கவரப்பட்ட ஜர்ஜாஹ் என்ற அந்த ரோமப் படைத்தளபதி,

காலித் பின் வலீத் (ரழி) அவர்களே..! நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள விரும்புகின்றேன். எனக்கு சத்திய சான்றைக் கற்றுத் தாருங்கள். வணங்கத்தக்க இறைவனாக அல்லாஹ்வை ஏற்றுக் கொள்கின்றேன், அவனால் அனுப்பி வைக்கப்பட்ட தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும் ஏற்றுக் கொள்கின்றேன் என்று கூறி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் ஆலோசனைப்படி, குளித்துத் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு வந்த ஜர்ஜாஹ் அவர்கள், காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் திருக்கரங்களினால் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டார்கள். இரண்டு ரக்அத் தொழுகைகளையும் தொழுது, நேர்வழி காட்டிய இறைவனுக்கு நன்றிக் கடன் செலுத்திக் கொண்டார்.

தான் படை நடத்தி வந்த ரோமப்படைக்கு முடிவுரை எழுதி விட்டு, இஸ்லாமிய அணியில் இணைந்து முகவுரை எழுதத் தயாராகி விட்டார் அந்தத் தளபதி. ரோமப்படைக்குத் தளபதியாக வந்தவர், இப்பொழுது இஸ்லாமிய அணியில் காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் தலைமையின் கீழ் சாதாரணப் படைவீரராகப் பணியாற்ற ஆரம்பித்த அவர், இஸ்லாத்தின் மேன்மைக்காகவும் இன்னும் தானும் உயிர்த்தியாகியாக மாறி அந்த சுவனத் தென்றலைச் சுவாசிக்கப் புறப்பட்டு விட்டார்.

என்னே.. அவரது தியாகம்…! அவர் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டதற்கும் அவர் உயிர் தியாகியாக மாற்றம் பெறுவதற்கும் இடைப்பட்ட காலப் பகுதியாக இந்த இரண்டு ரக்அத் தொழுகைக்கான நேரம் மட்டுமே தடையாக இருந்தது. சற்று முன் இறைநிராகரிப்பாளர்களின் அணியில் இருந்தவர், அடுத்த நிமிடம் இறைநம்பிக்கையாளராக மாற்றம் பெற்று, சில நிமிடங்களிலேயே உயிர்த்தியாகிகளின் பட்டியலில் சேர்ந்து விட்ட அவர், மிகப் பெரும் அதிர்ஷ்டசாலி தான்.

இறுதி நிலை

எதிரிகளின் நெஞ்சங்களில் அச்சத்தை விதைத்த அந்த வீரத்தின் விளை நிலத்தில் மரணத்தின் விதைகள் வளர்ந்து விருட்சமாக வளர ஆரம்பித்தன. பலவீனங்கள் அவரது நெஞ்சத்தை நோயுற முயன்று தோற்றுப் போனதால், பலவீனம் மரணமாக மாறியது. வேங்கை போல நடந்த அவரது கால்கள் இப்பொழுது படுக்கையில் நிலைகுலைந்து கிடந்தன. மரணம் அவரை நெருங்க ஆரம்பித்தது. மரணப்படுக்கையில் கிடந்த அந்த மாவீரர், தனது எண்ணங்கள் நிறைவேறாத நிலைகுறித்து, குமுறிக் குமுறி அழ ஆரம்பித்தார்.

நான் எத்தனை போர்களில் கலந்து கொண்டிருப்பேன். எத்தனை வாட்களையும், அம்புகளையும் எனது உடல் சந்தித்தது. அப்பொழுதெல்லாம் உயிர்தியாகியாக மாறி, சுவனத்துத் தோட்டங்களிலும், இறைவனுடைய அர்ஷிலும் பச்சைப் பறவையாகப் பறந்து திரியத் துடித்தேனே..!

எனது உடலில் தான் எத்தனை எத்தனை தழும்புகள்..! இதில் ஒன்றாவது என்னை உயிர்த்தியாகியின் அந்தஸ்தில் சுவனத்தில் சேர்க்கவில்லையே..!

எனது ஆசைகள் நிறைவேறாத நிலையில் மரணம் என்னைத் தழுவுகின்றதே..! என்று குமுறிய அவரது விழிகளிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தோடியது.

அவரது கவலைகள் அவரைக் கரைசேர்க்கவில்லை. உயிர்த்தியாகி என்ற அந்தஸ்தை அடையும் பாக்கியம் அவருக்குக் கிடைக்காமலேயே மரணத்தை அவர் தழுவிக் கொண்டார். உடலை விட்டு உயிர், இறைவனின் பால் சென்று விட்டது.

அவர் மரணமடைந்த பொழுது, ஆட்சிப் பொறுப்பில் உமர் (ரழி) அவர்கள் இருந்தார்கள். காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் மரணத்தைக் கேள்விப்பட்ட உமர் (ரழி) அவர்கள் கண்கள் கலங்கினார்கள். மதீனா நகரமே சோகத்தில் மூழ்கியது. காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், இறுதியாக விட்டுச் சென்றவைகள் அவரது ஆயுதமும், அவரது குதிரையும் தான் என்பதைக் கேள்விப்பட்ட உமர் (ரழி) அவர்கள், உண்மையில் அவர் மிக உயர்ந்த மனிதர் தான் என்று புகழாரம் சூட்டினார்கள்.

உமர் (ரழி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், காலித் பின் வலீத் (ரழி) அவர்களை தளபதிப் பொறுப்பில் இருந்து நீக்கி விட்டார்கள். எப்பொழுது உமர் (ரழி) அவர்களின் அந்த உத்தரவு கிடைத்ததோ, அப்பொழுதே தனது பதவியைக் காலி செய்து விட்டு, எந்த முணுமுணுப்பும் காட்டாமல் அடுத்தவருக்கு வழி விட்டதோடு, சாதாரணப் படைவீரராகவே தனது இறுதிக் காலம் வரை செயலாற்றி வந்தார். உன்னதமான நோக்கங்களுக்குச் சொந்தக்காரரான அவர், இஸ்லாமும், அதன் கொள்கைகளும் இந்தப் பூமியில் நிலைபெற வேண்டும், இறைவனது சத்திய வார்த்தைகள் இந்தப் பூமிப் பந்தை ஆள வேண்டும், அதற்காக உடலாலும், பொருளாலும், உயிராலும் சேவை செய்வது ஒன்றே குறிக்கோளாகக் கொண்ட அந்த உத்தமர், அதற்காக தளபதிப் பொறுப்பில் இருந்து தான் செயல்பட முடியும் என்றில்லாமல், சாதாரணப் படைவீரனாகவும் இருந்து செயல்பட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினார். அவரது இந்த உத்தமமான, நேர்மையான, தூய்மையான எண்ணங்கள் இன்றைக்கும் நமக்கொரு வரலாற்றுப் படிப்பினையாக இருந்து கொண்டிருக்கின்றது.

தனது இஸ்லாமிய வாழ்வை மிகப் பெரும் படைத்தளபதியாக ஆரம்பித்து, சாதராண படைவீரராக முடித்துக் கொண்டார். இஸ்லாத்தை மேலோங்கச் செய்ய வேண்டும் என்பதற்காக அவர் தொடர்ந்து போர்களில் கலந்து கொண்டதன் காரணமாக, அவரது உடலின் ஒவ்வொரு பாகமும் விழுப்புண்களாகல் சூழப்பட்டிருந்தது, இன்னும் ஒவ்வொரு பாகமும் வலியால் ரணமாகி, வேதனையைத் தந்து கொண்டிருந்தன.

என்றைக்கு அவர் மரணமடைந்தாரோ அன்றைய தினம் தான் அவரது முதல் ஓய்வு நாளாகப் பரிணமித்தது. சுவனச் சோலைகளில் தஞ்சம் புகுந்த அந்தத் தினம் தான் அவர் ஓய்வு எடுக்கும் முதல் தினமாகவும் இருந்தது.

அவரது மரண ஊர்வலம் அவரது வீட்டிலிருந்து தொடங்குகின்றது. அவரது உடல் அவரது இல்லத்திலிருந்து வெளிக் கொண்டு வரப்பட்ட பொழுது, கண்ணீருடன் தனது மகனை அனுப்பி வைத்த அவரது தாயார்,

மகனே..! நீ வாழ்ந்த காலங்களில் சிங்கத்தை விட வீரமாக வாழ்ந்தாய். அதே போல நதியை விட பிறர் மீது கருணையைப் பொழிந்து வாழ்ந்தாய் என்று புகழாரம் சூட்டிய அவரது தாய், இன்னும் மகனே..! எவ்வாறு சிங்கம் தனது குட்டிகளை அரவணைத்துப் பாதுகாக்குமோ அது போல இந்த இஸ்லாமிய உம்மத்தைப் பாதுகாத்து வளர்த்து வந்தாய்.

யா அல்லாஹ்…! எனது மகனை உன்னிடம் அடைக்கலமாகத் தந்து விட்டேன், அவன் மீது கருணை புரிந்தருள்வாயாக..! என்று பிரார்த்தித்தார்கள்.

ஆம்..! அந்தத் தாயின் பிரார்த்தனைகளின் பிரதிபலனை நிச்சயமாக அவர் மறுமை நாளிலே கண்டு கொள்வார். கண்களில் குளிர்ச்சியைப் பெற்றுக் கொள்வார். அவன் எப்பொழுதும் என்னை சந்தோஷமாகவே வைத்திருந்தான், எனவே, யா அல்லாஹ்..! மறுமை நாளிலே அவனுக்கு நீ சந்தோஷத்தை அளிப்பாயாக என்றும் காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் தாயார் தனது மகனின் மறுமைக்காகப் பிரார்தித்தார்கள்.

காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் தாயாரது பிரார்த்தனைகளின் வரிகளைக் கேள்விப்பட்ட உமர் (ரழி) அவர்கள்,

அவரது தாயார் கூறிய அனைத்தும் உண்மையே..! அவர் கூறிய அனைத்திற்கு உரித்தானவரே..! என்று புகழாரம் சூட்டினார்கள்.

இப்பொழுது காலித் பின் வலீத் (ரழி) அவர்களது உடல் மண்ணறைக்குள் இறக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. தளபதியை இழந்த தோழர்களின் இதயங்கள் சோகத்தால் எரிமலையாகக் குமுறிக் கொண்டிருந்தாலும், இறைவனின் முடிவை ஆமோதித்தவர்களாக அமைதி காத்தார்கள், முழுச் சூழ்நிலையும் நிசப்தமாக இருந்தது. காற்றில் அசையக் கூடிய இலையின் ஓசையும், காலடியில் படக் கூடிய சறுகுகளின் ஓசையும் கூட அந்த வேளையில் தெளிவாகக் கேட்டுக் கொண்டிருந்தன.

அமைதி..! அமைதி…! பூரண அமைதி…!

வெற்றியைத் தவிர வேறெதனையும் பெற்றுத் தராத அந்தத் தளபதியின் உடல் மண்ணிற்குள் வைக்கப்பட்டதும், குமுறிக் கொண்டிருந்த எரிமலைகள் இப்பொழுது உதடுகளின் ஓரத்தில் வந்து நின்று வெடிக்கக் காத்திருந்தன. கண்கள் பனிக் குடத்தை சுமந்து கொண்டிருந்தன.

சற்று தூரத்தில் இன்னொரு தோழரும் நடந்து கொண்டிருக்கும் அடக்க நிகழச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆம்..! அந்தத் தோழரும் ஒரு இணை பிரியாத தோழர்தான். ஒவ்வொரு போரிலும் தனது தலைவனை முதுகில் சுமந்து கொண்டு, தனது தலைவன் இடும் கட்டளைகளுக்கு மாறு செய்யாமல், எதிரிகளை ஊடறுத்துச் சென்று தலைவனின் பணியை எளிதாக்கியவரும் இந்தத் தோழர் தான்.

ஆம்..! அந்தத் தோழர் யாருமல்ல..! காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் கலந்து கொண்ட அனைத்துப் போர்களிலும் கலந்து கொண்ட அவரது குதிரையான அஸ்கர் தான் அந்தத் தோழர்.

இனி தனது தலைவனை என்றுமே நாம் பார்க்கப் போவதில்லை என்று அறிந்த அஸ்கரின் கண்களில் இருந்து கண்ணீர் முத்துக்கள் திரண்டு, முத்துக்கள் திவளைகளாக அதனது கண்ணத்தை நனைத்துக் கொண்டு காற்றாற்று வெள்ளமாக உருண்டோடிக் கொண்டிருந்தது.

அமைதியைக் கிழித்துப் போட்டது அஸ்கரின் கண்ணீர், எரிமலையாய் வெடித்துச் சிதறின தோழர்களின் இதயச் சிரைகள்..!

அஸ்கரின் கண்களில் வழிந்தோடிய கண்ணீரைக் கண்ட தோழர்களது இதய எரிமலை வெடித்துச் சிதறின, உதடுகள் துடித்தன.., கண்கள் கண்ணீரைச் சொறிய ஆரம்பித்தன. இருளைக் கிழித்த ஒளியைப் போல அமைதியும் அங்கே அழிந்தே போனது, எங்கும் தோழர்களின் விம்மிய ஓசை..!

காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் ஹிஜ்ரி 21 ல் மரணமடைந்தார்கள். அவர்களின் உடல் ஹம்மாஸ் – ல் நல்லடக்கம் செய்யப்பட்டது. நிறைவான வாழ்க்கை வாழ்ந்த அவர், படைத்தவனைச் சந்திக்கப் புறப்பட்டு விட்டார்.

2. சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி)

நெடிதுயர்ந்த உடல், சுருள் முடி மற்றும் பரந்த புஜங்களைக் கொண்ட அந்த வாலிபரைப் பார்க்கும் யாரும், இவர் அல்லாஹ்வின் பாதையில் தன்னை அர்ப்பணிக்க வந்தவர் என்பதை எளிதாகப் புரிந்து கொள்வார்கள். இவரது இரவுகள் வணக்க வழிபாடுகளில் கழிந்தன, வீரம் மற்றும் நேர்மையான வாழ்வுக்குச் சொந்தக்காரராகவும், இறைச் சட்டங்களைக் கண்டிப்புடன் பேணி வாழக் கூடியவராகவும் அவரது வாழ்வு திகழ்ந்தது. இறையச்சத்துடன் கழிந்த அவரது வாழ்வில், கொடைத்தன்மையும், ஏழைகளுக்கு இரங்கும் தன்மையும், பணிவும் இன்னும் தியாகமும் நிறைந்திருந்தன. இத்தகைய நற்குணங்களுக்குச் சொந்தக்காரரான சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருவதனங்களினால் சொர்க்கத்திற்கு நன்மாராயங் கூறப்பட்ட 10 ஸஹபாப் பெருமக்களில் ஒருவராகவும் திகழக் கூடிய நற்பேற்றைப் பெற்றவராகத் திகழ்ந்தார்.

இன்னும் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களது பிரார்த்தனைகளை யா அல்லாஹ் நீ ஏற்றுக் கொள்வாயாக! இன்னும் அவரது வில்லிலிருந்து புறப்படுகின்ற அம்பு, எதிரியின் இலக்கைத் துல்லியமாகத் துளைக்க கிருபை செய்வாயாக என்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களுக்காகத் துஆச் செய்யும் பேறு பெற்றவர்களாகத் திகழ்ந்தார்கள்.

இன்னும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் (ஸல்) அவர்களுக்கும் வாய்மையாக நடந்து கொள்வோம், எந்த நிலையிலும் அதிலிருந்து மாற மாட்டோம் என்று வாய்மையாக உறுதி மொழி அளித்த, அதாவது பைஅத்துர் ரிழ்வான் என்னும் ஒப்பந்தத்தில் கலந்து கொண்ட பெருமக்களில் இவரும் ஒருவராவார். திருமறைக்குர்ஆனில் புகழ்ந்து கூறப்பட்டிருக்கும் பல நபித்தோழர்களில் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களும் ஒருவராவார். இன்னும் உஹத் போரிலே அஞ்சாமல் எதிரிகளைத் துளைத்துக் கொண்டு சென்று போரிட்ட மாவீரர்களில் இவரும் ஒருவராவார். வில் வித்தையில் மிகவும் நிபுணத்துவம் பெற்றவரான இந்த நபித்தோழர் உஹதுப் போர்க்களத்தில் தனது வில்லிலிருந்து அம்புகளை மழை என எதிரிகளின் மீது பொழிந்து எதிரிகளை நிலைகுலையச் செய்தவரும் ஆவார். அந்தப் போர்க்களத்தில் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களின் வில் வித்தையைக் குறித்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு புகழ்ந்து கூறுபவர்களாக இருந்தார்கள்.

ஒ சஅத்..! எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும், உங்களது அம்புகளை வீசுங்கள்! என்று கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.

சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் தனது பதினேழாவது வயதில் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். தாருல் அர்க்கம் என்ற பயிற்சிப் பாசறையில் வைத்து இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் நேரடியாகப் பயிற்சி பெற்றவரும், கல்வி பெற்றவருமாவார். இன்னும் ஷிஅப் அபீதாலிப் கணவாயில் சமூக பகிஷ்காரம் செய்யப்பட்டு சொல்லொண்ணா துன்பங்களுக்கிடையில் இரண்டு வருடங்களைப் பொறுமையுடன் கழித்த பெருந்தகையுமாவார். வாழ்வின் அநேக தருணங்களைப் போர்க்களத்தில் கழித்த இவர், அங்கு தனது பிரமிக்கத்தக்க வீரத்தை நிரூபித்துக் காட்டினார். அவரது ஒவ்வொரு நிமிடமும் இன்றைக்கிருக்கின்ற முஸ்லிம் உம்மத் ஏற்றுப் பின்பற்றத் தக்கதாகவும், இன்னும் போர்க்களத்தில் இருந்து கொண்டிருப்பவர்களுக்குப் படிப்பினையாகவும் இருந்து கொண்டிருக்கின்றது.

இன்றைய ஈராக்கின் அன்றைய பிரபலமான நகராகத் திகழ்ந்த ஜஸ்ர் என்ற இடத்தில் வைத்து முஸ்லிம் படையணியினர் எதிரிகளைச் சந்தித்தனர். போர்க்குணத்துடன் மார்தட்டிக் கொண்டு வெற்றி எங்கள் பக்கமே என்று ஆர்ப்பரித்து வந்தனர் எதிரிகள். போர் துவங்கிய முதல் நாளிலேயே நான்காயிரம் முஸ்லிம் படைவீரர்கள் இறைவழியில் தங்களது உயிர்களைத் தத்தம் செய்திருந்தனர். அப்பொழுது, முஸ்லிம் உம்மத்தின் இரண்டாவது கலீபாவாக ஆட்சித்தலைவராக இருந்த உமர் (ரலி) அவர்களுக்கு இந்தச் செய்தி மிகவும் கவலையை அளித்தது மட்டுமல்லாமல், இனி தான் செல்வதன் மூலம் மட்டுமே எதிரிகளைச் சமாளிக்க முடியும் என்ற முடிவையும் அவர்கள் அப்பொழுது எடுத்து, தானே படைக்குத் தலைமையேற்பதற்காக மதீனாவை விட்டு ஈராக்கிற்கு புறப்படவும் தயாரானார்கள். இன்னும் அலி (ரலி) அவர்களை மதீனாவிற்குத் தற்காலிகத் தலைவராக நியமித்து விட்டு, சிறுபடையினருடன் ஈராக் நோக்கிப் புறப்பட்டும் விட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் ஈராக் நோக்கி பயணமாகிக் கொண்டிருக்கின்றார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் மிகவும் கவலையடைந்தவர்களாக, அவரைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன் உமர் (ரலி) அவர்களை இடைமறிப்பதற்காகப் புறப்பட்டார்கள். மதீனாவின் புறநகர்ப் பகுதியிலேயே உமர் (ரலி) அவர்களைப் பிடித்து விட்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள், கலீபா அவர்களே! இப்பொழுது முஸ்லிம் உம்மத் எப்பொழுதும் இல்லாத அளவு பிரச்னைகளில் உழன்று கொண்டிருக்கின்றது. நிலைமைகளும் மிகவும் மோசமாகப் போய்க் கொண்டிருக்கின்றது. நீங்கள் மதீனாவில் இருந்து நிலைமைகளைச் சமாளிப்பதற்கு அவசியமான இந்த நிலையில் நீங்கள் ஈராக் நோக்கிச் செல்வது சரியான முடிவல்ல. இன்னும் ஈராக்கின் நிலைமையைச் சமாளிப்பதற்கு மிகவும் அனுபவமிக்க, தீரமிக்க எத்தனையோ தளபதிகள் மதீனாவில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். உங்களுக்குப் பதிலாக அவர்களை நாம் அனுப்புவோம் வாருங்கள் என்று மதீனாவிற்கே திருப்பி அழைத்துக் கொண்டு வந்து விடுகின்றார்கள்.

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் இந்த ஆலோசனையை ஏற்றுக் கொண்ட உமர் (ரலி) அவர்கள், அலி (ரலி) மற்றும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஆகியோர்கள் கலந்து கொண்ட அந்த ஆலோசனைக் கூட்டத்தில், நான் போவதை நீங்கள் விரும்பவில்லை எனில், மிகவும் மோசமான நிலையில் ஈராக்கில் உள்ள முஸ்லிம்களின் படைக்குத் தலைமையேற்கக் கூடிய அளவுக்குத் திறமைவாய்ந்த படைத்தளபதி ஒருவரைத் தேர்வு செய்யுங்கள் என்று உத்தரவிடுகின்றார்கள்.

உமர் (ரலி) அவர்களின் இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், நமது படைக்கு மிகவும் தகுதி வாய்ந்த தளபதி ஒருவரை நான் தேர்வு செய்து விட்டேன். அவர் தான் மோசமான இந்த சூழ்நிலையை சமாளிக்கக் கூடிய தகுதி வாய்ந்த நபராகவும் இருப்பார் என்று கூறியவுடன், அவரது பெயரைக் கூறுங்கள், யார் அவர்? என்று உமர் (ரலி) அவர்கள் வினவ, அவர் தான் சிங்கம் போன்ற இதயம் கொண்ட, எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்கக் கூடிய அளவுக்கு திறமையும் கொண்ட நமது மாவீரர் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) என்று கூறி முடித்தவுடன், அவையில் இருந்த அனைவரும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களது தேர்வு மிகச் சரியான தேர்வு என்று, அவரைத் தளபதியாக அனுப்ப சம்மதம் தெரிவித்தனர். இன்னும் அவரைத் தளபதியாக அனுப்புவதில் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தாயாரான ஆமீனா அவர்களின் ஒன்று விட்ட சகோதரரும் ஆவார். ஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களுடன் அமர்ந்திருக்கின்றார்கள், அப்பொழுது சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் அங்கே நுழைந்த பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களைக் குறித்து, இவர் தான் எனது தாய் மாமா, உங்களில் எவராவது இவரை விடச் சிறந்த தாய்மாமா ஒருவரை எனக்கு நீங்கள் காட்டுங்கள் பார்க்கலாம் என்று பெருமைபடக் கூறினார்கள்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அந்த ஆரம்ப நாட்களில் இஸ்லாமிய பயிற்சியை தாருல் அர்கமில் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புப் பெற்ற ஆரம்ப கால முஸ்லிம்களில் ஒருவராகத் திகழ்ந்தார். அவ்வாறு இவருடன் அந்தப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டவர்களில் பெருமை மிகு தோழர்களான அபுபக்கர் (ரலி), உத்மான் பின் அஃப்பான் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), தல்ஹா பின் அப்துல்லா (ரலி), சுபைர் பின் அவ்வாம் (ரலி) ஆகியோர்களும் அடங்குவர். மக்கத்துக் குறைஷிகளின் கொடுமைகள் தாங்கவியலாத அளவுக்கு இருந்த பொழுது, தங்களது தொழுகைகளை – இறைவணக்கத்தை நிறைவேற்ற இவர்கள் மக்காவின் ஒதுக்குப் புறமான பகுதிகளுக்குச் சென்று விடக் கூடியவர்களாக இருந்தார்கள்.

ஒருமுறை இவர்கள் ஒதுக்குப் புறமான இடத்தில் அமர்ந்து, இறைவணக்கத்தில் தங்களது கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த பொழுது, மக்கத்து ரவுடிக் கும்பலொன்று இவர்களது இருப்பிடத்தை அடையாளம் கண்டு கொண்டு, அங்கே சிறியதொரு கலவரத்தை உண்டு பண்ணிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அங்கே கீழே கிடந்த ஒட்டகத்தின் எலும்பை எடுத்து அவர்களை நோக்கி படுவேகமாக வீசியெறிந்தார்கள் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள். இவர்களுக்குத் தொந்திரவு கொடுத்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனின் தலையில் அந்த எலும்பு பட்டு, படுகாயத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாது, இரத்தம் வழிந்தோட ஆரம்பித்தது. ஒரு சிறுவன் அடிபட்டதும் மற்ற அனைவரும் அந்த இடத்தை விட்டு வெருண்டோடி விட்டார்கள். இது தான் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் மிகவும் சாதுர்யமாக தீரமாக இஸ்லாத்தின் எதிரிகளை எதிர்த்து தொடுத்த முதல் தாக்குதலாகும்.

இன்னும் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் மிகச் சிறந்த பல குண நலன்களைக் கொண்டிருந்தார்கள். எனினும் இங்கே அவற்றில் சில குணங்கள் மற்றவர்களிடமிருந்து இவரை தனித்துவமாக்கிக் காட்டியது. இவரது மிகச் சிறந்த நிபுணத்துவத்தை உஹதுப் போரில் வைத்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கண்டு கொண்டார்கள், அதுமட்டுமல்ல அதனை சரியான வகையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆர்வப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், சஅதே..! உமக்கு என் தாயும் தந்தையும் அர்ப்பணமாகட்டும் என்றும் கூறி, சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களை இறைத்தூதர் (ஸல்) ஆசிர்வதித்தார்கள்.

இன்னும் இவரது பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொண்டு, அதற்குப் பதிலும் அளித்தான். இன்னும் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களின் பிரார்த்தனைக்கு இறைவா! நீ பதில் அளிப்பாயாக! என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். அதன் காரணமாக இவரது பிரார்த்னைகள் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக இருந்தது. இன்னும் இறைத்தோழர்கள் யாவரும் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களை மிகவும் கண்ணியத்துடன் மதிப்பிட்டு, மரியாதை அளித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் முழு அரபுலகமும் சஅத் பின் அபீ வக்காஸ்(ரலி) அவர்களின் போர்த்திறனைப் பற்றி அறிந்திருந்தது. எந்த எதிரியையும் இவர் தன்னை மிகைத்து விட அனுமதித்ததில்லை. பிறர் கண்ணுக்கு எளிதில் புலப்படாத இரண்டு ஆயுதங்களை அவர் வைத்திருந்தார், அவை இரண்டையும் எதிரிகளின் கண்கள் பார்த்ததுமில்லை, ஒன்று அவரது அம்பு, மற்றது இறைவனை நோக்கி ஏந்தக் கூடிய அவரது கரங்கள், பிரார்த்தனைகள்.

உஹதுப் போரில் முஸ்லிம்களின் இதயங்களை ஆட்டிப் படைத்து கலங்கடித்த எதிரிகளை நேருக்கு நேராக எதிர்த்துப் போர் புரிந்தவர். உஹதுப் போர் நடந்து கொண்டிருக்கின்றது, சஅதே உமது அம்பை இன்னார் மீது எறியுங்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அப்பொழுது தான் அம்பு தீர்ந்து விட்டதை சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) உணர்கின்றார்கள். இருப்பினும், கட்டளை இட்டது இறைத்தூதர் (ஸல்) அவர்களாயிற்றே! இறைத்தூதரவர்களின் கட்டளைக்கு அடிபணிவது என்பது இஸ்லாத்தின் அடிப்படை அம்சமாயிற்றே! உடனே அங்குமிங்கும் தேடுகின்றார்கள், ஒரு அம்பும் கிடைக்கவில்லை, பின் இறுதியில் ஒரு உடைந்த அம்பு ஒன்று தான் கிடைத்தது. அதனைத் தனது வில்லில் பூட்டி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட அந்த நபரை நோக்கி, அம்பெய்துகின்றார்கள். அந்த அம்;பானது அந்த எதிரியின் முன் நெற்றியில் பட்டு, அந்;த இடத்திலேயே அந்த நபர் தரையில் சாய்ந்து, தனது உயிரை விடுகின்றார். அதுபோல அடுத்த ஒரு வில்லைக் கண்டெடுக்கின்றார்கள். அந்த வில்லை எதிரியின் கழுத்துக்குக் குறி வைக்கின்றார்கள். அந்த வில்லும் சரியான இலக்கைத் தாக்க, தொண்டையில் குத்திய அம்பு அவனது நாக்கை வெளிக் கொண்டு வந்து விட்டது, அந்த எதிரியும் வீழ்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டான்.

ஒரு நபித்தோழர் அறிவிக்கின்றார்..! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள், யா அல்லாஹ்! அவரது குறியை மிகச் சரியாக ஆக்கி வைப்பாயாக! அவரது பிரார்த்தனைகளையும் ஏற்றுக் கொள்வாயாக!

சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களின் பிரார்த்தனைகள் யாவும் நன்கு தீட்டப்பட்ட கூர்மையான வாளைப் போன்றது, இறைவன் அவரது பிரார்த்தனைகளை உடனே ஏற்றுக் கொள்ளவும் செய்தான்.

சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களது மகன் தனது தந்தைகயின் பிரார்த்தனைகளை இறைவன் எவ்வாறு உடன் அங்கீகரித்தான் என்பதற்கு தனது நினைவலைகளில் இருந்து ஒரு சம்பவத்தை நமக்கு எடுத்துக் காட்டுகின்றார். ஒருமுறை ஒரு மனிதன் அலி (ரலி) அவர்கள் பற்றியும் இன்னும் சுபைர் (ரலி), தல்ஹா (ரலி) அவர்கள் பற்றியும் கெட்ட வார்த்தைகளைக் கொண்டு அர்ச்சித்துக் கொண்டிருப்பதை சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் கேட்டு விட்டு, இந்த மாதிரி கெட்ட வார்த்தைகளைக் கொண்டு பேசுவதை நிறுத்துங்கள் என்று கோபத்துடன் கூறினார்கள். ஆனால் அந்த மனிதர் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களின் கோபத்தைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து கொண்டே இருந்தார். மிகவும் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்ட சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள், இனிமேலும் நீங்கள் நிறுத்தவில்லை என்றால், உங்கள் மீது சாபம் இறங்கட்டுமாக என்று நான் பிரார்த்தனை செய்து விடுவேன் என்று கூறினார்கள்.

உடனே அந்த மனிதர், நீங்கள் என்ன அனைத்து வல்லமையும் படைத்தவரா? அல்லது இறைத்தூதரா? நீங்கள் கேட்ட துஆவுக்கு இறைவன் உடனே பதில் அளிப்பதற்கு! என்று கேட்டு விட்டார். அந்த மனிதரது கேடு கெட்ட இந்த வார்த்தைகளைக் கேட்ட சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் அந்த இடத்தை விட்டு அகன்றார்கள். பின் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு (ஒளுச் செய்து கொண்டு) இரண்டு ரக்அத் துக்களைத் தொழுதார்கள். பின் இறைவனிடம் இவ்வாறு முறையிட்டார்கள் :

யா அல்லாஹ்! நீ யாரைப் பொருந்திக் கொண்டாயோ, இன்னும் அவர்களது நற்செயல்கள் குறித்து திருப்தி கொண்டாயோ அத்தகைய நல்ல ஆத்மாக்களைப் பற்றி இந்த மனிதர் குறை கூறிக் கொண்டிருக்கின்றார். நிச்சயமாக இத்தகைய கெட்ட வார்த்தைகளுக்கு அவர்கள் உரித்தவர்களல்ல என்பதை நீ அறிவாய், இந்த மனிதருடைய வார்த்தைகளை நீ நிச்சயமாக ஏற்றுக் கொள்ள மாட்டாய். அவர் வெளிப்படுத்திய இந்த வார்த்தைகளுக்காக பிற மனிதர்களுக்கு இவரை ஒரு படிப்பினையாக ஆக்கி வைப்பாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.

சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் பிரார்த்தனை செய்து விட்டு திரும்பிய சற்று நேரத்திற்குள்ளாக, எங்கிருந்தோ கட்டப்பட்ட கயிறை அறுத்துக் கொண்டு, மதம் பிடித்தது போல ஒரு ஒட்டகம் மனிதர்கள் கூடி நின்று கொண்டிருந்த அந்த இடத்தை நோக்கி வந்தது. அந்த ஒட்டகம் அந்த கூட்டத்தின் நடுவே அலை மோதித் திரிவதைக் கண்ட நாங்கள், அந்த ஒட்டகம் ஏதோ ஒரு குறிப்பிட்ட மனிதரைத் தேடுவது போல இருந்தது. அப்பொழுது, எந்த மனிதரைக் குறித்து சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் இறைவனிடம் முறையிட்டார்களோ அந்த மனிதரின் தலையை இரத்த வெறி கொண்ட அந்த ஒட்டகம் கொத்தாகப் பிடித்து, அங்குமிங்கு பலம் கொண்ட மட்டும் ஆட்டியது. ஒட்டகத்தின் பிடியில் அகப்பட்ட அவனது கழுத்து முறிந்து, அவன் மரணத்தைத் தழுவினான். கூடியிருந்த மக்கள் அனைவரும் கண் மூடி விழிப்பதற்குள் நடந்து விட்ட அந்தக் கோரக் காட்சியைப் பார்த்து பிரமித்து நின்றார்கள்.

இறைவனால் பொருந்திக் கொள்ளப்பட்ட, அந்த நல்லடியார்களைப் பற்றி சற்று முன் வாய்த் துடுக்காகப் பேசிய அந்த மனிதர் இப்பொழுது செத்து மடிந்த நிலையில் தரையில் வீழ்ந்து கிடந்தார். இவ்வாறு பேசத் துடிக்கும் மனிதர்களுக்கு ஒரு பாடமாகவும் அந்த நிகழ்வு இருந்தது.

நிச்சயமாக இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருப்தியையும், இறைவனது திருப்பொருத்தத்தையும் தங்களது அர்ப்பணங்களால் பெற்றுக் கொண்ட அந்த நல்லடியார்களைப் பற்றி இப்பொழுதும் சரி.., எப்பொழுதும் சரி.., குறை கூறிப் பேசித் திரிபவர்களுக்கு இந்தச் சம்பவம் சிறந்ததொரு படிப்பினையாகத் திகழும். நிச்சயமாக இறைத்தோழர்களை நேசிப்பது இறைத் தூதரை நேசிப்பதற்கு முந்தையது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது அன்பு கொள்வது என்பது இறைவன் மீது அன்பு கொள்வதற்கு முந்தையது. இதில் எவரொருவர் இவ்வாறு அன்பு கொள்வதில் மறுதலிக்கின்றாரோ அவர் இஸ்லாமிய மார்கத்தையே புறக்கணித்தவராவார். எவரொருவர் இறைத்தோழர்களையும், இறைத்தூதர்களையும், இறைவனையும் அன்பு கொண்டு, அவர்கள் காட்டிய வாழ்வை மேற்கொள்கின்றாரோ, அத்தகையவர்கள் இம்மையிலும், மறுமையிலும் அளப்பரிய அருட்கொடைகளைப் பெற்றுக் கொள்வார்கள். இல்லை என்றால், அவர்கள் பாவ மன்னிப்புக் கோராத வரையிலும், அவர்களது மறுமை வாழ்வு நஷ்டமடைந்ததாகவே இருக்கும்.

இறைவன் நம் அனைவரையும் இந்த உத்தம ஆத்மாக்களை அதிகமதிகம் நேசிக்கக் கூடிய மக்களாக ஆக்கி அருள்வானாக! இன்னும் நம் அனைவரையும் அந்த உத்தம ஆத்மாக்களோடு மறுமையில் ஒன்றிணைத்து வைப்பானாக! ஆமீன்.

சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் இறைவிசுவாசமிக்க, மிகவும் பரிசுத்தமான வாழ்வை மேற்கொண்டார்கள். அவர் தனது வருமானத்தை இறைவன் அனுமதித்த வகையிலேயே சம்பாதித்துப் பெற்றுக் கொண்டார். அதில் துளி அளவு கூட இறைவனது கோபத்திற்குட்பட்ட சம்பாத்தியத்தை அவர் பெற்றுக் கொண்டதில்லை. இறைவன் அனுமதிக்காத வகையில் மேற்கொள்ளப்படும் வருமானம், இரட்டிப்பாகக் கிடைத்தாலும் சரியே அதனை அவர் பெற்றுக் கொள்ள முயற்சித்ததுமில்லை. இன்னும் மிகவும் வசதிவாய்ந்த செல்வந்தராகவும் இருந்தார். அவர் இறப்பெய்திய பொழுது, மிக அதிக பெருமானமுள்ள சொத்துக்களை விட்டுச் சென்றார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய இறுதி ஹஜ்ஜின் பொழுது, அவர்களுடன் ஹஜ்ஜுக்குச் சென்ற நேரத்தில் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். அப்பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்களே! என்னிடம் அதிகமான சொத்துக்கள் உள்ளன. அதற்கு எனது ஒரே ஒரு மகள் மட்டுமே வாரிசுதாரியாக உள்ளார். எனவே எனது சொத்தில் மூன்றில் இரண்டு பாகங்களை இறைவனுக்காக நான் தானம் செய்ய விரும்புகின்றேன் என்று கூறினார்கள். அப்பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : சஅதே! இது மிகவும் அதிகம், என்று கூறிய பொழுது, அப்படியானால் பாதிக்குப் பாதி கொடுத்து விடுகின்றேன். ஊஹ{ம்! இல்லை. இதுவும் அதிகம் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பின் நான் மூன்றில் ஒரு பகுதியைத் தருகின்றேன் என்று சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் கூறிய பொழுது, அப்படியே செய்யும்..! என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இருப்பினும் மூன்றில் ஒரு பகுதி என்பதும் அதிகமே! இருப்பினும் அவ்வாறே நீங்கள் கொடுங்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறுதியாகக் கூறினார்கள். மேலும், தனது பெற்றோர் இறந்தவுடன் பொருளுக்காக ஒவ்வொருவரையும் அணுகி இரந்து பெற்றுக் கொள்வதைக் காட்டிலும், ஒருவர் தனது வாரிசுகளை பிறரிடம் கையேந்தாத அளவுக்கு, போதுமான அளவு பொருள் வசதியுடன் அவர்களை விட்டுச் செல்வது சிறந்தது என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மறுமொழி பகர்ந்தார்கள். இன்னும் இறைவனது திருப்பொருத்தத்திற்காக வழங்கப்படும் கொடைகளுக்குப் பகரமாக இறைவன் மிகச் சிறந்த அருட்கொடைகளை அவர்களுக்கு வழங்கக் காத்திருக்கின்றான்.

இப்பொழுது சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களது நோய் மேலும் மேலும் முற்றிக் கொண்டிருந்தது. இன்னும் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களது விருப்பம் என்னவெனில், தனது மரணம் தனது விருப்பத்திற்குரிய நகரமாகிய மதீனாவில் வைத்து நிகழ வேண்டும் என்பதாக இருந்தது. அதற்காக அவரது இதயம் துடித்துக் கொண்டிருந்தது. அமைதியற்று இருந்தது. சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களது அமைதியற்ற அந்த நிலையைக் கண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களின் மார்பின் மீது கையை வைத்து, இறைவனிடம் அவரது நோய் நீங்குவதற்காக பிரார்த்தனை செய்தார்கள். என்ன ஆச்சரியம்! கண் கட்டி வித்தை போல முன்னைக் காட்டிலும் அவர் மிகவும் ஆரோக்கியமான மனிதராக மாறி விட்டிருந்தார். அல்லாஹ் இறைத்தூதர் (ஸல்) அவர்களது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு, சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களது நோயைக் குணப்படுத்தினான்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அந்த பிரார்த்தனை சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் பழுத்த பழமாக மாறும் வரைக்கும் நீடித்திருந்தது. அவரது நீண்ட வாழ்வு இஸ்லாத்திற்குப் பல வெற்றிகளைக் குவித்துத் தந்தது. அவரது போர்த்திறமையின் காரணத்தினால், அரபுக்கள் பல இறைநிராகரிப்பாளர்களை வெற்றி கொண்டார்கள்.

அவர் நோய்வாய்ப்பட்டிருந்த பொழுது, அவருக்காக இறைவனிடம் துஆச் செய்து விட்டு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் ஒரு இனத்துக்கு ஆதாயத்தைத் தேடிக் கொடுத்து விட்டு, இன்னுமொரு இனத்துக்கு இழப்பை ஏற்படுத்திக் கொடுக்காத வரைக்கும் அவரை மரணம் தழுவாது என்று கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களது இந்த முன்னறிவிப்பானது மிகச் சரியானதாக இருந்தது. சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் படை நடத்திச் சென்ற பொழுதெல்லாம், அரபுக்கள் வெற்றியைக் குவித்துக் கொண்டிருந்தார்கள், இன்னும் இறைநிராகரிப்பாளர்கள் தோல்வியைத் தழுவி ஓடிக் கொண்டிருந்தார்கள். நோயிலிருந்து குணமான சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள், அதற்குப் பின் பல முறை திருமணம் முடித்தார்கள். அதன் காரணமாக அவருக்கு முப்பத்தி நான்கு மகன்களும், ஒரு மகளும் பிறந்தார்கள்.

எப்பொழுதெல்லாம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்துவார்களோ, அப்பொழுதெல்லாம் இறைவன் மீதுள்ள அச்சம் காரணமாக சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் கதறி அழக் கூடியவர்களாக இருந்தார்கள். அவரது கண்கள் கண்ணீரைச் சுரந்த வண்ணமாகவே இருக்கும்.

ஒரு நாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களுடன் அமர்ந்திருந்தார்கள். அப்பொழுது, இப்பொழுது நம்முடன் சொர்க்கத்து மனிதரொருவர் வந்து இணைந்து கொள்ளப் போகின்றார் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்பொழுது அங்கிருந்த தோழர்கள் அனைவரும் யார் அந்த அதிர்ஷ்டக்காரத் தோழர் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த அந்தத் தோழரை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். அப்பொழுது, சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் அவையில் நுழைந்தவுடன், இவர் தான் அந்த மனிதர் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இவர் தான் அந்த மனிதர், இவரது பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதாக இருக்கின்றது, அவரது நாவு சுத்தமானது, அவரது இதயமும் சுத்தமானது, இன்னும் அவர் மிகச் சிறந்த படைத்தளபதி என்று சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் புகழாரம் சூட்டினார்கள். இத்தகைய சிறப்புகளுக்குரிய சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ர், உஹத் போன்ற போர்களில் கலந்து கொண்டிருந்தார்கள், அதுமட்டுமல்ல இன்னும் எண்ணற்ற போர்களில் கலந்து கொண்டு, இஸ்லாத்தில் தனக்கிருந்த தீர்க்கமான உறுதியை வெளிப்படுத்திக் காட்டினார்கள். சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களது இத்தகைய வீரமிக்க வரலாற்றுப் பக்கங்கள், இன்றளவும் இஸ்லாமிய வரலாற்றை நிறைத்துக் கொண்டிருக்கின்றன. நமக்கெல்லாம் மிகச் சிறந்த படிப்பினையாகவும் இருந்து கொண்டிருக்கின்றன.

தாயின் பாச வலை

சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களின் இறைநம்பிக்கை மற்றும் உறுதி மற்றும் அதில் உண்மையாகவும் இருந்ததின் காரணமாக உமர் (ரலி) அவர்கள் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் மீது பெருமதிப்பு வைத்திருந்தார்கள். சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் இஸ்லாத்தினை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட பொழுது அவர் இளமை ததும்பும் வாலிபப் பருவம் கொண்ட இளைஞர். இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் காரணமாக இவரது தாயார் மிகவும் கவலையடைந்தார். நம்முடைய முன்னோர்களின் மார்க்கத்தை விட்டு விட்டு தன் மகன் சென்று விட்டானே என்று அங்கலாய்க்க ஆரம்பித்தார், அழுது புலம்பினார், தன்னுடைய மகனை எப்பாடுபட்டாவது தன்னுடைய பழைய மார்க்கத்திற்குக் கொண்டு வந்து விட வேண்டும் என்று துடிதுடியாய்த் துடித்தார். அதற்காக வழக்கமாக தாய்மார்கள் கடைபிடிக்கும் அனைத்து வித முயற்சிகளையும் செய்து பார்த்தார். ஆனால் எதிலும் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் இணங்கிப் போகவில்லை. இஸ்லாத்தில் உறுதியாக நிலைத்திருந்தார்கள். இறுதியாக, சஅதே..! நீ மீண்டும் நமது முன்னோர்களின் பழைய மார்க்கத்திற்கு வரவில்லை என்று சொன்னால், நான் சாகும் வரை உண்ண மாட்டேன், பருக மாட்டேன்..! என்னுடைய உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று சபதமிட்டார். இறுதியாக..! என்னுடைய மகனை ஒரு முஸ்லிமாகப் பார்த்துக் கொண்டு உயிர் வாழ்வதைக் காட்டிலும் செத்து மடிவதே மேல் என்றார்.

தாயினுடைய இந்த தந்திரங்களுக்கெல்லாம், சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் மசிந்து இடங்கொடுத்து, விட்டுக் கொடுத்துப் போகவில்லை, உணர்ச்சிகளுக்கு அடிமையாகவில்லை. அவரது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருந்த அந்த இஸ்லாமிய வேர், இறைநம்பிக்கை என்னும் மரமாக வளர்ந்திருந்ததன் காரணமாக, எத்தகைய புயல் காற்றும் கூட.., அவரது பாதத்தின் உறுதியைப் பெயர்த்து, அந்த மரத்தை அசைக்கக் கூட யோசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இப்பொழுது சாகும் வரை உண்ண, பருக மாட்டேன் என்ற சபதமெடுத்த சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களது தாயார் பசிக் கொடுமையின் காரணமாக மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டிருந்தார். தனது தயாரைப் பார்த்து, தனது இறைநம்பிக்கையின் உறுதியை இவ்வாறு வெளிப்படுத்திக் காட்டினார்..,

என்னுடைய தாயாரே! உங்களுக்கு ஒரு நூறு உயிர்கள் வழங்கப்பட்டு ஒவ்வொரு உயிராக உங்களிடம் பறிக்கப்பட்டுப் போய்க் கொண்டிருந்தாலும், நான் என்னுடைய இறைநம்பிக்கையிலிருந்து, நான் கொண்டிருக்கும் ஈமானின் வேகத்தில் ஒன்றையேனும் நான் இழக்கத் தயாராக இல்லை, நான் எனது இறை மார்க்கத்தை விட்டு விட்டு, உங்களது உயிரைப் பாதுகாக்க நான் முன்வரப் போவதில்லை, எனவே இந்த உங்களது தந்திரங்கள் எல்லாம் என்னிடம் பலிக்காது தாயார் அவர்களே! நீங்கள் உண்ணுவதும் அல்லது உண்ணாமல் இருப்பதும், இன்னும் பருகுவதும் பருகாமல் இருப்பதும் உங்களது விருப்பம். நான் என்னுடைய இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை விட்டும் நான் வர மாட்டேன் என்று கூறி விட்டார்.

நம்முடைய தந்திரங்கள் எதுவும் பலனிளிக்கப் போவதில்லை என்பதை உணர்ந்து கொண்ட அந்தத் தாய், தன்னுடைய உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டார். அவரது இந்தத் துணிவும் உறுதியும் இன்றைக்கும் நமக்கொரு சிறந்த பாடமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. இதனைப் பற்றி இறைவன் தனது திருமறையில் இவ்வாறு கூறுகின்றான் :

ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால், அப்போது நீ அவ்விருவருக்கும் வழிப்பட வேண்டாம். ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள் (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக – பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும். நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்.”” (31:15)

கதீஸிய்யாப் போர்

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் இந்த கதீஸிய்யாப் போர் நடைபெற்றது. இந்தப் போருக்கு தலைமைத் தளபதியாக சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களை உமர் (ரலி) அவர்கள் நியமித்தார்கள். தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை நிறைவாக நிறைவேற்ற விரும்பிய சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள், உயிர் தியாகத்தில் வேட்கை மிக்க, ஒரு பக்கம் வீரத்தையும், இன்னொரு பக்கம் இறைநம்பிக்கையில் உறுதியும் மிக்க முப்பதாயிரம் படையினரைத் தயார்படுத்தினார்கள். அவர்கள் தங்களது கையிலே ஆயுதத்தையும், இதயத்தில் இறைநம்பிக்கை உறுதியையும் எடுத்துக் கொண்டவர்களாக மதீனாவை விட்டு கதீஸிய்யாவை நோக்கி, தங்களது எதிரிகளை சந்திக்கப் புறப்பட்டார்கள். இப்பொழுது கதீஸிய்யாவில் எதிரிகளுடன் இஸ்லாமியப் படை மோதிக் கொண்டிருக்கின்றது. அப்பொழுது சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடமிருந்து வந்த தபாலைப் பெற்றுக் கொள்கின்றார்கள். அதில் உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களுக்கு அறிவுரை வழங்கி இருந்தார்கள் : சஅதே..!

நீங்கள் இப்பொழுது போராடிக் கொண்டிருக்கும் பூமியான கதீஸிய்யா ஒரு வரலாற்றுப் புகழ் பெற்ற பிரதேசமாகும். இந்தப் போரில் நீங்கள் வெற்றி பெற்றீர்களானால் முழு ஈரானியப் பிரதேசமும் உங்களது கையில் கிடைக்கும். ஈரானின் நுழைவாயில் தான் கதீஸிய்யா. நீங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள், எனவே உங்களிடம் அடக்கி ஆளும் குணம் இருக்கக் கூடாது. இறைவனது அடிமைகளாகிய ஒருவரது இறைநம்பிக்கை மற்றும் அதில் உறுதி ஆகியவற்றில் மக்களுக்கிடையே உள்ள மதிப்பை நீங்கள் கௌரவிக்குமுகமாக நடந்து கொள்ள வேண்டும். தனது அடியார்களுக்கு உதவி செய்யவும், இன்னும் அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கவும் அல்லாஹ் ஒருவனே போதுமானவனாக இருக்கின்றான். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எந்தப் பணியை நம்மிடம் விட்டுச் சென்றார்களோ, அந்தப் பணியின் மீதே நமது கவனம் இருக்கட்டும், என்று அந்த தபாலில் உமர் (ரலி) அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.

இன்னும் அந்த மடலின் இறுதியில், உங்களது போர் நடவடிக்கையின் அனைத்து முன்னேற்றங்கள் பற்றியும் எனக்கு உடனுக்குடன் தகவல் தெரிவித்துக் கொண்டே இருங்கள் என்றும் கட்டளையிட்டிருந்தார்கள். அதாவது, போர்க்களத்தில் எவ்வாறு இறங்கினார்கள்? அவர்களது தங்குமிடம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது? எதிரிகளுக்கும் இவர்களுக்கும் என்ன தூரம்? சுருங்கச் சொன்னால், ஒவ்வொரு நிமிட நடவடிக்கையும் எவ்வாறு இருந்து கொண்டிருக்கின்றது, என்பதைப் பற்றிய படப்பிடிப்பைக் காண உமர் (ரலி) அவர்கள் விரும்பினார்கள்.

கலீஃபா உமர் (ரலி) அவர்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டவர்களாக, தனது ஒவ்வொரு நடவடிக்கையைப் பற்றியும், அதன் விரிவான தகவல்களையும் தலைநகருக்கு உடனுக்குடன் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். இன்னும் ஒவ்வொரு தனிப்பட்ட வீரர்களுக்கும் இன்னும் ஒவ்வொரு குழுவுக்கு தான் என்னனென்ன பணிகளை கொடுத்திருக்கின்றேன் என்பதனைக் கூட சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் குறிப்பிட்டு, தகவல்களை அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

ஈரானியப் படைகளும் குறைத்து மதிப்பிடும்படி இல்லை, அவர்களும் தங்களது முழுப்பலத்தையும் திரட்டிக் கொண்டு வந்திருந்தார்கள். இன்னும் இதுமாதிரியானதொரு படையை அவர்கள் இதற்கு முன் கண்டதுமில்லை. இரு படைகளும் முழு வலிமையுடன் தங்கள் தங்கள் வீரப் பெருமைகளை அசை போட்டுக் கொண்டு, படைக்களத்தில் மோதிக் கொண்டன. ஈரானின் மிகப் புகழ் வாய்ந்த படைத்தளபதி ஜெனரல் ருஷ்தும் என்பவரது தலைமையில் ஈரானியப் படைகள் போர்க்களத்திற்கு வந்திருந்தன.

இப்பொழுது போர் நிலைமைகளைப் பற்றி உமர் (ரலி) அவர்களுக்கு சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் தகவல் அனுப்பும் பொழுது, ஈரானிப் படைகளுக்கு தளபதியாக ருஷ்தும் என்பவர் வந்துள்ளார், இன்னும் அவர்களது படை முழு ஆயுதத் தயாரிப்புகளுடனும் இன்னும் அவர்களுடன் மிகப் பெரிய யானைப் படையும் வந்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார். இன்னும் அவர்களுடன் மிகப் பெரிய படையணியும் வந்துள்ளது. சுருங்கச் சொன்னால், இந்தப் போர் மிகவும் கடுமையாக இருக்குமென்றே தெரிகின்றது என்று குறிப்பிட்டு எழுதி இருந்தார். இந்த நிலையில், நாம் எவ்வாறு நமது படையை முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்தும், இன்னும் அது பற்றிய உங்களது கருத்தை அறிய நான் ஆவலுடன் இருக்கின்றேன் என்றும் எழுதினார்கள்.

ஈரானியப் படைகள் போர்க்களத்திற்குள் நுழையும் பொழுது அச்சம் கொள்ள வேண்டாம் என்று எழுதிய உமர் (ரலி) அவர்கள் மேலும் தனது பதிலில், அகில உலகத்தின் அனைத்து சக்திகளும் நம்மைப் படைத்தவனாகிய வல்ல அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தானது என்பதை எக்கணமும் மறந்து விடாதீர்கள். அனைத்துத் தருணங்களிலும் இறைவனைப் புகழ்ந்து போற்றி, அவனிடம் உங்களது பிரார்த்தனைகளைக் கோரிய வண்ணமிருங்கள், அவனது உதவியை கேட்டுப் பெற்ற வண்ணம் இருங்கள். இரண்டாவதாக, மிகவும் திறமை மிக்க, புத்திக் கூர்மையுள்ள, அனுபவமிக்க இஸ்லாமியப் படைவீரர்களைத் தேர்ந்தெடுத்து, நமது ராஜதந்திரிகளாக ஈரானிய மன்னரிடம் அனுப்பி வையுங்கள். அவர்கள் ஈரானிய மன்னரிடம் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லட்டும், பின்னர் இரண்டு படைகளுக்கும் இடையே ஒப்பந்தங்கள் செய்து கொள்வதற்கு அழைக்கட்டும். இன்னும், அந்த ராஜதந்திர நடவடிக்கையின் பொழுது, ராஜதந்திரிகளை ஈரானிய மன்னர் எவ்வாறு எதிர்கொண்டழைத்தார் என்பதைப் பற்றித் தனக்கு விரிவாகக் கடிதம் எழுதுமாறும் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களுக்கு உமர் (ரலி) அவர்கள் பணிப்புரை வழங்கி இருந்தார்கள். இன்னும் ஒவ்வொரு நிமிட நடவடிக்கையைப் பற்றியும் தனக்கு தகவல் தராமல் இருந்து விட வேண்டாம் என்றும் அவர்களுக்கு இறுதியாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுக் கூறியிருந்தார்கள்.

இறுதியாக வல்ல அல்லாஹ் தான் நமது உதவியாளன், அவனே நம்மைப் பாதுகாக்கப் போதுமானவன் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

போருக்கு மத்தியிலும் அழைப்புப் பணி

உமர் (ரலி) அவர்களின் உத்தரவைப் பெற்றுக் கொண்ட சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள், படையணியில் இருந்த மிகச் சிறந்த, அறிவுள்ள, திறமையுள்ள, ராஜதந்திரமிக்க நபர்களைப் பொறுக்கி எடுத்து, ஈரானிய மன்னரின் அவைக்கு அனுப்பி வைத்தார். உலக வளங்களை தங்களது மேனியில் பூட்டி அழகு பார்த்துக் கொண்டிருந்த ஈரானிய அவையினருக்கு மத்தியில் இந்த உலக வாழ்வை மறுமை வாழ்விற்காக விற்று விட்ட அந்த கூட்டத்தினர், மிகவும் எளிமையான உடைகளுடன் சென்று ஈரானிய மன்னரது அவையில் நுழைந்தனர்.

இஸ்லாமிய ராஜதந்திரிகளின் ஆடம்பரமில்லாத எளிமையான அந்த தோற்றத்தை கண்ட ஈரானிய மன்னரது அவை சற்று நடுங்கித் தான் போனது. முஸ்லிம் ராஜதந்திரிகளின் தலைவராகச் சென்றவர் இப்பொழுது ஈரானிய அவையில் இவ்வாறு உரையாற்றினார்,

மன்னரே!! நம் அனைவரையும் படைத்த வல்ல அல்லாஹ் தான் எங்களைத் தேர்வு செய்து இங்கு அனுப்பி வைத்துள்ளான், எனவே தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த மக்களின் பணி என்னவென்றால், கேடு கெட்ட சிலை வணக்கக் கலாச்சாரத்திலிருந்து மக்களை மீட்டெத்து உண்மையான நேர்வழியின் பால், படைத்த வல்ல அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்கக் கூடிய மக்களாக அவர்களை வழி நடத்துவது ஒன்றே எங்களுக்கு இடப்பட்ட பணியாகும். இன்னும் வல்ல அல்லாஹ் அந்த மக்களை இருளிலிருந்து வெளிச்சத்தின் பாலும், அறியாமையிலிருந்து ஞான வெளிச்சத்தின் பக்கமும் வழி காட்டுமாறு பணித்துள்ளான். தனியொரு மனிதனை அவன் மீது சுமத்தப்பட்டுள்ள அடிமைத் தளையிலிருந்து அவனை விடுவித்து, அநியாயக்கார ஆட்சியாளர்களின் அடக்குமுறையிலிருந்து அவனை பூரண சுதந்திர சுவாசக் காற்றை சுவாசிக்கும் இஸ்லாமிய பூங்காவுக்குள் நுழைவித்து, இறைவனது அருள் பெற்ற நன்மக்களாக மாற்றுவதொன்றே எம் மீது சுமத்தப்பட்ட பணியாகும்.

யார் இந்த அழைப்பை ஏற்றுக் கொள்கின்றார்களோ அவர்கள் வரவேற்கப்படுவார்கள், இன்னும் யார் இதனை நிராகரிக்கின்றார்களோ அவர்கள் மீது போர் தொடுக்கப்படும். அவர்களது பூமிகள் வெற்றி கொள்ளப்பட்டு எமது பூமிகளாக, இஸ்லாமிய ஆட்சிப் பிரதேசமாக மாற்றப்படும். இறைவனது அழைப்பை ஏற்றுக் கொண்டவர்களது பூமிகள் அவர்களுக்கே உரிமை வழங்கப்பட்டு, அதன் ஆட்சி அதிகாரம் அனைத்தும் அவர்களுடையதாகவே இருக்கும். இந்த அழைப்பை யார் உதாசினம் செய்தார்களோ, அவர்கள் மீது போர் தொடுக்கப்படும், இன்னும் அவர்களது பூமிகள் முற்றிலும் அல்லாஹ்வின் ஆட்சிப் பிரதேசமாக மாறும் வரைக்கும் அந்தப் போர் இடைவிடாது தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இப்பொழுது ஈரானிய மன்னர் ஆச்சரியம் கலந்த தொணியில்,

உங்களது அழைப்பை ஏற்றுக் கொண்டவர்களுக்கு, உங்களது இறைவனின் என்ன வாக்குறுதியை வழங்கி இருக்கின்றான் ?

மரணித்திற்குப் பின் உள்ள வாழ்க்கையில் சுவனம் கிடைக்கும், அவர்கள் அங்கு மிகவும் கண்ணியமான வாழ்க்கையை வாழ்வார்கள். இன்னும் இந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லையெனில், வெகு சீக்கிரமே இந்தப் பூமிப் பிரதேசங்கள் எங்களுக்குச் சொந்தமானவையாக மாறும், மன்னர் மணிமுடியைத் துறக்க நேரிடும், இன்றைய உமது அதிகாரங்கள் மற்றும் ஆட்சிப் பிரதேசம் யாவும் முந்தைய வரலாறாக மாறித் தான் போய் விடும் என்று உறுதியாக எச்சரிக்கையான குரலில் பதில் கூறினார்கள்.

முஸ்லிம் ராஜதந்திரிகளின் ஒவ்வொரு வார்த்தையும் கவனமாகப் பொறுக்கி எடுக்கப்பட்ட விஷம் தோய்ந்த அம்புகள் பாய்வது போல ஈரானின் மன்னரின் மார்பில் பாய்ந்தது. பொறுமையையும் கட்டுப்பாட்டை இழந்த அந்த ஈரானிய மன்னன் அதிர்ந்த குரலில் எதிரே உள்ளவனை அழைத்தான். அந்த மனிதன் மன்னரே உங்களது கட்டளை என்ன என்பதைக் கூறுங்கள் என்பது போல் வந்து நின்றான்.

வெளியே சென்று சிறிது மணலை அள்ளி வா என்று ஆணையிட்டான் ஈரானிய மன்னன். சென்ற அவன் சிறிது நேரத்தில் ஒரு கூடை நிறைய மண்ணுடன் வந்து மன்னனின் முன் நின்றான். எதிரே நின்று கொண்ட முஸ்லிம் ராஜதந்திரிகளில் ஒருவரான ஆஸிம் பின் உமர் (ரலி) அவர்களுக்கு முன் அந்த மண் கூடையை மன்னன் எறிந்தான். அதனை தன்னுடன் எடுத்துக் கொண்ட ஆஸிம் பின் உமர் (ரலி) அவர்கள், அதனை சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களிடம் எடுத்துச் சென்றார்.

வாழ்த்துக்கள்! ஈரானிய மன்னர் தானே முன் வந்து தனது மண்ணை நமக்குத் தாரை வார்த்து விட்டார்! என்று அந்த மண்ணைப் பார்த்து சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் உற்சாகம் மிகுந்த குரலில் கூறினார்கள்.

ஈரானின் மன்னரது அவையில் நடந்த அனைத்தையும் வரி விடாமல் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களிடம் அந்தக் குழு ஒப்படைத்த விட்டு, போர் என்ற பதிலைத் தவிர வேறு எதனாலும் அவருக்கு பாடம் புகட்ட இயலாது என்பதையும் தெரிவித்தனர். நமக்கிடையே உள்ள விவகாரத்தை போர் ஒன்றின் மூலமாக மட்டுமே தீர்த்துக் கொள்ள இயலும் என்பதை அவருக்குச் சொல்லி விட்டுத் தான் வந்தோம் என்றது அந்தக் குழு.

தனது தோழர்கள் ஈரான் மன்னர் முன்பாகத் தெரிவித்து விட்டு வந்த தீரமான, தீர்க்கமான பதிலைக் கேட்ட, சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களது கண்கள் குளமாகின. இந்தப் போர் இன்னும் சில நாட்களில், அதனை விடச் சீக்கிரமாகவே ஆரம்பிக்கப்பட்டு விடும் என்றார் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி).

ஆனால் முஸ்லிம்கள் போர் தான் இறுதி முடிவு என்று உறுதியாகத் தீர்மானித்து விட்ட பின்னர் ஏற்பட்ட சூழ்நிலைகளில், சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் கடுமையான நோய்க்கு ஆளாகி விட்டார்கள். இதனால் அவர்களால் முன்னெப்பொழுதும் போல் செயல்பட இயலவில்லை. அம்மை நோய் அவர்களைப் பீடித்திருந்தது. அதன் காரணமாக அவர்களால் எழுந்து நடக்கக் கூட திராணியற்றவர்களாகவும், உட்கார இயலாதவர்களாகவும் இருந்து கொண்டிருக்கின்ற நிலையில், எவ்வாறு குதிரை மீது ஏறி போர் செய்ய முடியும் என்ற நிலையில் இருந்தார். இந்த பாரதூரமான நிலையில் தான் என்ன செய்வதென்றே புரியாத நிலையில் இருந்து கொண்டிருந்தார் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள்.

அப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதொரு அறிவுரை ஒன்று சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களின் மூலையில் தைத்தது. ஆம்! முஸ்லிம்கள் எப்பொழுதும், நான் நினைத்திருந்தால் அல்லது முடிந்தால் என்பன போன்ற வார்த்தைகளை உபயோகிக்கக் கூடாது என்று கூறியிருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இந்த அறிவுரை தனது நினைவுக்கு வந்த மாத்திரமே, விரைந்து எழுந்து நின்று தனது தோழர்களுக்கிடையே ஒரு சிறப்புரை ஒன்றை ஆற்றினார்கள், அப்பொழுது கீழ்க்கண்ட வசனத்தைத் தனது தோழர்களுக்கு ஓதிக் காட்டினார்கள்.

நிச்சயமாக நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்; ”நிச்சயமாக பூமியை (ஸாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம். வணங்கும் மக்களுக்கு இதில் (இக்குர்ஆனில்) நிச்சயமாகப் போதுமான (வழிகாட்டுதல்) இருக்கிறது. (21:105-106)

இந்த உரையை முடித்துக் கொண்ட பின்பு, தனது படை வீரர்களுக்கு மதிய நேரத்து லுஹர் தொழுகையை முன்னின்று நடத்தினார்கள். தொழுகை முடிந்தவுடன் படை வீரர்கள் தத்தமது போர்க்கவசங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை தயார்நிலைப்படுத்தி, தங்களையும் போருக்கு ஆயத்தப்படுத்திக் கொண்டார்கள். அங்கே மிகச் சிறந்த கவிஞர்கள், பாடகர்கள் போன்றவர்கள் போர் வீரர்களை உற்சாகப்படுத்தும் ஓரிறைச் சிந்தனை மற்றும் மறுமைச் சிந்தனையைக் கொண்ட கவிதைகளைப் பாட ஆரம்பித்தார்கள்.

அப்பொழுது அங்கே பாடப்பட்ட மிகச்சிறந்த கவிதைகளில் சிறப்புக்குரியதாக ஹத்தீல் அஸதீ (ரலி) என்பவர் பாடிய பாடல் மிகச் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது.

ஓ! மிகப் பெரும் தளபதி சஅத் பின் அபீ வக்காஸ் – ன் தோழர்களே!

உங்களது வாட்களை கோட்டை அரண்களாக ஆக்கிக் கொள்ளுங்கள்!

எதிரிகளை எதிர்க்கும் பொழுது சிங்கமாக நிலைகுலையாது நில்லுங்கள்!!

உங்களது வாட்கள் பயனற்றுப் போனால் விற்களைப் பயன்படுத்துங்கள்

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!

அம்புகள் தனது இலக்கை நோக்கிச் சரியாகச் செல்லும் என்றால்

வாட்களால் எந்தப் பயனுமில்லை.

இப்பொழுது முஸ்லிம் படைவீரர்களிடையே மரண சிந்தனை மேலோங்கியது, எங்கும் உற்சாகம் கரைபுரண்டோடியது. ஒவ்வொரு போர் வீரரும் தான் ஷஹீத் என்னும் உயர் பதவியை அடைந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கையுடன் போருக்குத் தயாராக நின்றார்கள். அவர்களது அந்த உணர்வுகளை மேலும் கூர்மையாக்கிக் கொண்டிருந்தார்கள், மிகப் பெரும் காரிகள். ஆம்! அவர்கள் திருக்குர்ஆனிலிருந்து சூரா அன்ஃபால் மற்றும் சூரா அத்தவ்பா ஆகிய அத்தியாயங்களிலிருந்து இறைவழிப் போரை ஊக்கப்படுத்தக் கூடிய வசனங்களை போர் வீரர்களுக்கு முன் ஓதிக் காட்டி, இன்னும் அவர்களது உணர்வுகளை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் தமது தோழர்களது உற்சாகத்தை உயிர்ப்பிக்க வேண்டுமென்றால், அல்லாஹ{ அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன் என்ற கோஷத்தை மட்டுமே எழுப்ப வேண்டியிருந்தது. அந்தக் கோஷம் கேட்டவுடன் எதிரிகளின் மீது பாய்வதற்கு வீரர்கள் தயாராகவே இருந்தார்கள்.

அன்றைய கால வழக்கப்படி, முழுமையாகப் போர் துவங்குவதற்கு முன் – அதாவது முழு படைவீரர்களும் போரில் ஈடுபடுவதற்கு முன், இரு புறமும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வீரரை அழைத்து போர் செய்ய வைப்பதென்பது வழக்கமாக இருந்தது. அந்த அடிப்படையில் போர் ஆரம்பமாகியது.

இப்பொழுது ஈரானின் புறத்திலிருந்து பட்டுத் துணியால் தன்னை அலங்கரித்துக் கொண்டு, போர்க்கவசங்களை அணிந்து கொண்டிருந்த மிகச் சிறந்த படை வீரனை முன்னிறுத்தப்பட்டது. அவனை எதிர்கொள்வதற்கு முஸ்லிம்கள் தரப்பிலிருந்து அம்ர் பின் மஅதி கர்ப் (ரலி) அவர்கள் முன் வந்தார்கள். ஈரானியப் போர் வீரன் மிகவும் கவனமாக தனது முயற்சிகளை மேற்கொண்டு, அம்ர் (ரலி) அவர்களை வீழ்த்துவதற்குத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தான், அம்ர் (ரலி) அவர்களை நோக்கி ஒரு அம்பையும் எடுத்து எய்தான், அம்ர் (ரலி) அவர்கள் தன்னை நோக்கி வந்த அம்பை கவனமாகத் தடுத்து, தனது குதிரையின் மீதேறி எதிரியை நோக்கி மிக விரைவாகவும், அதிக வேகத்துடனும், உறுதியாகவும் செலுத்தி, தனது அத்தனை பலத்தையும் திரட்டி தனது வாளைக் கொண்டு எதிரியின் கழுத்தில் ஒரு வெட்டு வெட்டினார்கள். எதிரியின் தலை அவனது முண்டத்திலிருந்து தனித்துத் தெறித்து, தரையில் விழுந்தது. அதன் பின் ஒவ்வொரு வீரராக அழைக்கப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்திக் காட்டினார்கள்.

இறுதியாக, முழுப் படையும் போர்க்களத்தில் சந்திக்க ஆரம்பதித்தது. ஈரானியர்கள் தங்களது யானைப்படையை முன் கொண்டு வந்தார்கள். யானையை முன்னெப்பொழுதும் பார்த்திராத அரேபியக் குதிரைகள் இப்பொழுது மிரள ஆரம்பித்தன. ஒரு உயரமான பரணிலிருந்து முஸ்லிம் படைகள் சந்தித்துக் கொண்டிருந்த இந்த திடீர்த் தாக்குதலை மிகவும் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள். இதே நிலைமை நீடித்தால் முஸ்லிம்களின் தரப்பு மிகவும் இக்கட்டுக்குள்ளாகி விடும் என்பதையும் உணர்ந்தார்கள். பனீ அசத் குலத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரை அழைத்து, உமது போர்த்திறமைகளை வெளிப்படுத்துவீராக என்று குரல் கொடுத்தார்கள். பனீ அசத் – ன் மிகப் பெரும் தலைவரான அவர் தனது மக்களை உற்சாகப்படுத்தும் விதமாக பெருங்குரலெடுத்துக் கூறினார் :

பனீ அசதின் இளம் வீரர்களே முன்னேறுங்கள், சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் உங்களது வீரத்தின் மீது நம்பிக்கை வைத்து உங்களைக் குறித்துப் போற்றுகின்றார்கள். இன்றைய தினம் உங்களது போர்த்திறமைகளையும், வீரத்தையும் வெளிப்படுத்தக் கூடிய சோதனைக் களம். எதிரியை நிலைகுலையச் செய்து இஸ்லாத்தின் புகழை ஓங்கச் செய்வதற்காக உங்களது உயிர்களை அர்ப்பணிக்க விரையுங்கள். முன்னேறிச் செல்லுங்கள், மலை போல் உங்கள் முன் நிற்கின்ற அந்த யானைப் படைகளோடு மோதுங்கள். நீங்கள் கொடுக்கக் கூடிய ஒரு அடியும் இடி போல் இறங்கினால், பெருமலையும் பொடிக் கற்களாகும் என்பதை அவர்கள் அப்பொழுது உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற வீரமிக்க உரையை நிகழ்த்தினார்கள்.

இந்த வீர உரையைக் கேட்ட பனீ அசத் வாலிபர்கள் முன்னேறிச் சென்று, யானைப் படையை தங்களது வாட்களால் பதம் பார்க்க ஆரம்பித்தார்கள். முடிவில்லாத உன்னதமான வாழ்க்கைக்காக தங்களது அற்ப கால இந்த வாழ்க்கையை இழக்கத் துணிந்த அந்த கூட்டத்தின் முன்பாக மிகப் பெரிய அந்த யானைப்படை கூட தாக்குப் பிடிக்க முடியாமல் திணறியது. முதலில் அவர்கள் யானையை ஓட்டி வந்த ஈரானிய வீரர்களைக் குறி பார்த்து தங்களது அம்புகளைத் தொடுத்தார்கள். அம்பு பட்டவுடன் காய்ந்த சறுகுகள் உதிர்வது போல் யானையிலிருந்து அவர்கள் உதிர்ந்தார்கள். இப்பொழுது சில முஸ்லிம் வீரர்கள் யானையின் துதிக்கையை வெட்ட ஆரம்பித்தார்கள். துதிக்கையை இழந்த யானைகள் இப்பொழுது பயம் கொண்டு பிளிற ஆரம்பித்தன, பயம் கொண்டு மிரண்டு போன அந்த யானைகள் பாய்ந்த பாய்ச்சலில் தனது படைகளையே தனது கால்களுக்குக் கீழே இரையாக்கிக் கொண்டு, ஈரானியப் படைக்களத்தை நாசமாக்கிக் கொண்டு பின்னோக்கிச் செல்ல ஆரம்பித்தது. இதில் சில முஸ்லிம் வீரர்கள் கூட தங்களது இன்னுயிரை இழந்தார்கள். இந்த யானைப் படையை செயலிழக்கச் செய்ததன் காரணமாக, முதல் நாள் போர் முஸ்லிம்களுக்கு வெற்றியைத் தந்ததுடன் முடிவடைந்தது.

மறுநாள் காலை பொழுது புலர்ந்தவுடன், இறந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்து விட்டு, காயம்பட்டவர்களுக்கு சிகிச்சைகளை முடித்து விட்டு, முஸ்லிம் வீரர்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட படையணிகளில் இணைந்து, அடுத்த நாள் போருக்குத் தயாரானார்கள். இருபடைகளும் மோதுவதற்கு சற்று முன்பதாக அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் (ரலி) அவர்களால் அனுப்பப்பட்ட இன்னொமொரு படைப்பிரிவு ஹிஸாம் பின் உத்பா (ரலி) அவர்களது தலைமையில் வந்திணைந்து கொண்டது. இப்பொழுது முன்னணியில் இருக்கக் கூடிய படைப்பிரிவுக்கு காகா பின் அம்ர் (ரலி) அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார்கள். போர் ஆரம்பிப்பதற்கு முன்பதாக தனிப்பட்ட வீரர்கள் மோதும் களம் ஆரம்பமானது. இதில் மிகவும் பிரிசித்தி பெற்ற போர்த் திறன் படைத்த முஸ்லிம் முன்னணி வீரர்கள் களம் இறங்கினார்கள். முதல் மோதலில் காகா பின் அம்ர் (ரலி) அவர்கள் ஈரானிய கமாண்டர் பீமன் என்பவனை எதிர்த்து நின்றார்கள். அவனது தலையை காகா பின் அம்ர் (ரலி) அவர்கள் துண்டித்தார்கள். அடுத்து ஈரானின் மிகப் பெரும் வீரனாகத் திகழ்ந்த அஃவன் பின் கத்பா என்பவனும் இந்தப் போரில் கொல்லப்பட்டான்.

ஈரானின் மிகப் பெரும் போர் வீரர்களாகத் திகழ்ந்த அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்கள். போர் இப்பொழுது உக்கிரமாகத் தொடங்கியது, போர் துவங்கியது முதல் இரு படைவீரர்களும் வெற்றியை இலக்காக வைத்து கடுமையான மோதலில் இறங்கினார்கள். முஸ்லிம் படைகளில் உள்ள ஒட்டகங்கள் அனைத்தையும் சேர்த்து கயிறுகளால் பிணைத்து, ஒரு ஒட்டகத்திற்கும் இன்னொரு ஒட்டகத்திற்கும் இடைப்பட்ட கயிறை இறுக்கமில்லாமல் மிகவும் தளர்வான நிலையில் தொங்க விடும்படி காகா பின் அம்ர் அவர்கள் தனது படை வீரர்களுக்கு உத்தரவிட்டார்கள். காகா பின் அம்ர் (ரலி) அவர்களின் இந்த போர் உத்தி மிகவும் வேகமாக வேலை செய்தது. எதிரிகளின் படை நடுவே ஓட்டி விடப்பட்ட இந்த கயிறு பிணைக்கப்பட்ட ஒட்டகங்களின் கயிறுகளில் சிக்கி, ஈரானியக் குதிரைகள் தடுக்கி தரையில் விழுந்தன. இதன் காரணமாக ஈரானியப் போர் வீரர்கள் தங்களது குதிரைகளைக் கட்டுப்படுத்த இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டனர், மிகவும் சிரமமப்பட்டனர். குதிரைகள் சரியாக ஒத்துழைக்காததால், தடுக்கியும் விழுந்ததால் போர்க்களம் இப்பொழுது ரணகளம் ஆனது, ஆம்! எங்கும் மரணக் கூச்சல் எதிரிகளின் தரப்பிலிருந்து கேட்க ஆரம்பித்தது.

போர் இப்பொழுது கடுமையாக இருந்தது. இப்பொழுது அபூ மஹ்ஜன் என்ற மிகப் பெரும் பாடகர் (ஏதோ ஒரு காரணத்திற்காக) சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்தார். போர்க் களக்காட்சிகளை தனது கூண்டுக்குள் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அவர், தானும் வெளியில் சென்று போர் செய்ய வேண்டும், எதிரிப் படைகளை துவம்சம் செய்ய வேண்டும் என்ற ஆவல் அவருக்கு அதிகரித்தது. அப்பொழுது, அவருக்கு அருகே நின்று கொண்டிருந்த சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களது மனைவியை அழைத்து எனது சங்கிலியை அவிழ்த்து விடுங்கள் நானும் சென்று போர் செய்ய வேண்டும். நான் போரில் கொல்லப்படாமல் இருந்தால், நான் கண்டிப்பாக மீண்டும் இங்கே வந்து விடுகின்றேன் என்று உறுதியளிக்கின்றேன் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களின் மனைவி சலமா (ரலி) அவர்கள் முதலில் மறுத்து விடுகின்றார்கள். பின் அபூ மஹ்ஜன் (ரலி) அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் ஒரு பாடலைப் பாடுகின்றார்கள் :

துக்கம் என் தொண்டையை நெறிக்க..

துயரம் என் நெஞ்சைப் பிளக்க..

இதோ இன்னல்களுக்கு இடையே கதீஸிய்யா..!

நானோ பொங்கி நிற்க..

என் உயிரோ விம்மி நிற்க..

ஆர்வத்தால் என் அங்கங்கள் அதிர்ந்து நிற்க..!

அங்கே தோழர்கள் ..!

ஈட்டியும் வில்லுமாய் விரைந்திருக்க..

நானோ சங்கிலியின் சன்னலுக்கு

கம்பியாய் நிற்கின்றேன்..!

என் உறுதியை நிறுத்தும்

கயிறுகள் ஒரு பக்கம்..!

என் வேகத்தை விலை பேசும்

அதன் இறுக்கம் ஒரு பக்கம்..!

நான் ஓரடி முன்னேற

இரண்டடி பின்னுழுக்கும்

கால் விலங்கு ஒரு பக்கம்..!

ஓசையே இறுதி வழி என்று

ஓவென்று நான் அலற..!

எனது ஓசையின் ஒவ்வொரு இலக்கும்

பாலையில் தொலைத்த பனித்துளி யானதே..!

இவரது இந்த சோகமான பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த சலமா (ரலி) அவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் உடைப்பெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. அபூ மஹ்ஜன் (ரலி) அவர்களைப் பிணைத்து வைத்திருந்த கூட்டின் அருகே சென்ற சலமா (ரலி) அவர்கள் அவரைப் பிணைத்திருந்த கட்டுக்களை அவிழ்த்து, சிறையிலிருந்து வெளியே வர உதவுகின்றார்கள். உணர்ச்சியின் உச்சத்திலிருந்த அபூ மஹ்ஜன் (ரலி) அவர்கள், அங்கே கட்டப்பட்டிருந்த சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களின் குதிரையின் மீதேறி போர்க்களத்தில் நுழைந்து, எதிரிகளின் தலைகளை வரிசையாகக் கொய்து, தரையில் புரள வைத்துக் கொண்டிருந்தார்கள். அவர் கொடுத்த அடியின் காரணமாக அவரது வலது புறமும், இடது புறமும் எதிரிகளின் தலைகள் தேங்காய் சிதறுவது போல் சிதறிக் கொண்டிருந்தன. போர்க்களக் காட்சிகளை பரணிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள், போர்க்களத்தில் இப்பொழுது ஒரு மிகப் பெரும் மாற்றம் ஒன்று தெரிவதைக் கண்ணுற்று, தன்னுடைய மனைவியை அழைத்து, யார் அந்த மனிதர் இந்த அளவுக்கு உக்கிரமாக சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றாரே! என்று வினவுகின்றார்கள். அப்பொழுது சலமா (ரலி) அவர்கள், அவர் தான் நீங்கள் கட்டிப் போட்டிருந்த அபூ மஹ்ஜன் (ரலி) அவர்கள் என்று அவருக்கு ஞாபகமூட்டுகின்றார்கள். இன்னும் உயிருடன் இருந்தால் திரும்பி வந்து விட வேண்டும் என்ற கட்டளையின் அடிப்படையில் அவரை நான் தான் விடுவித்து அனுப்பினேன் என்று கூறினார்கள்.

இதனைக் கேட்ட சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள், வல்ல அல்லாஹ்வின் மீது ஆணையாக! இந்த அளவு வீரமிக்க தோழரை நான் இனிமேல் எப்பொழுதும் பிடித்து பிணையில் வைத்திருக்க மாட்டேன், இன்னும் நான் அவரை விடுதலை பெற்றவராவார் என்றும் அவருக்கு நன்மாரயங் கூறுகின்றேன் என்றும் கூறினார்கள்.

இரண்டாவது நாளும் முஸ்லிம்களுக்கே வெற்றி கிடைத்த போதிலும், இதுவே இறுதி வெற்றி என்றும் கூற முடியாத அளவுக்கு மூன்றாவது நாளும் போர் நடந்தது. ஒவ்வொரு நாளும் ஈரானிய மன்னன் புதுப்புதுப் படைப்பிரிவை அனுப்பி, மேலும் ஈரானியப் படைகளுக்கு வலுச் சேர்த்துக் கொண்டிருந்தான். இதனைக் கண்ட மிகவும் அனுபவம் வாய்ந்த படைத்தளபதியான காகா பின் அம்ர் (ரலி) அவர்கள் இன்னொரு உத்தியைக் கையாண்டார்கள். புதிதாக வந்து சேரக் கூடிய படைகளைத் தடுத்து நிறுத்தி விட்டால், வெற்றியை எளிதாக்கி விடலாம் என்பதே அவரது கணிப்பு. எனவே, சிரியாப் பகுதியிலிருந்து ஒரு படைப் பிரிவை அனுப்பி, புதிததாக ஈரானிலிருந்து வரக் கூடிய படைகளை, கதீஸிய்யாவில் போராடிக் கொண்டிருக்கக் கூடிய படைப்பிரிவுடன் இணையும் முன்பே தாக்குதல் தொடுத்து விட்டால், கதீஸிய்யா விலிருக்கும் படையை எளிதில் வெற்றி பெற்று விடலாம், அதே நேரத்தில் புதுப் படைப்பிரிவை செயலிழக்கச் செய்து விடலாம் என்பதே அவரது எண்ணமாக இருந்தது.

எனவே, ஒரு நூறு பேர் கொண்ட தீரமிக்க முஸ்லிம் படைவீரர்களைத் தேர்வு செய்து சிரியா பகுதிக்கு அனுப்பி வைத்தார்கள். இப்பொழுது இந்தப் படை புதிதாக ஈரானிலிருந்து வரக் கூடிய படைகளை எதிர் கொள்ள ஆரம்பித்தது. திடீரென வந்த தாக்குதலை எதிர்பார்க்காத ஈரானியப் படைகள், மேலும் மேலும் புழுதியைக் கிளப்பிக் கொண்டு வரும் முஸ்லிம்களின் படைகளைக் கண்டு மிரண்டார்கள். இன்னும் அவர்கள் சிரியாவிலிருந்து முஸ்லிம்களின் புதிய படைப்பிரிவொன்று வந்திருப்பதாகக் கணக்குப் போட்டார்கள். ஆனால் ஈரானியப் படைத்தளபதி, இந்தத் திடீர்த் தாக்குதலையும், அதன் நஷ்டத்தையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. தனது படைகளை மீண்டும் தயார் செய்து தனது படைகளை நடுவே நிற்க வைத்து, படைக்கு இடதும், வலதுமாக யானைப் படையை காவலுக்கு அமைத்து படைகளை அனுப்பிக் கொண்டிருந்தான். ஆனால், ஈரானியத் தளபதியின் இந்த யுக்தியை அறிந்த அம்ர் பின் மஆத் யக்ரப் (ரலி) அவர்கள், யானைகளின் மீது தாக்குதல் தொடுக்குமாறு தனது படைவீரர்களுக்குக் கட்டளையிட்டார்கள். யானைகளின் மீது தாக்கதல் ஆரம்பமானது, யானைகளில் தும்பிக்கைகள் வெட்டிச் சாய்க்கப்;பட்டன. தும்பிக்கைகளை இழந்த யானைகள், மிரண்டு போய், தனது படைகளின் நடுவே திரும்பி ஓட ஆரம்பித்தது. யானைகளின் காலடியில் சிக்கிக் கொண்ட ஈரானிய வீரர்கள், மடிந்ததோடல்லாமல், தோல்வியையும் தழுவினார்கள். இருப்பினும் மீண்டும் மீண்டும் ஈரானில் இருந்து போர் வீரர்களை ஈரானிய மன்னன் அனுப்பிக் கொண்டே இருந்தான்.

இப்பொழுது நிலைமையைச் சரியாகக் கணித்துக் கொண்ட காகா பின் அம்ர் (ரலி) அவர்கள், மிகச் சிறந்த அம்பெறியக் கூடிய வீரர்களின் குழுவை அமைத்து, அதற்குத் தானே தலைமை தாங்கியவர்களாக ஈரானியப் படைத் தளபதி ருஷ்துமை நோக்கி, போர்க்களத்தில் நுழைந்தார்கள். காகா பின் அம்ர் (ரலி) அவர்களைக் கண்ட ருஷ்தும், தானே முன் வந்து அவர்களுடன் போர் செய்ய எத்தணித்தான். பின் இது நடவாத காரியம் என்பதை அறிந்து கொண்டவனாக, அங்கிருந்து தப்பிப் போக முயற்சி செய்து, அந்த இடத்தை விட்டே ஓட ஆரம்பித்த அவன், அருகில் இருந்த ஆற்றில் குதித்து தப்பிப் போக முயற்சி செய்தான். ஆற்றில் குதித்து தப்பிப் பிழைக்க நீந்திக் கொண்டிருப்பதைக் கண்ட முஸ்லிம் படைவீரர்களில் ஒருவரான ஹிலால் (ரலி) அவர்கள், தானும் ஆற்றில் குதித்து ருஷ்துமை விரட்ட ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் ருஷ்துமை எட்டிப் பிடித்த ஹிலால் (ரலி) அவர்கள், அவனை இறுக்கப் பற்றிப் பிடித்துக் கொண்டு, தனது குறுவாளால் ஓங்கி ஒரு குத்து குத்தினார். இப்பொழுது, ருஷ்தும் ஆற்றிலேயே பிணமாக மிதக்க ஆரம்பித்தான்.

ஈரானியப் படைத்தளபதி கொல்லப்பட்ட செய்தியை, ஈரானியப் படைவீரர்களுக்கு மத்தியில் மிக வேகமாகப் பரப்பப்பட்டது. தன்னுடைய தளபதி இறந்த செய்தியைக் கேட்ட ஈரானியப் படைவீரர்கள் இப்பொழுது தாங்கள் வெற்றி பெறுவோம் என்பதில் நம்பிக்கை இழக்க ஆரம்பித்தனர், படைக்களத்தை விட்டுப் புறமுதுகிட்டு ஓட ஆரம்பித்தார்கள். ஓடிய அவர்களை மிக அதிக தூரம் விரட்டிச் சென்றதோடு, போரை முஸ்லிம்கள் முடிவுக்குக் கொண்டு வந்தார்கள். இப்பொழுது போரில் முஸ்லிம்கள் முழு வெற்றி பெற்று விட்டார்கள்.

சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் இந்தப் போரில் நேரடியாகக் கலந்து கொள்ளா விட்டாலும், தனது இருப்பிடத்தில் இருந்து கொண்டு படைக்களுக்குத் தேவையான கட்டளைகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருந்தார்கள். இந்தப் போரில் கலந்து கொண்டவர்களின் இறைநம்பிக்கை மற்றும் வீரம் ஆகியவற்றுக்கு அடுத்ததாக, படைத்தளபதிகளின் சரியான திட்டமிடுதல் இருந்ததை நாம் காண முடிந்தது. அதுவே கதீஸிய்யாப் போரில் முஸ்லிம்களுக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்தது.

படைத்தளபதிகள் போரில் நேரடியாகப் பங்கு கொண்டாலும் அல்லது பங்கு கொள்ளா விட்;டாலும், யுத்த வரலாற்றின் நெடுகிலும் நடைபெற்ற போர்களில் ஒரு போரின் வெற்றிக்கும் அல்லது தோல்விக்கும் அதன் தளபதிகளே காரண கர்த்தாக்களாக இருந்துள்ளார்கள். சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் போர் நடந்து கொண்டிருந்த நேரத்தில் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்ததன் காரணமாக அவரால் நேரடியாகப் போரில் பங்கு கொள்ள இயலாமல், பரணில் உட்கார்ந்து கொண்டு போர் நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார், இன்னும் தனது படைவீரர்களுக்கும், துணைத் தளபதிகளுக்கும் கட்டளைகளை அங்கிருந்தே பிறப்பித்துக் கொண்டிருந்தார்.

அல்லாஹ்வின் படைவீரர்களே வலது பக்கம் முன்னேறுங்கள்,

அல்லாஹ்வின் படைவீரர்களே இடது பக்கம் முன்னேறுங்கள்.

ஓ! முகீராவே! இப்பொழுது நீங்கள் முன்னேறிச் செல்லுங்கள்

ஓ! ஜரீர்! இப்பொழுது நீங்கள் சற்றுப் பின் வாங்குங்கள்

ஓ! நுஃமான்! உங்களது வாளைக் கொண்டு தாக்குங்கள்

ஓ! அஸத்! முன்னேறுங்கள்! இப்பொழுது தாக்குங்கள்!

ஓ! காகா! விரைந்து முன்னேறிச் செல்லுங்கள்!!

என்று சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்து கட்டளைகள் பறந்து கொண்டிருந்தன.

இஸ்லாத்தை தங்களது இதயங்களில் ஏந்திக் கொண்டவர்களே! இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களே! நீங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றீர்கள்! நீங்கள் எதிரிகளுக்கு எளிதில் எதையும் விட்டுக் கொடுத்து விடுபவர்கல்லர், இன்னும் அவர்களுக்கு எதிராகத் தூக்கிய உங்களது கைகளை நிறுத்தி விடவும் மாட்டீர்கள்! இந்த உலகமே உங்களது இந்த வீரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கின்றது. புடைத்து நிற்கின்ற உங்களது மார்பில் அச்சத்தை அவர்கள் பார்க்கவில்லை, அதில் எதிரிகளை நிலைகுலையச் செய்யக் கூடிய, வீர மரணம் என்ற வேட்கையைத் தான் அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள், ம்..! முன்னேறுங்கள்..! வீர மரணம் உங்களுக்குக் காத்திருக்கின்றது..! ஷஹீத்..! என்ற அந்தஸ்து உங்களை அழைக்கின்றது..! என்று தனது படைவீரர்களை உற்சாகமூட்டிக் கொண்டே இருந்தார்கள் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள்.

இறைவனது கட்டளையையும், தனது தூதர் (ஸல்) அவர்களது கட்டளையையும், இன்னும் தனக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருக்கின்ற தளபதிகளின் கட்டளைகளையும் மானசீகமான முறையில் ஏற்று, அதில் உண்மையாக, வலுவாகத் தங்களது பாதங்களில் உறுதியைக் காண்பித்த இந்த உத்தமர்கள், தாங்கள் ஏற்றுக் கொண்ட பொறுப்பிற்குரிய கடமைகளைச் சரிவர நிறைவேற்றியதன் காரணமாக, அல்லாஹ் இந்தப் போரில் தன் திருத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு வெற்றியை அளித்தான்.

கதீஸிய்யாப் போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றாலும், இன்னும் அவர்கள் பயணம் செய்ய வேண்டிய தூரம் மிக அதிகமாகவே இருந்தது.

மத்யன் போர்

கதீஸிய்யாவில் ஈரானியர்களை வெற்றி பெற்ற பின், அதே ஈரானியர்களை மீண்டும் மத்யன் என்ற இடத்தில் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. இந்தப் போரிலும் ஈரானியர்கள் கதீஸிய்யாப் போருக்கு வந்திருந்ததைப் போலவே மிக மிக முன்னேற்பாடுகளுடன், அதிகமான ஆயுதங்களுடனும் வந்திருந்தார்கள். இந்தப் போரில் முஸ்லிம்களுக்கு மிகப் பெரிய தடையை தஜ்லா என்ற நதி ஏற்படுத்திக் கொண்டிருந்தது. ஈரானியப் படை ஒரு கரையிலும், மறு கரையில் முஸ்லிம்களின் படையும் நின்று கொண்டிருந்தது. இருவரையும் பிரித்து வைத்து, அந்த நதி தனது போக்கில் போய்க் கொண்டிருந்தது. ஈரானியர்களைத் தாக்க வேண்டுமென்றால் ஆற்றைக் கடந்து தான் தாக்க வேண்டும் என்ற நிலை, இன்னும் ஆறு ஈரானியர்களை முஸ்லிம்களிடமிருந்து பாதுகாக்கக் கூடிய கவசமாகவும் திகழ்ந்து கொண்டிருந்தது. இன்னும் அந்த ஆற்றின் குறுக்கே இருந்த அத்தனை பாலங்களை ஈரானியர்கள் நிர்மூலமாக்கி, உடைத்து வைத்திருந்தனர். எனவே, தஜ்லா நதி முஸ்லிம்களுக்கு மிகப் பெரும் சவால் விட்டுக் கொண்டிருந்தது.

முஸ்லிம்கள் முன்னேற வேண்டுமானால், எதிர்த்தாக்குதலை நடத்த வேண்டுமென்றால்.. முஸ்லிம்கள் தான் முதலில் அடி எடுத்து வைத்து எதிர்த்தாக்குதலை நடத்த வேண்டும். ஆனால் ஆறு குறுக்கிட்டு ஓடிக் கொண்டிருக்கின்ற நிலையில் இது எப்படிச் சாத்தியம்? அப்படியே, ஆற்றைக் கடந்து எதிரிகளைச் சந்திக்கலாம் என்ற முடிவினை எடுத்தாலும் ஆற்றைக் கடந்து கொண்டிருக்கின்ற நிலையிலேயே எதிரில் உள்ள ஈரானியப் படைகளின் தாக்குதலைச் சந்திக்க வேண்டி வரும். இது எதிரிக்கு சாதகமாகக் கூட ஆகி விடும்.

இப்பொழுது சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் ஒரு புது வித யுக்தி ஒன்றை வகுத்தார்கள். அதன் படி ஒரு படைப்பிரிவு ஆஸிம் பின் அம்ர் (ரலி) அவர்கள் தலைமையில் ஆற்றில் இறங்குவது, இன்னும் அடுத்த படைப்பிரிவு முதல் பிரிவுக்கு சற்றுத் தூரத்தில் காகா பின் அம்ர் (ரலி) அவர்கள் தலைமையில் ஆற்றில் இறங்குவது என்ற முடிவு எடுக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் அடிப்படையில், முதலில் இறங்கிய படைப்பிரிவுடன் ஈரானியப் படைகள் மோதிக் கொண்டிருக்கின்ற நிலையில், இரண்டாவது பிரிவு ஆற்றகை; கடக்க ஆரம்பிக்கும். இந்த நிலையில் முதல் பிரிவுடன் ஈரானியர்கள் மோதுவதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் பொழுதே, இரண்டாவது பிரிவு எதிர்க்கரையை அடைந்து, எதிர்பாராத தாக்குதலைத் தொடுக்க ஆரம்பித்து, ஈரானியர்களை நிலைகுலையச் செய்வதே இந்த ஏற்பாட்டின் நோக்கமாக இருந்தது. சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களின் இந்த போர்க்கலைத்திட்டம் வெகு சிறப்பாக வேலை செய்தது, எதிரிகளை நிலைகுலையச் செய்ததுடன் வெற்றியையும் பெற்றுத் தந்தது. இன்னும் இராணுவ வரலாற்றில், சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களின் இந்தப் போர்த்திட்டம் பொன்னெழுத்துக்களால் பதிக்கக் கூடியதொரு வரலாற்றுச் சிறப்பைக் கொண்டதாகவும் அமைந்து விட்டது.

இந்தத் திட்டத்தைத் தெளிவாகத் தன்னுடைய படைவீரர்களுக்கு விளக்கிய பின், இறைவன் மீது நம்பிக்கை கொண்ட என்னுடைய படைவீரர்களே! அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கை வைத்தவர்களாக இந்த ஆற்றில் இறங்குங்கள் என்று சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள். இப்பொழுது, முஸ்லிம் வீரர்கள் ஒவ்வொருவரின் உதடும், அல்லாஹ்வின் திருநாமத்தை உச்சரிக்க ஆரம்பித்தது, இன்னும் அவர்கள் ஹஸ்புனல்லாஹ வ நிஃமல் வக்கீல் – அதாவது எங்களுக்கு உதவி செய்ய அல்லாஹ்வே போதுமானவன் என்று கூறிக் கொண்டே இப்பொழுது ஆற்றில் இறங்க ஆரம்பித்தார்கள்.

ஆழமான அந்த தஜ்லா நதியை எந்தவித பயமுமின்றி இப்பொழுது முஸ்லிம் வீரர்கள் கடக்க ஆரம்பித்தார்கள். முஸ்லிம் வீரர்கள் ஆற்றைக் கடந்த இந்த சம்பவத்தை உலகம் இவ்வாறு பேசிக் கொண்டது :

இவர்கள் என்ன நிலத்தில் நடந்து செல்வது போலல்லவா ஆற்றின் மீது நடந்து போய்க் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறு ஆற்றைக் கடந்த முஸ்லிம் வீரர்களில் சல்மான் அல் பார்ஸி (ரலி) அவர்களும் ஒருவராவார். யுத்த வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கக் கூடிய அளவுக்கு, ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க அழகியதொரு பணியைச் செய்தார் சல்மான் (ரலி) அவர்கள்.

அவர் கூறினார் :

இஸ்லாம் என்ற இந்த இறைமார்க்கம் உன்னதமானது, சிறப்பு மிக்கது, அது வானத்திலிருந்து இந்த உலகத்திற்கு இறக்கி அருள் செய்யப்பட்டது. அந்த வல்ல அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இந்த ஆறானாது இறைநம்பிக்கை கொண்ட நல்லடியார்களுக்கு, நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அந்த பாலைப் பூமியைப் போன்றதே!

எவனுடைய கைவசத்தில் என்னுடைய உயிர் இருக்கின்றதோ..! அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக..! ஆற்றில் யார் யாரெல்லாம் இறங்கினார்களோ அவர்கள் அனைவரும் பாதுகாப்பாகவே அதன் மறுகரையை அடைந்தார்கள். ஆழமான அந்த நதி அவர்களில் எவருக்கும் எந்த கெடுதியையும் ஏற்படுத்தவில்லை.

இன்னும் ஆற்றைக் கடந்த வீரர்களிடமிருந்து ஒரு கயிறு கூட தவறி அந்த ஆற்றில் விழுந்து விடவில்லை. ஒரு போர்வீரருடைய குவளை ஒன்று தவறி ஆற்றில் விழுந்து விட, அதனை கண்டெடுத்துத் தருமாறு தன்னுடைய சக வீரர்களிடம் வேண்டுகிறார். ஆற்றில் தவறி விழுந்த அந்தக் குவளை இவர்களை நோக்கி மிதந்து வந்து கொண்டிருந்தது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

முஸ்லிம்கள் ஆற்றைக் கடந்து வருவதைப் பார்த்த ஈரானியப் படைகள், தங்களது கண்களையே அவர்களால் நம்ப முடியவில்லை, தங்களை ஏதோ மிகப் பெரிய பிராணி ஒன்று விழுங்க வருவதைப் போலக் கண்டார்கள், பயத்தால் நடுங்கினார்கள், இன்னும் படையை விட்டு ஓடவும் விரண்டோடவும் செய்தார்கள். ஆனால் ஈரானியப் படைத்தளபதி உறுதியுடன் முஸ்லிம்களை எதிர்த்து நின்றார், விரண்டோடிய சிலர் மீண்டும் அவருடன் வந்து ஒட்டிக் கொண்டனர். ஆனால் ஈரானியப் படைக்கு முதல் நாளிலேயே முஸ்லிம் வீரர்கள் சமாதி கட்டி விட்டனர். ஈரானியர்களின் மத்யன் பிரதேசமும், கோட்டைகளும், அரண்மனைகளும் இப்பொழுது முஸ்லிம்கள் வசமாகின. ஈரானியப் பேரரசர் தோல்வியடைவதற்கு முன்பே, மத்யனை விட்டு யஸ்ட்கார் என்ற பகுதியை நோக்கிச் சென்று விட்டார். மத்யனின் அத்தனை பொருள்களும், இன்னும் கஜானாக்களும் கைப்பற்றப்பட்டு, மதீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் மத்யன் நகரில் நுழைந்த பொழுது, மத்யன் நகரம் வெறிச்சோடிக் கிடந்தது. ஆள் நடமாட்டமில்லாமல் அமைதியாக இருந்தது. இந்தக் காட்சி சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களை மிகவும் பாதித்து விட்டது. அதன் காரணமாக அவரது நாவிலிருந்து கீழ்க்கண்ட வசனம் உதிர ஆரம்பித்தது :

எத்தனை தோட்டங்களையும், நீர் ஊற்றுக்களையும் அவர்கள் விட்டுச் சென்றார்கள்? இன்னும் (எத்தனையோ) விளைநிலங்களையும் நேர்த்தியான மாளிகைகளையும் (விட்டுச் சென்றார்கள்). இன்னும் அவர்கள் இன்பமாக அனுபவித்துக் கொண்டிருந்த சுகானுபவங்களையும் (விட்டுச் சென்றார்கள்). அவ்வாறே (முடிவு ஏற்பட்டதும்) அவற்றிற்கு வேறு சமூகத்தாரை வாரிசாக நாம் ஆக்கினோம். (44:25-28)

மத்யன் பிரதேசம் முஸ்லிம்களின் கைவசம் வந்ததும், அதனையடுத்த ஈராக் பகுதியும் முஸ்லிம்களின் கைவசம் வந்தது, இப்பொழுது அங்கு இஸ்லாமிய ஆட்சி நிலைநிறுத்தப்பட்டது. மக்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு, வீட்டை விட்டு யார் யார் ஓடினார்களோ அவர்கள் மீண்டும் தங்களது வீடுகளுக்கு வந்து, அமைதியான முறையில் வசிக்கலாம் என்ற அறிவிப்பும் செய்யப்பட்டது. இந்த அறிவிப்பைக் கேட்ட அவர்கள், மீண்டும் தங்களது வாழ்விடங்களுக்கு வந்தார்கள், தங்களது பொருள், மற்றும் செல்வம், சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டவர்களாக தங்களது வாழ்வைத் துவங்கினார்கள்.

ஈராக்கின் முழுப் பகுதியும் இஸ்லாமியப் படைகளின் கைவசம் வந்ததும், ஈராக்கின் கவர்னராக சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) நியமிக்கப்பட்டார்கள். வெற்றி கொள்ளப்பட்டவுடன் அந்த தேசத்தை ஒருங்கிணைத்து அதனை ஆள்வதென்பது மிகவும் சிரமமானதொரு பணியாக இருந்தது. சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் தன்னுடைய தோழர்களது தீரமிக்க தியாகத்தையும், வீரத்தையும் கண்டு இறைவனுக்கு நன்றி கூறினார். இன்னும் வெகு சீக்கிரத்திலேயே ஈராக் பிரதேசத்தை மிகவும் செழிப்பான, வியக்கத்தக்க மாறுதல்களைக் கொண்ட பூமியாக, ஒரு முன்மாதிரி மிக்க தேசமாக மாற்றிக் காட்டினார்.

ஈராக்கின் சீதோஷ்ண நிலை நமது வீரர்களுக்கு ஒத்து வரவில்லை. அநேக வீரர்கள் இதனால் கடுமையான நோய்களுக்கு ஆளாகி வருகின்றார்கள் என்று சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் கலீபா உமர் (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள்.

அதற்கு, சரியான இடத்தைத் தேர்வு செய்து அங்கு புதியதொரு நகரை நிர்மாணிக்கும்படியும், படைவீரர்களுக்கு அங்கு வீடுகள் கட்டிக் கொடுக்கும்படியும் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களுக்கு உமர் (ரலி) அவர்கள் பதில் கடிதம் எழுதினார்கள். எனவே, புதிய இடம் தேர்வு செய்யப்பட்டது, புதிய நகரம் கூஃபா நிர்மாணிக்கப்பட்டது. ஒவ்வொரு குலத்திற்கும் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது, நகரின் மார்பிடத்தில் மிகப் பெரிய பள்ளிவாசல் ஒன்றும் கட்டப்பட்டது. அந்தப் பள்ளியில் ஒரே நேரத்தில் 40 ஆயிரம் பேர் நின்று தொழும் அளவுக்கு விசாலமாக அந்தப் பள்ளி கட்டப்பட்டது. ஈராக்கை திட்டமிட்டபடியும், சரியான நிர்வாகத்திறனைக் கொண்டு ஆட்சி செய்யப்பட்டதாலும், முன்னைக் காட்டிலும் அமைதியாகவும், செழிப்பாகவும், நிம்மதியாகவும் மக்கள் வாழ ஆரம்பித்தார்கள்.

சரியான நிர்வாகம், பாரபட்சமில்லாத நீதி, இன்னும் மக்களை சரியான முறையில் வழி நடத்தியதால் மக்கள் அமைதியையும், சுபிட்சத்தையும், சந்தோஷத்தையும் இஸ்லாமிய ஆட்சியில் அனுபவித்தார்கள். ஆனால், எப்பொழுதும் பிரச்னைகளை உருவாக்கி அதில் குளிர்காய விரும்பும் ஒரு கூட்டம் எங்கும் இருந்து கொண்டிருப்பது போல கூஃபாவிலும் ஒரு சிறு கூட்டம் உருவாகியது. இன்னும் அந்தக் கூட்டம் அரசைக் குறைகூறிக் கொண்டே இருந்தது மட்டுமல்லாமல், சரியான நேரத்தில் தொழ வைப்பதில்லை என்றும் இன்னும் வேலைகளில் சோம்பேறித்தனத்தையும், பொடுபோக்காகச் செயல்படுவதாகவும் கவர்னர் மீது குற்றம் சாட்டினார்கள்.

சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களைப் பற்றிய குற்றச்சாட்டைப் பெற்றுக் கொண்ட கலீபா உமர் (ரலி) அவர்கள், உடனே மதீனாவிற்குப் புறப்பட்டு வரும்படி சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களுக்கு உத்தரவிடுகின்றார்கள். அந்த உத்தரவைப் பெற்றுக் கொண்ட மாத்திரத்திலேயே, சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் மதீனாவுக்கு பயணமாகின்றார்கள்.

அங்கு சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டைப் பற்றி உமர்(ரலி) விசாரணை செய்கின்றார்கள். சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களே! உங்கள் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டைப் பற்றி என்ன கூறுகின்றீர்கள்?

சிரித்துக் கொண்டே..! நான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எந்த முறையில் தொழ வைத்தார்களோ, அதே முறையில் தான் தொழ வைக்கின்றேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முதல் இரண்டு ரக்அத்துக்களை எவ்வாறு பிந்திய இரண்டு ரக்அத்துக்களை விட நீட்டித் தொழ வைத்தார்களோ அதனைப் போன்றே நானும் மக்களுக்கு தொழ வைக்கின்றேன் என்று கூறினார்கள். சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களது பதிலால் திருப்தியுற்ற உமர் (ரலி) அவர்கள், சரி..! இப்பொழுது நீங்கள் மீண்டும் ஈராக் சென்று கவர்னர் பதவியை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

ஆனால் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களோ! சிரித்துக் கொண்டே.., என் மீது திருப்தி கொள்ளாத, இன்னும் என்னுடைய தொழுகையில் சந்தேகம் கொண்டு நான் சரியாகத் தொழுகையை நடத்தவில்லை என்று என்னைப் பற்றிப் புகார் செய்த மக்களிடமா என்னை மீண்டும் திருப்பி அனுப்புகின்றீர்கள். என்னுடைய வாழ்வை இனி நான் மதீனாவில் கழிக்க விரும்புகின்றேன், எனக்குப் பதிலாக வேறு யாரையாவது நியமித்து விடுங்கள் என்று சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் கோருகின்றார்கள். எனவே, இதுவரை சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களுக்கு உதவியாக இருந்த உதவி கவர்னரையே, ஈராக்கின் கவர்னராக நியமித்து விடுகின்றார்கள்.

ஹிஜ்ரி 23 ல் பாரசீக நெருப்பு வணங்கியான ஒருவன், உமர் (ரலி) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் பொழுது கத்தியால் குத்தி விட்ட நிகழ்ச்சி நடந்தது. அந்த தாக்குதலில் இருந்து உமர் (ரலி) அவர்கள் மீள இயலவில்லை. அவர்களை மரணம் நெருங்கிக் கொண்டிருந்த வேலையில், உமர் (ரலி) அவர்களை அடுத்து ஆட்சிப் பொறுப்பை யார் ஏற்பது என்றதொரு பிரச்னை உருவாகியது. இன்னும் யாரையும் உமர் (ரலி) அவர்கள் குறிப்பிட்டுக் கூறவில்லை, தலைமைப் பதவிக்கு நியமிக்கவும் இல்லை. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பேரன்மைப் பெற்ற தோழர்களைக் கொண்ட, ஆறு நபர் கொண்ட கமிட்டியை நியமித்து, அவர்கள் தங்களுக்குள் ஆலோசனை செய்து புதிய கலீபாவைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினார்கள். அவ்வாறு நியமிக்கப்பட்ட ஆறுபேர் கொண்ட குழுவில் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களும் ஒருவராவார். இன்னும் எனக்குப் பின் ஒருவரை கலீபாக நியமிக்க வேண்டும் என்று நான் முடிவு எடுத்தால், நான் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களையே நியமிப்பேன் என்றும் அப்போது கூறினார்கள். ஆனால் அது சரியல்ல. தனது தலைவரைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை முஸ்லிம் உம்மத்திற்கு இருக்கின்றது என்று உமர் (ரலி) அவர்கள் கூறி விட்டார்கள்.

இன்னும் எனக்குப் பின் கலிபாவாக வரக் கூடியவர் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களாக இல்லா விட்டால், அவரல்லாது வேறு யாராவது ஆட்சிக்கு வருவாரேயானால், அவ்வாறு பொறுப்புக்கு வரக் கூடியவர் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளட்டும் என்றும் அறிவுறுத்தினார்கள். பின் உமர் (ரலி) அவர்கள் மரணமடைந்து, அவர்களை நல்லடக்கம் செய்ததன் பின்பு, நபித்தோழர்களில் அதிகமானோரின் ஆதரவின் அடிப்படையில், உதுமான் (ரலி) அவர்கள் ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார்கள்.

மீண்டும் ஈராக் கவர்னராக..!

உதுமான் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன், ஈராக் பகுதியின் கவர்னராக மீண்டும் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களைச் சென்று பதவியேற்றுக் கொள்ளுமாறு பணித்தார்கள். உதுமான் (ரலி) அவர்களின் உத்தரவுப்படி, மீண்டும் ஈராக் சென்று அங்கு மூன்று வருடம் ஆட்சிப் பொறுப்பில் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் கடமையாற்றினார்கள். சில வருடங்கள் கழித்து, சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களுக்கும் நிதியமைச்சராகப் பதவி வகித்த அப்துல்லா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுக்குமிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக மீண்டும் தனது பதவியை ராஜினாமாச் செய்து விட்டு, மதீனாவிற்கே திரும்பி வந்தார்கள். மதீனாவை அண்மித்துக் கொண்டிருந்த வேiலையில், மதீனாவிற்கும் சில மைல்கள் தூரத்தில் உள்ள அகீக் என்ற இடத்தில் தனக்கென ஒரு குடிசையை அமைத்துக் கொண்டு, தனிமையான வாழ்வை வாழ ஆரம்பித்தார்கள்.

தனிமை வாழ்வு

இன்னும் முஸ்லிம் சமுதாயத்தைப் பல்வேறு பிரிவுகளுக்கும் பிளவுகளுக்கும் இட்டுச் சென்றதோடு, நபித்தோழர்கள் பலரது உயிர்களையும் குடித்த ஜமல் யுத்தம், ஸிப்பீன் யுத்தம் போன்வற்றிலும் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் கலந்து கொள்ளாமல் தவிர்ந்து கொண்டார்கள். இன்னும் அந்தக் காலப் பிரிவில் முஸ்லிம்களுக்கு மத்தியில் நிலவி வந்த கருத்துவேறுபாடுகள், குழப்பங்கள், வாதப் பிரதிவாதங்கள் எதனைப் பற்றியும் தன்னிடம் கூற வேண்டாம் என்று தன்னுடைய குடும்பத்தவர்களுக்கு உத்தரவே போட்டு வைத்திருந்தார்கள் என்றால், அவர்கள் எந்த அளவுக்கு இந்த நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டிருந்தால் மனமுடைந்து போயிருப்பார்கள் என்பதை நம்மால் விளங்கிக் கொள்ள முடிகின்றது.

அவர்கள் வேதனையுடன், ஒரு முஸ்லிம் சகோதரனின் வாள், சொந்த முஸ்லிம் சகோதரனின் தலையைத் துண்டிக்கப் பயன்படுத்தப்படுகின்றதே என்று வேதனை தொணிக்கக் கூறி வருந்தினார்கள். இருதரப்பினரும் எனது மரியாதைக்குரிய தோழர்கள் தான், இவர்களில் யாருக்கு எதிராகவும் எனது கனவில் கூட நான் என்னுடைய வாளை உயர்த்த மாட்டேன் என்றும் கூறினார்கள்.

இறுதி நாட்கள்

ஹிஜ்ரி 54 ல் அந்த அகீக் என்ற இடத்தில் தனியாக வாழ்ந்து கொண்டிருந்த பொழுது, அவருடைய 80 வது வயதில் மரணம் அவரை வந்தடைந்தது. அவருடைய இறுதி நிலை பற்றி, அவரது மகன் விவரிப்பதை நாம் இங்கு நோக்குவோம் :

என்னுடைய தந்தையின் தலை என்னுடைய மடிமீதிருந்தது, அவரது கண்கள் பார்வை வெளிச்சத்தை இழந்து, நிலை குத்தி நின்றது. அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த எனது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.

என்னை நோக்கி.., ஏன் மகனே அழுகின்றாய், பொறுமையாக இரு என்று எனக்கு ஆறுதல் கூறினார். நிச்சயமாக அல்லாஹ் எனக்கு எந்தத் தண்டனையும் கொடுக்க மாட்டான், இன்ஷா அல்லாஹ்..! என்றும் கூறினார்கள்.

இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தனது மலரிதழால் எனக்கு சொர்க்கம் உண்டென்று நன்மாரயம் கூறியிருக்கின்றார்கள் என்று கூறி விட்டு,

மகனே! அந்த அலமாரியைச் சற்று திறப்பாயாக! என்று கூறி, அதில் நான் மடித்து வைத்திருக்கும் பழைய துணி ஒன்றை எடுத்து வருவாயாக என்று கூறினார்கள்.

நான் அந்தப் பழைய துணியை எடுத்து வந்து கொடுத்தேன்.

அதனைப் பார்த்து, இதை நான் பத்ர் யுத்தத்தின் பொழுது அணிந்திருந்தேன், அதனால் அதனை மிகவும் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்தேன். இன்னும் இந்த துணியைக் கொண்டே எனக்கு நீ கபனிடுவாயாக!! இந்தத் துணி பழைய துணியாக இருக்கின்றதே என்று நீ கவலைப்பட வேண்டாம். அது பழையதாக இருந்தாலும், வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இதனைக் கொண்டே எனக்கு நீ கபனிட்டு அடக்கம் செய்! என்றும் கூறினார்கள்.

அவ்வாறு அவர்கள் சொல்லிக் கொண்டிருந்த சிறிது நேரத்தில், அவர்களது உயிர் விண்ணை நோக்கிச் சென்று விட்டது. பின்பு அவரது ஜனாஸா ஜன்னத்துல் பக்கீ யில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கதீஸிய்யாவையும்..! பெர்ஸியாவையும் வெற்றி கொண்ட மாவீரரே!!

இன்னும் தனது போர்த்திறத்தாலும், ஞானத்தாலும், தொலைநோக்குப் பார்வையாலும் மத்யனை வெற்றி கொண்ட பெருமகனே!

தஜ்லா நதியின் மீது தனது குதிரையைச் செலுத்தி பயம் என்றால் என்ன? என்று கேட்ட பெருவீரரே!

கூஃபா நகரை உருவாக்கிவரே!

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மலரிதழால் சொர்க்கத்திற்கு நன்மாரயங் கூறப்பட்டவரே!

இஸ்லாத்தின் மிகப் பெரும் படைத்தளபதியே! நெறி தவறாத ஆட்சியாளரே!

ஓ!! சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களே!!

உங்களுக்கு எங்கள் ஸலாம்..! உங்களுக்கு எங்கள் ஸலாம்..!

சொர்க்கம் உங்களை ஆசிர்வதிக்கட்டும். அதன் தென்றல் காற்றும், சிரித்து தனது மலரிதழை வெளிக்காட்டும் மலரிதழ்களின் சுகந்தமும், இன்னும் சொர்க்கத்தின் ஓடைகளின் சலசலப்பும் என்றென்றும் உங்களைச் சுற்றி வந்து கொண்டே இருக்கட்டுமாக!! ஆமீன்!!

3. உஸாமா பின் ஜைத் (ரலி)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

”ஓ என்னுடைய தோழர்களே..! உங்கள் அனைவரைக் காட்டிலும் உஸாமா எனக்கு மிகவும் நெருக்கமானவர், அவரை நல்ல முறையில் நடத்துங்கள்””.

இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து பயணப்படுவதற்கு முன்னுள்ள ஏழு ஆண்டுகளில், குறைஷிகளின் கைகளில் அகப்பட்டு சொல்லொண்ணா இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும், சித்தரவதைகளுக்கும் மற்றும் அடக்குமுறைகளுக்கும் ஆளாகிக் கொண்டிந்தார்கள். குறைஷிகளிடமிருந்து வந்து கொண்டிருந்த துன்பங்களும், இடர்களும் முடிவில்லாமல் சென்று கொண்டிருந்தன. இந்த இக்கட்டான, எப்பொழுதும் துயரச் செய்திகளாகவே வந்து கொண்டிருந்த வேளையில், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உள்ளத்தையும், வதனத்தையும் குளிரச் செய்கின்றதொரு செய்தியை நபித்தோழர் பெருமக்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! உம்மு ஐமன் (ரலி) அவர்கள் ஒரு ஆண் மகவை ஈன்றெடுத்திருக்கின்றார்கள் என்ற அந்த நற்செய்தியைக் கேள்விப்பட்டவுடன், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முகத்தில் வெளிச்சப் புள்ளிகள் பரவி நின்றன. தன்னுடைய வரவால் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் துன்ப முகத்தில், இன்ப ரேகைகளை விதைத்து விட்ட பெறும் பேறுக்குரியவர் யாரென்று உங்களால் யூகிக்க முடிகின்றதா?

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முகத்தில் பரவி இருந்த அந்த சந்தோஷ ரேகைளை பார்த்த நபித்தோழர்கள் யாரும் ஆச்சரியப்படாமல் இருந்ததில்லை. ஏனென்றால், இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும், அந்த மகவை ஈன்றெடுத்த குடும்பத்தினருக்கும் இடையே சிறப்பான நெருக்கமானதொரு உறவு இருந்து வந்ததே காரணமாகும். உஸாமா (ரலி) அவர்களின் தாயார் ஆப்ரிக்காவிலிருந்து வந்தவராவார், அவரது இயற் பெயர் பரக்கத் என்பதாகும், ஆனால் பின்னாளில் அவர் உம்மு ஐமன் என்று சிறப்பித்துக் கூறக் கூடிய புகழ் பெற்ற நபித்தோழியாகத் திகழ்ந்தார். இவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் அடிமையாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தாயார், இறந்து போனதன் பின்பு, சிறுவனாக இருந்த இறைத்தூதர்(ஸல்) அவர்களைக் கவனித்து வளர்க்கும் பொறுப்பு இவர்களைச் சார்ந்திருந்தது. எனவே, உம்மு ஐமன் (ரலி) அவர்கள் என்னுடைய தாயைப் போன்றவர்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அடிக்கடி கூறுவதோடு, என்னுடைய குடும்ப அங்கத்தவர்களில் அவரும் ஒருவராவார் என்று கூறக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். இதுவே, புதிததாகப் பிறந்த அந்த அதிர்ஷ்டமுள்ள மகவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் இடையே இருந்த தொடர்பாகும். இவரது தந்தையாரின் பெயர் ஜைத் பின் ஹாரிதா (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களால் மிகவும் நேசிக்கப்பட்டவராகத் திகழ்ந்தார்கள். அத்துடன், தனது வளர்ப்பு மகன் என்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ஜைத் பின் ஹாரிதா (ரலி) அவர்களை அறிவித்தார்கள். இன்னும் அன்னாரது வாழ்நாள் முழுவதும் மிகவும் நெருக்கமான நபித்தோழர்களின் வரிசையில் ஒருவராகவும், இறைத்தூதர் (ஸல்) அவர்களை நிழல் போல் தொடர்ந்து செல்லக் கூடிய பெருமை பெற்ற தோழராகவும் இவர் திகழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மட்டுமல்ல, அன்னாரது தோழர்கள் அனைவரும் உஸாமா பின் ஜைத் (ரலி) அவர்களின் பிறப்பால் மிகவும் சந்தோஷமடைந்திருந்தனர். அவர்களது சந்தோஷத்திற்கு அர்த்தமுமிருந்தது, அதாவது இறைத்தூதர் (ஸல்) அவர்களை எதுவொன்று சந்தோஷப்படுத்தியதோ, அது தங்களையும் சந்தோஷப்படுத்தக் கூடியதே என்று அந்த நபித்தோழர்கள் கருதி வாழ்ந்ததே காரணமாகும்.

குறைஷிகளின் தலைவர்களுள் ஒருவராக இருந்த ஹகம் பின் ஹஸ்ஸாம் அவர்கள், ஒருமுறை மிகவும் விலையுயர்ந்த ஆடை ஒன்றை இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குப் பரிசாக அளித்தார். இதனை 40 தினார்களுக்கு யமன் தேசத்திலிருந்து வாங்கி வந்தார், அதிலிருந்த தலைக்கு அணியும் கயிறானது, யமன் தேசத்து மன்னனுக்கென்று பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டிருந்ததை, இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்காக அவர் வாங்கி வந்திருந்தார். இந்த பிரத்யேக கயிறை ஒரே ஒரு முறை மட்டுமே வெள்ளிக் கிழமையன்று அணிந்து விட்டு, அதனை உஸாமா (ரலி) அவர்களுக்குக் கொடுத்து விட்டார்கள். அதனை காலையிலும், மாலையிலும் சந்தோஷத்துடன் அணிந்து வந்த உஸாமா (ரலி) அவர்கள், முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரித் தோழர்களைச் சந்திக்கும் நேரங்களில் எல்லாம் அதனை அணிந்து செல்லக் கூடியவராகவும் இருந்தார்.

ஒருமுறை கலீஃபா உமர் (ரலி) அவர்கள், அரசின் கஜானாவிலிருந்து மக்களுக்கு உதவித் தொகைகைளை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது உஸாமா (ரலி) அவர்களின் முறை வந்ததும், தனது மகனுக்குக் கொடுத்ததைக் காட்டிலும், ஒன்றரை மடங்கு அதிகமாகக் கொடுத்தார்கள். அரசின் கஜானாவிலிருந்து மக்களுக்கு உதவித் தொகையை வழங்கும் பொழுதெல்லாம், அதனைப் பெற்றுக் கொள்ளக் கூடிய தோழரின் அற்பணம், இஸ்லாத்திற்காக அவர் புரிந்த சேவைகள் ஆகிய அனைத்தையும் கவனத்தில் கொண்டு, அவர்களது தகுதிக்குத் தகுந்தவாறு உதவித் தொகையை வழங்கக் கூடியவர்களாக உமர் (ரலி) அவர்கள் இருந்தார்கள்.

இப்பொழுது, உமர் (ரலி) அவர்களது மகன் அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்கள், தான் எந்த வகையில் உஸாமா (ரலி) வை விட தரத்தில் தாழ்ந்து விட்டோம். தலைமைக்குக் கட்டுப்படுவதிலும், கீழ்ப்படிவதிலும், இதுவரை இஸ்லாத்திற்காக கலந்து கொண்ட போர்களில் மற்றவர்களைப் போலவே தானும் உத்வேகத்துடன் கலந்து கொண்டதையும், அதில் தான் காட்டிய வீரத்தையும், அல்லாஹ்விற்காக தான் செய்த அற்பணிப்புகளையும் எண்ணிக் கொண்டு, உஸாமா (ரலி) அவர்களை விட தான் எந்த விதத்தில் தாழ்ந்து விட்டோம் என்று எண்ணிப் பார்க்கலானார்.

அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்களின் சேவை, அற்பணிப்பு மனப்பான்மையுடன் எப்பொழுதும் முன்னணியில் நிற்கக் கூடியவராக இருந்தார். எனவே, உதவித் தொகையை நாம் குறைவாகப் பெற்றுக் கொண்டோமே என்பது பற்றி அவர் சிந்திக்கவில்லை, மாறாக, முன்னணயில் இருக்கும் நபித்தோழர்களில் ஒருவனாக என்னையும் இன்னும் கருதும் நிலை வரவில்லையே, அத்தகைய தகுதிக்கு நான் இன்னும் தேர்வாகவில்லையோ என்று தான் அவர்கள் மனம் வருந்தினார்களே தவிர, உதவித் தொகையைக் குறைவாகப் பெற்றுக் கொள்கின்றோமே என்பதற்காக அல்ல.

ஒருநாள், அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்கள் தன்னைச் சமாளித்துக் கொண்டவராக, தன்னுடைய தந்தையை நோக்கி,

தந்தையே..! நான் ஜிஹாதுப் போரில் அதிகமாகப் பங்கெடுத்துக் கொண்டவன், இன்னும் மற்றவர்களைக் காட்டிலும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அதிகமாக எனது ஒத்துழைப்புகளை வழங்கியவன், இந்த நிலையில் என்னைக் காட்டிலும் உஸாமா (ரலி) அவர்களுக்கு அதிகமான உதவித் தொகையை நீங்கள் வழங்கியதன் காரணமென்ன? என்று வினவுகின்றார்கள்.

உமர் (ரலி) அவர்கள் தனது மகனைப் பார்த்து,

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உஸாமா (ரலி) அவர்களை மிகவும் ஆழமாக நேசித்தார்கள், இன்னும் அவரது தந்தையும் அதிகமாக நேசித்தார்கள். இத்தகையவர்களுக்கு நான் ஏன் முன்னுரிமை கொடுக்கக் கூடாது? நான் அதிகமாகக் கொடுத்தேன் தான். அதன் மூலம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கின்ற வரையறைகளை பேணிக் கொண்டேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் யாருக்கு முன்னுரிமை வழங்கினார்களோ, அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதென்பது என்னுடைய கடமைகளில் ஒன்றாக இருக்கின்றது. தனது தந்தை மற்றும் குடும்பத்தைப் பற்றியும் கவலைப்படாமல், எப்பொழுதும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குச் சேவை செய்வதிலேயே சிறப்புக் கவனம் செலுத்தி வந்தவர், அவரது தந்தை என்பது உங்களுக்குத் தெரியாதா? அவர் தனது பெற்றோர்களைக் கூட காண விரும்பாது, எப்பொழுதும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடனேயே இருந்து வந்தவர் என்பதும் உங்களுக்குத் தெரியாதா?

ஸைத் (ரலி) அவர்களுடைய தந்தை ஹாரிதா, தன்னுடைய மகனைத் திரும்ப அழைத்துச் செல்வதற்காக நீண்ட தூரம் கடுமையான பயணம் செய்து வந்தார். வந்தவர், தனது மகனைத் தன்னிடம் ஒப்படைக்குமாறும், தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் (ரலி) அவர்களுக்கு விடுதலை செய்ததோடு, அவரது தந்தையுடன் செல்லுமாறும் கேட்டுக் கொண்டார்கள். தன்னுடைய மகனை இந்தளவு எளிதாகத் தான் திரும்பப் பெற்றுக் கொள்வோம் என்பதை நினைத்தே பார்த்திராத ஸைத் (ரலி) அவர்களுடைய தந்தை ஹாரிதா மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்று விட்டார். அவர் தன்னுடைய மகனிடம் கூறினார், ஸைத்தே..! விரைந்து பயணத்திற்குத் தயாராகுங்கள், உங்களைக் காண உங்களது தாயார் மிகவும் ஆவலுடன் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் கூறினார். ஆனால், ஸைத் (ரலி) அவர்களோ, இறைத்தூதர் (ஸல்) அவர்களை விட்டு விட்டு தான் உங்களுடன் வர மாட்டேன் என்று உறுதியாகக் கூறி விடுகின்றார்கள்.

ஹாரிதா அவர்கள் தனது காதையே தன்னால் நம்ப முடியவில்லை, அவர் கேட்டார்..!

விடுதலையை விட, அடிமைத் தளையில் இருப்பதையே நீங்கள் விரும்புகின்றீர்களா? என்று தனது மகனைப் பார்த்துக் கேட்ட பொழுது, ஸைத் (ரலி) அவர்கள்,

தந்தையே..! இந்த அடிமைத் தனத்துக்காக நான் ஆயிரம் விடுதலையைக் கூட தியாகம் செய்யக் காத்திருக்கின்றேன், தயவு செய்து என்னை வற்புறுத்தாதீர்கள். நான் இந்த வீட்டில் வாழ்வதை மிகப் பெரும் பாக்கியமாகக் கருதுகின்றேன், என்று கூறினார்கள்.

இந்த உணர்ச்சிகரமான உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள்,

ஹாரிதாவே..! ஸைத்தை என்னுடைய மகனாக அறிவிக்கின்றேன், இதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள், இனி இவர் எனது குடும்பத்தைச் சேர்ந்தவர், நான் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறினார்கள்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின், ஸைத் (ரலி) அவர்களை நபித்தோழர்கள் அனைவரும், ஸைத் பின் முஹம்மத் (ரலி) என்றே அழைக்கத் துவங்கினார்கள். இந்தப் பழக்கமானது, இறைவசனம் மூலமாகத் தடை செய்யப்பட்டது, வளர்ப்புத் தந்தையானவர் சொந்த தந்தையாக மாட்டார், தனது பெயருக்குப் பின்னால் வளர்ப்புத் தந்தையின் பெயரை இணைத்துக் கூறுவதை, அந்த வசனம் தடை செய்ததிலிருந்து, இந்தப் பழக்கம் கைவிடப்பட்டது.

உஸாமா (ரலி) ஆப்ரிக்கா நாட்டைச் சேர்ந்தவராக இருந்தமையால், அவரது தோலின் நிறம் கறுப்பாக இருந்தது. ஆனால், இத்தகைய நிற மற்றும் இன வேற்றுமைகளைக் காரணமாக வைத்து, மனிதர்கள் தங்களுக்குள் பாகுபாடு காட்டிக் கொள்வதை இஸ்லாம் மிகவும் வன்மையாக கண்டிப்பதோடு, அத்தகைய செயல்களை தடையும் செய்திருக்கின்றது. ஒருவரது கண்ணியத்தை அளப்பதற்குரிய கருவியாக எது இருக்கின்றது என்று சொன்னால், அவரது இறையச்சம், இறைநம்பிக்கை, நேர்மை போன்ற நற்குணங்களே தவிர, பிறப்பினாலோ அல்லது தேச அடையாளத்தினாலோ ஒருவருக்கு சிறப்பு வந்துவிடுவது கிடையாது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

”ஒரு மனிதர் அழுக்கடைந்த நிலையில், முழுவதும் தூசி படிந்த நிலையில் இருந்து கொண்டு, அந்த நேரத்தில் (தன்னுடைய இறைவனான) அல்லாஹ்வை அழைத்துப் பிரார்த்தித்தாலும், அவரது பிரார்த்தனைக்கு பதிலளிக்கக் கூடியவனாக (அல்லாஹ்) இருக்கின்றான்””.

உஸாமா (ரலி) அவர்கள் என்ன நிறத்தில் இருந்தார் என்பதைப் பார்க்க வேண்டாம், அவரது நற்குணங்களையும், புத்திசாதுர்யத்தையும், உறுதியான தன்மையையும், அடக்கமான தன்மையையும், சுய மரியாதைக் குணத்தையும், இறையச்சத்தையும், ஜிஹாதில் கலந்து கொள்வதற்கான ஆர்வத்தையும், உபசரிக்கும் தன்மையையும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது வைத்திருக்கின்ற அளப்பரிய அன்பையும், இஸ்லாத்திற்காக எதையும் தியாகம் செய்வதற்குத் துணிந்து நிற்கும் அவரது மன உறுதியையும் தான் பார்க்க வேண்டும். இத்தகைய நற்குணங்கள் தான் உஸாமா (ரலி) அவர்களை மற்றவர்களைக் காட்டிலும் வேறுபிரித்துக் காண்பித்து நின்றது. இதன் காரணமாகத் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருவதனங்களினால், கீழ்க்கண்ட நற்சான்றுக்கு உரித்தானவர்களாகத் திகழ்ந்தார்கள் உஸாமா (ரலி) அவர்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

”ஓ என்னுடைய தோழர்களே..! உங்கள் அனைவரைக் காட்டிலும் உஸாமா எனக்கு மிகவும் நெருக்கமானவர், அவரை நல்ல முறையில் நடத்துங்கள்””.

உஸாமா (ரலி) அவர்களுக்கு அப்பொழுது இருபதே வயது தான் நிரம்பியிருந்தது. வாலிபப் பருவம் அரும்பு விட்டு ததும்பக் கூடிய பருவமது. அவரது தோற்றம் கருணையைப் பொழிவதாக இருந்தது. பிரபலமான தலைசிறந்த நபித்தோழர்களாகிய அபுபக்கர் சித்தீக் (ரலி), உமர் (ரலி) இன்னும் இவர்களைப் போன்ற பலர் இவரைத் தளபதியாக ஏற்று அணிவகுக்க, மிகவும் பொறுப்பு வாய்ந்த இன்னும் ஆபத்து மிகுந்ததொரு பணிக்கு இளமை ததும்பும் இந்தத் தோழரை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அனுபவமில்லாத இன்னும் இப்பொழுது தான் வாலிபத்தைத் தொட்டிருக்கின்ற இவரைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கின்றதே என்று மூத்த நபித்தோழர்கள் நினைத்தார்கள்.

இன்னும், உஸாமா (ரலி) அவர்களது தலைமையில் படையணி புறப்படுவதற்கு முன்பாகவே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணத்தைத் தழுவி விட்டார்கள், ஆனால் அவர்கள் இறப்பதற்கு முன்னால்.., எந்த நிலையிலும் உஸாமா (ரலி) அவர்களின் தலைமையில் நான் நியமித்த படையை நிறுத்தக் கூடாது, அந்தப் படை எந்தப் பணிக்காக நியமிக்கப்பட்டதோ, அந்தப் பணிக்கு திட்டமிட்டபடி அதன் பயணம் தொடர வேண்டும், அது அடைய வேண்டிய இடத்தை அடைந்தே ஆக வேண்டும் என்று கூறி விட்டார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறப்பதற்கு முன் கூறிச் சென்றபடி, உஸாமா (ரலி) அவர்களின் தலைமையில் முதல் கலீஃபாவான அபுபக்கர் (ரலி) அவர்கள் படையை அனுப்பி வைத்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்த செய்தியை ரோம மன்னன் கேள்விப்பட்டான், அத்துடன் உஸாமா (ரலி) அவர்களது தலைமையில் படை ஒன்று புறப்பட்டு, தாக்குதவற்குத் தயாரான நிலையில் சிரியாவின் எல்லையில் அணி வகுத்து நிற்பதாகவும் அறிந்து கொள்கின்றான். மிகவும் ஆச்சரியப்பட்டுப் போன அந்த ரோம மன்னன், அவர்களது தூதர் முஹம்மது இறந்ததன் பின்பும் எந்த நடவடிக்கையையும் கைவிடாமல் தொடர்கின்றார்களே..! என்ன மனிதர்கள் இவர்கள்..! என்றான் ஆச்சரியத்தோடு..!

முஸ்லிம்களின் இந்த நடவடிக்கை, ரோமப்படைகளை மனதளவில் கோழைத்தனத்தை ஏற்படுத்தியதோடு, மன்னனும் இதே நிலைக்குத் தள்ளப்பட்டான். இனியொரு முறை சிரியாவின் வழியாக அரேபியாவைத் தாக்கும் எண்ணத்துடன் படையைத் திரட்ட முடியாத அளவுக்கு, முஸ்லிம்களின் மேன்மையும், அவர்களது தன்னம்பிக்கையும் அந்த ரோமப் படைகளை வெகுவாகப் பாதித்து விட்டது. உஸாமா (ரலி) அவர்களது தலைமையில் சென்ற படை இறைவனது மாபெரும் கருணையினால் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது. ரோமப் படைகள் கடுமையான இழப்பைச் சந்தித்தன. அதேவேளையில் முஸ்லிம்களின் தரப்பில் ஒரு வீரர் கூட இழக்கப்படாத நிலையில் தாயகம் திரும்பினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறப்பதற்கு முன்னாள், உஸாமா (ரலி) அவர்களை ஒரு படைக்குத் தலைமையேற்க வைத்து அனுப்பி வைத்தார்கள். அவர் எதிரியை எதிர்த்துக் களம் புகுந்ததோடு, வெற்றி பெற்று மதீனா திரும்பினார். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்ததோடு, உஸாமா (ரலி) அவர்களைத் தனதருகில் அழைத்து அமர வைத்துக் கொண்டு,

உஸாமாவே..! போரின் பொழுது என்ன நடந்தது என்பதை இடைவிடாது எனக்குக் கூறுவீர்களாக..! என்றார்கள்.

எதிரிப் படையினர் தோற்று ஓடிக் கொண்டிருந்தார்கள், அவ்வாறு தோற்று ஓடிக் கொண்டிருந்தவர்களில் ஒருவரை நான் விரட்டிப் பிடித்தேன். என்னுடைய உடை வாளை அவரது பக்கம் திருப்பியவுடன், அந்த மனிதர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாகக் கூறி கலிமாவை முன் மொழிந்தார். ஆனால், நான் அவரைக் கொன்று விட்டேன்.

உஸாமா (ரலி) அவர்களின் இந்தப் போர் வர்ணனைகளைக் கேட்டுக் கொண்டிருந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சந்தோஷப்படவில்லை, கூறினார்கள்…!

உஸாமாவே..! ”வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை”” என்று அவர் கூறி பின்புமா நீங்கள் அவரைக் கொன்றீர்கள்? அல்லாஹ்வை தனது இறைவனாக ஏற்றுக் கொண்ட மனிதர் ஒருவரைக் கொல்லும் அதிகம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது? நியாயத் தீர்ப்பு நாளில் இது பற்றி இறைவன் கேட்கக் கூடிய கேள்விக்கு நீங்கள் என்ன பதிலை வைத்திருக்கின்றீர்கள்?

ஓ..! என்ன காரியம் செய்து விட்டீர்கள் உஸாமாவே..! உண்மையிலேயே நான் மிகவும் வேதனைப்படுகின்றேன்..! என்றார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இந்த வேதனை தரும் வார்த்தைகளை தனது மனக் கண் முன் நிறுத்தி, வேதனைப்பட்டார்கள். இன்னும், நான் இதற்கு முன் செய்திருக்கின்ற அத்தனை நன்மைகளும் பறிபோய் விட்டனவோ என்று ஆதங்கப்பட்டுக் கொண்டார்கள். இந்தச் சம்பவத்திற்குப் பின்னால் ஒரு முடிவுக்கு வந்தவர்களாக, ‘இனிமேல் என் வாழ்நாளில் சத்தியத்திற்குச் சான்று பகன்ற எவர் மீதும் நான் எனது வாளைத் தூக்க மாட்டேன்” என்று சத்தியம் செய்து கொண்டார்கள். இந்தச் சம்பவம் அவரது வாழ்நாள் முழுவதும் அவரது ஞாபகப்பரப்பில் வந்து வந்து போய்க் கொண்டிருந்தது. மறக்க முடியாத நினைவலைகளாய் ஆனது.

உஸாமா (ரலி) அவர்களால் கொலை செய்யப்பட்ட அந்த நபர், முஸ்லிம்களுக்குக் கடும் துன்பம் கொடுத்துக் கொண்டிருந்த காரணத்தால் தான் உஸாமா (ரலி) அவர்கள் இந்த முடிவினை எடுத்தார்கள். அந்த நபர், தனது வாள் முனையிலிருந்து தப்பித்து, மீண்டும் முஸ்லிம்களைத் தாக்குவதற்குண்டான சந்தர்ப்பம் கிடைக்கும் வரைக்கும், உயிர் வாழ்வதற்காகவே உஸாமா (ரலி) அவர்களின் வாளுக்குக் கீழாக இருக்கும் பொழுது சத்திய இஸ்லாத்திற்குச் சான்று பகரக் கூடிய கலிமாவை முன் மொழிந்திருக்கின்றார் என்று உஸாமா (ரலி) அவர்கள் நினைத்துக் கொண்டதே, இந்தச் சம்பவம் நடைபெறக் காரணமாக இருந்தது.

எனவே, தான் அன்றிலிருந்து உஸாமா (ரலி) அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள், இனி எந்தச் சந்தர்ப்பத்திலும், சத்தியத்திற்குச் சான்று பகர்ந்த மனிதர்களுக்கு எதிராக – ஒரு முஃமினுக்கு எதிராகத் தனது வாளைத் தூக்குவதில்லை என்ற முடிவினை தனது இதயப் பரப்பில் நீங்காத இடத்தில் புதைத்து வைத்திருந்தார்கள். மேலும், தனது வாழ்நாளில் ஏற்பட்ட அத்தனை சோதனையான தருணங்களிலும் கூட அதனை அடிக்கடி மீட்டிப் பார்ப்பவர்களாக இருந்தார்கள்.

அலி (ரலி) அவர்களுக்கும் அமிர் முஆவியா (ரலி) அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளின் காரணமாக ஏற்பட்ட கடுமையான சந்தர்ப்பங்களில், உஸாமா (ரலி) அவர்கள் இதில் தலையிடாமல் ஒதுங்கியே இருந்தார்கள். அலி (ரலி) அவர்களை மிகவும் அதிகமாக நேசிக்கக் கூடியவர்களாக இருப்பினும் கூட, அலி (ரலி) அவர்களுக்குச் சார்பாக களத்தில் இறங்க முன்வரவில்லை. காரணம், அலி (ரலி) அவர்களுக்கு எதிராக களத்தில் இருப்பவரும் ஒரு முஸ்லிம் என்பதே காரணமாகும். எனவே, உஸாமா (ரலி) அவர்கள் அலி (ரலி) அவர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதி, அதில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்கள் :

அலி (ரலி) அவர்களே..!

”இரத்த வெறி கொண்ட சிங்கத்தின் கோரப்பற்களுக்கு இடையே மாட்டிக் கொண்டீர்கள் என்று சொன்னால், உங்களது படையுடன் இணைந்து கொண்டு, உங்களுடன் இணைந்து போர் செய்யத் தயாராக இருக்கின்றேன், ஆனால் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலைமையைப் பொறுத்தவரை, என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். எந்த முஸ்லிமையும் எதிர்த்து எனது வாள் போரிடாது. ‘வணங்கத்தக்க இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை” என்று சத்தியத்திற்குச் சான்று பகர்ந்த மனிதன் ஒருவனை நான் கொன்ற சம்பவத்தின் மூலம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எனக்குக் கற்றுக் கொடுத்த பாடத்தை நான் இன்றும் மறக்கவில்லை””.

எனவே, மதினாவில் ஏற்பட்டிருந்த குழப்பமான இந்த காலகட்டத்தில், பலர் முஆவியா (ரலி) அவர்களுக்கு எதிராக உஸாமா (ரலி) அவர்களை இழுக்க முனைந்த பொழுதும், உஸாமா (ரலி) அவர்கள், அதற்கு இணங்க மறுத்தே விட்டார்கள். அவர்கள் கூறினார்கள் :

‘வணங்கத்தக்க இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை” என்று சத்தியத்திற்குச் சான்று பகர்ந்த எந்த முஸ்லிமிற்கு எதிராகவும் நான் போராட மாட்டேன், இதுவே என்னுடைய இறுதி முடிவாகும்” என்று கூறி விட்டார்கள்.

ஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள். ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் – அக்கிரமக்காரர்கள் தவிர (வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது. (2:193)

இவருடைய தோழர் ஒருவர் மேற்கண்ட வசனத்தைக் குறிப்பிட்டு, முஆவியா (ரலி) அவர்களுக்கு எதிராகப் போர் செய்ய அழைத்த பொழுது,

இது இறைநிராகரிப்பாளர்களை எதிர்த்துப் போராடுவதற்காக இறக்கப்பட்ட வசனமாகும், மேலும் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களது மார்க்கத்தைப் பின்பற்றி, இஸ்லாம் அனைத்து மார்க்கங்களையும் மிகைக்கும் வரைக்கும் அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்று தான் கட்டளையிடுகின்றதோ ஒழிய, முஸ்லிம்களை எதிர்த்துப் போராடுவதற்காக இறக்கியருளப்பட்ட வசனமல்ல இது என்று கூறி விட்டார்கள்.

உஹதுப் போருக்கு உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் தன்னுடைய வயதையொத்த சிறுவர்களுடன் கிளம்பினார்கள். அவர்களில் சிலரைப் போரில் கலந்து கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டார்கள், ஆனால் உஸாமா (ரலி) அவர்களையும் அவர்களுடன் சென்ற சிலரையும் குறைந்த வயதின் காரணமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் திருப்பி அனுப்பி விட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தலைமையில் நின்று போர் செய்யும் வாய்ப்பு பறிபோய் விட்டதே என்றும், போரில் கலந்து கொள்ள விடாமல் தன்னைத் திருப்பி அனுப்பி விட்டார்களே என்றும் உஸாமா (ரலி) அவர்கள் கண்ணீருடன் வீடு திரும்பினார்கள்.

அஹ்ஸாப் போரில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போது, எங்கே சிறுவன் என்று கூறி இப்பொழுதும் தன்னை திருப்பி அனுப்பி விடுவார்களோ என்று அச்சம் கொண்ட உஸாமா (ரலி) அவர்கள், தனது முன்பாதங்களை ஊண்றிக் கொண்டு, தன்னை உயரமாகக் காட்டிக் கொண்டு நடந்து வந்தார்கள். இதனைப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிரித்துக் கொண்டே, போரில் கலந்து கொள்ள அனுமதி தந்து விட்டார்கள். அப்பொழுது அவருக்கு பதினைந்து வயது தான் ஆகியிருந்தது.

ஹ{னைன் யுத்தத்தில் முஸ்லிம்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு, தோல்வியடைந்து விடுவமோ என்ற நிலையில் இருந்த பொழுது, மரண பயத்தையும் பொருட்படுத்தாமல் உஸாமா, (ரலி), அப்பாஸ் (ரலி), அபூ சுஃப்யான் (ரலி) மற்றும் இன்னும் சில நபித்தோழர்கள் களத்தில் நின்று போராடிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது கீழக்கண்ட செய்தியை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எதிரிகளுக்கு உரத்துச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

”நான் அல்லாஹ்வின் தூதராவேன், இது பொய்யல்ல,

நான் அப்துல் முத்தலிப் (சகோதரனின்) மகனாவேன்””.

முஅத்தா போரில் உஸாமா (ரலி) அவர்கள் தனது தந்தை ஸைத் பின் ஹாரிதா (ரலி) அவர்களின் தலைமையின் கீழ் நின்று போராடினார்கள். அப்பொழுது உஸாமா (ரலி) அவர்களுக்கு பதினெட்டு வயதே ஆகியிருந்தது. அந்தப் போரில் தனது தந்தை தனது கண்ணெதிரிலேயே வீர மரணம் அடைந்ததைப் பார்த்த அவர்கள், தனது வீரத்தையும், தைரியத்தையும் இழந்து விடவில்லை, மாறாக, ஜாஃபர் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்களின் தலைமையின் கீழ் போரிட்டு, அவரும் வீர மரணம் அடையும் வரைக்கும் போராடினார்கள். பின் அப்துல்லா பின் ரவாஹா (ரலி) அவர்கள் அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். அவர்களும் வெகுவிரைவிலேயே வீரமரணம் அடைந்து கொண்டார்கள். பின் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள், காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் கட்டளையை சிரமேற்கொண்டு உஸாமா (ரலி) அவர்கள் களத்தில் நின்று போராடினார்கள். ரோமர்களுடன் நடந்த அந்தப் போரில், பலத்த சேதங்களுக்கிடையில் எதிரிகளிடன் மாட்டிக் கொண்ட முஸ்லிம்களை, அவர்களது கிடுக்கிப்பிடித் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்து நல்லமுறையில் படையை மீட்டிக் கொண்டு வந்தார்கள் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள். இந்தப் போரில் இறந்த விட்ட தனது தந்தையை சிரியாவிலேயே நல்லடக்கம் செய்து விட்டு, மதீனாவிற்குத் திரும்பினார்கள் உஸாமா (ரலி) அவர்கள்.

ஹிஜ்ரி 11 ஆம் ஆண்டு ஸஃபர் மாதம் ரோமர்களுடன் போர் செய்வதற்காக ஒரு படையை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தயாரித்தார்கள். இந்தப் போருக்கான படையில் மிகப் பிரபலமான நபித்தோழர்களாகிய அபுபக்கர் (ரலி), உமர் (ரலி), ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) மற்றும் அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் (ரலி) போன்றவர்கள் கலந்து கொண்டிருக்க, அந்தப் படைக்கான தலைமைத் தளபதிப் பொறுப்புக்கு உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். அப்பொழுது உஸாமா (ரலி) அவர்களுக்கு இருபது வயதே ஆகியிருந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்களால் தளபதிப் பொறுப்பு வழங்கப்பட்ட உஸாமா (ரலி) அவர்களின் படைக்கு, பலகா என்ற இடத்தை வெற்றி கொள்ளும் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்தப் படை மதீனாவை விட்டும் கிளம்புதவற்கு முன்பே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சுகவீனமுற்றார்கள். இன்னும் அவர்களது உடல் நிலை மிகவும் மோசமானதன் காரணத்தால், அந்தப் படை மதீனாவை விட்டும் கிளம்பவில்லை. இதைப் பற்றி உஸாமா (ரலி) அவர்கள் கூறும் பொழுது,

”இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிகவும் சுகவீனமடைந்து கொண்டிருந்தார்கள், அந்த நிலையில் நான் அவர்களைப் பார்க்கச் சென்றேன். நோயின் கடுமையின் காரணமாக அவர்கள் மிகவும் பலவீனமான நிலையில், அமைதியாக இருந்தார்கள். தனது கையை உயர்த்தி எனது தோளின் மீது வைத்தார்கள், எனக்காக அவர்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன்””.

இதன் பின்பு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள். அதன் பின்பு, அபுபக்கர் (ரலி) அவர்கள் புதிய கலீஃபா (ஆட்சியாளர்) வாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். நபித்தோழர்கள் அனைவரும் அபுபக்கர் (ரலி) அவர்களிடம் பைஅத் என்ற உறுதிப் பிரமாணத்தை எடுத்துக் கொண்டார்கள். ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட அபுபக்கர் (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களால் உஸாமா (ரலி) அவர்களை தளபதியா நியமதித்து அனுப்புவதற்காகத் தயார் செய்யப்பட்ட படை மதீனாவை விட்டும் கிளம்பட்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்தார்கள். ஆனால், இந்தப் படை சற்று தாமதித்துச் செல்வது நல்லது என்று சில நபித்தோழர்கள் கருதினார்கள். அன்ஸார் தோழர்கள் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்து, இது குறித்து அபுபக்கர் (ரலி) அவர்களிடம் பேசுமாறு கேட்டுக் கொண்டார்கள். இந்தப் படையை இப்பொழுது அனுப்ப வேண்டுமென்று சொன்னால், உஸாமா (ரலி) அவர்களுக்குப் பதிலாக வயதிலும், அனுபவத்திலும் மூத்த ஒருவரை பொறுப்பில் நியமித்து படையை அனுப்பி வைக்குமாறு, அபுபக்கர் (ரலி) அவர்களிடம் கூறுமாறு அவர்கள் அறிவுறுத்தினார்கள். உமர் (ரலி) அவர்களிடமிருந்து இந்த அறிவுரையைக் கேட்ட அபுபக்கர் (ரலி) அவர்கள் மிகவும் கோபமடைந்தவர்களாக,

”ஓ இப்னு கத்தாப்..! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்தப் படைக்குத் தளபதியாக உஸாமா (ரலி) அவர்களை நியமித்திருக்க, அவரை நீக்கி விட்டு அவரது இடத்தில் இன்னொருவரை நியமிக்கச் சொல்லும் உங்களது அறிவுரை, உண்மையிலேயே வேதனைக்குரியது. இறைவன் மீது சத்தியமாக, என்னால் அவரை நீக்கி விட்டு அவரது இடத்தில் இன்னொருவரை நியமிக்க முடியாது!””.

உமர் (ரலி) அவர்கள் திரும்பி வந்த பொழுது, நடந்தவற்றைப் பற்றி ஏனைய தோழர்கள் விசாரித்த பொழுது, உஸாமா (ரலி) அவர்களைத் தளபதியாக ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. மேலும், இது குறித்து நான் கலீஃபா அபுபக்கர் (ரலி) அவர்களிடம் கேட்ட பொழுது, அவர்கள் மிகவும் கோபடைந்து விட்டார்கள் என்றும் அவர்களிடம் கூறினார்.

உஸாமா (ரலி) அவர்களின் தலைமயில் அமைக்கப்பட்ட அந்தப் படை இப்பொழுது மதீனாவை விட்டும் கிளம்பியது. அபுபக்கர் (ரலி) அவர்கள் அந்தப் படையுடன் சிறிது தூரம் நடந்து சென்று, படையினர் எவ்வாறு நடந்து கொள்கின்றார்கள் என்பதைப் பார்வையிட்டவர்களாகச் சென்றார்கள். அப்பொழுது உஸாமா (ரலி) அவர்கள் தனது குதிரையின் மீதேறிச் சென்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது :

ஓ..! கலிஃபா அவர்களே..! ஒன்று நீங்கள் இந்தக் குதிரையின் மீதேறி வாருங்கள் அல்லது நான் கீழிறங்கி உங்களுடன் நடந்து வருகின்றேன்”” என்றார்கள் உஸாமா (ரலி) அவர்கள்.

அப்பொழுது அபுபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

”நீங்கள் குதிரையிலிருந்தும் இறங்க வேண்டாம், இன்னும் நான் குதிரையின் மீதும் ஏற வேண்டாம். அல்லாஹ்வின் பாதையில் நடந்து சென்று அதன் மூலம் தூசியையும், அழுக்கையும் பெற்றுக் கொள்வதன் மூலம் அவனது திருப்பொருத்தத்தைப் பெற்றுக் கொண்ட கண்ணியமிக்கவர்களுடன் நானும் ஒருவனாக இருக்க வேண்டாமா?””.

மதீனாவின் புறநகர்ப் பகுதியின் சற்று தூரம் வரைக்கும் படையுடன் சென்ற அபுபக்கர் (ரலி) அவர்கள் பின்பு, உஸாமா (ரலி) அவர்களுக்கும் ஏனைய தோழர்களுக்கும் பிரியா விடை கொடுத்தார்கள். அப்பொழுது,

”உஸமாவே..! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்குக் கூறிய அறிவுரைகளின்படி நடந்து கொள்ளுங்கள்”” என்று கேட்டுக் கொண்டார்கள். பின்பு, அவர்களது காதுக்கருகில் சென்ற அபுபக்கர் (ரலி) அவர்கள்,

உங்களுடன் உமர் (ரலி) அவர்களை அழைத்துச் செல்லாமல் அவரை இங்கு விட்டு விட்டுச் செல்வது மிகவும் நல்லதாக இருக்கும். புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் என்னுடன் அவர் இருப்பது மிகவும் அவசியமானதொன்றென நான் கருதுகின்றேன் என்றார்கள்.

இதற்குச் சம்மதித்த உஸாமா (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்கள் மதீனாவிலேயே இருந்து அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு உதவிகரமாக இருந்து கொள்ளட்டும் என்று கூறி, உமர் (ரலி) அவர்கள் மதீனாவிலேயே இருந்து கொள்ளட்டும் என்று உத்தரவிட்டார்கள்.

இப்பொழுது உஸாமா (ரலி) அவர்கள் மதீனாவை விட்டும் வெளியே வந்து விட்டதோடு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறிய அறிவுரைகளின்படி, அதில் எதனையும் விட்டு விடாது அதனை நிறைவேற்றி வெற்றி பெறுவதற்குண்டான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார்கள். தங்களது முதல் நடவடிக்கையான சிரியாவைக் கைப்பற்றினார்கள். இதில் பலகா மற்றும் பாலஸ்தீனின் ஒரு பகுதி என்று முஸ்லிம்களின் வசம் வீழ்ந்தன. முஸ்லிம்களைப் பற்றிய பயம் ரோமர்களை ஆட் கொள்ள ஆரம்பித்தது. நெஞ்சங்கள் அச்சத்தால் நிரம்பி வழிய ஆரம்பித்தன. ரோமர்களை உஸாமா (ரலி) அவர்கள் தோல்வியுறச் செய்தார்கள்.

வெற்றி பெற்றதன் பின்னாள், தனது தந்தையின் குதிரையின் மீதேறி மிகவும் பாதுகாப்பாக மதீனா வந்து சேர்ந்ததோடு, அதிகமான போர்ச் செல்வங்களையும் தன்னுடன் மதீனாவிற்கு எடுத்து வந்தார்கள். அன்றைய காலத்தில் நடந்த போர்களில் கிடைத்த போர்ச் செல்வங்களில் எல்லாவற்றையும் விட, உஸாமா (ரலி) அவர்கள் தளபதியாகக் கலந்து கொண்ட இந்தப் போரில் தான் அதிகமாக செல்வங்கள் பெறப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.

இந்த வெற்றியின் பின்னாள், முஸ்லிம்கள் அனைவரும் உஸாமா (ரலி) அவர்களின் திறமையைக் கண்டு கொண்டதோடு, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தேர்வு மிகச் சரியானதே என்றும், இந்தக் கண்ணியம் யாவும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கே உரித்தானது என்று எண்ணிக் கொண்டார்கள்.

உமர் (ரலி) தனது ஆட்சிக் காலத்தின் பொழுது உஸாமா (ரலி) அவர்களுக்கு அதிகமான உதவித் தொகைகளை வழங்கினார்கள். இதனைக் கண்ட உமர் (ரலி) அவர்களது மகன் அப்துல்லா பின் உமர் (ரலி) ஆட்சேபம் தெரிவித்தார்கள். உஸாமா (ரலி) அவர்கள் ஐந்தாயிரம் தினார்களை உதவித் தொகையாகப் பெற்றுக் கொள்ளும் அதேவேளையில், அப்துல்லா பின் உமர் (ரலி) அவர்கள் இரண்டாயிரம் தினார்களை உதவித் தொகையாகப் பெற்று வந்தார்கள். எனவே, தன்னை தனது தந்தை உஸாமாவை விட மிகவும் தரத்தில் தாழ்த்தி வைத்துள்ளார்களே என்று கருதினார்கள். இன்னும் நான் உஸாமாவைப் போலவே அதிகமான போர்களிலும் கலந்து கொண்டிருக்கின்றேனே..! பின் எனக்கு மட்டும் ஏன் குறைந்த தொகை என்று கேட்டார்கள்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள், உனது தந்தையை விட உஸாமாவின் தந்தை இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். இன்னும் உஸாமாவும் கூட உங்களை விட இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்.

தனது தந்தையிடம் கிடைத்த இந்தப் பதிலின் மூலமாக, அப்துல்லா பின் உமர் (ரலி) அவர்கள் அமைதியடைந்தார்கள். தனக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை திருப்தியுடன் பெற்றுக் கொண்டார்கள்.

எப்பொழுதெல்லாம் உமர் (ரலி) அவர்கள் உஸாமா (ரலி) அவர்களைச் சந்திக்கின்றார்களோ அப்பொழுதெல்லாம்,

”தலைவரே..! உங்களது வரவு நல்வரவாகுக..!””

என்று கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.

உமர் (ரலி) அவர்களின் இந்தச் செயலைப் பார்த்த நபித்தோழர்கள் பலர் இதற்கான காரணத்தை வினவிய பொழுது, உங்களுக்குத் தெரியாதா என்ன? இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு போருக்கு இவரைத் தலைமைத் தளபதியாக நியமித்திருக்க, நான் அவருக்குக் கீழ் சாதாரண சிப்பாயாகக் கலந்து கொண்டிருக்கின்றேன், என்று பதில் கூறினார்கள்.

இறைநம்பிக்கையாளர்களின் அன்னையான ஆயிஷா (ரலி) அவர்கள், பனூ மக்சூம் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி திருடிய சம்பவத்தின் பின்னால் நடந்தவை குறித்து இவ்வாறு கூறுகின்றார்கள். இந்தத் திருட்டு வழக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன்னிலையில் வந்த பொழுது, இந்த வழக்கின் இறுதி முடிவு இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களின்படி, கையை வெட்டுவதாகத் தான் இருக்கும் என்பதை அறிந்து கொண்ட பனூ மக்சூம் குலத்தவர்கள், இது தங்களுடைய குலத்திற்கு மிகுந்த அவமானத்தைத் தேடித் தரக் கூடியதாக இருக்குமே என்று கவலை கொள்ள ஆரம்பித்தார்கள். எனவே, இது குறித்து தங்களுக்குள் விவாதித்த பனூ மக்சூம் குலத்தவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகப் பிரியமான தோழரான உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களை அணுகி, தங்களுக்காக இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பரிந்து பேசச் செய்து, அதன் மூலம் தண்டனையை ரத்து செய்து விடலாம் என்று முடிவு செய்து உஸாமா (ரலி) அவர்களை அணுகினார்கள்.

தங்களுக்கு நேரவிருக்கின்ற அவமானத்தைத் தவிர்க்கும் பொருட்டு, அச்சம் கலந்த பயத்துடன் இறைத்தூதர் (ஸல்) அவர்களை அணுகி, அந்தப் பெண்ணுக்காக பரிந்து பேசத் துவங்கினார்கள். இதற்கு உஸாமா (ரலி) அவர்களும் துணையாக அமைந்தார்கள். இவர்கள் என்ன சொல்ல வருகின்றார்கள் என்பது இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகத் தெளிவாக ஆகி விட்டதன் பின்னர், இவர்கள் இறைவனால் இறக்கியருளப்பட்ட தண்டனைச் சட்டத்தை அல்லவா மாற்றி அமைக்க வாதாடுகின்றார்கள் என்பதைப் புரிந்து கொண்டு, கோபம் கொண்டவர்களாக,

”உஸாமாவே..! அல்லாஹ்வினால் இறக்கியருளப்பட்ட இந்த தண்டனைச் சட்டத்தை மாற்றி அமைத்து விடலாம் என்பதை கனவிலும் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றை, எவ்வாறு பரிந்து பேசுவதற்காக வந்துள்ளீர்கள்? என்பது தெரியவில்லை. மேலும் கூறினார்கள், இத்தகைய செயல்கள் பனூ இஸ்ரவேலர்களிடம் காணப்பட்டன. உயர் குலத்தவர் ஒருவர் தவறு செய்தால், அதனை மறந்து விடுவார்கள். பொதுமக்களில் ஒருவர் அதனைச் செய்தால், தண்டனைச் சட்டங்கள் அவர் மீது பிரயோகிக்கப்படும். அதன் காரணமாகத் தான் அவர்கள் அழிவுக்கு உட்பட்டார்கள். இந்த வானங்களையும், பூமியையும் அதில் உள்ளவையும் எவனது கைவசத்தில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக, என்னுடைய மகள் பாத்திமா (ரலி) அவர்கள் தவறு செய்திருப்பினம், அவளது கையை நான் வெட்டியே தீருவேன்”” என்றார்கள்.

இந்த சம்பவத்திற்குப் பின்னும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உஸாமா (ரலி) அவர்களை மிகவும் நேசித்தார்கள், இத்தகைய செயல்பாடுகள் அவர் மீது கொண்டிருந்த பாசத்தை குறைத்து விடவில்லை.

விலையுயர்ந்த பொருள்கள் ஏதாவதொன்றை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பரிசாகப் பெற்றார்கள் என்று சொன்னால், அதனை உஸாமா (ரலி) அவர்களுக்கு வழங்கக் கூடியவர்களாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள். அவ்வாறே, ஸகம் இப்னு ஹஸ்ஸாம் என்பவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு வழங்கிய கயிற்றை, தான் அணிந்து விட்டு, பின்பு அதனை உஸாமா (ரலி) அவர்களுக்கு பரிசாக வழங்கி விட்டார்கள்.

தஹியா கல்பீ என்பவர் விலையுயர்ந்த ஆடை ஒன்றை இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குப் பரிசாக வழங்கினார்கள். அதனையும் அவர்கள் உஸாமா (ரலி) அவர்களுக்கு அனுப்பி வைத்தார்கள், இந்த வகையில் உஸாமா (ரலி) அவர்கள் மிகவும் அதிர்ஷ்டக்காரராக விளங்கினார்கள். எவரொருவரை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விரும்பினார்களோ, அவரை அல்லாஹ்வும் விரும்புகின்றான் என்ற சிறப்பு கௌரவத்தைக் காட்டிலும் ஒரு மனிதனுக்கு என்ன தான் வேண்டும்?

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணமடைந்த பொழுது, உஸாமா (ரலி) அவர்களுக்கு பதினெட்டு அல்லது இருபது வயதுதான் ஆகியிருக்கும். விளையாட்டுப் பருவங்கள் கடந்து அறிவு முதிர்ச்சி பெற்ற வாலிபப் பருவத்தில் அதிகமான நேரங்களை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்து கழிப்பதற்குண்டான சந்தர்ப்பம் கிடைக்காவிடினும், பல சந்தர்ப்பங்களில் மக்கள் பிரச்னைகளுக்கு இவருடைய கருத்தையும் கேட்பதுண்டு. உதாரணமாக,

பிளேக் நோய் பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஏதாவது கூறியிருக்கின்றார்களா என்பது பற்றி உங்களுக்கு ஞாபகமிருந்தால் சொல்லுங்களேன் என்று ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் உஸாமா (ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு உஸாமா (ரலி) அவர்கள்,

”பிளேக் என்பது தண்டனையாகும், இஸ்ராயிலின் மக்களில் ஒரு பிரிவினர் மீது இறைவன் இறக்கியருளிய வேதனையாகும் அது. எனவே, எந்தப் பகுதியாவது பிளேக் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றது என்று கேள்விப்பட்டால், அங்கு செல்வதைத் தவிர்ந்து கொள்ளவும். இன்னும் அந்த இடத்தில் நீங்கள் ஏற்கனவே இருந்து கொண்டிருக்கின்றீர்கள் என்று சொன்னால், அதிலிருந்து தப்பிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டாம்”” என்று கூறினார்கள்.

ஒருமுறை தனது தோட்டத்தில் இருந்த ஒரு பேரீச்ச மரத்தை வெட்டி அதன் நடுப்பகுதியில் அமைந்திருக்கும் குறுத்தை வெட்டிக் கொண்டிருந்தார்கள். இந்தச் செயலைப் பார்த்த உஸாமா (ரலி) அவர்களின் தோழர்கள் ஆச்சரியப்பட்டவர்களாக, விலையுயர்ந்த இந்த மரத்தை ஏன் இப்படி வெட்டிச் சாய்க்கின்றீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு, என்னுடைய பிரியத்திற்குரிய தாயார் அவர்கள் இந்தக் குறுத்தை சாப்பிட விரும்பிக் கேட்டு விட்ட பொழுது, அதனை நான் எவ்வாறு மறுக்க இயலும். எதுவொன்றை அவர்கள் கேட்டாலும், அது என்னுடைய சக்திக்கு உட்பட்ட நிலையில் இருக்கும் பொழுது, அதனை நிறைவேற்றாமல் நான் விடுவதில்லை என்று கூறினார்கள். இதனால் எந்த நஷ்டம் வந்தாலும் சரியே. அவர்கள் எனக்குச் செய்திருக்கும் உபகாரத்தோடு, இந்த பேரீச்ச மரத்தை ஒப்பிடும் பொழுது, இந்த பேரீச்ச மரம் ஒரு பொருட்டே அல்ல என்றும் கூறினார்கள்.

உஸாமா (ரலி) அவர்கள் என்ற ஆளுமையானது, இந்த உலகத்தையும் அதில் உள்ளவற்றையும் படைத்து பரிபாளித்து வரக் கூடியவனான அல்லாஹ்வினுடைய திருத்தூதர் (ஸல்) அவர்களால், நேசிக்கப்பட்டதொரு ஆளுமையாகும். சற்று முன் தான் வாலிப வாசலில் அடியெடுத்து வைத்திருந்த இந்த ஆளுமையை, ஒரு மிகப் பெரிய படைக்குத் தலைமைத் தளபதியாக நியமித்து அவரை வழியனுப்பி வைத்த கௌரவப்படுத்தினார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலும் சரி, அவர்கள் மரணமான பின்பும் சரி, இறைத்தூதர் (ஸல்) அவர்களாலும், இன்னும் அவர்களது தோழர்களான கலீபாக்களாலும் கௌரவமாக நடத்தப்பட்டார்கள்.

இத்தகைய சிறப்புகளுக்குச் சொந்தக்காரரான உஸாமா (ரலி) அவர்கள் முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தின் பொழுது, மதீனாவிற்கு அருகில் உள்ள ஜரஃப் என்ற இடத்தில் வைத்து, தனது அறுபதாவது வயதில் இறையடி சேர்ந்தார்கள்.

”நான் வந்து விட்டேன், உன்னுடைய அழைப்பை ஏற்று நிலையான சுவனத்தை நாடி..””

”நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக””.(89:28)

4. மத்னா பின் ஹாரிதாஹ் ஷீபானி (ரலி)

கைஸ் பின் ஆஸிம் தமீமி அவர்கள் கூறினார்கள் :

”மத்னா பின் ஹாரிதா (ரலி) அவர்கள் சாதாரண மனிதர் அல்ல, உண்மையில் அவர்.. பனூ ஷீபானி கோத்திரத்தின் மிக இள வயதுத் தலைவரும் இன்னும் அரேபியாவின் புகழ் மிக்க வீரரும் ஆவார்.””

ஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நகருக்கு வெளியே வந்து ஏனைய அரபுக் குலங்களை ஓரிறையின் பக்கமாக, இஸ்லாத்தின் பால் அழைப்பதற்காகப் புறப்பட்டார்கள், இவர்களுடன் அலி (ரலி) அவர்களும், இன்னும் அபுபக்கர் (ரலி) அவர்களும் உடன் சென்றார்கள். அப்பொழுது ஒரு இடத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது, அந்த இடத்தில் சிலர் அமர்ந்து தங்களுக்குள் பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட அபுபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

”ஓ..! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே.., இவர்கள் மிகவும் முக்கியமானவர்கள், இவர்கள் பெருமதிப்பு மிக்க மற்றும் மிகச் சிறப்பானதொரு குலத்துக்குச் சொந்தக்காரர்கள். இந்த உலகத்தின் அதிகாரமும், புகழும் இவர்களது மணிமுடியை அலங்கரித்த பெருமைக்குரிய குலத்தவர்களாவார்கள்”” என்றார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் அந்தக் குலத்தவர்களைச் சுட்டிக் காட்டிப் பெருமையுடன் கூறிக் கொண்டிருந்த அந்த சமயத்தில், பனூ ஷீபானிக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்களான மஃப்ரூக் பின் அம்ர், ஹானி பின் கபீஸா, நுஃமான் பின் ஷரீக் மற்றும் மத்னா பின் ஹாரிதாஹ் ஷீபானி ஆகியோர் அங்கு அமர்ந்திருந்தார்கள். அவர்களில் மஃப்ரூக் பின் அம்ர் என்பவர் மிகச் சிறந்த பாடகரும், இன்னும் விவாதக் கலையில் வல்லவருமாவார்.

அப்பொழுது அபுபக்கர் (ரலி) அவர்கள் மஃப்ரூக் அவர்களைப் பார்த்து உங்களது குலத்தவர்கள் எத்தனை நபர்கள் இருப்பீர்கள் என்று கேட்டார்கள்.

நாங்கள் ஆயிரம் பேர் இருக்கின்றோம் என்று பதிலுரைத்த மஃப்ரூக் அவர்கள், போரில் இந்த எண்ணிக்கை எவரும் மிஞ்சி விட முடியாது என்றும் பதிலிறுத்தார்.

போரில் நீங்கள் கலந்து கொண்டால் உங்களது நிலை எவ்வாறு இருக்கும் என்றார்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள்.

போரில் கலந்து கொண்டிருக்கும் பொழுது சினம், அதன் உச்சத்தில் இருக்கும்.

எங்களது குலத்தவர்கள் தங்களது குழந்தைகளைக் காட்டிலும், தங்களது போர்க் குதிரைகளைத் தான் அதிகம் நேசிக்கக் கூடியவர்கள், இந்த உலக வாழ்க்கையின் சொத்துக்கள் சுகங்களை விட எங்களது போர்க்கருவிகளே எங்களுக்கு மிகவும் பிடித்தமானவைகள் என்றும் மஃப்ரூக் பதிலிறுத்தார்.

போரில் இவர்கள் கலந்து கொள்ளும் பொழுது, சில சமயங்களில் போர் இவர்களுக்குச் சாதமாகவும், இன்னும் சில சமயங்களில் அவர்களது எதிரிகளுக்குச் சாதகமாகவும் இருந்திருக்கின்றன என்று இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்துக் கூறிய அபுபக்கர் (ரலி) அவர்கள், இந்த மக்களுக்கு ஏதேனும் நீங்கள் சொல்ல விரும்புகின்றீர்கள் என்பது போல், இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்தார்கள்.

அவர்களுக்கான செய்தி இதுதான்,

வணங்கப்படுவதற்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை”” என்றார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.

குறைஷியர்கள் இஸ்லாத்தை தேர்வு செய்து கொள்வதற்குப் பதிலாக அதனை உதாசினம் செய்து விட்டார்கள். அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராக கலகம் புரிவதற்கே முடிவு செய்துள்ளார்கள். ஆனால், நீங்கள் எங்களது இந்த அழைப்பிற்கு ஒத்துழைப்பீர்கள் என்று நினைக்கின்றேன் என்றார்கள்.

மஃப்ரூக் கேட்டார், உங்களது இந்த செய்தியை அடுத்து வேறு ஏதேனும் தகவல்கள் உள்ளதா என்றார்.

இதன் பின்னர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கீழ்க்கண்ட வசனத்தை அவர்களிடம் ஓதிக் காண்பித்தார்கள் :

”வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் – ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்டையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் – கொலை செய்யாதீர்கள் – இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான். அநாதையின் பொருளின் பக்கம் அவன் பிராயத்தை அடையும் வரையில் அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள்; அளவையும், நிறுவையையும் நீதத்தைக் கொண்டு நிரப்பமாக்குங்கள்; நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் – நியாயமே பேசுங்கள்; அல்லாஹ்வுக்கு (நீங்கள் கொடுத்த) உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். நீங்கள் நினைவு (கூர்ந்து நடந்து கொள்ளும் பொருட்டே அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கிறான். நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்;. ஆகவே இதனையே பின்பற்றுங்கள் – இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் – அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான். (6:151-153)

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருவதனங்களிலிருந்து இறைவசனங்களைச் செவிமடுத்த அவர்கள், இந்த உலக வாழ்க்கையின் வளங்களைப் பெருக்கிக் கொள்வதற்காக கூறப்படுகின்றவருடைய சொற்களல்ல இவை என்று கூறியவர்களாக, இஸ்லாத்தைத் தங்களுடைய வாழ்வியல் நெறியாக அந்த மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். அவர்களுடைய பரம்பரை கண்ணியமிக்கது, இனிமையான மக்களும், சாதாரண மக்களும், பிறரைக் கவரக் கூடிய மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள்.

உண்மையிலேயே நாங்கள் இந்த இறைவசனங்களை இன்னும் அதிகமாகவே செவிமடுக்க விரும்புகின்றோம், இறைவனுடைய திருவசனங்களுக்கு முன்னால் நாங்கள் எங்களது இதயங்களைப் பறி கொடுத்தே விட்டோம் என்றார்கள். அதன் பின்னர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கீழ்க்கண்ட இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள் :

நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்; அன்றியும், மானக்கேடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் – நீங்கள நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான். (16:90)

மஃப்ரூக் அவர்கள் இந்த இறைவசனங்களைச் செவிமடுத்ததன் பின்னர் ஆச்சரித்தால் ஆட் கொண்டவராகக் கூறினார் :

மனிதர்களை உயர்ந்த நல்லொழுக்கத்தின் பால், நடத்தைகளின் பால் அழைக்கின்ற அதனைப் பின்பற்றி அதன் மீது செயல்படுதவற்கு உற்சாகமூட்டுகின்ற இப்படிப்பட்டதொரு கருத்துரையை நான் நிச்சயமாக இறைவன் மீது சத்தியமாக இதற்கு முன் எங்கும் கேட்டதே இல்லை.

பின்னர், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பக்கமாகத் திரும்பிக் கூறினார் :

இவர் தான் ஹானி பின் கபிஸாஹ், இவரும் என்னைப் போல நம்பிக்கை கொண்டு, ஒரே மார்க்கத்தை நம்புபர். அவர் என்ன கூற வருகின்றார் என்பதைத் தங்களால் கேட்க முடியுமா? என்றார்.

அதனை ஏற்றுக் கொள்ளுமுகமாக தனது கவனத்தை ஹானி அவர்களது பக்கம் மிகவும் ஆர்வத்தோடு திரும்பினார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ஹானி கூறினார் :

நீங்கள் சொன்னவற்றை நான் மிகவும் கவனமாகவும், தொடர்ந்து கேட்டுக் கொண்டு தான் இருக்கின்றேன். உங்கள் எடுத்து வைத்த ஒவ்வொரு சொல்லும் சத்தியமானவை, இன்னும் வாய்மை வாய்ந்தவை. நீங்கள் சற்று முன் ஓதிக் காட்டிய இறைவசனங்கள் எங்களது இதயங்களை ஆட் கொண்டு விட்டன, மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டன. ஆனால், நாங்கள் எங்களை இறுதி முடிவுக்கு வெகு விரைவில் வந்து விட இருக்கின்றோம். எங்களது கருத்துக்களை எங்களது குலத்தைச் சேர்ந்த ஏனையோர்களிடமும் நாங்கள் கலந்து பேச இருக்கின்றோம். அவரசப்பட்டு எடுக்கக் கூடிய சில முடிவுகள் விரும்பத்தகாத சில விளைவுகளை ஏற்படுத்தி விடலாம். எனவே தயவுசெய்து எங்களுக்கு சற்று ஆலோசனை செய்து கொள்வதற்கு அவகாசம் தாருங்கள் என்றார்.

அப்பொழுது, எங்களது குலத்தின் பெருமை மிக்க வீரரும், எங்களது மனங்கவர்ந்தவரும், இன்னும் எங்களது குலத்திற்கே பெருமை சேர்க்கக் கூடியவருமான மத்னா அவர்கள் என்ன சொல்ல வருகின்றார் என்பதையும் கேட்டுக் கொள்ளுங்கள் என்றார்.

இப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது கவனத்தை மத்னா அவர்களின் பக்கமாகத் திருப்பினார்கள், மத்னா கூறினார் :

நீங்கள் பேசியவற்றை நானும் செவிமடுத்தேன், நான் எதனைக் கேட்டேனோ அதனை நான் மிகவும் விரும்புகின்றேன். உங்களது ஒவ்வொரு வார்த்தைகளும் எங்களது மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி விட்டன. ஆனால் உங்களது இந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளும் சக்தி, அதிகாரம் இப்பொழுது எங்களது கைகளில் இல்லை என்பதே உண்மையாகும். நாங்கள் ஈரானியப் பேரரசுடன் செய்து கொண்டிருக்கும் ஒப்பந்த்தின் அடிப்படையில் புதிதாக உருவாகும் எந்த இயக்கத்தையும் ஏற்றுக் கொள்ளவோ அல்லது புதிதாக ஆரம்பிக்கப்படும் எந்த இயக்கத்துக்கு உதவிக் கொள்ளவோ எங்களால் இயலாது. உங்களது இந்தப் புதிய அழைப்பை ஈரானியப் பேரரசர் கூட ஏற்றுக் கொள்வத்றகான வாய்ப்பு இல்லை என்றே கருதுகின்றேன். அவர் அவ்வாறு ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அதுவே எங்களுக்கு மிகவும் ஆபத்தானதாக முடிந்து விடும். ஆனால் உங்களுக்கு ஒன்றை நாங்கள் சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம், இந்த அரேபியப் பகுதியில் உங்களுக்கு யாரேனும் துன்பம் விளைவிப்பார்களென்றால், உங்களது அழைப்புப் பணிக்கு இடையூறு செய்வார்களென்றால் எங்களால் முடிந்த அளவுக்கு உங்களுக்கு நாங்கள் உதவுவோம் என்ற வாக்குறுதியை மட்டும் இப்பொழுது எங்களால் தர முடியும் என்று கூறினார்.

மத்னா அவர்களது உரையைக் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனவர்களாக, மத்னா பின் ஹாரிதா ஷீபானி அவர்களே..,

இது மிகவும் வித்தியாசமாக இருக்கின்றதே.., நீங்கள் சத்தியம் இது தான் என்று ஒப்புக் கொண்டு விட்ட பிறகு, அதனை ஏற்றுக் கொள்ள என்ன தயக்கம். சத்தியம் இது தான் என்று ஒப்புக் கொண்டதன் பின்னர், அதனை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதே முரண்பாடனதல்லவா? எப்பொழுது நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, அதன் சட்ட திட்டங்களையும் முழு மனதுடன் ஏற்றுக் கொள்கின்றீர்களோ அப்பொழுது தான் அந்த மார்க்கத்திற்கு எதிரானவற்றிற்கு எதிராக, அதனைப் பாதுகாப்பதற்கு முன்வர முடியும்”” என்றார்கள்.

மத்னா பின் ஹாரிதாஹ் அவர்களின் தயக்கத்திற்குப் பின்பாக, அவர்கள் உதவுவதாகச் சொன்ன வாக்குறுதியை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொள்ள இயலாது என்று கூறி விட்டார்கள்.

இன்னும் மிகக் குறுகிய காலத்தில் முழு ஈரானியப் பேரரசையும் முஸ்லிம்களின் கைப்பிடிக்குள் இறைவன் விழச் செய்து விடுவதை உங்களது கண்களாலேயே நீங்கள் காணப் போகின்றீர்கள் என்றால், அதனை நீங்கள் பார்க்கத்தான் போகின்றீர்கள் என்றால் உங்களது நிலை எவ்வாறு இருக்கும் என்று கேட்டார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள். அவர்களது அத்தனை வளங்களும், விவசாயம், பொருளாதாரம் ஆகிய அனைத்தும் முஸ்லிம்களின் வசமாகி விடும். இதனைக் கேட்ட பின்பும் நீங்கள் ஓரிறைவனாகிய அல்லாஹ்வை வணங்க மாட்டீர்களா, அவனது புகழைப் பாட மாட்டீர்களா? என்றார்கள்.

ஆச்சரியம் கலந்த குரலில், ”நீங்கள் சொன்ன அனைத்தும் நிச்சயம் நடந்தேறுமா”” என்றார் நுஃமான் பின் ஷிரீக் அவர்கள்.

ஈரானியப் பேரரசு வீழ்ந்து முஸ்லிம்களின் கைகளுக்குள் வந்து விட்டால், அதன் கண்ணியமும், அதன் அலங்காரங்களும் தான் என்ன..! அந்த நேரத்தில் உங்களது மதிப்பு தான் என்ன..! என்று வியந்த அவரைப் பார்த்து,

அவர்களது அந்த ஆச்சரியம் உண்மை தான் என்பதை மெய்ப்பிக்கு முகமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கீழ்கண்ட வசனத்தை ஓதிக் காட்டினார்கள் :

நபியே! நாம் நிச்சயமாக உம்மைச் சாட்சியாகவும்; நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம். இன்னும் அல்லாஹ்வின் பால் (மனிதர்களை) – அவன் அனுமதிப்படி – அழைப்பவராகவும்; பிரகாசிக்கும் விளக்காகவும் (உம்மை அனுப்பியுள்ளோம்.) (33:45-46)

அதன் பின்னர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது ஆருயிர்த் தோழர் அபுபக்கர் (ரலி) அவர்களுடன் தனது இருப்பிடத்திற்கு வந்து விட்டார்கள். பனூ ஷீபான் கோத்திரத்தவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அந்த நிகழ்ச்சி நடந்த அந்த நேரத்தில், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அளித்த இறுதிச் செய்தியில் அவர்களுக்கு இந்த உலக வாழ்க்கையிலேயே ஒரு மிகப் பெரிய வெற்றிக்கான நன்மாரயத்தை அறிவித்து விட்டுத் தான் வந்தார்கள்.

இப்னு அதீர் அவர்கள் கூறுகின்றார்கள், பனூ ஷீபானி குலத்தவர்களில் ஒருவரான ரபீஆ என்பவர் ஈரானியர்களுக்கு எதிரான போரில் கலந்து கொண்ட பொழுது, ஈரானியர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள், அப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘இன்றைய தினம் அரபுக்கள் அரபுல்லாத ஒரு கூட்டத்திற்கு எதிராக பழி தீர்த்துக் கொண்டார்கள் என்றார்கள்.”

நம்முடைய இந்த வரலாற்றுத் தொடர் நாயகரான மத்னா அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்த மாத்திரத்திலேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை எனினும், அவரது கோத்திரத்தவர்கள் விரைவில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வார்கள், இன்னும் இஸ்லாமிய ஜிஹாதில் கலந்து கொண்டு மிகப் பெரிய வெற்றியை ஈட்டுவார்கள் என்றதொரு நன்மாரயத்தை அப்பொழுது பெற்றுக் கொண்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களால் வழங்கப்பட்ட நன்மாராயம் பின்னாளில் உண்மையாகவே நிறைவேறியது. பின்னாளில் மத்னா அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, இஸ்லாமிய சாம்ராஜ்யத்திற்கு மிகவும் வலிமை சேர்ப்பவராகவும், அவரது வருகையில் முஸ்லிம்களின் பலமும் அதிகரித்தது என்றும் கூறலாம்.

சில வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதினாவிற்கு ஹிஜ்ரத் செல்வதற்கு முன்பாகவே இந்தக் கோத்திரத்தவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்று குறிப்பிடுகின்றார்கள். பனூ ஷீபானி கோத்திரத்தாரைச் சந்தித்து விட்டு வந்த பின், மத்னா அவர்களின் குழு தான் முதன் முதலாக இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தது என்றும் கூறப்படுகின்றது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எடுத்து வைத்த இறைவசனங்கள் தான், அவர்களது மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இஸ்லாம் என்பது சத்திய மார்க்கம் என்பதை உளப்பூர்வமாக அவர் ஆரம்பத்திலேயே ஏற்றுக் கொண்ட போதிலும், பல்வேறு புறநிலைக் காரணங்களுக்கு அதனை வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்தார்.

அல்லாஹ்வையும், அவனது தூதரான இறைத்தூதர் (ஸல்) அவர்களையும் ஏற்றுக் கொண்டு விட்டதன் பின்னர், இஸ்லாத்தினைக் கைவிட்டு விட்டு மறுதளித்தவர்களை அடக்குவதற்காக அபுபக்கர் (ரலி) அவர்கள் பதினொரு படைகளை உருவாக்கினார்கள். அந்தக் கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்காக பல்வேறு பகுதிகளுக்கும் இந்தப் படைகள் அனுப்பி வைக்கப்பட்டன, இவர்கள் இஸ்லாத்தைப் பாதுகாக்கும் பணியில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றார்கள்.

 • முதல் படையை அபுபக்கர் (ரலி) அவர்கள் காலித் பின் வலீத் (ரலி) அவர்களது தலைமையில், தலீஹா பின் கவாலத் என்பவனை ஒடுக்குவதற்காக அனுப்பி வைத்தார்கள்.
 • முஸைலமா கத்தாபை ஒடுக்குவதற்காக இக்ரிமா (ரலி) அவர்களது தலைமையில் படை சென்றது
 • யமன் தேசத்தின் அஸ்வத் அன்ஸி என்பவனை ஒடுக்குவதற்காக முஹாஜிர் பின் அபூ உமைய்யா (ரலி) அவர்களது தலைமையில் படை அனுப்பி வைக்கப்பட்டது.
 • சிரியாவில் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக காலித் பின் ஸயீத் பின் ஆஸ் (ரலி) அவர்கள் தலைமையில் படை அனுப்பி வைக்கப்பட்டது.
 • பனூ குதாஆ என்ற கோத்திரத்தாரை அடக்குவதற்காக உமைர் பின் ஆஸ் (ரலி) அவர்களது தலைமையில் படை அனுப்பி வைக்கப்பட்டது.
 • ஹ{தைஃபா பின் முஹ்ஸின் (ரலி) அவர்களை ஓமன் தேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 • மெஹ்ரா மக்களை எதிர்கொள்வதற்காக அரஃபஜா பின் ஹாரிஸ்மாஹ் (ரலி) அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
 • யமனின் ஒருபகுதியாகிய தஹாமா மக்களை எதிர்கொள்வதற்காக அபுபக்கர் (ரலி) அவர்கள் சுவைத் பின் மக்ரான் (ரலி) அவர்களை அனுப்பி வைத்தார்கள்.
 • பனூ ஸலீம் மற்றும் பனூ ஹவஸான் ஆகியோர்களுக்கு எதிராக தரீஃபா பின் ஹாதர் (ரலி) அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
 • இக்ரிமா பின் அபூஜஹ்ல் (ரலி) அவர்களுக்கு உதவுவதற்காக ஸர்ஜீல் பின் ஹஸனா (ரலி) அவர்களது தலைமையில் படை அனுப்பி வைக்கப்பட்டது.
 • பஹ்ரைன் தேசத்திற்கு ஆலா பின் ஹத்ரமி (ரலி) அவர்களது தலைமையில் படை அனுப்பி வைக்கப்பட்டது.

மத்னா பின் ஷீபானி (ரலி) அவர்களது கோத்திரத்தாரின் வாழ்விடங்கள் பஹ்ரைன், யமாமா மற்றும் ஈரான் தேசத்தினை ஒட்டியதாக அதன் எல்லைப் புறங்களில் அமைந்திருந்தது. கிளர்ச்சியாளர்களான பஹ்ரைனின் பனூ ரபீஆ கோத்திரத்தாரை வெற்றி கொள்வதற்கு ஏதுவாக ஆலா பின் ஹழ்ரமி (ரலி) அவர்கள் மத்னா (ரலி) அவர்களின் துணையைப் பெற்றுக் கொள்வதற்காக அவர்களுடன் தொடர்பு கொண்டார்கள். மாபெரும் வீரர்களான பனூ ஷீபானி கோத்திரத்தார்கள் மத்னா (ரலி) அவர்களின் தலைமையில் ஆலா பின் ஹழ்ரமி (ரலி) அவர்களது படையுடன் இணைந்து கொண்டார்கள். இந்தப் படைகள் கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதில் மிக முக்கியப் பங்காற்றியது. மத்னா (ரலி) அவர்கள் மிகச் சிறந்த நேசப் படை என்பதை அந்தப் போரில் நிரூபித்துக் காட்டியதோடு மட்டுமல்லாது, பஹ்ரைனின் இரண்டு நகரங்களான கதீஃப் மற்றும் ஹஜ்ர் ஆகியவற்றையும் கைப்பற்றினார்கள். அதன் பின்னர் ஈரானை வெற்றி கொள்வதற்கும் அவர் உதவினார், இன்னும் வளைகுடாப் பகுதியின் வடக்கு எல்லைப் பகுதியாகிய யூப்ரடிஸ் மற்றும் தஜ்லா நதிகள் கடலில் கலக்கும் முகத்துவாரம் வரைக்கும் இஸ்லாமியப் படைகள் செல்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார்.

மிகச் சிறந்த வரலாற்று அறிஞரான வப்ர், காஸிம் பின் ஆஸிம் அத்தமீமி அவர்கள் மத்னா அவர்களது தாக்கம் எந்தளவுக்கு இருந்தது என்பதை இவ்வாறு குறிப்பிடுகின்றார் :

”மத்னா பின் ஹாரிதா (ரலி) அவர்கள் சாதாரண மனிதர் அல்ல, உண்மையில் அவர்.. பனூ ஷீபானி கோத்திரத்தின் மிக இள வயதுத் தலைவரும் இன்னும் அரேபியாவின் புகழ் மிக்க வீரரும் ஆவார்.””

மத்னா (ரலி) அவர்கள் அபுபக்கர் (ரலி) அவர்களின் அவைக்கு வந்து, ஈரானோடு போர் புரிவதற்கு அனுமதி அளிக்குமாறு தானே முன்வந்து அனுமதி கேட்டார்கள். அதற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டது. ஈரான் தேசத்தோடு முஸ்லிம்கள் போர் செய்து அந்த தேசத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆர்வத்தை முதன் முதல் முஸ்லிம்களுக்கு ஊட்டியவரே மத்னா (ரலி) அவர்கள் தான். இன்னும் ஈரானுக்கு எதிராக அவர் போர் முரசம் ஒலிக்கச் செய்த அந்த நாட்களில், ஈரானைப் பற்றிப் பேசுவதற்கும் அதன் மீது போர் முஸ்தீபு செய்வதற்கும் யாருக்குமே துணிச்சல் இருந்ததில்லை, அந்த அளவுக்கு ஈரானானது மிகவும் பலமிக்க, எதிரிகளை அச்சம் கொள்ளச் செய்யக் கூடிய அளவுக்கு பலம் பொருந்தியதாகவும் இருந்தது. மத்னா (ரலி) அவர்களின் இந்த துணிச்சல் மிக்க நடவடிக்கையின் ஆரம்பம் தான், ஈராக் முஸ்லிம்களின் வசமானது, ஈராக் முதலில் வெற்றி கொள்ளப்பட்டது.

இடைவிடாது தொடர்ந்தேர்ச்சியாக ஈராக் மீது மத்னா அவர்கள் போர் தொடுத்த வண்ணம் இருந்தார்கள். தனது போர் நடவடிக்கைகளை விரைவு படுத்துவதற்காக மேலும் படைகளை அனுப்பி வைக்குமாறு அபுபக்கர் (ரலி) அவர்களிடம் மத்னா (ரலி) அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள். எதிரிகள் மூச்சு விடுவதற்குக் கூட அவர்கள் சந்தர்ப்பம் வழங்கப்பட்டு விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார்கள். யமாமா வில் தங்கி இருந்த காலித் பின் வலீத் (ரலி) அவர்களை, ஈராக்கின் மீது முற்றுகையிட்டுள்ள மத்னா (ரலி) அவர்களுக்கு உதவிக்குச் செல்லும்படி உத்தர விட்டார்கள். இன்னும் மத்னா (ரலி) அவர்களின் தலைமையின் கீழ் நின்று பணியாற்றும்படி காலித் பின் வலீத் (ரலி) அவர்களுக்கு அபுபக்கர் (ரலி) உத்தரவிட்டிருந்தார்கள். விரைந்து வந்து ஈராக்கை அடைந்த காலித் பின் வலீத் (ரலி) அவர்கள், ஈராக்கிய படைத்தலைவனான ஹர்மூஸ் க்கு இவ்வாறு கடிதம் எழுதினார்கள் :

காலித் பின் வலீத் ஆகிய நான் ஹர்மூஸ் க்கு எழுதிக் கொள்வது,

”சத்தியத்தை ஏற்றுக் கொள்பவர்களுக்கு சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக. இஸ்லாத்தை ஏற்றுக் கொள், அதுவே உமக்கு மிகவும் நல்லது. எங்களது பாதுகாப்பின் கீழ் இருந்து கொள்வதற்காக உனக்கும் உன்னுடைய மக்களுக்குமாக வரியைச் செலுத்தி விடு. எங்களது இந்த வேண்டுகோளை நீ ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அதன் விளைவு எதிர்கொள்ளத் தயாராக இரு. வாழ்வதை விட உன்னதமான நோக்கத்திற்காக தங்களது இன்னுயிரை இழக்கவும் தயாராக இருக்கக் கூடியதொரு கூட்டத்துடன் நான் உன்னுடைய எல்லைப் பகுதிக்கே வந்து விட்டேன்.””

கடிதத்தைப் படித்து முடித்த ஹர்மூஸ் கோபம் தலைக்கேறியவனாக தனது படைகளை புகழ்மிக்க நகரமான கத்மியா, பஸராவிற்குள் அருகில் உள்ள நகரத்திற்கு மிகவும் படாடோபான ஆர்ப்பாட்டங்களுடன் தனது படைக்குத் தலைமை தாங்கி வந்தான். காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் தனது படையை மூன்று பிரிவாகப் பிரித்து ஒரு படையை மத்னா (ரலி) அவர்களின் தலைமையில் அனுப்பி வைத்தார்கள். மிகவும் வீராவேஷத்துடன் மத்னா (ரலி) அவர்களின் தலைமையில் களம் புகுந்த முஸ்லிம்கள், ஈரானியப் படைகளை ஓட ஓட விரட்டி அடித்தார்கள். மிகப் பெரிய செல்வங்களைப் போர்ப் பரிசாகப் பெற்றுக் கொண்டார்கள். ஒவ்வொரு முஸ்லிம் வீரரும் போர்த் தளவாடங்களைப் பரிசாகப் பெற்றுக் கொண்டதோடு, ஓராயிரம் திர்ஹம்களையும் பரிசாகப் பெற்றுக் கொண்டார்கள். மத்னா (ரலி) அவர்கள் போர்தளவாடக் கருவிகளைப் பெற்றுக் கொண்டதோடு நின்று கொண்டார், பண வெகுமதிகளைப் பெற்றுக் கொள்வதில் அவர் ஆர்வம் காட்டவில்லை, அது அவருக்கு முக்கியமானதுமன்று, அல்லாஹ் இஸ்லாமியப் படைகளுக்கு அளித்த வெற்றியே தனக்கு இறைவன் அளித்த மிகப் பெரிய பரிசாக அவர் கருதியதே அவர் உலக ஆதாயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமைக்கான காரணமாக இருந்தது என்றால் அதில் மிகையில்லை.

அல் ஸலாஸில் போரில் பெரு வெற்றி பெற்றதன் பின்னர் ஓய்வுக்காக மஸார் பகுதியை நோக்கிச் சென்ற ஈரானியப்படைகள் அங்கிருந்து கொண்டு, நதிக் கரையில் ஒன்றுகூடி மீண்டும் தங்களது படைகளை ஒருங்கிணைக்க ஆரம்பித்தார்கள். இன்னொரு போரை ஆரம்பிப்பதற்கு முன்பதாக அவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டு, தங்களை முழு அளவில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களது திட்டமாக இருந்தது.

மத்னா பின் ஹாரிதா (ரலி) அவர்களுடைய சகோதரரான மானி பின் ஹாரிதா (ரலி) அவர்கள் அந்த நதிக்கரையில் ஒன்று கூடியிருந்த படைகள் என்னதான் செய்து கொண்டிருக்கின்ற என்பது பற்றி நோட்டம் விட்ட பொழுது, அவர்கள் எந்த நேரமும் இஸ்லாமியப் படைகள் மீது தாக்குதல் தொடுக்கலாம் என்ற அவர்களது நோக்கத்தைப் புரிந்து கொண்டார்கள். அவர்கள் தாங்கள் இழந்த பகுதிகளை எப்படியும் மீட்டாக வேண்டும், தோல்விக்கு பதிலடி கொடுத்தாக வேண்டும் என்று ஈரானியர்களது உள்ளத்தில் கனன்று கொண்டிருந்த வஞ்சக நெருப்பை அறிந்து கொண்ட மானி பின் ஹாரிதா (ரலி) அவர்கள், ஈரானியர்களின் நோக்கம் இது தான் என்பதை காலித் பின் வலீத் (ரலி) அவர்களிடம் தெரிவித்தார்கள். அதனைக் கேட்ட காலித் பின் வலீத் (ரலி)அவர்கள் சற்றும் தாமதிக்காது மத்னா மற்றும் மானி பின் ஹாரிதா (ரலி) ஆகியோர்களையும் உள்ளடக்கிய படையை உடனே கிளப்பி, ஈரானியர்கள் மீது தாக்குதல் தொடுக்கப் பணித்தார்கள். முஸ்லிம்களின் தாக்குதலில் நிலைகுலைந்து போன ஈரானியர்கள் இம்முறையும் முஸ்லிம்களிடம் தோற்றுப் போனார்கள்.

போரில் கைப்பற்றப்பட்ட பொருட்களை மதீனாவிற்கு அனுப்பி வைத்து விட்டு, மஸார் லிலேயே காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் தங்கி விட்டார்கள். இந்தப் போரினை வரலாறு ‘தானி” என்றழைக்கின்றது. காரணம், இந்தப் போர் தானி என்ற ஆற்றின் கரையினிலே நடந்தது. இன்னும் மத்னா (ரலி) அவர்களின் வீரமும், அவர்களது அனுபவமும் மிகச் சிறந்த வெற்றியை முஸ்லிம்களுக்குப் பெற்றுத் தந்தது.

மிகவும் கடினமாக சூழ்நிலைகளில் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் மத்னா (ரலி) அவர்களிடம் கலந்தாலோசனை செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். இன்னும் பல சந்தர்ப்பங்களில் வெற்றி கொள்ளப்பட்ட பகுதிகளில் மத்னா (ரலி) அவர்களை நிர்வாகியாகவும், தனது பிரதிநிதியாகவும் மத்னா (ரலி) அவர்களை நியமித்து விட்டு, படைகளுடன் தான் முன்னேறிச் சென்றிருக்கின்றார்கள் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள்.

அவ்வாறு காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் ஹிராத் என்ற பகுதியை முற்றுகையிடுவதற்காக அந்தப் பகுதிக்கு சென்றடைந்த பொழுது, அந்தப் பகுதியே ஆள் அரவமற்ற நிலையில் வெறிச்சோடிக் கிடந்தது. பின்னர் தான் அவர்கள் அனைவரும் கோட்டைக்குள் அடைக்கலம் புகுந்திருக்கின்றார்கள் என்பதனை அறிந்து கொள்ள முடிந்தது. சில பொறுக்கி எடுக்கப்பட்ட தளபதிகளைக் கொண்டு அந்தக் கோட்டையை முற்றுகையிடச் செய்தார்கள். அவ்வாறு முற்றுகையிட்டவர்களில் தரார் பின் அஸ்வர் (ரலி) அவர்கள் வெள்ளைக் கோட்டையையும், இன்னும் தரார் பின் கத்தாப் (ரலி) அவர்கள் அர்பாஇன் கோட்டையையும் முற்றுகையிட்டார்கள். அதனைப் போலவே ஏனைய முஸ்லிம் வீரர்கள் கோட்டையினைச் சுற்றிலும் முற்றுகையிட்டவாறு நின்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது மத்னா (ரலி) அவர்கள் அம்ர் பின் பகீலா வினுடைய கோட்டையை ஒரு சுற்றுச் சுற்றி வந்த பொழுது, அம்ர் பின் அப்துல் மஸீஹ் ம் அந்த இடத்தில் இருந்தார்.

அந்தக் கோட்டையில் அடைக்கலம் புகுந்திருக்கும் மக்களை இஸ்லாத்தின்பால் அழைக்குமாறு தனது படையினருக்கு உத்தரவிட்டார் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள். அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டால் நல்லது, அவ்வாறில்லா விட்டால் அவர்களது முடிவு என்னவென்பதைத் தீர்மானிப்பதற்கு சற்று அவகாசம் வழங்கிடுங்கள். அந்த அவகாச காலத்தில் அவர்கள் எந்த முடிவுக்கு வராவிட்டால், அவர்கள் மீது போர் தொடுத்திடுங்கள் என்று காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் தனது படையினருக்கு உத்தரவிட்டார்கள். கோட்டைக்குள் நுழைந்திருந்தவர்களும், இனி வசமாக மாட்டிக் கொண்டோம் என்பதை உணர்ந்ததன் பின்னர், வரி செல்லுவதற்கு ஒப்புக் கொண்டார்கள். அதற்குப் பகரமாக தங்களது வாழ்வுக்கும், சொத்துக்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டார்கள். இவர்களது இந்தக் கோரிக்கையை ஒரு தூதுவர் மூலமாக கலிஃபா அபுபக்கர் (ரலி) அவர்களுக்குத் தெரிவித்து அவர்களது சம்மதத்தைக் கோரினார்கள். அபுபக்கர் சித்தீக் (ரலி) அவர்களும் சம்மதம் தெரிவித்து, வரியை அறவிடும்படி கேட்டுக் கொண்டார்கள், இது காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் தோழர்களுக்கு நல்லதொரு உற்சாகத்தைத் தந்தது.

கலிஃபா அவர்களது சம்மதத்தைப் பெற்றுக் கொண்ட காலித் பின் வலீத் (ரலி) அவர்கள், ஹிரா மக்களின் சார்பாக வந்த அதீ பின் அதீ, அம்ர் பின் அதீ, அம்ர் பின் அப்துல் மஸீஹ் மற்றும் அயாஸ் பின் கபீஸா ஆகியோர்கள் ஒப்பமிட, முஸ்லிம்களின் சார்பில் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் ஒப்பமிட்;டார்கள். காலித் பின் வலீத் (ரலி) அவர்களுக்கு அடுத்ததாக அவர்களுக்குக் கீழ் இயங்கி அனைத்து தளபதிகளும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள். ஹிரா மக்கள் எந்தவித நிர்ப்பந்தமுமில்லாது, விருப்பத்துடனேயே ஒப்பந்தத்திற்கு சம்மதித்தார்கள். இந்த ஒப்பந்தம் மூலமாக ஹிரா பகுதியும் முஸ்லிம்கள் வசமானது, ஆட்சிக்குட்பட்ட பிரதேசமாக மாறியது.

ஈரானியப் படைகளுடன் போர் செய்து வெற்றி பெற்றிருந்த நேரம் அது, முஸ்லிம்கள் சற்று முன் தான் போரில் ஈடுபட்டு களைப்புடன் இருக்கின்றார்கள், எனவே இப்பொழுது போரை எதிர்பாராத விதத்தில் துவக்கினால் நமக்கே வெற்றி என்று ரோமனிய படைத்தளபதி ஹெர்குலஸ் தீர்மானித்தான். அவனது அந்த போர்த் தயாரிப்புகளைப் பற்றி கலிஃபா அபுபக்கர் (ரலி) அவர்கள் அறிந்தார்கள். அதனை அறிந்த மாத்திரத்திலேயே ஆச்சரியத்தால் அவர்களது புருவங்கள் உயர்ந்தன.

”அல்லாஹ்வின் மீது ஆணையாக.., காலித் பின் வலித் (ரலி) அவர்கள் மூலமாக இந்த ரோமர்களுக்கு நான் ஒரு பாடம் கற்பித்துக் கொடுக்கப் போகின்றேன், அவர்கள் பைத்தியம் பிடித்து ஓடப் போகின்றார்கள்”” என்று ஆச்சரியப்பட்டுக் கூறினார்கள்.

அப்பொழுதே காலித் பின் வலீத் (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள் அபுபக்கர்(ரலி) அவர்கள் :

ஓ.. அபூ சுலைமான் அவர்களே, உங்களது நேர்மையான மற்றும் உன்னதமான நோக்கத்திற்கு அல்லாஹ் நிரப்பமான நற்கூலியை வழங்குவானாக. அல்லாஹ்வினுடைய பேரருளைப் பெற்றுக் கொள்வதற்காக உங்களுடைய சக்திகளையும், ஆற்றல்களையும் செலவிடுங்கள், அவன் உங்கள் மீது கருணையைப் பொழிவான், இன்னும் தற்புகழ்ச்சி, பெருமை ஆகியவற்றினின்றும் விலகி இருங்கள், அவை உங்களது நற்செயல்களைப் பாழடித்து விடும். கர்வத்துடன் திரிபவர்கள் எப்பொழுதுமே அவமரியாதையையும், கண்ணியக் குறைவையும் பெற்றுக் கொள்வார்கள். அல்லாஹ் எப்பொழுதும் நமக்கு நன்மையை நாடுவான், அவனே அருட்கொடைகளை வழங்கக் கூடிய பேரருளாளனாக இருக்கின்றான். உங்களிடம் இருக்கக் கூடிய படையினரில் பாதியை உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள், மீதி உள்ள பாதிப் படைகளை அங்கேயே விட்டுச் செல்லுங்கள். அவர்களை மத்னா (ரலி) அவர்களின் பொறுப்பில் விட்டுச் செல்லுங்கள் என்று அந்தக் கடிதத்தை முடித்திருந்தார்கள்.

அபுபக்கர் (ரலி) அவர்களிடம் உத்தரவைப் பெற்றுக் கொண்ட காலித் பின் வலீத் (ரலி) அவர்கள், சற்று தன் முன் உள்ள படையினரை நோட்டம் விட்டார்கள். அவர்களில் மிகச் சிறந்தவர்களைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு, மீதமுள்ள கீழ்படிதழுள்ள தோழர்களை மத்னா (ரலி) அவர்களின் பொறுப்பில் விட்டார்கள். படைகள் இரு கூறாகப் பிரிவதற்கு முதலில் மத்னா (ரலி) அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அவர்களில் ஒரு பகுதியினரைத் தேர்வு செய்த விதத்தை பார்த்த மத்னா (ரலி) அவர்கள் மிகவும் கவலைக்குள்ளானார்கள். ஆனால், இந்த உத்தரவு அபுபக்கர் (ரலி) அவர்களிடமிருந்த வந்ததன் காரணமாக, சரி.., நீங்கள் கலிஃபாவினுடைய உத்தரவுக்குக் கட்டுப்படுங்கள், அதேநேரத்தில் காலித் பின் வலீத் (ரலி) அவர்களே..! நீங்கள் இவ்வாறு பிரித்தெடுப்பதற்குப் பதிலாக, எல்லாத் தரப்பிலிருந்தும் சரி பாதியாக நீங்கள் பிரிப்பது நல்லது என்று கூறினார்கள் மத்னா (ரலி) அவர்கள்.

நான் படைகளை இவ்வாறு பிரித்திருப்பது, நல்லதொரு நோக்கத்தை முன்னிட்டுத்தான் பிரித்திருக்கின்றேன், அந்த வகையில் தான் நான் விரும்பியவர்களைத் தேர்வு செய்திருக்கின்றேன் என்று காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் மத்னா (ரலி) அவர்களுக்கு விளக்கமளித்தார்கள்.

அந்த விளக்கத்தைக் கேட்ட பின்பு, அதில் திருப்தியடைந்த மத்னா (ரலி) அவர்கள், ”அல்லாஹ் உங்களைப் பாதுகாப்பானாக, இன்னும் உங்கள்மீது அருட்கொடைகளைப் பொழிவானாக. உங்களது தலைமைத்துவத்தையும் நிலைத்திருக்கச் செய்வானாக, இன்னும் உங்கள் மீது அருட்செய்து மிகப் பெரும் பலத்தையும் அளிப்பானாக..!”” என்று துஆச் செய்தவண்ணம் காலித் பின் வலீத் (ரலி) அவர்களை வழியனுப்பி வைத்தார்கள்.

பலவீனமான மற்றும் காயமடைந்திருந்த தோழர்களை மதீனாவிற்கு அனுப்பி வைத்து விட்டு, எஞ்சியுள்ள தோழர்களை அழைத்துக் கொண்டு யர்மூக் நோக்கி தனது பயணத்தைத் துவங்கினார்கள் மத்னா(ரலி) அவர்கள்.

இஸ்லாமியப் படைகள் இருகூறாகப் பிரிந்தது பற்றிய தகவல் கிடைக்கப் பெற்ற ஈரானியப் பேரரசன் இது தான் முஸ்லிம்களுக்கு தக்க பாடம் கற்பித்துக் கொடுக்கும் தருணம் என்பதை உணர்ந்தவனாக, இந்த சந்தர்ப்பத்தை நழுவாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சபதமெடுத்தவனாக, முஸ்லிம் படைகளை எதிர்கொள்வதற்காக வேண்டி மிகப் பெரிய படையைத் தயார் செய்து, ஹொர்மூஸ் ஜத்வியா என்ற தளபதியின் கீழ் போர்க்களத்திற்கு அனுப்பி வைத்தான். அதுவுமல்லாது, மதனா (ரலி) அவர்களை அச்சுறுத்தி ஒரு கடிதத்தையும் அனுப்பி வைத்தான்.

உங்களை எதிர்ப்பதற்காகவே பயங்கரமான, எதற்கும் அஞ்சாத, இன்னும் இரத்த தாகம் கொண்டதொரு படையை நான் அனுப்பி வைத்துள்ளேன், அந்தப் படையனாது பன்றிகளையும், கோழிகளையும் மேய்ப்பவர்களைக் கொண்டதாகும். அவர்களைக் கொண்டே உங்களை நான் எதிர்க்கச் சித்தமாக இருக்கின்றேன் என்று அந்தக் கடிதத்தில் ஈரானிய மன்னன் எழுதி இருந்தான்.

அதற்கு பதலளிக்கு முகமாக மத்னா (ரலி) அவர்களும் ஒரு கடிதத்தை எழுதி அனுப்பி வைத்தார்கள். அந்தக் கடிதமானது புத்திசாலித்தனமாக, ஞானம் நிறைந்ததாக மற்றும் தொலை நோக்குச் சிந்தனை கொண்டதாக எழுதப்பட்டிருந்தது.

”கடிதத்தைப்பெற்றுக் கொண்டேன், சூழல்களையும் அறிந்து கொண்டேன். நீங்கள் எழுதியவற்றிலிருந்து நீங்கள் ஒரு வன்முறையாளர் அல்லது வழிகெட்டுப் போனவர் அல்லது ஒரு பொய்யர் என்பதைப் புரிந்து கொண்டேன். இந்த நிலை உமக்கு கெட்டது, எமக்கோ சாதகமானது. ஒன்றை நீங்கள் புரிந்து கொள்வது நல்லது.., ஆளும் மன்னர்கள் பொய்யுரைப்பர் என்றால் அது அவர்களுக்கு அவமானகரமானதாகும், இன்னும் மக்களின் முன்பாக அவர் அசிங்கப்பட வேண்டியதிருக்கும். அல்லாஹ்வினுடைய தண்டனைகள் அவரைச் சூழ்ந்து கொள்ளும். எங்களது புரிந்துணர்வுகளும், இன்னும் அனுபவங்களும் எங்களுக்கு எதனை முன்னறிவிக்கின்றதென்றால், உங்களுக்கு மரணம் அன்மித்து விட்டதன் காரணமாகத் தான் எங்களை எதிர்க்க முன்வந்திருக்கின்றீர்கள் போலத் தோன்றுகின்றது. பாம்பு இறக்க வேண்டுமென்றால் அது தன் வலையை விட்டும் வெளி வந்தாக வேண்டுமல்லவா..! அல்லாஹ்விற்கே நாங்கள் நன்றி கூறிக் கொள்கின்றோம்.., அவனே ஆடுகளையும், ஓநாய்களையும், பன்றிகளையும், கோழிகளையும் மேய்ப்பவர்களைக் கொண்டதொரு படையை எங்களுக்கு எதிராக அனுப்பி வைத்திருக்கின்றான். தயவுசெய்து மண்டையில் எதுவுமில்லாத அந்த மடையர்களை எங்களை எதிர்க்க அழைத்து வாருங்கள். உனது போதாத அறிவு மற்றும் ஞானத்தைக் கண்டு நாங்கள் மிகவும் பரிதாப்படுகின்றோம்”” என்று தனது கடித்தை மத்னா (ரலி) அவர்கள் முடித்திருந்தார்கள்.

”வாரும்..! எங்களது பலத்தைப் பரிசோதிப்பதற்கு..,

நீர் உமது அம்புகளைப் பரிசோதிக்கும் போது,

நாங்கள் எங்களது வீரத்தைப் பரிசோதிப்போம்””

ஈரானியப் படைகள் களத்தில் இறங்கி இருந்த பொழுது, அவர்களை எதிர்ப்பதற்காக முஸ்லிம் படைகளுக்கு தலைமை தாங்கிய வண்ணம் மத்னா (ரலி) அவர்கள் முன்னணியில் நின்றார்கள். மதாயன் என்ற இடத்தில் உக்கிரமமாக போர் நடந்தது. அந்தப் போரில் அல்லாஹ்வின் மிகப் பெரும் கருணையின் காரணமக முஸ்லிம் படைகள் வென்றன. இந்த வெற்றிச் செய்தியை அறிவிப்பதற்காக ஒரு மடலை, கலிஃபா அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு எழுதினார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் இஸ்லாத்தை விட்டும் வெளியில் சென்ற தோழர்கள் சிலர், மீண்டும் இஸ்லாத்திற்குள் வருவதற்கு தாங்களாகவே விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அவர்களை ஏற்றுக் கொள்வதற்கு கலிஃபா அவர்கள் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் மத்னா (ரலி) அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். அவர்களது அனுபவம் மற்றும் திறமைகளை முஸ்லிம் படைகள் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று அதில் மேலும் குறிப்பிட்டிருந்தார்கள்.

இந்த இடைப்பட்ட காலத்தில், அவரது மடலுக்காக பதில் வரத் தாமதமாகியது. பொறுத்துப் பார்த்த மத்னா (ரலி) அவர்கள், தானே மதீனா சென்று கலிஃபா அவர்களைச் சந்தித்து, மேற்கண்ட பிரச்னைக்கான அனுமதியைப் பெற்று வருவது என்றே கிளம்பி விட்டார்கள். அங்கு சென்ற பொழுது தான் தெரிந்தது, கலிஃபா அவர்கள் மரணப்படுக்கையில் வீழ்ந்திருக்கின்றார்கள். நிலமை சற்று கவலைக்கிடமாக உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டார்கள். கலிஃபா அவர்களைச் சந்திக்கச் சென்ற பொழுது, கலிஃபா அவர்கள் படுக்கையில் கிடந்தார்கள். மத்னா (ரலி) அவர்களைப் பார்த்த மாத்திரத்தில்.., கலிஃபா அவர்களது முகம் பிரகாரசமடைந்தது. மத்னா (ரலி) அவர்கள் கூறியவற்றை கவனமாகக் கேட்டுக் கொண்ட அபுபக்கர் (ரலி) அவர்கள்.., உமர் (ரலி) அவர்களை அழைத்து.., மதனா (ரலி) அவர்கள் கூறுகின்ற அனைத்தும் மதிப்புமிக்கவை, அவற்றை ஏற்று நடைமுறைப்படுத்துங்கள் என்றார்கள். நான் இன்றைய மாலைக்குள் இருப்பேனா அல்லது எனது இறைவனின் அழைப்பை ஏற்றுச் சென்று விடுவேனா என்பது தெரியாது. நான் எனது இறைவன் அழைக்கப்பட்டு விட்டேனென்றால், மத்னா (ரலி) அவர்களது தலைமையில் ஒரு படையை தாமதமின்றி அனுப்பி வைத்து விடுங்கள், இடைப்பட்ட நேரத்தில் எவ்வளவு பெரிய துக்கரமான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் சரி.., அவரது படை புறப்படுவது தாமதமாக வேண்டாம் என்று கூறினார்கள். இன்னும் சிரியா வெற்றி கொள்ளப்பட்டு விட்;டதென்றால், காலித் பின் வலீத் (ரலி) அவர்களது தலைமையில் இயங்கும் படையை ஈராக்கிற்கு திரும்பி வந்துவிடும்படி உத்தரவிடும்படியும் கலிஃபா அபுபக்கர்(ரலி) அவர்கள் கூறினார்கள்.

அபுபக்கர் (ரலி) அவர்கள் இறந்து விட்டார்கள், அதிகாலைத் தொழுகைக்கு முன்பதாகவே மத்னா (ரலி) அவர்களின் தலைமையில் உள்ள படையை ஈரானியப் படைகளை எதிர்ப்பதற்குத் தயார் செய்தார்கள். சூரியன் உதயமாகி சற்று நேரத்திற்கெல்லாம்.., உமர் (ரலி) அவர்களை கலிஃபாவாக மக்கள் ஏற்று, பைஅத் செய்துகெண்டார்கள். உமர் (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டு மூன்று நாட்களாகியும், மக்கள் கீழ்படியாமை மற்றும் பொடுபோக்குத் தனம் மற்றும் ஈரானியப் படைகளை எதிர்ப்பது எவ்வாறு என்று நம்பிக்கையீனத்துடன் கிளம்பத் தாமதம் செய்து வந்தனர். அவர்களின் அச்சத்தைப் போக்கி.., ஜிஹாத் குறித்த உன்னதத்தை எடுத்தியம்பி அவர்களை போர்க்களம் நோக்கி விரைய வைத்தற்கானதொரு வீர உரையை மத்னா(ரலி) அவர்கள் நிகழ்த்தினார்கள்.

என்னருமைத் தோழர்களே..!

நாம் ஈரானியர்களின் முதுகெலும்பை முறித்திருக்கின்றோம்.., நம்மை வெற்றி பெற்று விடலாம் என்ற தைரியத்தை அவர்கள் இழந்து விட்டார்கள்.., இன்னும் அதில் அதனை முற்றிலுமே இழந்து விட்டார்கள். முன்பு அவர்களிடம் இருந்த தைரியம் இப்பொழுது இல்லை. நீங்கள் வல்லமை மிக்க அல்லாஹ்வின் சிங்கங்கள், இன்னும் போர்க்;களத்தில் நாயகர்கள், இத்தைகய நன்மக்களை எதிர்பார்த்து வெற்றி காத்திருக்கின்றது. உங்களது வீரம் மற்றும் உயர்வானது.., அவர்களின் உள்ளத்தில் அச்சத்தை ஏற்படுத்தி உச்சந் தலைமுதல் உள்ளங்கால்கள் வரைக்கும் அச்சத்தை விதைத்திருக்கின்றது. போர்க்களத்தில் நீங்கள் காட்டக் கூடிய வீரத்தை நினைத்து விட்டால் வீட்டில் இருக்கும் பொழுது கூட அச்சத்தால் நடுநடுங்கக் கூடியவர்களாக, உதவி செய்ய யாருமற்ற நிலையில் வீழ்ந்து கிடக்கின்றார்கள். அவர்களது அந்த ஆணவம், கர்வம் அத்தனையையும் தவிடு பொடியாக்குவதற்காக நீங்கள் கிளர்ந்தெழுங்கள், அவர்களது சகாப்தத்தை வரலாற்றிலிருந்து துடைத்தெறிந்து விடுங்கள் என்று உரையாற்றினார்கள். எங்கே.., என்னுடன் கிளம்புவதற்குத் தயாராகுங்கள்.., இன்னும் அடக்குமுறை ஆட்சியாளர்களின் முதுகெலும்பை முறித்தெடுப்பதற்குக் கிளம்புங்கள் என்றார்கள்.

இன்னும் உமர் (ரலி) அவர்களும் ஒரு வீர உரையை ஆற்றினார்கள். அபூ உபைதா (ரலி) அவர்களும், இன்னும் சில முஜாஹிதீன்களும் எழுந்து நின்று ‘அல்லாஹ{அக்பர்” என்று முழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து நாங்கள் போருக்குத் தயார் என்று பதில் குரல்கள் விண்ணை நிறைத்தன. மக்கள் ஈரானியப் படைகளை எதிர்கொள்வதற்குத் தயாராகி கிளம்பினார்கள். மிகவும் கடினமாக பயணத்திற்குப் பின்னே.., கூஃபா என்ற இடத்தில் தங்கினார்கள். சில நாட்கள் கழித்து நம்ரக்” என்ற இடத்தில் வைத்து இரண்டு படைகளும் மிகவும் உக்கிரமமான முறையில் மோதின. ஈரானியத் தளபதி மஹான் அவர்கள் சிறைபிடிக்கப்பட்டதோடு, படைகள் சிதறி ஓட ஆரம்பித்தன. இந்தப் போரில் முஸ்லிம் வீரர்கள் ஏராளமான போர்ப் பொருட்களைப் பெற்றுக் கொண்டார்கள். அதில் ஐந்தில் ஒரு பாகம் மதீனாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. உண்மையில், தளபதி மத்னா (ரலி) அவர்கள் எதனை நினைத்தார்களோ.., அதனைத் தங்களது செயலில் காட்டி வெற்றி பெற்றார்கள். தனது உணர்ச்சியை குர்ஆன் வசனமொன்றைக் கூறி வெளிப்படுத்திக் காட்டினார்கள்.

அரபுக்களுக்கே உரிய அந்த வேகத்தில் களம் புகுந்த முஸ்லிம் படைவீரர்கள் தஜ்லா மற்றும் புராத் நதிக் கரையின் இருமருங்கிலும் மிகவும் வேகமாகப் பயணித்து களம் கண்டார்கள். இதன் காரணமாக நம்ரக், ஸகாதிய்யா, ஜஸ்ர் மற்றும் புயாப் ஆகிய பகுதிகள் ஒன்றன் பின் ஒன்றாக முஸ்லிம்களின் கைவசமாகின.

நம்ரிக் பகுதியில் முஸ்லிம்களிடம் மோசமான முறையில் தோற்றுப் போனதன் பின்பு, ஈரானியத் தளபதியாக இருந்த ருஸ்தும் என்பவர், ஈரானிய மன்னரின் ஒன்று விட்ட சகோதரரான.., நர்ஷி என்பவரிடம்.., நீள அகலத்துடன் பரந்து வருகின்ற முஸ்லிம் படைகளிடமிருந்து உன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முன்னேற்பாட்டைச் செய்து கொள் என்று அறிவுறுத்தினார். உன்னுடைய பகுதியை சேர்த்து எடுத்துக் கொள்வதற்கு அவர்கள் திட்டம் தீட்டியிருக்கின்றார்கள் என்றும் அவர் அவருக்கு அறிவுறுத்தினார். கஷ்கர் பகுதியானது மிகவும் வளமான விவசாயப் பகுதியாகவும்.., உலகின் மிகச் சிறந்த உயர்தரமான பேரீத்தம் பழத் தோட்டங்கள் நிறைந்ததாகவும் இருந்தது.

இதன் காரணமாக கஷ்கர் பேரீத்தம் பழம் உலகின் மிகப் புகழ் வாய்ந்ததொன்றாக இருந்தது. முஸ்லிம் படைகளின் தளபதிப் பொறுப்பில் இருந்த அபூ உபைதா (ரலி) அவர்கள்.., மத்னா இப்னு ஹாரிதா (ரலி) அவர்களிடம்.., நமாரிக் வெற்றிக்குப் பின்னர், ஈரானிய மன்னரின் ஒன்று விட்ட சகோதரரால் ஆளப்படுகின்ற கஷ்கர் பகுதியை நோக்கி படையைச் செலுத்துமாறு ஆலோசனை கூறுகின்றார்கள். நமாரிக் பகுதியை அடுத்து கஷ்கர் மீது நாம் படை எடுக்கவில்லை என்றால், தோற்று ஓடிப் போன ஈரானியப் படைகள் இந்தப் பகுதிக்குச் சென்று.., பின்பு மீண்டும் அவர்கள் ஒன்று கூடி நம்மைத் தாக்க தீர்மானிக்கலாம்.., அதற்கான சந்தர்ப்பத்தை நாம் அவர்களுக்கு வழங்கிடக் கூடாது என்று அறிவுரை கூறினார். இதனை அடுத்து அந்த ஆலோசனைக்குப் பின்னர்.., ஈரானியப் படைகளை விரட்டிச் சென்ற முஸ்லிம்கள்.., கஷ்கர் பகுதியின் மையப் பகுதியும் மிகப் பிரதான நகருமான வஸ்ஸத் என்ற இடத்தில் வைத்து மீண்டும் ஈரானியப் படைகளை எதிர் கொண்டார்கள். ஈரானியப் படைகள் நிலைகொள்ள முடியாத அளவுக்கு மிகத் தீவிரமான, உடனடித் தாக்குதலைத் தொடுத்தார்கள் முஸ்லிம்கள். இங்கும் ஈரானியர்கள் வெற்றி கொள்ளப்பட்டார்கள்.., இன்னும் போர்க்களத்தை விட்டும், போர்க்கருவிகளைப் போட்டு விட்டே ஓடினார்கள்.

இங்கும் முஸ்லிம் போர்ப் பொருட்களன்றி.., நல்ல பேரீத்தம் பழங்களையும், உணவுகளையும் சேர்த்தே பெற்றுக் கொண்டார்கள். இன்னும் நர்ஷி மன்னரின் செல்வப் பெட்டகத்தையும் பெற்றுக் கொண்டார்கள். அவன் தான் தப்பித்தால் போதுமென்று செல்வங்கள் அனைத்தையும் விட்டு விட்டு ஓடி விட்டான்.

இப்பொழுதும் ஐந்தில் ஒரு பாகம் மதீனாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.., ஏனையவற்றை முஜாஹிதீன்களுக்கு மத்தியில் பிரித்து வழங்கப்பட்டது. இன்னும் அந்தப் பொருட்களுடன் ஒரு கடிதத்தையும் அனுப்பி வைத்த மத்னா (ரலி) அவர்கள், அதில்..,

உமர் (ரலி) அவர்களே…! ஈரானிய மன்னன் உண்டு கழித்த அந்த சுவையான உணவுகளை அல்லாஹ் எங்களுக்கு வழங்கியிருக்கின்றான். அல்லாஹ் எங்களுக்கு வழங்கியுள்ள அந்த அருட்கொடைகளை நீங்களும் ருசித்துப் பார்க்க வேண்டும் என்பதற்காக இத்துடன் உங்களுக்கும் சிறிது அனுப்பி வைத்திருக்கின்றோம் என்று எழுதினார்கள்.

வாஸத் என்ற இடத்தில் நடந்த போர் வரலாற்றில் ஸகதிய்யா என்றழைக்கப்படுகின்றது. முஸ்லிம்களிடம் ஈரானியர் பெற்ற தோல்வி என்பது சொல்லும் தரமன்று. மிகப் பெரிய தோல்வியைப் பெற்றுக் கொண்ட ஈரானியர்கள் புறமுதுகு காட்டி ஓடினார்கள். ஓடிய அவர்கள் மீண்டும் மதீனாவின் மீது போர் தொடுப்பதற்கான ஆயத்தங்களைச் செய்யலானார்கள். முஸ்லிம்களை எதிர்த்து துணிச்சலாகப் போர் புரியும் வல்லமை பெற்றவர்கள் உங்களில் யார் இருக்கின்றீர்கள்? என்று தளபதி ருஷ்தும் தனது படையினரைப் பார்த்துக் கேட்டான்.

அந்தப் படையில் இருந்த அனைவரும் ஒருமித்த குரலில் பஹ்மன் ஜத்விய்யா என்பவனை முன்மொழிந்தார்கள். தடித்த அடர்த்தியான புருவங்களைக் கொண்ட பஹ்மன்.., தனது புருவங்களை உயர்த்திக் காட்டி.., அதில் பெருமிதமடைந்தான். தனது உருவத்தை வைத்து எதிரிகள் அச்சமடைவார்கள் என்று தனக்குள் அவன் கணித்துக் கொண்டான்.., பெருமை கொண்டான். படையினரின் முன்மொழிதலுடன், தளபதி ருஷ்தும் மதீனாவிற்கு எதிரான படைக்குத் தளபதியாக பஹ்மன் ஐ நியமித்து, அவனுக்கு சிறப்பு படையையும் அளித்து, அத்துடன் மிகப் பெரும் விலங்கினமான யானைப் படை ஒன்றையும் அவனுடன் அனுப்பி வைத்தான். ஈரானியக் கொடியை கையில் ஏந்தியவர்களாக.., தேசிய உணர்வு கொப்பளிக்க – முஸ்லிம்களை எதிர்த்துக் களம் காண, தாயகப் பெருமையை நிலைநாட்டும் ஆர்வத்துடன் மதீனாவை நோக்கி ஆர்ப்பரித்து வரலானார்கள்.

பஹ்மான் தலைமை ஏற்று வரும் அந்தப் படையை எதிர்கொள்வதற்கு முஸ்லிம் படைகளும் தயார் செய்யப்பட்டன. முஸ்லிம்களின் படைப் பிரிவுக்கு தலைமைத் தளபதியாக அபூ உபைத் பின் மஸ் ஊத் (ரலி) அவர்கள் நியமிக்கப்பட்டார்கள், இவர்களின் தலைமையின் கீழ் மிகப் பெரும் அனுபவசாலியும், பல போர்க்களங்களில் தளபதியாகப் பணியாற்றியவருமான மத்னா பின் ஹாரிதா ஷீபானி (ரலி) போன்றவர்களும் இடம் பெற்றிருந்தார்கள். இப்பொழுது முஸ்லிம்களின் படைகள் யூப்ரடிஸ் நதிக்கரையை நோக்கிச் செல்லலாயிற்று. நதியின் மறுகரையில் இறங்கி நின்று கொண்டிருந்த ஈரானியப் படைகளின் தளபதி அங்கிருந்து கொண்டு முஸ்லிம்களின் தலைமைத் தளபதியான அபூ உபைதா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்பி வைத்தான்.

அதில்..,

”நதியைக் கடந்து வந்து ஒன்று நீங்கள் எங்களைச் சந்திக்கச் சித்தமாகுங்கள். அல்லது எங்களை அங்கு வர அனுமதித்து உங்களைச் சந்திக்க சித்தமாகுங்கள். இதில் எதுவொன்றையாவது தேர்வு செய்து கொள்ளும் உரிமையை நான் உங்களுக்கு வழங்குகின்றேன்”” என்று அதில் எழுதி இருந்தான்.

ஈரானியப் படைத்தளபதியின் செய்தியைக் கேள்விப்பட்ட ஸலீத் பின் கைஸ் அவர்களும், இன்னும் ஏராளமான முஸ்லிம்களும், ‘நாம் எந்த நிலையிலும் ஆற்றைக் கடந்து செல்வது கூடாது, அது நமக்கு பெருத்த சேதத்தை விளைவிக்கும்” என்று கருத்துக் கூறினார்கள். எதிரிகளை எதிர்க்கும் நிலையிலும் கூட, முஸ்லிம்கள் தங்களின் பாதுகாப்பு விஷயத்திலும் கவனம் செலுத்தியாக வேண்டும் என்று அவர்களது ஆலோசனை இருந்தது. ஏற்கனவே ஈரானியர்கள் உடல் திறனை மிகுதியாகப் பெற்றிருப்பவர்கள், இந்த நிலையில் ஆற்றைக் கடந்து நாம் செல்லுவது என்பது, அவர்களுக்கே சாதகமாக அமையும் என்றார்கள்.

முஸ்லிம்களின் படைத்தளபதியாக நியமிக்கப்பட்டிருந்த அபூ உபைதான பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் திட்டமோ வேறு விதமாக இருந்தது. அவருக்கிருந்து வீரம் மற்றும் இறைவன் மீதான நம்பிக்கை, மரணத்திற்கு அஞ்சாத போக்கு ஆகியவற்றினூடாக.., நாமே ஆற்றைக் கடந்து செல்வோம் என்ற முடிவினை எடுத்து.., முஸ்லிம்களை ஆற்றைக் கடக்கும்படி பணித்தார்கள்.

இந்தப் போரின் பொழுது.., அதுவும் உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தின் பொழுது நடைபெற்ற இந்தப் போரில் முஸ்லிம்கள் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டார்கள். எடுத்த முடிவின் அடிப்படையில் அவர்கள் சோதனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. எதிரிகள் ஆற்றின் கரை ஓரத்தில் நின்று கொண்டிருக்கும் நிலையில் எடுக்கப்பட்ட முடிவது. ஆற்றினுள் இறங்கி பின் எதிரிகளைத் தாக்குவது என்பது மிகவும் ஆபத்தான முடிவாகி விட்டது. ஈரானியப் படைத்தளபதி தனது கரங்களில் மணியோசை எழுப்பும் வளையத்தை அணிந்திருந்தான். இந்த சப்தமும் கூட முஸ்லிம்களுக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. ஈரானியப் படைகள் அந்த சப்தத்தைக் கணித்து முன்னேறிச் செல்ல உதவியது. இந்த மணியோசையைக் கேட்ட அரபுக் குதிரைகளும், ஒட்டகங்களும் மிரள ஆரம்பித்தன. இதன் காரணமாக முஸ்லிம் படை பெருத்த சேதத்திற்கு முகம் கொடுக்க வேண்டியதாகி விட்டது.

இப்பொழுது மிரளும் குதிரை மற்றும் ஒட்டகங்களை விட்டும் கீழிறங்கி போர் செய்ய முஸ்லிம்கள் முடிவெடுத்த பொழுது.., யானையின் பாதங்களில் சிக்கி இறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அபூ உபைதா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் தலைமையில் இயங்கி வந்த முஸ்லிம்களுக்கு இருந்த ஒரே ஒரு சந்தர்ப்பம் என்னவெனில்.., யானைகளைப் பிணைத்திருக்கும் கயிறுகளை வெட்டி விட்டு, போரின் போக்கை மாற்றுவது தான் அது. அதுவே வெற்றி பெறுவதற்கான ஒரே வாய்ப்பாகவும் இருந்தது. இதனை முனைப்புடன் செயல்படுத்த அபூ உபைதான பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் களமிறங்கிய போது, யானையின் துதிக்கையை வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்த போது.., மிரண்டு அலறித் துடித்து கலவரத்தை உண்டு பண்ணிய யானையின் பாதங்களுக்கிடையே சிக்கி தளபதி அபூ உபைதா பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் இறந்து போனார்கள். தளபதி அவர்களின் மரணத்தைக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த முஸ்லிம்கள், பின்வாங்குவதற்குப் பதிலாக முன்னைக் காட்டிலும் முனைப்புடன் களத்தில் இயங்கினார்கள். மிகப் பெரும் முயற்சிக்குப் பிறகு ஒரு யானையைக் கொன்று சரித்திரம் படைத்தார்கள். கீழே விழுந்து கிடந்த தளபதியின் கைகளில் இருந்த கொடியைப் பாய்ந்து சென்று பற்றிக் கொண்டு, போரினைத் தொடர்ந்தார்கள். அந்தக் கொடியினைப் பற்றிக் கொண்டிருந்த முஸ்லிம் வீரரும் மரணமடைய இன்னொருவர் அந்தக் கொடியைத் தாங்கினார். இப்படியாக ஏழு பேர்களைக் கடந்து சென்று கொண்டிருந்தது அந்தக் கொடி. நிலைமை முற்றிலும் முஸ்லிம்களுக்குப் பாதகமாகச் சென்று கொண்டிருப்பதைப் பார்த்த மத்னா (ரலி) அவர்கள், யூப்ரடிஸ் நதிக் கரையில் இருந்ததொரு பாலத்தின் வழியாக எஞ்சிய முஸ்லிம் வீரர்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்தார்கள். மிகவும் காயம்பட்டு பலவீனமாக இருந்த நிலையிலும் கூட.., கடைசி வீரர் கரையேறும் வரைக்கும் மத்னா (ரலி) அவர்கள் தொடர்ந்து களத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.

வெற்றிகரமானதொரு தளபதிக்கு இருக்க வேண்டியதொரு பண்பு என்னவென்றால்.., போரின் போக்கிற்கு ஏற்ப கள நிலவரங்களுக்கு ஏற்ப முடிவெடுக்கும் திறமை பெற்றிருக்க வேண்டும். களத்தில் முன்னேறிச் செல்வது.., ஆதாயமாக இருக்குமெனில் முன்னேறுவதும்.., படைகளைத் திருப்பிப் பெற்றுக் கொள்வது சேதத்தைத் தவிர்க்க முடியும் எனும் பட்சத்தில் திருப்பி அழைத்துக் கொள்வதும் சிறந்த போர்ப் பண்பாடுகளாகும்.

முஸ்லிம்கள் இப்பொழுது பாதுகாப்பான பகுதிக்கு வந்த பின்னர், அர்வா பின் ஸைத் அவர்களை மதீனாவிற்கு அனுப்பி வைத்து.., உமர் (ரலி) அவர்களுக்கு கள நிலவரங்களை தெரிவித்தார்கள். முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டது குறித்து உமர் (ரலி) அவர்கள் கவலையடைந்தார்கள், இன்னும் முழு மதீனாவுமே சோகத்தில் ஆழ்ந்தது. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களின் கண்களில் கண்ணீர் கசிந்தது. உமர் (ரலி) அவர்களோ.., மக்களே அச்சப்பட வேண்டாம், துயரப்பட வேண்டாம்.., வெற்றியும் தோல்வியும் போரின் பொழுது சகஜமானவைகள் என்று ஆறுதலும், தேறுதலும் கூறி மக்களைத் தேற்றினார்கள்.

”ஜஸ்ர்”” என்பது அரபி மொழியில்.., நதியின் குறுக்கால் போடப்பட்டிருக்கும் பாலத்தைக் குறிக்கும் அல்லது ஓடையை, நீரோடையைக் குறிக்கும். முஸ்லிம்கள் பாதுகாப்பாக களத்தை விட்டும் வெளியேறுவதற்கு மிகவும் உதவிகரமாக அந்த ஓடையும், அதில் அமைந்திருந்த பாலமும் காரணமாக அமைந்த காரணத்தால்.., இந்தப் போருக்கு ‘ஜஸ்ர்” என்றழைக்கப்படுகின்றது.

மேலும், இந்தப் போரினை அடுத்து நடந்த போரினை ‘யவ்முல் அஷர்” என்றழைக்கப்படுகின்றது. அதாவது ‘பத்து நாட்கள்” – அதாவது ஒரு முஸ்லிம் படைவீரர் பத்து ஈரானியப் படை வீரர்களைக் கொன்ற நாள் என்ற பதத்தில் அழைக்கப்படுகின்றது. இன்னும் ‘மஹ்ரன்” என்றும் அழைக்கப்படுகின்றது. அதாவது ஈரானிய படைத் தளபதி மஹ்ரன் நினைவாக இவ்வாறு அழைக்கப்படுகின்றது.

அல் ஜஸ்ர் போருக்குப் பின்னர், பல முஜாஹிதீன்கள் மதீனாவிற்குத் திரும்பி விட்டார்கள். ஆனால் மத்னா (ரலி) அவர்கள் அங்கே தங்கி, மக்களை இஸ்லாத்தின் பால் அழைக்கும் பணியை மேற்கொண்டார்கள். அதேநேரத்தில்.., புதிய படைகளை அனுப்பி வைக்குமாறு உமர் (ரலி) அவர்களுக்குத் தகவல் அனுப்பினார்கள். முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சமீபத்திய பின்னடைவுக்குப் பின்னர் உடனே மாற்றுப் படைகளை அனுப்புவது சற்று தாமதமானது. இருப்பினும், மாற்றுப் படைகள் அனுப்பியும் வைக்கப்பட்டன. அப்பொழுது மதீனாவின் சுற்றுப் புறங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் சிரியாவில் நடைபெற்று வரும் போரில் கலந்து கொள்ள உமர் (ரலி) அவர்களிடம் அனுமதி கேட்டு வந்தார்கள். அவ்வாறு வந்தவர்களை மத்னா (ரலி) அவர்களுடன் இணைந்து கொள்ளுமாறு அனுமதி வழங்கி உமர்(ரலி) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். முஸ்லிம்களுக்கு மீண்டும் படைகள் வந்து கொண்டிருப்பதை அறிந்து கொண்ட ஈரானியப் படைத் தளபதிகளான ருஷ்தும் மற்றும் ஃபெரோஸான் ஆகிய இருவரும் மதீனாவிற்கு எதிராக அவர்களும் ஈரானியப் படைகளைத் தயார் செய்ய ஆரம்பித்தார்கள். அவர்கள் தங்களது படையை மிகப் பலமிக்கதாகக் கட்டமைத்ததோடு, அதற்குத் தளபதியாக மெஹ்ரான் ஹம்தானி என்பவரைத் தளபதியாக நியமித்தார்கள். இந்த இருபடைகளும் யூப்ரடிஸ் நதிக்கரையின் ஓரத்தில் அமைந்த போயப் ஓடையின் அருகே சந்தித்தது.

ஈரானியப் படைகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பிரிவுடனும் யானைப் படைகள் இணைக்கப்பட்டிருந்தன. முஸ்லிம்களுக்கு தலைமைப் பொறுப்பேற்றிருந்த மத்னா (ரலி) அவர்கள் தனது படையினரைப் பார்த்து, நான் ‘அல்லாஹ{ அக்பர்” என்று மூன்று முறை குரலெழுப்பியவுடன், நீங்கள் தயார் நிலைக்கு வந்து விட வேண்டும். நான்காவது முறை அல்லாஹ{ அக்பர் என்று முழங்கியவுடன் தாக்குதலை ஆரம்பித்து விட வேண்டும் என்று உத்தரவிட்டார்கள். இதில் முதல் முழக்கத்தைக் கேட்டவுடனேயே ஈரானியர்கள் போரை ஆரம்பித்து விட்டார்கள்.., உடன் எதிர்த் தாக்குதலும் முஸ்லிம்களிடமிருந்து ஆரம்பமாகி விட்டது. போர்க்களத்தினூடாக சுற்றிச் சுழன்று வந்த மத்னா (ரலி) அவர்கள், முஸ்லிம்களை உற்சாகப்படுத்திய வண்ணம் இருந்தார்கள்.

முஜாஹிதீன்களே..! முன்னேறுங்கள். இந்த நாளில் நாம் அவமானத்தை அடைந்து விடக் கூடாது. ஜஸ்ர் யுத்தத்தில் பெற்ற பின்னடைவுக்குப் பழிக்குப் பழிவாங்கும் அருமையான சந்தர்ப்பம் உங்கள் முன் வந்து நிற்கின்றது. எதிரிகளைத் தாக்குங்கள். மதீனாவின் ஒவ்வொரு கண்களும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. உங்களைப் போன்ற வீரர்கள் போர்க்களத்தில் உறுதியாக இருப்பார்கள் என்பதையும், நிலைத்திருப்பார்கள் என்பதையும் நானறிவேன் என்று களத்தில் உரையாற்றிக் கொண்டே வந்தார்கள்.

இந்த உரையின் காரணமாக எழுச்சி பெற்ற முஸ்லிம்கள் முழு எழுச்சி பெற்றவர்களாக, ஈரானியர்களைத் துவம்சம் செய்ய ஆரம்பித்தார்கள். இந்தப் போரில் ஈரானியர்கள் புறதுகிட்டு ஓடினார்கள், ஜஸ்ர் ல் இழந்த புகழை இப்பொழுது முஸ்லிம்கள் திரும்பப் பெற்றுக் கொண்டார்கள். ‘போயப்” என்ற இடத்தில் பெற்ற இந்த வெற்றியை இட்டு முஸ்லிம்கள் பெருமிதமும், சந்தோஷமும் அடைந்தார்கள்.

‘போயப்” ல் நடந்த யுத்தத்திற்குப் பின்னர்.., ஜஸ்ர் போரில் ஏற்பட்ட காயம் மத்னா (ரலி) அவர்களை மிகவம் வாட்ட ஆரம்பித்தது, அது சீழ்பிடித்து ஆழமாக அவரைப் பாதிக்க ஆரம்பித்தது. இறுதியாக.., மத்னா (ரலி) அவர்கள் அந்தக் காயத்தின் காரணமாகவே மரணத்தைச் சந்திக்க வேண்டி இருந்தது. இறையடி சேர்ந்தார்கள். வல்ல அல்லாஹ்விடமிருந்து வந்தோம்.., அவனிடமே நம்முடைய மீளுதலும் இருக்கின்றது.

வல்ல அல்லாஹ்.., மத்னா (ரலி) அவர்களது மண்ணறையைத் தனது சுவனத் தோட்டத்தில் ஒன்றாக ஆக்கி அருள்வானாக..!

சாந்தியடைந்த ஆத்மாவே! நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்). (89:27-30).

5. அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் (ரலி)

என்னருமைச் சகோதரர்களே!

இறைத் தூதர் (ஸல்) அவர்களால், சுவனத்தை அனந்தரங் கொள்ளக் கூடியவர்கள் என்று நன்மராயங் கூறப்பட்ட நபித்தோழர்கள் பத்துப் பேரில் அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் (ரலி) அவர்களும் ஒருவராவார்.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்தக் காலப் பிரிவு முஸ்லிம்கள் எங்கினும் அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் உட்பட்டுக் கொண்டிருக்கும் காலப்பிரிவாக இருந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக, ஈராக் மற்றும் அமெரிக்காவிற்கு எதிரான போர் உச்சகட்டத்தை அடைந்திருக்கும் இந்தச் சூழ்நிலையில், அபூ உபைதா (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாறானது, நம் அனைவருக்கும் இன்னும் தலைமைப் பதவியை விரும்பும் அனைவருக்கும் மிகச் சிறந்த பாடமாக இருந்து கொண்டிருக்கின்றது.

இஸ்லாத்தின் உன்னதத்திற்காகப் பாடுபட வேண்டிய சமுதாயமும் அதன் தலைவர்களும் தங்களது சுய லாபங்களுக்காக எதிரியிடம் கூட தன் சகோதரனைக் காட்டிக் கொடுக்கும் துரோகச் செயலைச் செய்து கொண்டிருக்கக் கூடிய இழி நிலையையும், தன் சொந்த சகோதரனை அடிப்பதற்கு – சிலுவை யுத்தக் காரர்களுக்கு இடம் கொடுத்து முஸ்லிம்களின் உயிர்களின் மீது தங்களது அரியணைகளை தக்க வைத்துக் கொண்டிருக்கக் கூடிய முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு மத்தியில், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பயிற்சிப் பாசறையில் வாழ்ந்த அந்த புண்ணிய ஆத்மாக்கள் எந்தளவு மார்க்கத்திற்காக தங்களது சுய லாபங்களைத் துச்சமாக மதித்து நடந்தார்கள் என்பதை இந்த வரலாற்றின் மூலம் நாம் படிப்பினை பெற்றுக் கொள்ள முடிகின்றது. அவர்கள் தளபதிகளாக ஆட்சியாளர்களாக இருந்தாலும், கொடுக்கப்பட்ட பதவிக்கு நாம் மறுமையில் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்று அவர்கள் மறுமையைப் பயந்து வாழ்ந்தார்கள். தங்களிடம் செல்வம் குவிந்திருந்த போதிலும் எளிய வாழ்வையே மேற்கொண்டார்கள். தலைமைப் பதவியிலிருந்து தங்களை கீழிறக்கி, சாதாரண சேவகனாக மாற்றிய போதும் புரட்சிக் கொடி பிடிக்காமல் சமுதாயத்தை இரண்டு பிளவாகப் பிளந்து போடாமல், சேவகம் செய்யவும் அவர்கள் தயாரானார்கள் என்ற வரலாற்றைப் பார்க்கும் பொழுது, எதிரிகளுக்கு இடம் கொடுத்த முஸ்லிம்களை நொந்து கொள்வதா? அல்லது முஸ்லிம்களின் இயலாமையைப் புரிந்து கொண்டு முஸ்லிம்களைப் பகடைக்காயாகப் பயன்படுத்தும் எதிரிகளை நொந்து கொள்வதா? என்ற கேள்வியை நமக்குள் கேட்டுக் கொண்டு, நமது இழிநிலைகளை நினைத்து மிகவும் சிந்திக்க வேண்டியவர்களாகவும், அந்த இழிநிலையை போக்குதவற்கு ஈகோ போன்றவற்றை தூக்கி எறிந்து, இஸ்லாத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபடக் கூடியவர்களாக நம்மை மாற்றிக் கொள்வதற்கும், நாம் நம்மை பக்குவப்படுத்திக் கொள்ளக் கூடிய அவசரம் ஒன்று இருக்கின்றது என்பதை உணர்ந்தவர்களாக நம்மை மாற்றிக் கொள்ள முன்வர வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

நம் முன் அழகிய முன் மாதிரியை விட்டுச் சென்ற அந்த உத்தம தோழர்களின் வழி நடக்க முயற்சிப்போம். நமக்குள் உள்ள பிளவுகள் பிரிவினைகளை மறப்போம், மன்னிப்போம். இயக்கக் கொடிகள் உயர வேண்டும் என்பதை விட, இஸ்லாத்தை உயர்த்துவது ஒன்றையே நம் நோக்கமாகக் கொள்வோம்.

அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் (ரலி) – இவரது இயற் பெயர் ஆமிர் பின் அப்துல்லா பின் அல் ஜர்ராஹ் என்று இருந்தாலும், அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் என்ற சிறப்புப் பெயர் கொண்டே அழைக்கப்பட்டார். குறைஷிகளிலேயே மிகவும் மென்மையான, நன்னடத்தையுள்ள, நல்ல பழக்கவழக்கங்கள் உள்ள மனிதர்களில் அபூபக்கர் (ரலி) மற்றும் உதுமான் (ரலி) அவர்களுடன் ஒப்பிடும் அளவுக்கு மிகச் சிறந்த மனிதராகத் திகழ்ந்தார்கள்.

இவர் தனது நண்பர்களுக்கிடையில் மிகவும் மென்மையானவராகவும், போரின் பொழுது மிகவும் கடின சித்தம் கொண்டவராகவும் திகழ்ந்தார். உஹதுப் போரிலே கலந்து கொண்டிருந்த பொழுது, எதிரிகளின் தாக்குதலின் காரணமாக இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய தாடையில் அவர்கள் அணிந்திருந்த தலைக்கவசத்தின் பகுதிகள் குத்திச் செறுகி இரத்தம் வழிந்து கொண்டிருந்த பொழுது, அவற்றை தன் பற்களினால் கடித்து இழுத்து இறைத்தூதர் (ஸல்) அவர்களை நோவினையிலிருந்து பாதுகாத்ததன் காரணமாக இவர், தனது இரண்டு பற்களையும் இழந்தார்.

அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), அர்கம் பின் அபீ அர்கம் (ரலி), உத்மான் பின் மதூன் (ரலி) ஆகியோர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களுடன், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருக்கரங்களில், அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு இல்லை என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதராக இருக்கின்றார் என்றும் வாக்குறுதி அளித்து, இஸ்லாத்தில் இணைந்த சிறப்புக்குரியவர்கள்.

சந்தேகமில்லாமல் இஸ்லாம் என்னும் கோட்டையை அந்த அரபு மண்ணிலே கட்டப்படுவதற்குத் தூண் போல நின்றவர்கள் இவர்கள்.

அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் (ரலி) இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் மற்ற இறைத் தோழர்கள் எவ்வாறு கஷ்டங்களையும் துன்பங்களையம் அனுபவித்தார்களோ, அதனைப் போலவே இவரும் குறைஷிகள் தந்த துன்பங்களைத் தாங்கிக் கொண்டு, இஸ்லாத்தைப் பின்பற்றி வாழ்வதில் உறுதியுடன் இருந்தார்கள்.

உஹதுப் போரிலே எதிரிகளின் நடுவே சென்று அவர்களைத் துவம்சம் செய்து ஓட ஓட விரட்டி தனது வீரத்தைக் காட்டிய பெருமகன் இவர். உஹதுப் போர் நடந்து கொண்டிருக்கின்றது. எதிரிகளின் நடுவே அபூ உபைதா (ரலி) நின்று போரிட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஒரு மனிதர் இவரிடம் வம்புக்கென்று போர் புரிய வருகின்றார். இவரும் அந்த மனிதரைத் தவிர்த்து மற்ற பக்கம் கவனம் செலுத்தும் பொழுதெல்லாம், இவரை அவமதிக்கும் நோக்கிலேயே இவர் முன் வந்து வம்புக்கிழுக்கின்றார். இவரும் மீண்டும் மீண்டும் அந்த மனிதரைத் தவிர்க்கவே முயற்சிக்கின்றார். இறுதியில் அவருடன் மோதியே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில், அந்த எதிரியின் தலையில் தனது வாளைப் பாய்ச்சி அவரது தலையை இரு கூராக்கி, நிலத்திலே வெற்றுடலாக வீழ்த்துகின்றார். அபூ உபைதா (ரலி) அவர்களை இந்தளவு சினம் கொள்ளச் செய்த அந்த மனிதர் யாரென்று கருதுகின்றீர்கள்?! உங்களால் யூகிக்க முடிகின்றதா? அபூ உபைதா (ரலி) அவர்களின் வாளுக்கு இரையான அந்த மனிதர் வேறு யாருமல்ல, அபூ உபைதா (ரலி) அவர்களின் தந்தையார் தான் அந்த மனிதராவார்.

அபூ உபைதா (ரலி) அவர்கள் இதன் மூலம் சொந்தபந்த உறவுகளா? அல்லது இறைவனின் மார்க்கமா? என்ற இக்கட்டான நிலை தன் முன் வந்து நின்ற பொழுது, இறைமார்க்கத்திற்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தாரே ஒழிய, மாறாக, தனது சொந்த பந்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதன் மூலம் அவர் தான் ஏற்றுக் கொண்ட மார்க்கத்தில் தனக்கிருந்த உறுதியை வெளிப்படுத்தினார். இறைவனின் மீதுள்ள அன்பானது மற்ற எல்லாவற்றையும் மிஞ்சியது. இறைவனின் மீதுள்ள அன்பிற்கு முன்னால் மலையே வந்தாலும் சரி அல்லது ஆறே குறுக்கிட்டாலும் சரியே, அவற்றை எல்லாம் தன் கால் தூசிக்கு சமமாக்கி, இறைவனது அன்பைப் பெறுவதொன்றே தங்களது நோக்கமாகக் கருதி வாழ்ந்த அந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களின் வரிசையில் அபூ உபைதா (ரலி) அவர்களும் ஒருவராகத் திகழ்ந்தார். இதன் மூலம் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார்கள். எதிரிகளின் தூக்கத்தில் கூட அவர்களை அச்சுறுத்தினார்கள்.

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே! (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான். மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்டுத்தியிருக்கிறான்; சுவர்க்கச் சோலைகளைப் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர்; அறிந்துகொள்க. நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர்தாம் வெற்றி பெறுவார்கள். (58:22)

ஒரு முஸ்லிம் இறைவனிடத்திலிருந்து விரும்பக் கூடிய மிகப் பெரிய வெகுமதி என்னவென்றால், தன்னைப் படைத்தவனைச் சந்திக்கின்ற அந்த நாளிலே வெற்றி பெற்ற கூட்டத்தினருடன் சொர்க்கச் சோலையிலே உலா வருவதொன்று தானே! அத்தகைய சொர்க்கச் சோலைகளிலே உலா வரக் கூடிய கூட்டத்தினரில் ஒருவராக இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருவாயினாலேயே அருள் வாக்குப் பெற்றவர், அதாவது இந்த உலகத்திலேயே சொர்க்கத்திற்கு நன்மாரயங் கூறப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவராவார், நமது இந்த மதிப்பிற்குரிய அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் (ரலி) அவர்கள்.

ஹிஜ்ரி 7 ஆம் ஆண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கைபரை வெற்றி கொண்ட பொழுது, மிகப் பிரபலமான படைத்தளபதிகளுள் ஒருவராக அங்கே அபூ உபைதா (ரலி) அவர்களும் இருந்தார்கள். கைபரை வெற்றி கொண்ட பின் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது படைகளை உமர் பின் ஆஸ் (ரலி) அவர்களது தலைமையில் சலாசில் என்ற இடத்திற்கு அனுப்பினார்கள். எதிரிப் படையணிகளை மதிப்பீடு செய்த உமர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் மேலும் அதிகப்படியான படையினரை அனுப்பி வைக்குமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நமது அபூ உபைதா (ரலி) அவர்களது தலைமையில் மிகச் சிறப்புப் பெற்ற தோழர்களான அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) போன்றோர்களையும் அனுப்பி வைத்தார்கள். இதன் மூலம் அபூ உபைதா (ரலி) அவர்கள் எத்தகைய உயர் தலைமைப் பண்புகளைப் பெற்றிருந்தார்கள் என்பதை விளங்க முடியும்.

இத்துணை தலைமைப்பதவிக்குத் தகுதியானவராக இருந்தும், இன்றைக்கு நம் சமுதாயத்தில் காணப்படும் போட்டி பொறாமைகளைப் போன்றதொரு இழி குணங்களுக்கு உட்பட்டு, ஷைத்தானின் சூழ்ச்சி வலையில் விழாமல் தங்களைக் காத்துக் கொண்ட அவர்களது நற்பண்புகளுக்கு இந்த சலாசில் போர் ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அபூ உபைதா (ரலி) அவர்கள் தனது படையணியுடன் சலாசிலை அடைந்தவுடன், அங்கே மொத்தப் படைகளுக்கும் யார் தலைமை தாங்குவது என்றதொரு பிரச்னை எழுந்தது. இப்பொழுதுள்ள தலைவர்களாக இருந்தால், தலைமைப் பதவிக்கு ஆசைப்பட்டு சமுதாயத்தை இரண்டாகப் பிளந்திருப்பார்கள். ஆனால் அபூ உபைதா (ரலி) அவர்களோ, தன்னுடைய தலைமைப் பதவியை விட்டு இறங்கி, தானே முன் வந்து உமர் பின் ஆஸ் (ரலி) தலைமையில் போரில் கலந்து கொள்ளச் சம்மதித்தார்கள். இதன் மூலம் மிகச் சிறந்ததொரு முன்னுதாரணமிக்க தோழராக அபூ உபைதா (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள்.

ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டின் பொழுது, செங்கடலை ஒட்டிய பகுதியில் சென்று கொண்டிருந்த குறைஷிகளின் வணிகக் கூட்டத்தை எதிர் கொள்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட 300 பேர் கொண்ட படையணிக்கு, அபூ உபைதா (ரலி) அவர்களைத் தளபதியாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

அந்த படையணிக்குத் தேவையான உணவாக சிறிதளவே பேரீத்தம் பழங்கள் இருந்தன. அந்தப் பழங்களை ரேஷன் அடிப்படையில் தன் தோழர்களுக்கு அபூ உபைதா (ரலி) அவர்கள் பங்கிட்டுக் கொடுத்து வந்தார்கள். ஒரு சமயத்தில் ஒரு வேளைக்கு ஒரு நபருக்கு ஒரு பேரீத்தம் பழம் வீதம் கொடுக்கும் இக்கட்டான சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டார்கள். அதனை அடுத்து அந்தப் படையணி கை வசம் வைத்திருந்த அனைத்து பேரீத்தம் பழங்களும் தீர்ந்து போனதன் பின், அங்கு கிடைத்த இலை தலைகளைத் தின்று கொண்டு, தங்களது வாழ்க்கையை நகர்த்திய அந்தப் படையணிகள், எந்தவித முக்கலையும் முனகலையும் வெளிப்படுத்தாமல், தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியின் மீது மிகவும் கவனமாக இருந்து, தாங்கள் ஏற்றுக் கொண்ட பொறுப்பை நிறைவேற்றினார்கள். அப்பொழுது, இவர்களது இந்தத் தியாகத்தைக் கௌரவிக்கும் பொருட்டு, இறைவன் இவர்கள் பயணம் செய்து கொண்டிருந்த கடலின் ஓரம் ஒரு மீனை ஒதுங்கச் செய்தான். அந்த மீனைப் பிடித்து, மொத்த படையணியினரும் தங்களது பசியைப் போக்கிக் கொண்டார்கள். இவர்களது இந்தப் பண்புகள், தவக்கல்த்து அலல்லாஹ் – அதாவது இறைவனையே முற்றிலும் சார்ந்திருந்து, அவனிடமே தங்களது அனைத்து அலுவல்களின் நன்மை தீமைகளை ஒப்படைத்து விடக் கூடிய பண்பைப் பறைசாற்றுவதாக இருந்தது, இதன் மூலம் அவர்களது ஈமானின் – இறைநம்பிக்கையின் உறுதியை வெளிப்படுத்திக் காட்டியது. இன்னும் தன் மீது பொறுப்பைச் சுமத்தி நேர்மையோடும், வாய்மையோடும் காரியமாற்றும் முஸ்லிம்களை இறைவன் என்றுமே கைவிட மாட்டான் என்பதையும் இந்தச் சம்பவம் மூலம் நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டு ஏமன் தேசத்திலிருந்து வந்த ஒரு குழுவொன்று இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்து விட்டு, ஜிஸ்யா என்னும் பாதுகாப்பு வரியைச் செலுத்தச் சம்மதம் தெரிவித்து விட்ட பின், தங்களுக்கு இறைமார்க்கத்தைக் கற்றுக் கொடுப்பதற்காக ஒருவரை அனுப்பி வைக்கும்படி கோரிக்கை வைத்தார்கள். எனவே, அந்த மக்களுடன் நம்பிக்கையான ஒருவரைத் தேர்வு செய்து அனுப்பி வைக்க இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தீர்மானித்த பொழுது, இன்னும் அபுபக்கர் (ரலி), உமர் (ரலி) போன்றோர்களெல்லாம் இருந்து கொண்டிருந்த அந்த அவையில், இன்னும் தன்னைத் தேர்வு செய்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பி வைக்க மாட்டார்களா என உமர் (ரலி) போன்றோர்களெல்லாம் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கண்படும் படியாக தங்களது கழுத்துக்களை உயர்த்தி உயர்த்தி தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருந்த பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அபூ உபைதா (ரலி) அவர்களைத் தேர்வு செய்து அந்தக் கூட்டத்தினருடன் அனுப்பி வைத்தார்கள். அந்தளவுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நன்னம்பிக்கையைப் பெற்றுக் கொண்ட நபித்தோழராக அபூ உபைதா (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள்.

அதுமட்டுமல்லாமல் மிகப் பிரபலமான போர்களான பத்ர், உஹத், கந்தக், பனூ குரைளா மற்றும் சலாசல், திமிஸ்க், ஃபஹல், ஹமஸ், யர்முக் ஆகிய போர்களிலும் பங்கெடுத்துக் கொண்ட மாவீரராகவும் அபூ உபைதா (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள். இன்னும் ஹ{தைபிய்யா உடன்படிக்கையில் கலந்து கொண்டவர்களில் ஒருவராகவும், ஹஜ்ஜத்துல் விதா-வின் பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜில் கலந்து கொண்ட நபித்தோழர்களில் ஒருவராகவும் இருந்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணமடைந்ததன் பின்பு, நபித்தோழர்களின் மத்தியில் மிகப் பெரியதொரு குழப்பமான சூழ்நிலை நிலவியது. இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பிரிந்து அவரது தோழர்கள் கண்ணீர் வடித்தபடி, நிம்மதியிழந்து தவித்துக் கொண்டிருந்த நேரம். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களை அடுத்து தங்களை வழிநடத்திச் செல்லக் கூடிய தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதிலும் அவர்களுக்கிடையே குழப்பங்கள் நிலவி வந்தன. இந்த இக்கட்டான சூழ்நிலையில் எழுந்த கொந்தளிப்பைத் தணிப்பதற்கு வழி தெரியாமல் மக்கள் திண்டாடிக் கொண்டிருந்த பொழுது, அபூ உபைதா (ரலி) அவர்கள் சமயோசிதமாக சில வேளைகளைச் செய்ய ஆரம்பித்தார்கள். அன்சாரிகளையும், முஹாஜிர்களையும் நோக்கி, முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றதொரு முன்மாதிரிமிக்க தலைப்பில் உணர்ச்சிப்பூர்வமானதொரு உரையை நிகழ்த்தி, எழுந்த கொந்தளிப்பை அடக்குவதற்கு முயற்சி செய்தார்கள்.

அப்பொழுது அபுபக்கர் (ரலி) அவர்கள் எழுந்து, மக்கள் தாங்கள் விரும்பிய தலைமையைத் தேர்வு செய்யலாம் என்று அறிவித்து விட்டு, உமர் (ரலி) அவர்களை நோக்கி, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உமர் (ரலி) அவர்களின் வருகையால் இஸ்லாம் பொழிவுற்றது, அவரது மூலமாக அல்லாஹ் இஸ்லாத்தை மேலோங்கச் செய்தான் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இன்னும் உங்கள் முன் நின்று கொண்டிருக்கும் அபூ உபைதா (ரலி) அவர்களைப் பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறும் பொழுது, ஒவ்வொரு சமுதாயத்திற்கு ஒரு நன்னம்பிக்கையாளர் உண்டு. என்னுடைய சமுதாயத்தின் நன்னம்பிக்கையாளராக அபூ உபைதா (ரலி) அவர்கள் திகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இப்பொழுது உங்கள் முன் மிகச் சிறந்த நாயகத் தோழர்கள் நின்று கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் நீங்கள் விரும்பியவரை உங்களது தலைவராகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று அபுபக்கர் (ரலி) அவர்கள் கூறி முடித்ததும், சமயோசிதமாகச் செயல்பட்ட அபூ உபைதா (ரலி) அவர்கள், மற்றும் உமர் (ரலி) அவர்கள் தாங்களே முன் வந்து அபுபக்கர் (ரலி) அவர்களின் திருக்கரங்களில் பைஅத் என்ற உடன்படிக்கை செய்து, அபுபக்கர் (ரலி) அவர்களைத் தங்களை வழி நடத்திச் செல்லும் தலைவராகத் தேர்ந்தெடுத்த பொழுது, அதனைப் பார்த்துக் கொண்டிருந்த அத்தனை நபித்தோழர்களும் ஒவ்வொருவராக வந்து அபுபக்கர் (ரலி) அவர்களைத் தங்களது தலைவராக ஏற்றுக் கொண்டதற்கான பைஅத் – உறுதி மொழியை வழங்கினார்கள்.

இதன் மூலம் நபித்தோழர்களுக்கிடையில் நிலவி வந்த மிகப் பெரும் குழப்பம் தீர்க்கப்பட்டது. ஒவ்வொருவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். இந்த உம்மத்தின் மிகப் பெரிய இக்கட்டான சூழ்நிலையைச் சமாளித்த பெருமை அபூ உபைதா (ரலி) அவர்களையே சாரும்.

அபூ உபைதா (ரலி) அவர்கள் மிகப் பெரிய போர்ப் படைத்தளபதியாக மட்டும் இருக்கவில்லை, மாறாக, மிகச் சிறந்த அரசுத் தூதராகவும், ஆலோசகராகவும், குழப்பான சூழ்நிலைகளில் மிகச் சிறந்த தீர்வை எட்டக் கூடியவராகவும் திகழ்ந்தார்கள். இந்த மிகச் சிறந்த நற்குணங்கள் தான் அவருக்கு அமீனுல் உம்மா (சமுதாயத்தின் நன்னம்பிக்கையாளர்) என்ற கௌரவப் பெயரை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மூலமாக ஈட்டித் தந்தது.

இன்னும் அவர் உயிருடன் இருந்தால், அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு அடுத்த கலீஃபாவாக அபூ உபைதா (ரலி) அவர்களையே நான் தேர்ந்தெடுப்பேன் என்று உமர் (ரலி) கூறினார்கள் என்பதிலிருந்து, எவ்வளவு மிகச் சிறந்த தகைமைப் பண்புகளை அபூ உபைதா (ரலி) அவர்கள் பெற்றிருந்தார்கள் என்பது விளங்கும்.

அபூ உபைதா (ரலி) அவர்கள் படைத்தளபதியாக இருக்க, சிரியாவின் ஹமாஸ் பகுதியை அவரது படை வெற்றி கொண்டதன் பின்பு, அந்தப் பகுதிக்கு உபாதா பின் ஸாமித் (ரலி) அவர்களை மேற்பார்வையாளாராக நியமித்து விட்டு, தனது படையை அங்கிருந்து நகர்த்திக் கொண்டு, செல்லும் வழியில் உள்ள சிறு சிறு குழுக்களை வெற்றி கொண்டதன் பின், லஸாக்கியா என்ற நகரை அடைந்து அந்த நகரின் கோட்டையை முற்றுகையிடுகின்றார்கள்.

இந்த முற்றுகைப் போரும் அதன் பின் நடந்த சம்பவங்களும் இன்றும் இராணுவ திட்டமிடல் வரலாற்றில் மிகச் சிறந்த உத்தியாகப் போற்றப்படுகின்றன. அந்த நகரின் கோட்டையை முற்றுகை இட்ட அபூ உபைதா (ரலி) அவர்களது ராணுவம், அந்தக் கோட்டையைச் சுற்றிலும் பதுங்கு குழிகளை வெட்டி வைக்கின்றது. அதன் பின் தனது படைகளை வாபஸ் பெற்றுக் கொண்டு, அந்த நகரின் ஒதுக்குப் புறத்திற்குத் தனது படையை நகர்த்திக் கொண்டு செல்கின்றார். தங்களது கோட்டை முற்றுகை கைவிடப்பட்டது பற்றி அறிந்து கொண்ட அவர்கள், கோட்டையின் கதவுகளைத் திறந்து தங்களது வழக்கமான அலுவல்களைக் கவனித்துக் கொண்டிருக்கின்றார்கள். மீண்டும் இரவானதும் தங்களது கோட்டைக் கதவுகளை மூடி விடுகின்றனர்.

இரவின் இருளைப் பயன்படுத்திக் கொண்ட அபூ உபைதா (ரலி) அவர்களது படையினர், தாங்கள் ஏற்கனவே வெட்டி வைத்திருந்த பதுங்கு குழிகளில் சென்று தங்களை மறைத்துக் கொள்கின்றனர். மீண்டும் காலைப் பொழுது புலர்ந்த பின் அந்த கோட்டைக் கதவுகள் திறக்கப்பட்டதும், குழிகளில் பதுங்கி இருந்த அபூ உபைதா (ரலி) அவர்களது படையினர் கோட்டைக்கு உள் சென்று கோட்டையை மிக எளிதாகக் கைப்பற்றி விடுகின்றனர். இத்தைகய போர் யுக்தியை முதன் முதலாக இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தியவர், நமது அபூ உபைதா (ரலி) அவர்களாகத் தான் இருக்க முடியும்.

யர்முக் என்றொரு ஆறு, இந்த ஆறு ஜோர்டான் நதியை அடைந்து இன்னும் முப்பது மைல்கள் வளைவாக ஓடி யர்முக் என்ற இடத்தை அடைந்து பின்பும் அது தனது பயணத்தைத் தொடர்கின்றது. அங்கிருந்த மிகப் பெரிய சமவெளிப் பகுதிகளிலும் பாய்ந்தோடுகின்றது. இந்த சமவெளிப்பகுதி தான் யர்முக் என்றழைக்கப்படுகின்றது. இந்த இடத்தில் அபுபக்கர் (ரலி) அவர்களது காலத்தில் மிகப் புகழ் வாய்ந்ததொரு போர் நடந்தது.

இந்தப் போரில் 2 லட்சம் படைவீரர்களைக் கொண்ட ரோமப் படை, வெறும் 40 ஆயிரம் படைவீரர்களைக் கொண்ட இஸ்லாமியப் படையினருடன் மோதியது. ஈராக்கிலிருந்து மிக நீண்ட பயணத்தை மேற்கொண்டு யர்முக் என்ற அந்த இடத்தை காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் அடைந்த பொழுது, முஸ்லிம்கள் பல தலைமைகளின் கீழ் சிதறி சிறு சிறு குழுக்களாக நின்று கொண்டு போர் செய்து கொண்டிருக்கின்ற தர்மசங்கடமான சூழ்நிலையைக் கவனிக்கின்றார்கள். கவலையடைகின்றார்கள். முஸ்லிம் படைகள் அபூ உபைதா (ரலி), யஸீத் பின் அபீ சுஃப்யான் (ரலி), சர்ஜீல் பின் மஸானா (ரலி), இன்னும் நான்காவதாக அம்ர் பின் ஆஸ் (ரலி) ஆகிய தலைவர்களைக் கொண்ட சிறு சிறு படைகளாக நின்று போர் செய்து கொண்டிருப்பதைக் காண்கின்றார்கள்.

இவர்கள் அனைவரும் முதலில் ஒருங்கிணைத்த காலித் பின் வலீத் (ரலி) அவர்கள், மிகவும் கவலைதோய்ந்தவர்களாக ஒரு மிகச் சிறந்த உரை ஒன்றை நிகழ்த்துகின்றார்கள். இந்த உரை இன்றைய காலகட்டத்திலும் நம் அனைவருக்கும் பொருந்தக் கூடிய உரையாக இருந்து கொண்டிருக்கின்றது.

நமது எதிரிகள் மிகச் சிறந்த தயாரிப்புகளுடனும், இன்னும் நம்மை விட பன்மடங்கு படையினருடன் அதிக எண்ணிக்கையிலும் நம் முன் நின்று கொண்டிருக்கின்றார்கள். நம்மை அழித்தொழிப்பதற்குக் கங்கணம் கட்டிக் கொண்டு நின்று கொண்டிருப்பதையும் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் இப்படி சிறு சிறு குழுக்களாக இருந்து கொண்டிருப்பது உங்களை எதிர்க்கும் எதிரிகளுக்கு மிகச் சாதகமான அம்சமாகப் போய் விடும், அவர்கள் நம்மை எளிதில் வீழ்த்தி விடுவார்கள். காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் கருத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம் படைவீரர்கள், இன்னும் காலித் பின் வலீத் (ரலி) அவர்களது ஆலோசனைப்படி, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைமையின் கீழ் போரிடுவது என்றும் முடிவாகியது. இப்பொழுது, முஸ்லிம் படைவீரர்கள் ஒற்றுமையாக ஓரணியாக ஒரு தலைமையின் கீழ் நின்று போரிடத் தீர்மானித்து, எதிரிப் படையினரை ஊடறுத்துச் சென்று வெற்றியை நோக்கிப் போரிடுகின்றார்கள். முதல் நாள் போர் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் தலைமையின் கீழ் போராடுவது என்று தீர்மானமாகியது, இன்னும் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் தனக்குள்ள அனுபவத்தின் மூலமாக, முஸ்லிம் படையணியினருக்கு பயிற்சி அளித்து போருக்குத் தயார்படுத்துகின்றார்கள்.

இரண்டு அணிகளுக்கும் இடையே மிகக் கடுமையாகப் போர் நடைபெறுகின்றது. முதல் நாளிலேயே ரோமர்களது படை ஒரு லட்சம் போர் வீரர்களை இழக்கின்றது. வாட்களின் இரைச்சலும், அடிபட்டவர்களின் ஓலங்களும் திரும்பும் திசை எல்லாம் ஒலித்துக் கொண்டிருந்தது. முஸ்லிம்கள் ரோமப் படைகளை ஊடறுத்துச் சென்று காலீத் பின் வலீத் (ரலி) தலைமையில் மிகவும் சுறுசுறுப்பாக போர் புரிந்து கொண்டிருந்த பொழுது, தலைநகர் மதீனாவிலிருந்து வந்த தூதர் ஒருவர் ஒரு கடிதத்தைக் கொண்டு வருகின்றார். மதீனாவிலிருந்து வந்த அந்தத் தூதர் தான் கொண்டு வந்த கடிதத்தை அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் (ரலி) அவர்களிடம் ஒப்படைக்கின்றார். கடிதத்தை வாங்கிய அபூ உபைதா (ரலி) அவர்கள், அதனை யாரிடமும் கூறாமல் தனது சட்டைப் பையில் வைத்துக் கொள்கின்றார்.

இப்பொழுது முஸ்லிம்கள் ரோமர்களை வெற்றி கொண்டு விட்டனர், அந்தக் காட்சியை படைத்தளபதியாக இருந்த காலித் பின் வலீத் (ரலி) பார்த்துக் கொண்டிருந்த அந்த சமயத்தில் மிகவும் மரியாதையுடன் மதீனாவிலிருந்து வந்த தபாலை அவரிடம் அபூ உபைதா (ரலி) அவர்கள் ஒப்படைக்கின்றார்கள். கடிதத்தை படித்து முடித்த காலித் பின் வலீத் (ரலி) அவர்கள், அந்தக் கடிதத்தில் அபுபக்கர் (ரலி) அவர்கள் இறந்து விட்ட செய்தியை அறிந்து மிகவும் கடுமையான சோகத்திலாழ்ந்து விடுகின்றார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

மேலும் அந்தக் கடிதத்தில் அபுபக்கர் (ரலி) அவர்களை அடுத்து, உமர் (ரலி) அவர்களை மக்கள் தங்களது அடுத்த கலீபாவாகத் தேர்ந்தெடுத்திருப்பது குறித்து மிகவும் சந்தோஷமடைந்தார்கள். இன்னும் ஒரு அதிர்ச்சியான செய்தியும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது, படைத்தளபதிப் பொறுப்பில் இருந்து காலித் பின் வலீத் (ரலி) அவர்களை நீக்கி விட்டு, அந்த இடத்தில் அபூ உபைதா (ரலி) அவர்களை மீண்டும் நியமனம் செய்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தைப் படித்த மாத்திரத்திலேயே உடனே தனது பொறுப்பை அபூ உபைதா (ரலி) அவர்களுக்கு மாற்றிக் கொடுத்து விட்டு, அபூ உபைதா (ரலி) அவர்களது தலைமையின் கீழ் போர் புரியத் தயாராகி விட்டார்கள் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள்.

இன்னும், அபூ உபைதா (ரலி) அவர்களே! அல்லாஹ் உங்கள் மீது அருட்கொடைகளைச் சொறியட்டும். கடிதம் வந்தவுடனேயே ஏன் நீங்கள் என்னிடம் தெரிவிக்கவில்லை?

அமீனுல் உம்மா அபூ உபைதா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

படைக்களத்தில் நாங்கள் உங்களைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. இன்னும் நீங்கள் ரோமப் படைகளுக்கு நடுவே முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில் உங்களைத் தடுக்கவும் விரும்பவில்லை. நாம் இந்த உலகத்தின் அதிகாரத்தை வேண்டி நிற்பவர்களல்ல, மாறாக, இந்த உலகத்தில் கடமையாற்ற வந்தவர்கள். அல்லாஹ்வினுடைய திருப்பொருத்தத்தை நாடி கடமையாற்றக் கூடிய நாம் அனைவரும் சகோதரர்களே! என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க பதிலைக் கூறினார்கள்.

மிகக் கடினமான சூழ்நிலைகளின் போது தனக்குக் கிடைக்கப் பெற்ற, வலியக் கிடைத்த அதிகாரத்தின் மீது கவனம் செலுத்தாமல், அமைதியாகவும் பொறுப்பாகவும் இருந்து கடமையாற்றிய இவர்களின் பண்பு.., மீண்டும் அவர்களை, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வழங்கிய அமீனுல் உம்மத் என்ற பட்டத்திற்குத் தகுதி வாய்ந்தவராகவும், அதனை நிரூபிப்பது போல் இருந்தது. அவர் தலைமைப் பதவியை அங்கு விரும்பவில்லை. மாறாக, இஸ்லாத்தின் மறுமலர்ச்சி ஒன்றே தங்களது ஒரே நோக்கமாகக் கொண்டு பணியாற்றிய அந்த உத்தமத் தோழர்களின் பண்புகள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்த நன்மக்களிடம் விதைத்து விட்டுச் சென்று நற்பண்புகளின் தாக்கங்கள் தான் அதன் காரணம் என்பதை சொல்லாமல், அவர்கள்  செயல்கள் நிருபணம் செய்து கொண்டிருந்தன. இன்னும் தன்னிடமிருந்த பதவி பறிக்கப்பட்ட பின்பும் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் எந்தவித மறுப்புமின்றி தன்னுடைய பதவியை மாற்றிக் கொடுத்ததும் இத்தைகய சிறப்புப் பண்புக்குரியவர்களின் பட்டியலில் அவர்களையும் சேர்த்தது. இன்னும் நாகரீகம் என்றால் என்ன? என்று கேட்டுக் கொண்டிருந்த அரபுக் குலங்களில், எத்தகைய சிறப்புத் தகைமையை அந்த மக்கள் மத்தியில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஏற்படுத்தி விட்டுச் சென்றிருக்கின்றார்கள் என்பதையும் அவர்களது செயல்பாடுகள் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

டமாஸ்கஸ் நகரம் வெற்றி கொள்ளப்பட்ட பின்பு தளபதி அபூ உபைதா (ரலி) அவர்கள், கலீஃபா உமர் (ரலி) அவர்களுக்கு ஒரு மடல் எழுதி அனுப்புகின்றார்கள், அந்த மடலில் உமர் (ரலி) அவர்களே, டமாஸ்கஸ் நகர மக்கள் தங்களது வருகைக்காகக் காத்திருக்கின்றார்கள், உங்களிடம் தான் தங்களது நகரின் சாவியை ஒப்படைப்போம் என்பதில் அவர்கள் பிடிவாதமாக இருக்கின்றார்கள். எனவே, உடன் டமாஸ்கஸ் வரவும் என்ற செய்தியை அனுப்புகின்றார்கள்.

அபூ உபைதா (ரலி) அவர்களின் மடல் கிடைத்தவுடன், உமர் (ரலி) அவர்கள் சிரியாவிற்குப் பயணமாகின்றார்கள். தன்னை வரவேற்கக் காத்திருந்தவர்களிடம் எங்கே எனது சகோதரன் என்று உமர் (ரலி) கேட்கின்றார்கள். யார் உங்களது சகோதரன் என்று மக்கள் ஆச்சரியத்தோடு வினவ, அபூ உபைதா (ரலி) அவர்கள் தான் என்று பதில் கூறவும், அவர் அண்மித்து வந்து கொண்டிருப்பதை மக்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள். உமர் (ரலி) அவர்கள் அபூ உபைதா (ரலி) அவர்களைக் கட்டித் தழுவி, பின் இருவரும் அபூ உபைதா (ரலி) அவர்களது இல்லத்திற்குச் செல்கின்றார்கள்.

அபூ உபைதா (ரலி) அவர்களின் ஆடம்பரமில்லாத அந்த எளிய குடிசையைச் சுற்றி தன்னுடைய பார்வையைச் செலுத்திய உமர் (ரலி) அவர்கள், அங்கு வாளும், அம்பும், வில்லையும் தவிர வேறொன்றையும், இந்த உலக வாழ்வின் எந்த அலங்காரத்தையும் அங்கு அவரால் காண முடியவில்லை. ஆச்சரியமடைந்த உமர் (ரலி) அவர்கள், அபூ உபைதா (ரலி) அவர்களே! நீங்கள் ஒரு மிகப் பெரிய பொறுப்புக்குரியவராக நியமிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், உங்களுக்காக நீங்கள் எதனையும் செய்து கொள்ளவில்லையே! என்று வினவுகின்றார்.

இப்பொழுது நீங்கள் இங்கு எதனைப் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்களோ, இதுவே என்னுடைய இந்த வாழ்க்கைக்குப் போதுமானதாகும் என்று அபூ உபைதா (ரலி) அவர்கள் பதில் கூறவும், இதைத் தான் நான் உங்களிடம் எதிர்பார்த்தேன், இந்த அடிப்படைத் தகுதிகளுடனும், உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புக்களுக்கு நன்னம்பிக்கைக்கு உரியவராகவும் என்றைக்கும் நீங்கள் நிலைத்து, உண்மையாளராக இருங்கள் என்று வாழ்த்தினார்கள்.

அபூ உபைதா (ரலி) அவர்களின் கீழ் இருந்த முஸ்லிம்களின் படைகள், சிரியா மற்றும் அதன் சுற்றுப் புறங்களைக் கைப்பற்றி இஸ்லாமிய ஆட்சியை நிலைநிறுத்திக் கொண்டிருந்த உச்சக்கட்ட வேளையில், சிரியா முழுவதும் ஒருவித பிளேக் நோய் பரவியது. இத்தகைய கொடுமையான நோயை இதற்கு முன் அந்த மக்கள் அனுபவித்ததே கிடையாது. இன்னும் அந்த நோய்க்கு அதிகமான மக்கள்  இரையாகிக் கொண்டிருந்தார்கள். இதனைக் கேள்விப்பட்ட கலீபா உமர் (ரலி) அவர்கள், அபூ உபைதா (ரலி) அவர்களை மதீனாவிற்கு வரும்படி ஒரு கடிதத்துடன் ஒரு தூதரை சிரியாவுக்கு அனுப்பி வைத்து, உங்களுடன் நான் ஒரு முக்கியமான விசயமாகக் கலந்துரையாட வேண்டியதிருக்கின்றது என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடுகின்றார்கள்.

இன்னும் இந்தக் கடிதத்தை இரவில் பெற்றுக் கொண்டால், அதிகாலை பொழுது புலர்வதற்கு முன் அங்கிருந்து கிளம்பி விட வேண்டும் என்றும், இன்னும் காலையில் பெற்றுக் கொண்டால் மாலையில் சூரியன் மறைவதற்குள் அந்த இடத்தை விட்டு, எந்தவித தாமதமுமின்றிக் கிளம்பி விட வேண்டும் என்றும் கலீபா உமர் (ரலி) அவர்கள் கட்டளை பிறப்பித்திருந்தார்கள்.

தனக்கு வந்த கடிதத்தை வாசித்துப் பார்த்த அபூ உபைதா (ரலி) அவர்கள், தன்னிடம் எந்த விசயம் குறித்து உமர் (ரலி) அவர்கள் பேசவிருக்கின்றார்கள் என்பது குறித்து உணர்ந்தவர்களாக, அந்த கடிதத்தையே சோகமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். உமர் (ரலி) அவர்களோ அந்தக் கடிதத்தின் மூலம் மீண்டும் இந்த உலகத்தில் பிறக்க இயலாத ஒரு மனிதரை உயிருடன் பாதுகாக்க முனைந்தார்கள்.

உமர் (ரலி) அவர்களே! நீங்கள் என்ன விசயமாக என்னிடம் கலந்துரையாட விரும்புகின்றீர்கள் என்பது எனக்குத் தெரியும். நான் முஸ்லிம்களின் படையணியில் இருந்து கொண்டிருக்கின்றேன், இன்னும் அவர்கள் இப்பொழுது  மிக இக்கட்டான சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கும் பொழுது, என்னைத் தனித்துப் பிரித்து அவர்களை கையறுநிலையில் விட்டு விட்டு வர நான் சம்மதிக்க மாட்டேன். இன்னும் அவர்களது முடிவும், என்னுடைய முடிவும் இறைவனுடைய கைகளில் இருக்கின்றது. உமர் (ரலி) அவர்களே! என்னருமை கலீஃபா அவர்களே! உங்களது கட்டளைக்கு மறுப்புத் தெரிவிக்க நேர்ந்து விட்டதே! என்பது குறித்து நான் மிகவும் வருத்தமடைகின்றேன் என்று உமர்(ரலி) அவர்களுக்கு பதில் அனுப்பி விடுகின்றார்கள்.

உமர் (ரலி) அவர்கள் அந்தக் கடிதத்தை வாசித்துக் கொண்டிருக்கையில், அவரது கணகள் குளமாகி, கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. கடிதத்தைப் பார்த்து விட்டு உமர் (ரலி) அவர்கள் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதைக் கண்ட சுற்றியிருந்த தோழர்கள், உமர் அவர்களே! ஏதேனும் துக்ககரமான செய்தியா? நமது படைகளுக்கு எதுவும் நேர்ந்து விட்டதா?, உங்களைத் துன்பத்திற்குள்ளாக்கிய அந்த செய்தியை எங்களுக்குச் சொல்லுங்களேன் என்றார்கள். முஸ்லிம் படை வீரர்களின் தளபதி, அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் (ரலி) அவர்கள் மரணத்தின் விளிம்பில் இருக்கின்றார் என்று பதிலுரைத்தார்கள்.

ஆம்! மரணம் அவருக்கு மிக அருகாமையில் தான் இருந்து கொண்டிருந்தது.

உமர் (ரலி) அவர்கள் ஊகித்தபடியே நடந்தது. சில நாட்கள் கழித்து அபூ உபைதா (ரலி) அவர்கள் மரணமடைந்து விட்டார்கள் என்ற செய்தியும் மதீனாவை வந்தடைந்தது.

அபூ உபைதா (ரலி) தன்னுடைய கடைசி நிமிடங்களின் பொழுது தன்னுடைய தோழர்களை அழைத்துக் கூறினார் :

என்னருமைத் தோழர்களே! உங்களுக்கு நான் சில அறிவுரைகளை விட்டுச் செல்கின்றேன். அதனைப் பின்பற்றும் காலமெல்லாம் பாதுகாப்பையும் இன்னும் அமைதியையும் பெற்றுக் கொள்வீர்கள். அவையாவன:

 • தொழுகை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுங்கள்
 • ரமளான் மாதத்தில் நோன்பிருங்கள்
 • (குர்பானி) அறுத்துப் பலியிடுதலையும் இன்னும் தான தர்மங்களையும் செய்து கொள்ளுங்கள்
 • ஹஜ்ஜை நிறைவேற்றுங்கள்
 • உம்ராவையும் செய்யுங்கள்
 • உங்களுக்குள் நன்மையை ஏவிக் கொள்ளுங்கள்
 • உங்களது ஆட்சியாளர்களின் நலத்திற்கும் இன்னும் உங்கள் மீது நீதமாக நடந்து கொள்ளவும் விரும்புங்கள்.
 • உங்களது ஆட்சியாளர்களை நீங்கள் ஏமாற்றி விடாதீர்கள்
 • உங்களது கடமைகளை நிறைவேற்றும் பொழுது கவனமாக இருங்கள், அந்த கடமையை நிறைவேற்றுவதனின்னும் இந்த உலக ஆசாபாசங்கள் உங்களை மயக்கி விட வேண்டாம்.
 • நான் என்ன சொல்ல வருகின்றேன் என்பதையும் கேட்டுக் கொள்ளுங்கள்! ஒரு  மனிதனுக்கு ஆயிரம் வருடங்களாக அவனது ஆயுளை நீட்டித்துக் கொடுத்த போதிலும், என்றாவது ஒருநாள் அவன்.., நான் உங்கள் முன் கிடக்கின்றேனே இதைப் போல அவன் மரணத்தைச் சுவைத்தே ஆக வேண்டும். அந்த மரணத்தின் பிடியிலிருந்து யாரும் தப்பித்திட இயலாது.

உங்கள் மீது என்னுடைய ஸலாம் உண்டாகட்டும். அல்லாஹ்வினுடைய கருணையும் உங்கள் அனைவர் மீதும் உண்டாகட்டும்.

பின் அபூ உபைதா (ரலி) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் பக்கம் திரும்பி,

இந்த மக்களுக்கு தொழுகையை முன்னின்று நடத்துங்கள் (அதாவது, எனக்குப் பின் என்னுடைய பதவியை ஏற்றுக் கொள்ளுங்கள்) என்றார்கள்.

இன்னும் சில வார்த்தைகள் அவரது வாயிலிருந்து வந்து கொண்டிருக்கின்ற நிலையிலேயே அவரை மரணம்  தழுவிக் கொண்டது.

இன்னா லில்லாஹி  வ இன்னா இலைஹி ராஜிஊன்.

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் மக்கள் முன் நாவு தழு தழுக்க, உதடுகள் துடித்துக் கொண்டிருக்க ஒரு உரையை ஆற்றினார்கள் :

என்னருமை இஸ்லாமியச் சகோதரர்களே! இங்கு கூடியிருக்கின்ற நம் அனைவரையும் விட மிகச் சிறந்த இதயத்திற்குச் சொந்தக்காரரான ஒருவரை இழந்து விட்டு, இப்பொழுது நாம் மிகப் பெரிய துக்கத்தில் ஆழ்ந்து நின்று கொண்டிருக்கிறோம். கசடுகளிலிருந்தும் அழுக்குகளிலிருந்தும் விடுபட்ட தூய்மையான இதயத்தைப் பெற்றவராக அவர் வாழ்ந்தார். மறுமையை மிகவும் நேசித்தவர், இன்னும் நம் அனைவர் மீதும் நல்லதையே விரும்பியவர். இந்த உலக வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுதே இறைத்தூதர் (ஸல்) அவர்களால், என்னுடைய உம்மத்தின் நன்னம்பிக்கையாளர் என்றும், வாழுகின்ற காலத்திலேயே சொர்க்கம் குறித்து நன்மாரயம் கூறப்பட்டவருமான ஒருவரை நாம் இழந்து துடித்துக் கொண்டிருக்கின்றோம். இன்னும் அவர் மிகச் சிறந்த அதிர்ஷ்சாலியும் கூட! சுவனத்தில் அவரது தகுதி மிக உயர்ந்த தகுதியாக நிலைபெற்றிருக்க நாம் பிரார்த்திப்போம்.

அல்லாஹ் தன்னுடைய கருணையை அவர் மீது பொழியட்டும்!

6. அபுல் ஆஸ் இப்னு அர் ராபிஆ (ரலி)

அபுல் ஆஸ் இப்னு அர் ராபிஆ என்பவர் மக்காவில் அன்று இருந்த மிகப் பெரும்; குரை~pயர் குலத்தில் ஒன்றான அ~; ~ம்ஸ் கோத்திரத்தில் பிறந்தவர். இளமையில் மிகவும் துடிப்புடனும், மிகவும் அழகு வாய்ந்தவராகவும்,   அன்றைய அரபுக்குலத்திற்கே உரிய பெருமையையும்,  முன்னோர்களின் வழிவந்த உயர்குடிப் பெருமையையும் பெற்றவராகக் காணப்பட்டார்.

திருமறைக் குர்ஆனில் கூறப்பட்டிருப்பது போல கோடை கால சிரியா நாட்டை நோக்கிய வர்த்தகம் மற்றும் குளிர்கால எமன் நாட்டை நோக்கிய வர்த்தகத்தில் மிகவும் திறமை வாய்ந்தவராகவும், மக்களின் நன்மதிப்பைப் பெற்று பிறருக்காக ஒப்பந்த அடிப்படையில் வர்த்தகம் செய்து கொடுப்பவராகவும், மிகவும் நாணயமானவராகவும், நேர்மையாளராகவும், தன்னை நம்பி பொறுப்பை ஒப்படைத்தவர்களிடம் நடந்து கொண்டார்.

முஹம்மது (ஸல்) அவர்களின் முதல் மனைவியும் மூஃமின்களின் தாயாரான கதீஜா பின்த் குவைலித் அவர்கள் அபுல் ஆஸ் அவர்களுக்கு தாய் வழிச் சித்தியாவார். அபுல் ஆஸ் அவர்கள் கதீஜா அவர்களிடம் மிகுந்த அன்பும் நேசமும் கொண்டிருந்தார்கள். தன் சொந்த மகன் போன்று அளவு கடந்த பாசத்தை கதீஜா (ரலி)  அவர்கள் காட்டினார்கள். முஹம்மது (ஸல்) அவர்களும் அபுல் ஆஸ் அவர்கள் மீது மிகுந்த அன்பு காட்டினார்கள்.

காலங்கள் நகர்ந்த வேகத்தில் முஹம்மது (ஸல்) மற்றும் கதீஜா அம்மையாரின் அருந்தவப் புதல்வியர்களில் மூத்தவரான ஜய்னப் அவர்கள் திருமண வயதை எட்டியதும், அன்றைய மக்காவில் இருந்த அத்தனை மிகப் பெரிய குலத்தவர்களும்,   ஜய்னப் அவர்களை மணமுடிக்க போட்டி போட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. தந்தையோ நன்னம்பிக்கையாளர் எனப்போற்றப்பட்டவர் (அல் அமீன்), தாயாரோ பரிசுத்தமானவள் என்ற பொருளுடன் கூடிய அத்தாஹிரா என்றழைக்கப்பட்டவர், இரண்டு பேருடைய குலங்களும் அன்று மிகவும் கண்ணியமாக மதிக்கப்பட்ட உயர்குடியின் வழிவந்தவர்கள். இத்தகைய பெருமையைப் பெற்ற ஜய்னப் அவர்கள் நல்லொழுக்கங்கள் நிறைந்தவராகவும், அழகிய நல்மங்கையாகவும் திகழ்ந்தார்கள். எனவே இத்தகைய நற்பேறு பெற்ற இந்த மங்கையை அடையப் போகும் அதிர்~;டசாலி யார் என மக்கமா நகரமே காத்துக் கொண்டிருந்த வேளையில், இறைவனின் நாட்டம் அபுல் ஆஸ் அவர்களை அத்தகைய நற்பேற்றைப் பெற்றவராக்கியது.

இந்த இளந்தம்பதிகள் இல்லற வாழ்வில் அடி எடுத்து வைத்த சில ஆண்டுகளிலேயே இஸ்லாம் என்னும்  ஒளியின் கீற்றுகள் மெல்ல மெல்ல மக்காவின் அடிவானத்தில் இருந்து வெளிக்கிளம்ப ஆயத்தமானது. நேற்று வரை ஜய்னப் அவர்களின் தந்தையாக இருந்த முஹம்மது அவர்கள், இன்று இறைத்தூதர் (ஸல்) என்று மாற்றம் கண்டு, உலகிற்கோர் அருட்கொடையாக மனித குலத்தை வாழ்விக்க இறைவனால் அனுப்பப்பட்டவரானார். நபியே! நீர் உம்முடைய இரத்த சொந்தங்களை முதலில் இஸ்லாத்தின் பக்கம் அழைப்பீராக! என்ற இறைச்செய்தியின் கட்டளையைச் செவிமடுத்தவர்களாக இறைத்தூதர் அவர்களது குடும்பத்தில் இருந்து, முஹம்மது (ஸல்) அவர்களது துணைவியார் கதீஜா (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அதனையடுத்து இவர்களின் புதல்வியர்களான ஜய்னப், ருக்கையா, உம்மு குல்தும், பாத்திமா ஆகியோரும் இஸ்லாத்தை ஏற்றனர். இவர்களில் பாத்திமா அவர்கள் தான் மிகவும் இளையவராக இருந்தார்கள்.

ஜய்னப் அவர்கள் இஸ்லாத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு, தன்னை முழுமையாக இறை மார்க்கத்தில் அர்ப்பணித்துக் கொண்டிருந்த போதிலும், இவரது கணவரான அபுல் ஆஸ் அவர்கள் தன்னுடைய பழைய மார்க்கத்தில் இருந்து விடுபட விரும்பாமல் அதிலேயே நிலைத்திருந்தார். இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் மூஃமினான பெண்களை முஸ்லிம் அல்லாதவர்களுக்கு திருமணம் செய்யக் கூடாது என்ற இறைக்கட்டளை அப்பொழுது வந்திருக்கவில்லை.

இஸ்லாத்தின் ஒளிக்கதிர்கள் மக்கா முழுமையையும் ஆட்சி புரிய ஆரம்பித்தவுடன் அதன் வெளிச்சப் புள்ளிகள் சிலருக்கு இதமான காலைக் கதிராகவும், சிலருக்கு உச்சி வெயிலின் கொடுமையாகவும் பட்டது. மக்காவின் குரை~pத் தலைவர்களுக்கு உச்சி வெயிலின் கொடுமையாகப்பட்டமையால், இதை எவ்வாறு தடுப்பது என்று கை கொண்டு சூரியனை மறைக்க முயற்சி செய்தனர். முஹம்மது வீட்டின் பெண் பிள்ளைகளை இனியும் நம் வீட்டு மருமகள்களாக வைத்திருக்காமல் பிறந்தகத்திற்கே அனுப்பி விடுவதன் மூலம் முஹம்மதுக்கு நாம் ஒரு பாடம் கற்பித்துக் கொடுக்க வேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானமாயிற்று.

அதன் மூலம் அவர் தன்னுடைய மக்கள் வாழாவெட்டியாக வாழ்வதையும், இந்தக் கொடுமைகளை எல்லாம் அவர் பார்த்தபின்பு தன்னுடைய இறைஅழைப்புப் பணியை விட்டு விட்டு நம் சொல்படி கேட்டு விடுவார் என்ற நம்பிக்கையுடன், முதலில் குறை~pத் தலைவர்கள் அபுல் ஆஸ் அவர்களைச் சந்திக்கச் சென்றனர். அபுல் ஆஸே! உன்னுடைய மனைவி ஜய்னப்பை விவாகரத்துச் செய்து, அவரது தகப்பனார் வீட்டுக்கு அனுப்பி விடும்ஷ, என்று குறை~pயர் கூட்டம் அவரை வற்புறுத்தியது மட்டுமல்லாது, இவரை விட அழகான, நல்ல பண்புள்ள மனைவியை உனக்கு நாங்கள் மணமுடித்து வைக்கின்றோம் என்றும் அந்தக் கூட்டம் கூறி நின்றது.

இறைவன் மீது சத்தியமாக! நான் அவ்வாறு செய்ய மாட்டேன். அவருடைய இடத்தில், இந்த உலகத்தில் இருக்கும் எந்தவொரு பெண்ணையும் என்னால் மணமுடித்து வாழ இயலாது, எனக்கு அதில் விருப்பமில்லை, என்பது தான் அபுல் ஆஸ் அவர்களின் பதிலாக இருந்தது.  ஆனால் பெருமானார் (ஸல்) அவர்களின் ஏனைய பெண்மக்களான ருக்கையா மற்றும் உம்மு குல்தூம் ஆகிய இருவருடைய கணவன்மார்களும், இருவரையும் விவாகரத்துச் செய்து பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர். பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களுடைய மக்கள் பிறந்தகம் வந்ததற்கு, வருத்தமடைவதற்குப் பதிலாக மகிழ்ச்சியடைந்தார்கள். மேலும், கூடிய விரைவில் ஜய்னப் அவர்களும் பிறந்தகம் அனுப்பப்பட்டு விடுவார் என்றும் எதிர்பார்த்திருந்தார்கள். தவிர அபுல் ஆஸ் அவர்கள் குரை~pத் தலைவர்கள் சொல்வது போல் கேட்டு நடக்க அப்பொழுது எந்தவித சட்டமோ, அவற்றை இயற்றி நடைமுறைப்படுத்தக் கூடிய அதிகாரம் பெற்றவர்களோ கிடையாது.

இந்த நிகழ்வுகளினூடே முஹம்மது (ஸல்) அவர்கள், மதினாவில் குடியேறி தமது தூதுத்துவத்தை வலுவாக்கிக் கொண்டிருந்தார்கள்.  அதன் பின் முன்னைக் காட்டிலும் குரை~pகள் மிகவும் பகை கொண்டவர்களாக மாறி, இஸ்லாம் மேலும் பரவ விடாமல் தடுப்பதற்குண்டான வேலைகளில் இறங்கினர். இதன் அடிப்படையில் இஸ்லாமியப் படையும், குரை~pகளின் நிராகரிப்போர் படையும் பத்ர் என்னும் இடத்தில் போரைச் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகியது. இந்தப் போரில் கலந்து கொள்வதற்கு அபுல் ஆஸ் அவர்களுக்கு விருப்பம் இல்லை எனினும், அந்தக் குரை~pக் குலங்களில் இவர் ஒரு மதிப்புமிக்கவராக இருந்தமையால் கண்டிப்பாக போரில் கலந்து கொள்ள வேண்டியது அவசியமாகியது. பத்ருப் போரில் மக்கத்து நிராகரிப்பாளர்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டதனால், பலர் கொல்லப்பட்டனர், பலர் சிறை பிடிக்கப்பட்டனர். அவ்வாறு சிறை பிடிக்கப்பட்டவர்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மருமகனார் மற்றும் ஜய்னப் அவர்களின் கணவனரான அபுல் ஆஸ் அவர்களும் ஒருவராக இருந்தார்.

ஒவ்வொரு பிணைக்கைதிக்கும் அவரவர் தகுதிக்குத் தக்கவாறு ஆயிரம் முதல் நான்காயிரம் திர்ஹம்கள் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்திருந்தார்கள். இதில் ஒவ்வொரு குடும்பத்தவரும் தத்தமது பிரதிநிதிகளை மக்காவில் இருந்து பணயத் தொகையுடன் அனுப்பி, பணத்தைச் செலுத்தி விட்டு சிறை பிடிக்கப்பட்டவர்களை மீட்டுச் சென்று கொண்டிருந்தார்கள். ஜய்னப் அவர்களும் தமது கணவனாரை மீட்க தம் சார்பாக ஒருவரை பணயத் தொகையுடன் அனுப்பி வைத்திருந்தார்கள். அந்தப் பிரதிநிதி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, அபுல் ஆஸ் அவர்களை மீட்டுச் செல்வதற்கான பணயப் பொருளுடன் வந்தார். அந்தப் பணயப் பொருளைப் பார்த்தவுடன், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உணர்ச்சி வசப்பட்டவராக அவரது முகம் கவலையால் வாடி சோகம் ததும்பி நின்றது. ஆம், ஜய்னப் அவர்கள் தம் கணவரை மீட்க, தமது தாயார் கதீஜா அவர்கள் இறப்பதற்கு முன் தனக்கு அளித்திருந்த நெக்லஸை பணயத் தொகையாக அனுப்பி இருந்ததே, நபிகளாரின் கவலைக்குக் காரணமாகும். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கிக் கூறினார்கள் :

எனதருமைத் தோழர்களே, அபுல் ஆஸை மீட்பதற்காக ஜய்னப் இந்தப் பொருளைப் பணயப் பணமாக அனுப்பி உள்ளார். நீங்கள் விரும்பினால், இவரை விடுதலை செய்து, இந்தப் பொருளையும் அவரிடம் திருப்பிக் கொடுத்து விடுங்கள். இல்லை எனில் நீஙகள் விரும்பியவாறு நடந்து கொள்ளலாம் என்றார்கள்.

நபிகளாரின் மனச்சுமையை கண்ட அண்ணலாரின் தோழர்கள், உங்கள் விருப்பப்படியே நாங்கள் செய்கின்றோம் என்று கூறி, அபுல் ஆஸ் அவர்களி;ன் பணயத் தொகையைத் திருப்பிக் கொடுத்து விட்டனர். அபுல் ஆஸ் அவர்களை விடுதலை செய்வதற்கு முன், தன் மகள் ஜயனப் அவர்களை தன்னிடம் திருப்பி அனுப்பி விட வேண்டும் என்ற நிபந்தனையை, அண்ணலார் (ஸல்) அவர்கள் அவருக்கு  விதித்தார்கள்.

மக்காவை அடைந்தவுடன், அபுல் ஆஸ் அவர்கள் தம் துணைவியார் ஜய்னப் அவர்களை அழைத்து, உங்கள் தகப்பனாருடைய தோழர்கள் உங்களை மதினாவிற்கு அழைத்துச் செல்வதற்காக காத்துக் கொண்டிருக்கின்றார்கள். எனவே தங்கள் பொருள்களை எடுத்துக் கொண்டு புறப்படத் தயாராகுங்கள் என்று கூறி, அவரே முன்னின்று ஜய்னப் அவர்களின் பொருள்களை ஒட்டகையில் ஏற்றி, தன் தமயனார் அம்ர் இப்னு அர்ராபிஆ அவர்களை அழைத்து, பத்திரமாக மக்கா எல்லையில் நிற்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்களிடம் ஒப்படைத்து விட்டு வருமாறு அனுப்பி வைக்கின்றார்கள்.

அம்ர் இப்னு அர்ராபிஆ அவர்களும், தம் தோளின் மீது அம்புகளையும், வில்லையும் எடுத்து வைத்துக் கொண்டு, அந்தப் பகல் வேளை நேரத்தில், மக்காவின் அனைத்து மக்களும் பார்த்துக் கொண்டிருக்க அவர்களின் முன்பாகவே அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றார்.

இந்தக் காட்சியைக் கண்டு கொண்டிருந்த குரை~pயர்கள் கோபமடைந்தவர்களாக, அனைவரும் ஒன்று கூடி, இருவரையும் துரத்திச் சென்று, மக்கா எல்லையில் வைத்து இடை மறிக்க முயன்றனர். அம்ர் அவர்கள் மிகவும் கோபமடைந்தவர்களாக, இறைவன் மீது சத்தியமாக! எவராவது எங்களைத் தடுக்க முயல்வீர்களானால், இந்த அம்பைக் கொண்டே உங்களைக் கொலை செய்து விடுவேன் என்று தன்னைத் தடுக்க வந்தவர்களை எச்சரிக்கை செய்தார்கள்.

அபு சுஃப்யான் இப்னு ஹத் என்பவர் அப்பொழுது மக்கா குரை~pகளின் அணியில் இருந்தவர், அம்ரை அணுகி, அம்பை முதலில் தாழ்த்தி விட்டு, நாங்கள் சொல்வதைச் சிறிது செவிமடுத்துக் கேட்பீராக என்றார்கள். அம்ர் அவர்களும் பேச்சு வார்த்தைக்கு சம்மதித்தவுடன், நீங்கள் இப்பொழுது செய்து கொண்டிருப்பது, அதாவது இவ்வளவு மக்களின் முன்னிலையிலும் ஜய்னப் அவர்களைக் கூட்டிச் சென்று மதினத்துத் தூதுவர்களிடம் ஒப்படைப்பது என்பது ஒரு அறிவார்ந்த செயலல்ல. சற்று சில நாட்களுக்கு முன் பத்ரில் என்ன நடந்தது என்பதும், இவரது தந்தையால் நாம் எந்தளவு பாதிப்பிற்குள்ளானோம் என்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த நிலையில் இவரை நீங்கள் முஹம்மது வசம் ஒப்படைக்க அழைத்துச் செல்வதைப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் நாம் அவருக்குப் பயந்து தான் இவரை அனுப்பி வைக்கின்றோம் என்று நம்மை ஏளனமாத் தூற்றுவார்கள். எனவே இப்பொழுது நீங்கள் இவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள். சில நாட்கள் கழித்து யாரும் அறியாத வண்ணம் இரவு நேரத்தில் அழைத்துச் சென்று முஹம்மது அவர்களின் ஆட்களிடம் ஒப்படைப்பதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்றும், மேலும்  அவரைத் தடுத்து வைப்பதில் நமக்கு எந்த லாபமும் இல்லை என்றும் கூறினார்.

அபு சு.ப்யான் அவர்களின் இந்த அறிவுரையைக் கேட்ட அம்ர், ஜய்னப் அவர்களை திரும்பவும் மக்காவிற்குள் அழைத்துச் சென்று விட்டார். சில நாட்கள் கழித்து, தன்னுடைய சகோதரர் தனக்குக் கட்டளையிட்டவாறு, ஒரு இரவில் யாரும் அறியா வண்ணம் ஜய்னப் அவர்களை அழைத்துச் சென்று, மக்காவின் வெளியில் காத்திருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்களிடம் ஒப்படைத்து விட்டு வந்தார்.

ஜய்னப் அவர்கள் மதினாவுக்கு அனுப்பப்பட்டு, பல ஆண்டுகளாக அம்ர் இப்னு ஆஸ் அவர்கள் மக்காவிலேயே தங்கி விட்டார்கள். மக்கா வெற்றி கொள்ளப்படுவதற்கு சற்று முன்பாக சிரியாவிற்குச் சென்று, வர்த்தகத்தை முடித்து விட்டு 100 ஒட்டகை நிறைய பொருட்களுடனும், 170 ஆட்களுடனும் அம்ர் இப்னு ஆஸ் அவர்கள் மதினாவை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். மதினாவை இந்தப் பயணக் கூட்டம் நெருங்கிக் கொண்டிருந்த வேளையில், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் இந்தக் கூட்டத்தை திடீரெனத் தாக்கி, பொருள்களைக் கைப்பற்றிக் கொண்டதோடு, அதில் இருந்த ஆட்களையும் கைதிகளாகப் பிடித்துக் கொண்டார்கள். ஆனால் அபுல் ஆஸ் அவர்களோ எப்படியோ தப்பித்து, அந்தக் காரிருள் நேரத்தில் மிகவும் கவனமாக மதினமா நகருக்குள் நுழைந்து ஒருவழியாக ஜய்னப் அவர்களின் வீட்டை அடைந்து, ஜய்னப் அவர்களிடம் அடைக்கலம் கோரினார்கள். ஜய்னப் அவர்களும் அடைக்கலம் தந்துதவினார்கள்.

அதிகாலை நேரம் மக்கள் சுப்ஹ{த் தொழுகைக்காகக் கூடினார்கள். நாயகத் திருமேனி எம்பெருமானார் (ஸல்) அவர்களும், தொழவைக்கத் தயாராகி, அல்லாஹ{ அக்பர் என்று தக்பீரும் சொல்லி தொழுகையை ஆரம்பித்து விட்டார்கள். அப்பொழுது பெண்கள் பகுதியில் இருந்து, ஜய்னப் அவர்களின் குரல் இவ்வாறு ஒலித்தது. எனது மக்களே! நான் ஜய்னப், முஹம்மது அவர்களின் மகளார் பேசுகின்றேன். நான் அபுல் ஆஸ் என்பவருக்கு என் வீட்டில் அடைக்கலம் தந்திருக்கின்றேன். நீங்களும் அவருக்கு அபயம் அளியுங்கள்ஷ, என்று கூறினார்.

தொழுகையை முடித்து விட்டு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்களை நோக்கித் திரும்பி, எனதருமைத் தோழர்களே, நான் செவியேற்றதை நீங்களும் செவியேற்றீர்களா? என்று கேட்டார்கள். ஆம்! யாரசூலுல்லாஹ், என்று மக்கள் மறுமொழி பகர்ந்தார்கள். என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அந்த இறைவன் மீது சத்தியமாக! நீங்களும் நானும் இப்பொழுது கேட்டவற்றை, அதை செவியேற்கு முன்பு வரை நான் அறிந்திருக்கவில்லை. அவர் முஸ்லிம்களிடமிருந்து பாதுகாப்புக் கோரியிருக்கின்றார்.

வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருக்கும் வழியில் தனதருமை மகள் ஜய்னப் அவர்களைப் பார்த்து, ஜய்னபே அபுல் ஆஸ் அவர்களுக்கு வீட்டின் ஓரிடத்தில் அவருக்காக தனியறை அமைத்துக் கொடுத்து, அவருக்கு நீ சட்டப்படி மனைவியானவரல்ல என்பதையும் அவருக்குத் தெரிவித்து விடு என்று கூறினார்கள். அபுல் ஆஸ் அவர்களது பயணக் கூட்டத்தை முற்றுகையிட்டு, பொருள்களையும், கைதிகளையும் பிடித்து வைத்திருந்த தனது தோழர்களைப் பார்த்து, அவர் மீது இறக்கம் காட்டுபவர்களாக இருந்தால், நீங்கள் கைப்பற்றியிருக்கும் அவரது பொருள்களைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள், நாம் இறைவனால் அருள் செய்யப்படுவோம் என்று கூறிவிட்டு, அதுவல்லாமல் இதனைச் செய்ய சம்மதிக்காதபட்சத்தில், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருள்கள் இறைவனால் நமக்குப் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்ட போர்ப் பொருள்களாக ஆகிவிடும் என்றும் இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்.

நாங்கள் இந்தப் பொருட்களை அவரிடமே ஒப்படைத்து விடுகின்றோம் என்று நபித்தோழர்கள் மறுமொழி பகர்ந்தார்கள். அந்தத் தோழர்கள் அபுல் ஆஸ் அவர்களைப் பார்த்து, குரை~pயர்களில் நீங்கள் நல்ல மனிதராக இருக்கின்றீர். அதிலும் இறைத்தூதரவர்களின் மருமகனாகவும் இருக்கின்றீர். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா? என்று கூறிவிட்டு, இந்தப் பொருள்களை எல்லாம் உங்களிடம் ஒப்படைத்து விடுகின்றோம். எவற்றை எல்லாம் மக்கத்துவாசிகள் உங்களிடம் ஒப்படைத்திருக்கின்றார்களோ அவற்றை வைத்துக் கொண்டு, மதினாவிலேயே தங்கி, உங்கள் விருப்பப்படி அவற்றை நீங்கள் அனுபவித்துக் கொள்ளலாம் என்று கூறினார்கள்.

ஒரு புதிய மார்க்கத்தில் என்னை இணைத்துக் கொள்ளும் போதே, பிறரை மோசடி செய்து விட்ட பாவத்துடன் என்னை அதில் நுழைத்துக் கொள்ளச் சொல்கின்றீர்களா? என்று அபுல் ஆஸ் அவர்கள் மிகவும் கோபமாகக் கேட்டார்கள். இந்த நிலையில் அபுல் ஆஸ் அவர்கள், மக்காவிற்கு தன்னுடைய வியாபாரப் பொருள்களுடன் சென்று, அவற்றை உரியவர்களிடம் ஒப்படைத்து விட்டு, என்னுடைய குரை~p மக்களே, என்னிடம் உங்களது பணத்தை ஒப்படைத்து விட்டு, இன்னும் யாரும் அதனைத் திரும்பப் பெற்றுக் கொள்ளாமல் இருக்கின்றீர்களா? எனக் கேட்டார்கள். இல்லை, உங்களுக்கு இறைவன் அருள் செய்யட்டும், நீங்கள் நேர்மையாளராகவும், நன்னம்பிக்கைக்குரியராகவும் இருக்கின்றீர்கள் என்று குரை~pகளிடம் இருந்து ஒருமித்துப் பதில் வந்தது.

உங்களுக்கு உரிமையானவை அனைத்தையும் நான் உங்களிடம் ஒப்படைத்து விட்டேன், இப்பொழுது நான், வணங்கத்தக்க இறைவனான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதராக இருக்கின்றார்கள் என்று கூறி, குரை~pயர்களின் முன்பாகவே இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றார்கள். இறைவன் மீது சத்தியமாக,  உங்களது பொருட்களை நான் அபகரிக்கத் திட்டம் தீட்டடித்தான் நான் மதினா சென்று இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன் என்று நீங்கள் மட்டும் கருத மாட்டீர்கள் என்று இருந்திருந்தால், நான் முஹம்மது அவர்களுடன் மதினாவில் இருந்த போதே  இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருப்பேன் என்றும், இப்பொழுது உங்கள் அனைவரது பொருள்களையும் நான் ஓப்படைத்து விட்டேன், இப்பொழுது முதல் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிமாகி விட்டேன் என்று குரை~pயர்களின் முன்பாகவே தன்னுடைய இறைநம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள்.

அதன்பின் அபுல்ஆஸ் அவர்கள் மதினாவிற்குத் திரும்பி வந்ததும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அபுல்ஆஸ் அவர்களை எதிர்கொண்டு வரவேற்று, ஜய்னப் அவர்களையும் திருப்பி அவர்களிடம் ஒப்படைத்தார்கள். அப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், அவர் என்னிடம் கூறியதில், உண்மையுடனும், அவர் என்னிடம் சத்தியம் செய்ததில் வாய்மையுடனும் நடந்து கொண்டார் என்று கூறினார்கள்.

7. இக்ரிமா பின் அபீ ஹிஷாம் (ரலி)

வளமும், வனப்பும் நிறைந்திருக்க, அத்துடன் வலிமையும் மிகைத்திருக்க பனூ மக்சூம் குலத்தவர்களின் போற்றத்தக்க தலைவருக்கு மகனாகப் பிறந்த காரணத்தால், குல வழி வந்த பெருமையுடன் குறிப்பிடத்தகுந்ததொருவராகத் திகழ்ந்தார்கள் இக்ரிமா பின் அபீ ஹிஷாம் (ரலி) அவர்கள். இந்தளவு அதிர்ஷ்டகரமான வாழ்வுக்குச் சொந்தக் காரராக இருந்ததுடன், ஆயுதங்களைக் கையாள்வதில் மிகவும் திறமை மிக்கவராக, வில், அம்பு மற்றும் ஈட்டி எறிதலில் திறமை மிக்கவராகத் திகழ்ந்தார். ஓட்டத்தில் வல்லவரான இவரிடம், குதிரை கூடச் சற்று மலைத்துத் தான் போகும்.

ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) மற்றும் முஸ்அப் பின் உமைர் (ரலி) ஆகியோர்களுக்கு மிகவும் நெருக்கமான தோழராகவும் இருந்தார். இஸ்லாத்தின் வெளிச்சப் புள்ளிகள் இவர்களை அண்மித்த பொழுது, அதனை அணைத்துக் கொண்டு, இஸ்லாமிய வானில் ஒளிர் விடும் நட்சத்திரங்களாகவும் ஆனார்கள். ஆனால் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக பின்பற்றுவோர்களுக்கு, எப்பொழுதுமே இவ்வுலகை நேசிக்கக் கூடியவர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும் துன்பத்தைப் போலவே, இவரும் துன்பத்தை அனுபவித்தார். இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்று நடப்பதில் இவருக்குத் தடைக் கல்லாக இருந்தவர் யார் என்று தெரியுமா? இவரது தந்தை தான். இவரது தந்தை யார் என்று தெரியுமா? குறைஷிக் குலத்தின் மிகப் பெரும் தலைவராகத் திகழ்ந்த, உமைர் பின் ஹிஷாம் – இவர் இஸ்லாத்தின் மீதும், அதனைப் பின்பற்றும் முஸ்லிம்கள் மீதும் அளவில்லாத குரோதத்தை தனது மனதில் வளர்த்து வைத்திருந்த காரணத்தினால், முஸ்லிம்களுக்கு அளவில்லாத துன்பங்களையும், தொல்லைகளையும் கொடுத்துக் கொண்டிருந்தார்.

இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு, சமூக வாழ்வில் ஒழுக்கமாக வாழ்வதன் மூலம் மறுமை வாழ்வில் பிரகாசிக்க நினைத்தவர்கள், உமைர் பின் ஹிஷாம் போன்றவர்கள் தரும் துன்பங்களையும், துயரங்களையும், இன்னல்களையும் பொறுமையுடன் சகித்துக் கொண்டே வாழ வேண்டிய கட்டாயம் அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து வரும் சரித்திரத் சான்றுகளாகும்.

இன்றைக்கு குவாண்டனாமோ வதை முகாம்களை நிறுவி இருப்பது போல அன்றைக்கு உமைர் பின் ஹிஷாம் போன்ற இஸ்லாத்தின் எதிரிகள், தினம் ஒரு சித்திரவதை முறையைக் கண்டு பிடித்து முஸ்லிம்கள் மீது பிரயோகித்து வந்தார்கள். இந்தக் கொடுமதியாளர்களின் அடக்குமுறைகள், அநீதங்கள் யாவும் ஓரிறைவனை வணங்குவதனின்றும் முஸ்லிம்களை அப்புறப்படுத்தி விடவில்லை. மாறாக, முன்னைக் காட்டிலும் அவர்கள் இறைநம்பிக்கையில் புடம் போடப்பட்ட தங்கங்களாக மிளிர்ந்தார்கள்.

அவர்கள் தங்களது சித்ரவதைகளை நிறைவேற்ற சில முஸ்லிம்களைத் தேர்ந்தெடுத்து, சித்ரவதை செய்தார்கள். அவ்வாறு சித்ரவதைகளைச் செய்வதில் உமைர் பின் ஹிஷாம் தேர்ந்தவராகத் திகழ்ந்தார். பிலால் (ரலி) அவர்களை சுடுமணலில் கிடத்தி, தெருத்தெருவாக இழுத்துச் சென்றார்கள். கப்பாப் பின் அரத் (ரலி) அவர்களையும் சுடுமணலில் வெற்றுடம்புடன் கிடத்தினார்கள். அவரது மனைவியான சுமையா (ரலி) அவர்களையும் வார்த்தைகளால் வடிக்க இயலாத கொடுமைகளுக்கு உட்படுத்தினார்கள். இந்தளவு கொடுமையிலும் அவர்கள் படைத்த இறைவனை நேசித்தார்கள். படைப்பினங்களுக்கு சிரம் தாழ்த்த மறுத்தார்கள்.

இந்த சித்ரவதைகளுக்கு மூல காரணமாக இருந்தவன் யார் என்று நினைக்கின்றீர்கள்? இக்ரிமா (ரலி) அவர்களின் தந்தையான உமைர் பின் ஹிஷாம் தான். இவனைத் தான் இஸ்லாமிய வரலாறு அபூ ஜஹ்ல் என்று அழைக்கின்றது.

தனது தோழர்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும், சித்ரவதைகளையும் பார்த்துக் களங்கிய இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அவர்களை ஹிஜ்ரத் என்னும் நாடு துறந்து செல்லும்படிப் பணித்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அன்புக்குக் கட்டுப்பட்ட அருமைத் தோழர்கள், தலைவரின் கட்டளைப்படி எத்தியோப்பியாவுக்கு நாடு துறந்து சென்றார்கள். இவ்வாறு நாடு துறந்து சென்றவர்களையும் நிம்மதி வாழ அனுமதிக்காத அபூ ஜஹ்ல், எத்தியோப்பிய மன்னர் நஜ்ஜாஸி அவர்களிடம் ஒரு குறைஷித் தூதுக் குழுவை அனுப்பி வைத்து, முஸ்லிம்களைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்த முயற்சி செய்தான். இவ்வாறு நாடு துறந்து சென்ற முஸ்லிம்கள் பின்னாளில், மதீனாவில் நிலையானதொரு இஸ்லாமிய சமூகம் மறுமலர்ச்சி கண்ட பொழுது, எத்தியோப்பியாவை விட்டும் கிளம்பி மதீனாவிற்குத் திரும்பினார்கள். அங்கு முஸ்லிம்கள் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டதோடு, வலுவான இஸ்லாமிய சாம்ராஜ்யம் ஒன்றைக் கட்டி எழுப்பினார்கள். அதன் மூலம், இஸ்லாத்தையும், அதனைப் பின்பற்றும் முஸ்லிம்களையும் துடைத்தெறிந்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டவர்களின், கனவைக் களைத்து அவர்களை நிம்மதி இழக்கவும் செய்யப்பட்டார்கள்.

நிம்மதி இழந்த இஸ்லாத்தின் எதிரிகள், இஸ்லாத்தை வேரறுக்கு முகமாக பத்ரில் ஒன்று கூடினார்கள். மதீனாவின் எல்லை அண்மித்து குறைஷிகளின் போர் மேகங்கள் சூழ்வதைக் கண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தனது தோழர்களை அழைத்துக் கொண்டு பத்ர் என்னும் இடத்தை வந்தடைந்தார்கள். இந்த இடத்தில் தான் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமான முதல் போர் நடந்தது. முஸ்லிம்களுக்கு இது அக்னிப் பரீட்சையாகத் திகழ்ந்தது, இன்னும் வரலாற்றில் மிகப் பிரபலமாக அறியப்படும் பத்ர் யுத்தம் என்றும் இது அழைக்கப்பட்டது. இந்தப் போருக்குத் தலைமையேற்று வந்திருந்தவர்களில் ஒருவனான அபூ ஜஹல்.., முஸ்லிம்களை வேரறுத்து தடம் தெரியாமல் ஆக்காமல் நான் மக்காவிற்குத் திரும்ப மாட்டேன் என்று தான் வணங்கும் லாத் மற்றும் உஸ்ஸா தெய்வங்களின் மீது சத்தியம் செய்திருந்தான்.

தங்களது வளத்தோடும், ஆயுத பலத்தோடும், எண்ணிக்கையில் அதிகமாகவும் பத்ருக்கு வந்திருந்த குறைஷிகள், நாம் தான் வெற்றி பெறுவோம் என்ற மமதையுடன் காணப்பட்டார்கள். ஆனால் முஸ்லிம்களுக்கு பின்னால், படைத்தவனான அல்லாஹ் இருக்கின்றான் என்பதை மறந்து விட்டார்கள். அற்ப ஆயுதங்களோடும், குறைந்த எண்ணிக்கையோடும் இருந்த முஸ்லிம்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தலைமையில் ஒன்று கூடி, படைத்தவனிடம் மண்டியிட்டுப் பிரார்த்தித்தார்கள். அவர்களது சிரங்கள் படைத்தவனின் உதவியை நாடு நிலத்தில் தாழ்ந்திருந்தன.

யா அல்லாஹ்..! உன்னை வணங்குவதற்காகவே இருக்கின்ற இந்த சிறு கூட்டத்தையும் இந்த மண்ணிலிருந்து நீ துடைத்தெறிந்து விட்டால், உன்னை வணங்குவதற்கென்று யாரும் இந்தப் பூமியில் மீதமிருக்க மாட்டார்கள், இந்தப் பூமியில் உனக்கு சிரம் பணிந்து வணங்கும் அழகான வழிபாடு இல்லாது போய் விடும் யா அல்லாஹ்..! என்று பிரார்த்தித்து, இறைவனது உதவியை நாடி நின்றார்கள்.

இப்பொழுது இரண்டு படைகளும் பத்ருப் போர்க்களத்தில் நேருக்கு நேர் மோதிக் கொள்ள ஆரம்பித்தன. இஸ்லாமிய படைவீரர்கள், சுவனத்தைக் கண் முன் நிறுத்தி தங்களது போர் யுக்திகளை வீரத்துடன் வெளிக்காண்பித்துக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது போர் முனையில் நடந்தவற்றை அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் விவரிப்பதைக் காண்போம்.

மிகவும் இள வயதுடைய இரண்டு வீரர்கள், அதாவது முஆத் (ரலி) மற்றும் முவாஸ் (ரலி) ஆகிய இருவரும் என்னிடம் வந்து மிகவும் ரகசியமான குரலில், யார் அந்த அபூ ஜஹ்ல் என்றும், அவனை நாங்கள் எங்கு காணலாம் என்றும் வினவினார்கள். நான் மிகவும் ஆச்சரியம் கொண்டவனாக, ‘அவனிடம் உங்களுக்கு என்ன வேலை” என்று கேட்டேன். அவன் தானே இந்த நிராகரிப்பாளர்களின் தலைவன், இன்னும் அவன் முஸ்லிம்கள் மீது கடுமையான துன்பங்களையும், கொடுமைகளையும் இழைத்தவனாயிற்றே, அவன் நம்முடைய எதிரி அல்லவா? என்றார்கள். இன்னும் அவன் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு கடுமையான துன்பங்களைக் கொடுத்ததாகவும் நாங்கள் அறிய வருகின்றோம், அவனைக் கொன்று நரகத்தில் அடித்தளத்திற்கு நாங்கள் அனுப்பாமல் விட மாட்டோம் அல்லது இந்த முயற்சியில் எங்களது உயிர்களையும் நாங்கள் அற்பணிக்கத் தயாராக இருக்கின்றோம் என்றும் அவர்கள் சூளுரைத்தார்கள். இன்னும் அவனைக் கொல்லாமல் வெறுமனே திரும்பி வருவதில்லை என்றும் அவன் சபதம் எடுத்துக் கொண்டு, போர்க்களத்திற்குள் நுழைந்தார்கள். அப்பொழுது சற்று நேரத்திற்கெல்லாம் அபூஜஹ்ல் எங்களுக்கு மிக அருகே வலம் வர ஆரம்பித்தான் என்று கூறி விட்டு அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் மீண்டும் தொடர்கின்றார்கள் :

”அபூஜஹ்லைக் கண்டவுடன், நான் அந்தச் சிறுவர்களை நோக்கி, நீங்கள் தேடி வந்த இரை அதோ வந்து கொண்டிருக்கின்றது பாருங்கள் என்று அபூஜஹ்லைச் சுட்டிக் காட்டினேன். அந்த மாத்திரத்திலேயே, அந்தச் சிறுவர்கள் அபூஜஹ்லை நோக்கிப் பாய்ந்தார்கள். எதிர்பாராத தாக்குதலைச் சந்தித்த அபூஜஹ்ல் நிலை தடுமாறு, தனது குதிரையிலிருந்து கீழே விழுந்து விட்டான். இப்பொழுது அங்கு அருகே நின்று கொண்டிருந்த அபூஜஹ்லின் மகனும் இன்னும் இஸ்லாத்தைத் தழுவாதவராகவும் இருந்த இக்ரிமா அவர்கள் தனது தந்தையின் ஓலக் குரலைச் செவிமடுத்தார், அபூஜஹ்லிற்கு லாத்தும், உஸ்ஸாவும், மனாத்தும் உதவி செய்யவில்லை, இப்பொழுது போர்க்கலையில் மிகவும் திறமை வாய்ந்த தனது தந்தை இரு சிறுவர்களின் தாக்குதலுக்குச் சமாளிக்க இயலாமல் வீழ்ந்து விட்டதை தனது கண் முன்னால் கண்டு கொண்டிருந்தான். அவன் விழுந்த வேகத்தில் அந்த இரு சிறுவர்களும் தங்களது வாளை அபூஜஹ்லின் மீது செலுத்தி, அவனது உயிரைப் பறித்தார்கள், அருகே நின்று கொண்டிருந்த இக்ரிமா வினால் கூட தனது தந்தைக்கு எந்தவித உதவியையும் செய்ய இயலவில்லை, தனது தந்தை மரணத்தின் மூலம் நரகத்தின் வாசலை அடைந்து கொண்டு விட்டதைத் தடுக்க இயலவில்லை. இதற்குப் பழி வாங்கத் துடித்த இக்ரிமா அவர்கள், முஆஸ் (ரலி) அவர்களின் தோள்பட்டையில் தனது வாளை இறக்கினார். அந்த வாள் முஆஸ் (ரலி) அவர்களின் தோளைப் பதம் பார்த்தது. இக்ரிமா வின் வாள் வீச்சினால் ஏற்பட்ட காயத்தின் காரணமாக தோள் பட்டை புஜத்தை விட்டும் தொங்க ஆரம்பித்து, தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது. இந்த நிலையில், முஆஸ் (ரலி) அவர்கள், தனது காலை வைத்து தொங்கிக் கொண்டிருந்த தோள் பட்டையை அழுத்திப் பிடித்து இழுத்து அறுத்தெறிந்தார். எல்லாப் புகழும் இறைவனுக்கே..! இந்தச் சின்னஞ் சிறு வயதில், இறைவன் இந்தளவு மன வலிமையை அல்லாஹ் அவர்களுக்கு அருளி இருந்தான். மீண்டும் எல்லாப் புகழும் இறைவனுக்கே..!

இறந்து கிடந்த தனது தந்தைக்கு எதுவும் செய்யத் திராணியற்றவராக, இக்ரிமா அந்த இடத்தை விட்டும் தப்பித்தால் போதுமென்று விரைந்து அகன்று விட்டார். தங்களது அபரிதமான போர்க்கருவிகள் மற்றும் படைகளின் எண்ணிக்கை குறித்து மிகவும் பெருமையோடு பத்ருப் போர்க்களத்தை நோக்கி வந்தவர்களுக்கு, அவர்களது ஆயுதங்களும், ஆட்களின் எண்ணிக்கையும் எந்தவிதத்திலும் உதவிகரமாக இருக்கவில்லை. மாறாக, முகத்தில் புழுதி படிந்தவர்களாக அவமானத்தோடு இப்பொழுது போர்க்களத்தை விட்டும் தோற்றோடிக் கொண்டிருந்தார்கள். குறைஷிகளின் மிகப் பெரும் தலைகள், இப்பொழுது மண்ணோடு மண்ணாக உருண்டு வீழ்ந்து கிடந்தன. வீழ்ந்து மடிந்து கிடந்த இறைநிராகரிப்பாளர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து, ஒரு கிணற்றில் அவர்களது உடல்களை வீசி, அதன் மீது புழுதியையும் வீசினார்கள் முஸ்லிம்கள். சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையே நடந்த இந்த முதல் போர், அசத்தியத்தை வீழ்த்தி சத்தியம் வெற்றி கண்டது, அசத்தியம் வேரோடு சாய்க்கப்பட்டது. மூர்க்கத்தனமான ஷைத்தானின் தோழர்களான அபூஜஹ்ல் போன்றவர்கள், பத்ருக் களத்தின் மண்ணை முத்தமிட்டுக் கொண்டார்கள்.

இக்ரிமா அவர்களின் பழி வாங்கும் துடிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது. குறைஷிகளிடையே தனது தந்தைக்கு இருந்த மதிப்பு, இன்னும் அதன் காரணமாக எழுந்த இஸ்லாத்தின் மீதான கொடுஞ்சினம் போன்றவையும் இணைந்து கொள்ள, இஸ்லாத்தின் மீது பழிக்கும் பழி எடுக்க வேண்டும் என்ற துடிப்பு, எல்லையின்றி பரந்து கொண்டே சென்றது. இக்ரிமாவும், அவரது தோழர்களும் பத்ருப் போர்க்களத்தில் இறந்து போன தங்களது உறவினர்களின் நிலை குறித்தும், உயிரோடு இருக்கின்ற நாம் நம்முடைய உறவினர்களின் படுகொலைக்குப் பழிக்குப் பழி எடுக்க வேண்டும் என்ற துடிப்பும் அவர்களிடம் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

நிராகரிப்பாளர்கள் தங்களது வஞ்சங்களைத் தீர்த்துக் கொள்ளும் தளமாக இப்பொழுது உஹதுக் களம் தயாராகிக் கொண்டிருந்தது. பழக்குப் பழி வாங்கியே தீருவது என்ற முழக்கத்தோடு, இக்ரிமா பின் அபூ ஜஹ்ல் உஹதுக் களம் நோக்கித் தனது பரிவாரங்களை நகர்த்தத் துவங்கினார். அவருடன் அவருடைய மனைவி உம்மு ஹக்கீம் அவர்களையும் அழைத்துக் கொண்டார். குறைஷிகள் போர்க்களத்தில் துவண்டு நிற்கும் பொழுது, போர்படைக்குப் பின்னாள் நிற்கும் பெண்கள் முரசறைந்து, வீரர்களுக்கு உற்சாகத்தை ஊட்டுவார்கள். அதன் மூலம் உத்வேகம் ஊட்டப்பட்ட வீரர்கள் மிகவும் மூர்க்கமாகத் தங்களது தாக்குதல்களை எதிரிகளின் மீது தொடுப்பார்கள், பெண்கள் பின்னாள் அணிவகுத்து நிற்கும் பொழுது ஒவ்வொரு ஆணும் தன்னுடைய புஜபல பராக்கிரமங்களை பெண்களுக்கு அதிகப்படியாக காண்பிக்கவே விரும்புவான். அந்த மனநிலையை ஆடவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காகவே மக்கத்துக் குறைஷிகள் பெண்களைத் தங்களுடன் அழைத்து வந்திருந்தார்கள்.

காலித் பின் வலீத் அவர்கள் வலது பக்கமுள்ள அணிகளுக்கும், இக்ரிமா பின் அபூஜஹ்ல் இடது பக்கமுள்ள அணிகளுக்கும் தலைமையேற்றிருக்க போர்க்களத்தில் குறைஷிகள் நின்று கொண்டிருந்தார்கள். இந்த இரண்டு வீரர்களும், முஸ்லிம்களுக்கு அதிகப்படியான இழப்புகளை ஏற்படுத்தியதோடு, போர்க்களத்தில் குறைஷிகளின் கரம் ஓங்குவதற்கும் வழி வகுத்தார்கள். இன்னும், உஹதுப் போர்க்களத்தில் முஸ்லிம்களுக்கு கடுமையான இழப்புகள் ஏற்பட்டதை அடுத்து, பத்ருப் போர்க்களத்தில் நாம் அடைந்த தோல்விக்கு பழிக்குப் பழி எடுத்தாகி விட்டது என்று குறைஷிகளின் ஒட்டு மொத்தப்படைக்கும் தலைமைத் தளபதியாக வந்திருந்த அபூசுப்யான் அவர்கள் அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அரபுகளின் மனநிலையை நன்கு அறிந்திருந்த காரணத்தினால், மீண்டும் இஸ்லாத்தின் எதிரிகள் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டு முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுக்கத் தயாராகி விடுவார்கள், இன்னும் இவர்கள் தங்கள் தங்கள் குலத்தவர்களின் பின்னால் கண்ணை மூடிக் கொண்டு அணி திரள்வதில் மிகவும் விரைவானவர்கள் என்பதையும் அறிந்திருந்த காரணத்தினால், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிகவும் எச்சரிக்கை உணர்வோடு செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். பத்ருக் களத்தில் பெற்ற தோல்விக்குப் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற மனநிலையில் மக்கத்துக் குறைஷிகள் இருந்தனர். மதீனாவில் வாழ்ந்து கொண்டிருந்த பிரபலமான யூதக் குலங்களான பனூ கைனூக்கா மற்றும் பனூ நதீர் ஆகியோர்களை மதீனாவை விட்டும் வெளியேற்றி விட்டதன் காரணமாக அவர்களும் முஸ்லிம்களின் மீது கடுஞ் சினம் கொண்டிருந்தார்கள். இன்னும் பனூ ஹதீல் மற்றும் பனூ கதஃபான் ஆகிய இரு யூதக் கோத்திரத்தார்களும் இயல்பாகவே முஸ்லிம்களின் மீது கடுமையான சினம் கொண்டிருந்தார்கள்.

இவர்களின் கோபத்திற்கும் சினத்திற்கும் காரணமிருந்தது. சற்று சில நாட்களுக்கு முன் மக்காவிலிருந்து வெறுங் கையுடன் ஓடி வந்த ஒரு மனிதர், மிகக் குறுகிய காலத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டதோடல்லாமல், மதீனாவைத் தனது ஆட்சிப் பிரதேசமாகவும் இன்னும் புதியதொரு கொள்கைக்கு அடித்தளமிடக் கூடிய நகரமாகவும் மாற்றிக் கொண்டிருக்கின்றாரே என்ற காழ்ப்புணர்ச்சி குறைஷிகளிடமும், இன்னும் மதினாவில் வாழ்ந்து வந்து கொண்டிருந்த யூதர்களிடமும் நிரம்பி வழிந்தது. இன்னும், இந்த முஹம்மதைப் பின்பற்றக் கூடிய அவரது தோழர்கள், எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்கத் தயாரானவர்களாக இருப்பதும் கூட அவர்களுக்குள் அச்சத்தை அனுதினமும் வளர்த்து வந்து கொண்டிருந்தது.

இவை அத்தனையையும் மனதில் எடை போட்டுப் பார்த்த அபூசுப்யான் அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும், அவரது மார்க்கத்திற்கும், முஸ்லிம்களுக்கும் யார் யார் எதிரிகளாக இனங் காணப்பட்டார்களோ அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்துக் கொண்டு, ஒருங்கிணைந்த படைப் பிரிவு ஒன்றை முஸ்லிம்களுக்கு எதிராகத் திரட்டி, மதீனாவை முற்றுகையிடத் தயாராகிக் கொண்டிருந்தார்.

அபூசுப்யான் அவர்களின் இந்தத் திட்டத்தை அறிந்து கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், மதீனாவைச் சுற்றிலும் அகழிகளைத் தோண்ட ஆரம்பித்தார்கள். இதன் மூலம் எதிரிகள் வெகு எளிதாக மதீனா நகருக்குள் நுழைவது தடுக்கப்படுவதோடு, உள்ளிருந்து தாக்குதல் தொடுப்பதற்கு வசதியான அரணாகவும் இந்த அகழிகள் முஸ்லிம்களுக்கு பேருதவி புரிந்தன.

எந்த சூழ்நிலையையும் பெண்களும் கூட சமாளிக்கும் பொருட்டு, இஸ்லாமியப் பாடல்களை பாடுவதில் மிகவும் வல்லவராக ஹஸன் பின் தாபித் (ரலி) அவர்களது தலைமையில் பெண்கள் ஒருங்கிணைக்கப்பட்டார்கள். இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட பெண்களின் குழுவில், ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்களும் இருந்தார்கள். ஒரு யூதன் மதீனாவின் எல்லைக்கு அப்பால் உளவு பார்த்துக் கொண்டிருந்ததை அறிந்து கொண்ட ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள், ஒரு கனமான கம்பை எடுத்து, அவனைத் தாக்கி அந்த இடத்திலேயே கொன்றும் விட்டார்கள். தங்களைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதை அறிந்த எதிரிகள் மிகவும் அச்சமும், கலவரமும் அடைய ஆரம்பித்தார்கள்.

மதீனாவைச் சுற்றிலும் தோண்டப்பட்டிருந்த அகழிகளில் ஒரு பகுதியில் ஏற்பட்டிருந்த வசதியான குறுகிய இடைவெளியைப் பயன்படுத்தி, உமர் பின் அப்தூத், தரார் பின் கத்தாப் மற்றும் அப்பொழுது இஸ்லாத்தைத் தழுவாதிருந்து இக்ரிமா (ரலி) ஆகிய மூவரும் தங்கள் குதிரைகளில் இருந்தபடியே தாவிக் குதித்து உள்ளே வந்து விட்டனர்.

அலீ (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் இப்பொழுது அவர்களை மேலும் முன்னேற விடாமல் தடுத்துக் கொண்டிருந்தார்கள். அலீ (ரலி) அவர்கள் அம்ர் பின் அப்தூத் என்பவனுடன் மோதி, அவனது தலையைத் துண்டித்தார்கள். தரார் பின் கத்தாப் ம் மற்றும் இக்ரிமா அவர்களும் தங்களது தோழருக்கு நேர்ந்த கதியைக் கண் முன்னால் கண்டு கொண்டிருந்த நிலையிலேயே, தப்பித்தால் போதுமென்று அங்கிருந்து உயிர் பிழைத்து ஓட ஆரம்பித்தார்கள்.

மக்கா வெற்றியின் பொழுது அன்றைய தினத்தில், மக்கத்துக் குறைஷிகள் அச்சம் மிகுந்தவர்களாக இன்னும் முஸ்லிம்களின் வெற்றியைக் குறித்து கலவரங் கொண்டவர்களாக மாறிய நிலையில், முஸ்லிம்களை நேருக்கு நேராக மோதுவதற்குப் பயந்தார்கள். மக்காவினுள் பிரவேசிக்க இருக்கின்ற முஸ்லிம்களை பிரவேசிக்க விடாத அளவுக்கு முஸ்லிம் படைகள் வருகின்ற வழிகளில் தடைகளை ஏற்படுத்துவது என்று தீர்மானித்தார்கள். அன்றைய தினத்தில் மக்காவில் உள்ள அனைத்து நிரகாரிப்பாளர்களுக்கும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பொதுமன்னிப்பை வழங்கியிருக்கின்றார்கள் என்பதை இறைநிராகரிப்பாளர்கள் அறிந்தே வைத்திருந்தார்கள். இருப்பினும், அவர்களில் சிலர் முஸ்லிம்களின் மீதுள்ள கடுமையான வெறுப்பின் காரணமாக முஸ்லிம்களை எதிர்த்தே ஆவது என்று முடிவு செய்தவர்களாக தடையை ஏற்படுத்தக் கிளம்பினார்கள். அவர்களில் இக்ரிமா அவர்களும் ஒருவராவார். இவர் தன்னுடன் மக்காவின் சில இளைஞர்களைச் சேர்த்துக் கொண்டு, காலித் பின் வலீத் (ரலி) அவர்களது தலைமையில் மக்காவினை நோக்கி வந்து கொண்டிருக்கின்ற முஸ்லிம் படைகளைத் தடுப்பதற்காக ஒன்று திரண்டு கொண்டார்கள். இவர்களின் இந்த நடவடிக்கையில் தோல்வியைத் தழுவிய அவர்கள், காலித் பின் வலீத் (ரலி) அவர்களைத் தோற்கடிக்கத் திராணியற்றவர்களாகி, மக்காவை விட்டும் ஓடத் துவங்கினார்கள். அவ்வாறு ஓடியவர்களில், இந்தக் குழுவினரின் தலைவராகச் செயல்பட்ட, இக்ரிமாவும் முக்கியமானவர். தோல்வியைத் தழுவி விட்டோமே என்று இக்ரிமா அவர்கள் மிகவும் அவமானத்துடன் துடிக்கலானார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு அளித்திருந்த நிலையிலும் கூட, அவமானத்துடன் இனி மக்காவில் தன்னுடைய வாழ்வைக் கழிப்பது மிகவும் சங்கடமானது என்பதை இக்ரிமா உணர்ந்தார். இதில் சில நபர்களைக் குறித்து, இவர்கள் கஃபாவின் திரைச் சீலைகளுக்குப் பின்னால் ஒளிந்திருந்தாலும், அவர்களை இழுத்து வந்து அவர்களது தலையைத் துண்டிக்க வேண்டும் என்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களுக்குக் கட்டளையிட்டிருந்தார்கள். அவ்வாறு மரண தண்டனைக்குரியவர்களாக இனங்காட்டப்பட்டவர்களில் இக்ரிமா அவர்களும் ஒருவராவார். இவர் தன்னுடைய வாழ்வுக்கு இனி மக்காவில் உத்தரவாதம் ஏதும் கிடையாது என்பதை உணர்ந்து, பயந்தவராக, யாருக்கும் தெரியாமல் மக்காவை விட்டும் வெளியேறி, ஜித்தாவை நோக்கிப் பயணமானார். அங்கிருந்து யமன் தேசத்திற்குச் செல்வதாக முடிவெடுத்திருந்தார். இப்பொழுது தான் அதிகாரத்துடன் பவனி வந்த வீதிகள்,இப்பொழுது தனது உயிருக்கு உத்தரவாதம் தரவில்லையே.., சற்று முன் கடந்து போன நாட்களில் நான் அபூஜஹலின் மகனாக வானளாவ அதிகாரத்துடன் இந்தத் தெருவில் தானே பவனி வந்தேன்.., இந்த நகரத்தின் மக்களின் மீதெல்லாம் எனது அதிகாரம் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்ததே.., இந்த நகரம்.., இப்பொழுது என்னைப் பாதுகாக்கத் திராணியற்றதாக, என்னுடைய உயிருக்கு உத்தரவாதம் அளிக்கவியலாத நிலையில், பிரியா விடை தருகின்ற நிலைக்கு ஆளாகி விட்டேனே என்று தனது நகரத்திற்கு பிரியாவிடை பகர்ந்து விட்டு, மக்காவை விட்டும் வெளியேறினார். நேற்று வரை என்னுடைய அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் தானே இந்த மக்கள், இன்றைக்கு இவர்களுக்கு என்ன ஆகி விட்டது. இந்தப் பூமியே தலைகீழாகப் புரட்டிப் போட்டது போலல்லவா மாறி விட்டிருக்கின்றது. நான் நடந்து திரிந்து இந்தத் தெருக்கள், வியாபாரத் தளங்கள் யாவும் என்னை நிராகரித்து விட்டனவே, இனி இங்கிருந்து என்ன பயன், என்னுடைய உயிரையே என்னால் பாதுகாக்க இயலாது போய் விட்டதே என்ற நினைவில் மூழ்கியவராகவே இக்ரிமா மக்காவை விட்டும் வெளியேறி, தனது பயணத்தை யமன் தேசத்தினை நோக்கி செலுத்தலானார்.

இப்பொழுது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்காவினை மிகவும் அமைதியான முறையில் கைப்பற்றியதுடன், அங்கிருந்த குறைஷிகளுக்கு பொதுமன்னிப்பையும் அறிவித்தார்கள். இந்தப் பொதுமன்னிப்பைப் பயன்படுத்திக் கொண்டவர்களாக இக்ரிமாவின் மனைவி உம்மு ஹகீம் மற்றும் ஹிந்தா பின்த் உத்பா ஆகியோர்களும் இன்னும் சில பெண்களும் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் முன்னிலையில் வந்து நின்று, தாங்கள் இஸ்லாத்தைத் தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்கள். இன்னும்தங்களுக்காக இறைவனிடம்பாவ மன்னிப்புக் கோருமாறும், இஸ்லாத்தைத் தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுப் பின்பற்றத் தயாராக இருப்பதாகவும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன்னிலையிலேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் வந்த அந்தப் பெண்மணிகள் தெரிவித்தார்கள். இந்தப் பெண்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் அந்த நேரத்தில், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அருமை மகளார் ஃபாத்திமா (ரலி) அவர்களும், இன்னும் இரண்டு இறைநம்பிக்கையார்களின் தாய்மார்களும் அவ்விடத்தில் இருந்தார்கள். திரைமறைவுக்குப் பின்னால் இருந்து கொண்டு மிகவும் சன்னமான குரலில் ஹிந்தா பின்த் உத்பா அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம்,

இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! தனது சிறப்பு மிக்க இந்த நல்லடியாருக்கு வெற்றியை அளித்தவனான, வல்லோனாம் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! இந்த வெற்றிக்கு உரித்தானவர் தான் நீங்கள். இரத்த உறவுச் சொந்தங்கள் என்ற அடிப்படையில் உங்களிடம் நாங்கள் கருணையை எதிர்பார்க்கின்றோம், இன்னும் நான் மிகவும் நேர்மையான முறையில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றேன், என்று கூறினார்கள்.

தனது முகத்தை மூடிக் கொண்டிருந்த அந்த திரையைச் சற்று விலக்கி தான் யார் என்பதை இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அடையாளப்படுத்திக் காட்டி, ‘நான் தான் ஹிந்தா பின்த் உத்பா” என்றார்கள்.

மனித குலத்திற்கு அருட்கொடையாக அனுப்பி வைக்கப்பட்ட தூதராக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவர்களை வரவேற்றார்கள், இன்னும் சற்று முன் நீங்கள் கூறிய நேர்மையான நல்ல வாழ்த்துக்கள் குறித்து நான் மிகவும் சந்தோஷமடைகின்றேன் என்றும் கூறினார்கள். இதன் மூலம் இஸ்லாத்தினைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்வதற்கான பக்குவத்தை, இதயத்தின் ஓரத்தில் இதமானதொரு இடத்தை பெற்றிருந்தார்கள் ஹிந்தா பின்த் உத்பா அவர்கள்.

மீண்டும் இப்பொழுது ஹிந்தா பேசினார்கள் :

சற்று முன் நடைபெற்ற நிகழ்வுகளின் பொழுது கூட இஸ்லாத்தைப் பற்றியும், இன்னும் தங்களைப் பற்றியும் மிகவும் வெறுப்புணர்வைத் தான் என்னில் வளர்த்திருந்தேன். அந்த வெறுப்பு வளர்ந்திருந்த இடத்தை உங்களின் மீது அன்பு ஆக்கிரமித்துக் கொண்டு விட்டது. இப்பொழுது நீங்களும் உங்களது மார்க்கமும் இந்த உலகத்தில் உள்ள அத்தனையையும்விட எனக்கு மிகவும் பிரியமானதொன்றாக மாறி விட்டது.

இப்பொழுது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களது இதயத்திலிருந்து வெளியாகி இருக்கின்ற, இந்த தூய்மையான நோக்கத்தையும், எண்ணத்தையும், உணர்வுகளையும் அல்லாஹ் மென்மேலும் அதிகரிக்கச் செய்வானாக, பிரகாசிக்கச் செய்வானாக!

இதற்குப்பின் ஹிந்தா பின் உத்பா இஸ்லாத்தைத் தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்வதாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்கள். இவர்களை அடுத்து இக்ரிமா அவர்களின் மனைவி உம்மு ஹக்கீம் அவர்களும் முன்வந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ஸலாம் உரைத்து விட்டு, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அதன் பின் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு கோரிக்கையை இக்ரிமா அவர்களின் மனைவியாகிய உம்மு ஹக்கீம் (ரலி) அவர்கள் வைத்தார்கள்.

உங்களது மற்றும் உங்களது அருமைத் தோழர்களின் வாளுக்குப் பயந்தவராக, இக்ரிமா தன்னுடைய உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக யமன் தேசத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றார். தயவுசெய்து உங்களுக்கு நன்றி சொல்லக் கூடிய வாய்ப்பையும், இன்னும் பாதுகாப்பான வாழ்க்கையையும் அவருக்கு நீங்கள் வழங்குவதற்கான சந்தர்ப்பத்தை அவருக்கு வழங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள். நீங்கள் மனித குலத்திற்கான முன்னுதாரணமிக்கவராக இருக்கின்றீர்கள், இறைவனுடைய படைப்பினங்களில் எல்லாம் மிகச் சிறந்த படைப்பாக இருக்கின்றீர்கள். இக்ரிமா பயன்படுத்தக் கூடியதொரு நல்ல மனிதன், அவரை நேர்வழிக்குக் கொண்டு வர நான் என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்கின்றேன், இன்னும் அவரது பழக்க வழக்கங்கள் பற்றியும், அவரது பண்புகளைப் பற்றியும் நான் மிகவும் அறிந்தவளாகவும் இருக்கின்றேன் என்று கூறினார்கள்.

உம்மு ஹக்கீம் (ரலி) அவர்களின் சோகமான அந்த வார்த்தைகளைக் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘இந்த நாள் முதல் இக்ரிமாவிற்குப் பாதுகாப்பு அளிக்கப்படுகின்றது, (மக்காவிற்கு) திரும்பி வரவும் அனுமதியளிக்கப்படுகின்றது. அவரை கேள்வி கணக்கிற்கோ அல்லது விசாரணைக்கு உட்படுத்தவோ பட மாட்டார்” இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Up ↑

%d bloggers like this: